பிப்ரவரி 19, 2018

இசை விழா(து)

[இந்த கட்டுரை, சென்னையிலிருந்து வெளியாகும், இலக்கியவேல் என்னும் இலக்கிய மாத இதழுக்காக எழுதப்பட்டது.. டிசம்பர் 2017 இதழில் ஒரு பகுதியும், ஜனவரியில் விடுபட்டுப் போய், நிறைவுப் பகுதி பிப்ரவரி 2018 இதழிலும் வெளியாகியுள்ளது... 

எச்சரிக்கை 1: கட்டுரை மிகவும் நீளமானது..
எச்சரிக்கை 2: இசையுலகின் எல்லா தரப்பினருக்கும் சற்று எரிச்சலைக் கொடுக்ககூடிய விஷயங்களை உள்ளடகியது]

இசை விழா(து)

இசைவிழா நகரம்:
இதோ!  மீண்டும் ஒரு இசைவிழா மாதம் பூத்துவிட்டது!  மாதம் என்று சொல்வது தவறு.. மாதங்கள் பூத்துவிட்டன என்றே சொல்லவேண்டும். இப்போதெல்லாம், நவம்பர் மாதமே தொடங்கி, புது வருடம் பிப்ரவரி மாதம் முடியுமட்டுங்கூட கச்சேரிகள் தொடர்கின்றன. மூலைக்கு மூலை இசை வளாகங்களும், வருடாந்திர இசை/நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளும் கூட பெருகிவிட்டதால், கச்சேரிகளும் பெருகிவிட்டன.  பெருகிக்கொண்டே இருக்கும், மாநகர மக்கட்தொகையும், மாறாத குண்டுங்குழியுமான சாலைகளும், அவற்றில் பயணிக்கும் பலதரப்பட்ட போக்குவரத்து வாகனங்களும், அவற்றாலும், நடைபாதை சிறு வியாபாரிகள் வியாபித்துக்கொண்டது போக மீதமிருக்கும் இடங்களிலோ, அல்லது சாலையிலோகூட நடக்கும் மக்களாலும் ஏற்படும் நெரிசல்களும், தெருவோரக் குப்பைகளும், கூவம், பக்கிங்காம் என்று நிரந்தரமாக கெட்டு, ஓடாத கழிவுநீர் சாக்கடைகளாக மாறிவிட்ட ஆறுகளிலிருந்து எழும் துர்நாற்றங்களும், அவற்றிலே உற்பத்தியாகி உறங்கா நகரமாக மக்களை அவதிக்குள்ளாக்கும் கொசுக்களும் என்று ()சிங்காரச் சென்னை நகரம் அன்றாட அவலங்களில், அவதிகளில் உழன்ற நரகமாயிருந்தாலும்,  இசை விழாக்கள்துவங்கியதும், சென்னை மாநகரமே ஒரு புதுப் பொலிவு பெற்ற பெருவிழா நகரமாக மாறிவிடுகிறது! சற்று மூச்சு வாங்கிக்கொள்கிறேன்! பின்னே என்ன சும்மாவா? யுனெஸ்கோ அமைப்பே, “படைப்பாற்றல் நகர இணைய” நகரமாகச் சென்னையையும் அறிவித்து, “இது இசை நகரம்தான்” என்கிற முத்திரையையும் குத்திவிட்டதே!

சபாக்கள்/ஊடக மார்கழி மகோத்சவங்கள்:
டிசம்பரும், ஜனவரியும், “பொல்லாத பனிமாதங்களாக வருணிக்கப்பட்டாலும், வெளியிலிருந்து வருகிறவர்களுக்கு, மிதமான, இதமான, உடம்பை வருத்தாத குளிர்வைத் தருகிற நகரமாக சென்னை இருப்பது உண்மைதான்! முன்பெல்லாம், மைலாப்பூர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர், டவுனில் உள்ள அண்ணாமலை அரங்கம் என்று மையம் கொண்டிருந்த இசை விழா கச்சேரிகள் இப்போது நகரத்தின் மூலை முடுக்குகளில்லாம் துவக்கப்பட்டு, நடத்தப்படும், “உங்க வீட்டு சபா”, “எங்க வீட்டு சபாக்கள்என்று எங்கும் பரவி, விரிந்துகொண்டே இருக்கும் புறநகர்ப் பகுதிகளையும் நிரம்ப தொடங்கிவிட்டன. குத்துமதிப்பாகச் சொல்வதென்றால், ஏறக்குறைய நூறு சபாக்களுக்கும், பொதுநல அமைப்புகளும், தொலைக்காட்சி, மற்றும் பிற ஊடகங்களுமாக நவம்பர் துவக்கம்-ஜனவரி இறுதி வரை கச்சேரிகள் நடத்துகின்றன!  பிறகு வரும் சில பண்டிகைகளையொட்டி இவை பிப்ரவரி, மார்ச்சு மாதம் வரையுங்கூட நீளுகின்றன.

இசை/ஆடல் கலைஞர்கள்:
இவற்றுள் முன்னணியில் இருக்கும் ஒரு 50 கலைஞர்களும்,  முன்னணிக்குச் சற்று பின்னணியாக, நடுவணியில், முட்டிக்கொண்டிருக்கும் ஒரு 100 கலைஞர்களும், அதற்கும் பின்னால், திறமையோடும், துடிப்போடும் இந்த கச்சேரி வான்வெளியில் வெற்றி நடை போட நுழைந்து, கச்சேரி வாய்ப்புகளுக்காய், சபாச் செயலர்களையும், பெரிய மனிதர்களையும் கச்சேரி திறமைக்கு அப்பாற்பட்ட பல திறமைகளைக்கொண்டு வளைக்க முயற்சிக்கும் ஒரு 300 லிருந்து 500 இளங்கலைஞர்களுமென்று, மேடையேறவே இத்தனை பேர்கள்! இதைத்தவிர இன்னும் வருடா வருடம் உலகின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் புதிதாக இறக்குமதியாகும் இளங்கலைஞர்கள் வேறு.. சென்னையில், அதுவும் இசை/நாட்டிய சீசனில் பாடிவிட்டால்/ஆடிவிட்டால்,  அது இமாலய சாதனை என்ற எண்ணத்தில்!

இசை/ஆடல் இரசிகர்கள்:
இத்தனைக்கும், கச்சேரிகளுக்கு, நல்ல பாட்டுக்காகவோ, நடனத்துக்காகவோ மட்டும் செல்லும் கூட்டம் என்னவோ சிறிய கூட்டம்தான்! மற்றவரெல்லாம், எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போன கதைதான்...! மற்றபடி எந்த கேண்டீனில் எந்த உணவு நன்றாக இருக்கிறது என்பதற்காகவும், உள்ளூர் அரசியலிலிருந்து, உலக அரசியல் வரை அலசுவதற்காகவும், இன்ன பிற அக்கப்போர் விவகாரங்களுக்காவுமே செல்கிறார்கள் என்பதை கச்சேரி சபாக்களை நிரந்தரமாக வட்டமடித்துக்கொண்டிருக்கும் கழுகுகள் நன்றாக அறியும்! எதுவாயிருந்தாலென்ன? நகரமே மார்கழி மந்தநிலைமையைப் புறந்தள்ளி, மற்ற நாட்களின் அவலங்களை மறந்து, மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா?

இவ்வாறு கச்சேரிகள் பெருகிவிட்டதால், மக்களின் கலையார்வம், இசையார்வம் பெருகிவிட்டது என்று யாரும் தவறாக எண்ணக்கூடாது.. கச்சேரிகளோ, நாடகங்களோ, உபன்யாசங்களோ, கருத்தரங்களோ எதுவானாலும் சரி, அவை தொலைக்காட்சி ஊடகங்களில் மிகவும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிற,  தொடர்களின் காட்சி நேரங்களோடு மோதாமல் இருக்கவேண்டும். நட்சத்திர உயர்வைப் பெற்று, நன்றாகவும் பாடிக்கொண்டிருக்கும் ஒரு சிலரின் கச்சேரிகளைத் தவிர பெரும்பாலான கச்சேரிகளில் கூட்டம் இறுதிவரை இருப்பதில்லை.. சில கச்சேரி மேடைகளில் பாடுபவர்களுக்கே அச்சமாகப் போகக்கூடிய தனிமையைக் கொடுத்துவிட்டு இரசிகர்கள் மாயமாக மறைந்து விடுவார்கள்! கச்சேரி வெறும் நாற்காலிகளுக்கு மட்டும்தான்! அப்படியே ஒன்றிரண்டு ஆட்கள் இருந்தாலும், அவர்களும் உறங்கிக் கொண்டிருக்கலாம்! போனால் போகிறதென்று, ஒலிச்சாதனங்களை, திரைச்சீலைகளை மேய்க்கும் தொழில் நுட்ப, மேடை நிர்வாக வேலையாட்கள் மட்டும் இருப்பதுண்டு!

சென்னை மியூசிக் அகாதமி, மற்றும் பாரதீய வித்யா பவன், மற்றும் ஒன்றிரண்டு தேர்ந்த அரங்ககளில், ஒலியும், சூழலும், மிதமான குளிரும் இருப்பதால், இந்த அரங்குகளுக்கு இசை இரசிகர்கள் விரும்பி வருகிறார்கள். கச்சேரிகள் எப்படியிருந்தாலும், கண்ணைமூடி இளைப்பாறிக்கொள்ளலாம் அல்லவா?

பொதுவாக கச்சேரிக்கு வருபவர்களில் பல இரகங்களைப் பார்க்கலாம்! 
·      தீவிர இரசிகர்கள்; இவர்களது இரசிக நிலைத்தன்மை, இசைக்காக,  தாங்கள் விரும்பும் இசைக்கலைஞர்களுக்காக, இசைவளாகங்களுக்காக என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
·      சபாவுக்கு சபா தாவிக்கொண்டே இருக்கும் வண்ணத்துப்பூச்சிகள்! இவர்கள் கச்சேரிகளைக் மேம்போக்காகக் கொறிப்பவர்கள்; உணவு விடுதிகளில் எங்கெங்கு, என்னென்ன கிடைக்கும், எவை நன்றாக இருக்கும் என்று மதிப்பீடு செய்து, தாங்களும் சுவைத்து, தங்களைச் சார்ந்த பரிவார தேவதைகளோடு அங்கெல்லாம் தவறாது போய்விடுபவர்கள்! இவர்களை முதலிரண்டு பாடல்களுக்கு அப்புறம் பொதுவாகக் காண்பதில்லை.
·      முக்கியப்பாட்டு, உபமுக்கியப் பாட்டு, தனிஆவர்த்தனம், தொலைக்காட்சித் தொடர் நேரம், அல்லது இயற்கை உபாதை என்று எத்தனையோ காரணங்களுக்காக, கச்சேரி செய்பவர்களுக்கு எப்படியெல்லாம் கவனச் சிதறலைச் செய்யலாமோ அவ்வாறு செய்துகொண்டு கச்சேரியின் நடுவில் பல நேரங்களில் எழுந்து செல்பவர்கள். இவர்கள் உயர்தட்டினராக, இசைக்கலைஞர்கள் கச்சேரி நடுவே கும்பிடுபோடும் பெரிய மனிதராக இருந்தால், முதல் வரிசையிலிருந்தே எப்போது வேண்டுமானாலும் எழுந்து செல்லும் உரிமையும் பெறுகிறார்கள். “ஞானம் கெட்டவன்” என்று வைதுகொண்டாவது, மேடையில் இருக்கும் கலைஞர்கள், ஏதோ இந்த அளவுக்காவது வந்து இருந்தீர்களே என்ற நன்றியறிதலைத் தெரிவிக்கும் புன்னகையோடு, கும்பிட்டு வழியனுப்பி வைக்கும் இரகம் அவர்கள்!
·      கைத்தொல்லைப்பேசியில் எப்போதும்பிளிங் பிளிங்என்று வந்துகொண்டிருக்கும் செய்தி, வாட்ஸப், மின்னஞ்சல், அல்லது அழைப்புகளை உடனடியாக ஏற்றுக்கொள்வதே தலையாய கடமை என்று அவற்றையே பார்த்துக்கொண்டிருப்பவர்களும் பெருமளவில் உண்டு.

சீசன் வியாபாரிகள்:
இத்தனை விழாக்கோலத்துக்குப் பின்னும் இருக்கும் இசை வியாபாரிகளையும், அவர்கள் செய்யும் விவகாரங்களையும் அருகிலிருந்து பார்த்தால், இவர்கள் மூலமாகவா செவ்விசை வளரப் போகிறது என்று தோன்றாமலில்லை. எதிலும், எங்கும் வியாபார நோக்கம்.  எல்லாம் வியாபாரம்! தெலுங்கு இசை மும்மூர்த்திகளானாலும் சரி, அவர்களுக்கு முன்பும், பின்பும் பாடுபட்டு, இசைவடிவங்களை செப்பமுற கற்பனை செய்து, கற்பித்து, உன்னத நிலைக்குக் கொண்டு சென்ற மற்ற தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள இசைப்பாடலாசிரியர்களும் சரி! தாம் இறைப்பணியாய் செய்தவற்றை இந்த அளவுக்கு வணிகமாக்கி விட்டார்களே என்று வருந்துபடியாக எல்லாமே வியாபாரமாகி விட்டது... வியாபாரியாக இருந்து, இசையின்மூலமாக இறைக்காட்பட்டு, இன்றும் கர்நாடக இசையின் பாட்டனார் என்று கொண்டாடப்படும் புரந்தரதாசர் எங்கே! இராமனை வழிப்பட்டு, பணத்தைத் துச்சமாகக் கருதிய தியாகராஜர் எங்கே! கண்ணன் பக்தியிலேயே தம்மை இழந்திருந்த ஊத்துக்காடு வேங்கட கவி எங்கே? இன்னும் இசையையும், இறைமையயும் ஒன்றாகக் கண்டு, உணர்ந்து, பாடல்களைப் புனைந்த கோபாலக்ருஷ்ணபாரதி, பாபநாசம் சிவன், கவிகுஞ்சர பாரதி, பத்திராசல இராமதாசர், அன்னமய்யா போன்ற எத்தனையோ மகான்களெலாம் எங்கே! அவர்கள் பக்திக்காகவும், இறையனுபவத்துக்காகவும் செய்தவற்றை பணத்துக்காகவும், பகட்டுக்காகவும் விற்றுக்கொண்டிருக்கும் இன்றைய இசையுலகம் எங்கே? இவர்களெல்லாம் செயல்படும் விதங்களைப் பார்த்தால், செவ்விசைக்கே உரித்தான மதிப்பும், பெருமையும் விரைவில் நீர்த்து, கரைந்து போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது! சந்தை வணிகத்தில் சகட்டுமேனிக்கு உற்பத்திசெய்யப்பட்டு, கூறுகட்டி விற்கப்படும் சைனாப் பொருள்போல் ஆகியதோ என்று ஐயுரவேண்டியுள்ளது.

முன்னரே சொல்லியதுபோல, நவம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே, உலகின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் இசை ஆர்வலர்கள் (இதில், நம்முடைய செவ்விசைப் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு வருகின்ற இந்தியரல்லாதாரும் அடக்கம்) சென்னையில் வந்து குவிந்து விடுகிறார்கள். 2000ம் ஆண்டுக்குப் பிறகு தொலைக்காட்சி ஊடகங்கள் வழியே பற்றிக்கொண்டுவிட்டரியாலிட்டிகாட்சிகளின் மோகம் செவ்விசை வானையும் சூழ்ந்துகொள்ள, அதனால் உலகளாவிய நல்ல இசை ஆர்வமுள்ள இளைஞர்களையும், இளைஞிகளையும்  அடையாளம் காணமுடிந்தாலும், ஆர்வக்கோளாறாக பலரும்கூட, நானும் பாடியே தீருவேன் என்று அடத்துடன் படையெடுக்கத் துவங்கியதும் நடந்துகொண்டிருக்கிறது! இதில் வணிக நோக்கத்துடன் மற்றும் செயல்படும் இசை அமைப்புகளும் புற்றீசல் போல் கிளம்பி, பாடுபவர்கள், ஆடுபவர்களிடமே கப்பம் வசூல் செய்து, அவர்களுக்கு வாய்ப்பு என்ற பெயரில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத, அரங்கமென்றுகூட கூறவியலாத இடங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தருகிறார்கள். பெரும்பாலும் கச்சேரிக்கு சன்மானம் எதுவும் கிடையாது! அம்மாதிரி கலைஞர்களும், உறவுக்காரர்களுக்கும், பெரும்பாலும் வெற்று நாற்காலிகளுக்கும், தேங்கியிருக்கும் குட்டைகளில்  முட்டையிட்டுப் பெருகும் கொசுக்களுக்கும்  மட்டுமே பாடவும் ஆடவும் செய்கிறார்கள்

சபாக்களுக்குப் போட்டியாகும் கலைஞர்களும் மற்ற ஆர்வலர்களும்:
செவ்விசையைப் பரப்புகிறேன் என்ற பெயரில் இவ்வமைப்புகளோடு, சில இசைக் கலைஞர்களும் கூட்டமைத்துக்கொண்டு,  அதன் மூலம் தங்களுடைய முக்கியத்துவத்தை பறைசாற்றிக்கொண்டு, தங்களுக்கு வேண்டிய கலைஞர்களுக்கு வாய்ப்புகளைத் தருவதும், அதற்குப் பிரதியாக மற்ற பல இத்யாதி இத்யாதிகளைப் பெறுவதும் கூட நடைபெறுகிறது. ஓய்வு பெறும் நிலையிலுள்ள,  ஓய்வு கொடுக்கப்பட்ட இசைக்கலைஞர்களும் தங்கள் பங்குக்கு சிறு தொண்டு நிறுவன அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் மேற்கண்டவாய்ப்புத் தேடிகளுக்குபணத்துக்கு வாய்ப்புத் தருவதும் நிகழ்கிறது. அவர்களும்தான் என்ன செய்வார்கள் பாவம்.. வாழ்க்கைக் கச்சேரி ஓடவேண்டுமே!

ஒரு பத்துவருடம் இசைக்கச்சேரிகளைக் கேட்டுவிட்டதாலேயே தாம் ஏதோ இசைக்கலையின் நுணுக்கங்களை அத்துப்படியாக அறிந்தவர் போல, பேசும் தோரணைக்காரர்களை இந்த இசை மாதங்களில் சென்னை சபாக்களில், குறிப்பாக அங்கு தற்காலிகமாக நடத்தப்படும் உணவு விடுதிகளில் பார்க்கலாம்! அவர்கள் சற்று பணம் படைத்தவர்களாகவும், தொடர்புகள் உடையவர்களாகவும் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்! அவர்களே ஒரு  அமைப்பை ஏற்படுத்தி, தாங்களும் ஒருவாரம் முதல் ஒரு பத்து நாட்களுக்கான விழாவை நடத்திவிடுவார்கள். இவர்களிடம் வாய்ப்புக்கேட்டு அலையும் இளம் இசை வாணர்களும், வாணிகளும்தான் ஏராளமாய் இருக்கின்றனரே!

நட்சத்திரக் கலைஞர்கள்:
ஒருவர் எத்தனை சபாக்களில், ஒருஇசை சீசனில்கச்சேரிகள் செய்கிறார் என்பதை பொறுத்தே அவரது நட்சத்திர மதிப்பு கணிக்கப்படுவதால்,  எல்லோருக்கும் தெரிந்த சபா முதற்கொண்டு, தெருக்கோடி சபா வரை, யார் கச்சேரிக்குக் கூப்பிட்டாலும் ஒத்துக்கொண்டு, முதல் மூன்று கச்சேரிகளுக்குப் பிறகு தொண்டை உலர்ந்து, குரல்வளம் குன்றித் தேய்ந்து, தொய்ந்த குரலால் தம்மையும் வருத்திக்கொண்டு, கேட்பவர்களின் (வரும் சிலரது) காதுகளையும் அராவும் விதமாக பாடுகின்ற எத்தனை இசைக்கலைஞர்கள் உள்ளார்கள் தெரியுமா? அவர்களுக்கும்தான் எத்தனைக் கட்டாயங்கள்! சென்னையின் போக்குவரத்து நெரிசல்களில், என்னத்தான் சொகுசு வாகனங்களை வைத்திருந்தாலும், மெல்ல நீந்தி தங்களுடைய கச்சேரி நடக்கும் வளாகங்களுக்குச் செல்வதே இவர்களுக்கு ஒரு சவால்! தவிர, கச்சேரி மேடைகளுக்கும்,  அங்கு வருகின்ற கூட்டத்துக்கும் தக்கவாறு பாடல்களை/உருப்படிகளைத் தெரிவு செய்து, சரியான, இராக, தாள, இசையாசிரியக் கலவையாக அளிக்கவேண்டும்; எந்த அங்கீகரிக்கப்பட்ட, விமரிசகர் எந்த வார/நாளிதழ்களில் என்ன எழுதுவாரோ என்று கவலைப்படவேண்டும்; இணையதளங்களில் நடக்கும் விவாத மேடைகளில் யாரெல்லாம் தம் தலைகளை உருட்டுகிறார்கள் என்று கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும்; தங்கள் பக்கம் இருப்பவர்கள் வழியாக, சேதாரங்களைச் சரிசெய்ய ஆவன செய்யவேண்டும்; தவிரவும், சிதறுகின்ற இரசிகர்களின் கூட்டங்களை, கெஞ்சாத குறையாக, ஆனால் அதே நேரத்தில் தம்முடைய மாண்புக்குக் குறைவு வராத வகையில், இணையதளத்தின் வாயிலாக வெத்தலைப் பாக்கு வைத்துக் கூப்பிடவேண்டும். கச்சேரி நேரத்தில் அடுத்த உயர்கட்ட நேரப்பகுதிக்குத் தேர்வாக என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கவேண்டும்!  குரலை மிகவும் நன்றாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்பப்பா! அவர்கள் பாடும் மிகவும் கடினம்தான்!

விமரிசகர்களும், விமரிசனங்களும்:
இதெல்லாம் இருக்கட்டும்! அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கச்சேரிகளைக் கேட்டு விமரிசனங்களைச் செய்தவர்கள் எல்லாம், முதலில் செய்தி ஊடகங்களிலும், பின்னர் வார இதழ்களிலும் எழுதினார்கள்! இவர்களுள்ளும் சுப்புடு, என்.எம். நாராயணன் போன்றோர் விமரிசனங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது! கல்கியவர்கள் கல்கியில் எழுதுவதற்கு முன்பாககடுகுஎன்ற பெயரில் விமரிசனங்கள் செய்துவந்தார். இசை நுணுக்கங்கள் தொடர்பாக விமரிசனங்கள் வைக்காமல், அங்க அசைவுகள், உச்சரிப்பு குறைபாடுகள், தமிழிசையைக் கேட்காத குறை என்ற அளவிலேயே அவ்விமரிசனங்கள் இருக்கும். அவர் எழுதும் விமரிசனங்கள் காரமாக, அவருடைய எழுத்துத் திறமையைப் பளிச்சிடச் செய்யும் வகையிலேயே இருக்கும். பின்னால் வந்த சுப்புடுவுக்கோ, ஆனந்த விகடன் ஒரு நட்சத்திர அந்தஸ்த்தைத் தந்து, வியாபார நோக்கிலே, அவரைப் பெரிய விமரிசகராக அடையாளம் காட்டிவிட்டது.!  அவரும் சகட்டுமேனிக்கு, “வள்ளியென்ன குள்ளியா?” “ செம்மங்குடி பாடினால் சங்கதி எங்கே வருகிறது? சளிதானே வருகிறது”, “எம்டிஆர் பாடுவதற்குத் தாம்புகயிற்றிலேதான் வயனின் நாண் இருக்கவேண்டும்என்றெல்லாம் நையாண்டியாக எழுதத்தொடங்கினார்! தனிப்பட்ட முறையில் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை வார இதழின் வாயிலாக வாசகர்கள்மேல் திணித்தார். இவையெல்லாம் அவருடைய வாசகர் வட்டத்தைப் பெருக்கவும், அவராகப் பறையறிவித்துக்கொண்ட இசை நுண்மாண் நுழைபுலத்தை முன்வைப்பதுமாகத் தான் இருந்தனவே தவிர, இசைக்கலைக்கோ, இசை இரசிகர்களின் இரசிப்புத்தன்மையை வளர்ப்பதற்கோ, இசைக்கலைஞர்களின் நிறைகளையும், குறைகளையும் மனம் நோகாமல் நேர்மையாகச் சுட்டிக்காட்டுவதாகவோ இருக்கவில்லை.. சுப்புடு அவர்களை, நான் கலிஃபோர்னியாவில் துவக்ககால ஆசிரியராக இருந்ததென்றல்இதழுக்காக நேர்முகம் காண 2000-ம் ஆண்டு,  டெல்லிக்குச் சென்று சந்தித்த போதுகூட, குற்றம் கூறும் குணத்தைத்தான் மிகவும் காண முடிந்தது! ஒரு உண்மையான விமரிசகருக்கு இருக்கவேண்டிய குறை, நிறை இரண்டையும் சமமாகச் சுட்டிக்காட்டும் பாங்கு இல்லாமல் போனது அவரது குற்றமாக மட்டும் என்னால் பார்க்கமுடியவில்லை! அவரை வளர்த்துவிட்ட ஊடக வியாபாரிகளின் குற்றமாகத்தான் எனக்குப் பட்டது.

அந்த ஊடகத்தின் தற்போதைய செயல்பாடும் அவ்வாறே உள்ளது! என்ன இப்போது அது, மேல்தட்டினரின் இதழ் என்கிற போர்வையை உதறிவிட்டு செய்கிறது! செவ்வியலுக்குச் சற்றும் தொடர்பே இல்லாத மற்ற வார இதழ்களும் அந்த பாணியை கடைபிடிக்கச் செய்கின்றன. ஊடகங்களின் நிலை இவ்வாறாக இருக்க,  தாமாகவே விமரிசகக் கிரீடத்தைச் சூட்டிக்கொண்ட பல முன்னாள் வாசக, இந்நாள் இணைய தள விமரிசகர்கள், “ஃபேஸ்புக்தொடங்கி, “பிளாக்”, இணையப் பத்திரிக்கைகள், தினசரி, வார இதழ்கள் என்று, ஏதோ ஒரு கச்சேரியைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.. வளரும் கலைஞர்களுக்குஇந்துஆங்கில இதழிலோ, ஆனந்த விகடனிலோ வந்தால் அதுவே பெரிய அங்கீகாரமாகக் கொள்கிறார்கள். அதுவும் அவர்களது புகைப்படத்தோடு வந்துவிட்டால், ஆஸ்கார் அங்கீகாரமே கிடைத்தால் போல! அவர்களோ பெரும்பாலும் முன்னணி ஆட்டக்காரர்களைப் பற்றி எழுதுவதையே தங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வளரும் கலைஞர்களைப் பற்றி எழுதி, ஏதோ தாங்களும் ஒரு நடுவு நிலையாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதோடு நிறுத்திக்கொண்டு!

பட்டங்கள்/விருதுகள்:
சென்னை சங்கீத வித்வத்சபை என்று அழைக்கப்படும்ம்யூஸிக் அகாதமி”, ஆண்டு தோறும் சில விருதுகளை வழங்கிவருகிறது கடந்த தொண்ணூறு வருடங்களாக. இசையுலகின் பெரிய விருதான சங்கீத கலாநிதி என்னும் விருதும் 91 வருடங்களாகக் கொடுக்கப்பட்டு வருகிறது, சில வருடங்கள் நீங்கலாக.  இதைத்தவிர கிருஷ்ண கான சபா, பார்த்தசாரதி சபா (மிகவும் பழைமையான சபா),  நாரதகான சபா, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி”,  பிரம்மகான சபா, தமிழிசை மன்றம், மற்றும் பல சபாக்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு, கலைஞர்களை விருதுகள் கொடுத்தும், பணமுடிப்புகளைத் தந்தும்,  பெருமைப் படுத்துகின்றன. இந்த விருதுகள் தகுதியானவர்களுக்குப் போய் சேர்வதில்லை என்று பலபேர் அங்கலாய்ப்பதும் உண்டு! இந்த விருதுக்கள் எந்த தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன, யார் இவற்றைத் தீர்மானிக்கிறார்கள், சங்கீத கலாநிதியாவதற்கு அடிப்படைத் தகுதிகள் என்ன, விசேடத் தகுதிகள் என்ன? இவர்கள் சனநாயக முறையிலேதான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? அல்லது சபாக்களை நிர்வாகம் செய்யும் குழுக்களை ஆக்ரமித்துக்கொண்டு, அவர்களுக்குள்ளாகவே ஒருவரை மீண்டும் மீண்டும் தெரிவு செய்து, அந்த குழுவுக்குப் பிடித்தவர்களை தேர்வு செய்கிறார்களா என்ற கேள்விகளெல்லாம் அவ்வப்போது கேட்கப்பட்டாலும், கிடைப்பதென்னவோ, மௌனம்தான். பெரும்பாலும் எல்லா சபாக்களுமே ஒரு சிலருடைய கட்டுப்பாட்டிலேயே இருப்பதால், இவற்றை குடும்ப நிறுவனங்களாகவே அவர்களும் நடத்துகிறார்கள்! இரசிகப் பெருமக்களுக்கு, இந்த தேர்வுகளில் ஒரு பங்களிப்பும் கிடைப்பதில்லை!  எல்லா சபாக்களையும் ஒருங்கிணக்கும் ஒரு அமைப்பு இருந்தாலும், இதன் உறுப்பினர்களும்கூட தங்களுக்குள்ளே ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்துகொள்ளும் வகையினர்தாம். ஒரு வகையில் பார்த்தால் இதை சென்னை இசையுலக மஃபியா என்று கூடக் கூறலாம்.  ஆனாலும் கூட தேர்ந்தெடுத்து விருது கொடுக்கப்படுகிற கலைஞர்களில் பலரும்  (ஒரு சிலரைத் தவிர) தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள்தாம்! இசைக்கும் உழைத்து, கச்சேரிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர்களே இவர்கள்!  குறையென்னவென்றால், ஏனிந்த மூடு மந்திரம்? இரகசியமாகத் தேர்வுகள் எல்லாம்?

கச்சேரிகளின் வரையறைகளும், கட்டுப்பாடுகளும்:
இசைக்கச்சேரிகள் என்று எடுத்துக்கொண்டால், பல சபாக்களிலும் எழுதப்படாத விதிகள் உண்டு, பெரும்பாலான உருப்படிகள் இசை மும்மூர்த்திகளின் உருப்படிகளாகவே இருக்கவேண்டும். பிறருடைய உருப்படிகளோ, தமிழ் உருப்படிகளோ பெரும்பாலும் குறைவாகவே, அதிலும் உதிரி, துக்கடாக்களின் வரிசையிலேதான், தமிழை அரங்குகளைத் தவிர.. சபாக்கள் வெளிப்படையான விதிகளைச் செய்யாவிட்டாலும், இசைக்கலைஞர்களே, அம்மூவரின் உருப்படிகளே கச்சேரிகளில் ஒரு நல்ல கலைஞனாக, கலைஞியாக் அங்கீகாரம் பெற உதவுகின்றன என்று நம்புகிறார்கள். இதில் கச்சேரி பங்கீடு என்றவொன்றும் இருக்கிறது. எந்த உருப்படிகளை, எந்த தாளவகைகளில், எந்த இராகங்களைத் தேர்ந்தெடுத்து கொடுக்கவேண்டும் என்பதில் வெகுவாக எல்லோரும் கவனம் செய்கிறார்கள்!  இதிலெல்லாம் இருக்கும் கவனம், அந்த உருப்படிகளை எழுதிய பாடலாசிரியர் எந்த உணர்வில், எந்த கடவுளோடு தன்னுடைய முறையீட்டை, ஈடுப்பாட்டை, மகிழ்ச்சியை, குறையை, துயரத்தை வெளிப்படுத்தினார் என்பதிலெல்லாம் இருப்பதில்லை! பெரும்பாலோரைப் பொறுத்தவரை, இராகம், தாளம், மனோதர்மம் என்ற பெயரில் இராக ஆலாபனை, கற்பனைச் சுரங்கள் என்ற வட்டத்திலேயே உழன்று அவற்றுக்காக மட்டுமே உழைக்கிறார்கள்! அவர்கள் நோக்கமே இரசிகர்களிடமிருந்து எவ்வாறு கரக்கம்பம், சிரக்கம்பம் பெறுவது என்பதிலேயே..  ஏனென்றால் அவையே விமரிசகர்களுக்கும் அளவுகோலாக ஆகிவிடுகிறது. கச்சேரியின் பெரிய உருப்படிக்கு முன்பான விரிவான ஆலாபனை,  உருப்படியின் ஒரு இடத்தில் நிரவல், கற்பனைச் சுரங்கள் என்று பாடி, விறுவிறுப்பான கோர்வையொன்றால் முடித்து, பின்னால் தொடரும் தாள வாத்தியங்களின் தனியாவர்த்தனம் என்று வரும்போது, இரசிகர்கள் வெளியில் காற்று வாங்கப்போவதும், சிறு உபாதைகளுக்கான எழுந்து செல்வதும், அல்லது காண்டீனில் சூடாக என்ன கிடைக்கிறது என்று பார்த்துவிட்டு, சில நண்பர்களோடு அளவளாவிவிட்டு  வருவதும் வாடிக்கையாகப் பார்க்கும் காட்சிகள்.

தமிழிசையின் தலையெழுத்து:
தமிழ் நாட்டின் தலைநகரத்தில், தமிழர்களே பெரும்பாலும் பாடுகிற மேடைகளில் தெலுங்கு, மற்றும் வடமொழிப் பாடல்களே ஆதிக்கம் செய்யும் வெட்கக்கேடு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையான கலைக்கு, கலைஞர்களுக்கு மொழி சார்புகள் இருக்கக்கூடாது என்னும் ஒருவாதம் வைக்கப்படுகிறது என்றாலும், அறிவிக்கப்படாத வட, தெலுங்கு மொழி சார்பு இருப்பதை யாருமே மறுக்கமுடியாது. எல்லா மொழிகளுமே அருமையான மொழிகள்தான்! தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி என்று எதில் வேண்டுமானாலும் பாடுவதற்கு தமிழ் இசை விரும்பிகள் என்றுமே தடை சொல்வதில்லை! தெலுங்கில் பாடும்போது இசை நேர்த்திகளை, நெளிவுகளைச் செய்வதுபோல, மற்ற மொழிகளில் செய்ய இயலவில்லை என்று கூறுவதெல்லாம் வெறும் பசப்பு, தங்கள் இயலாமைக்கும், முயலாமைக்கும், பின்னால் ஒளிந்துகொள்ளும் கயமை, பாசாங்குத்தனமே. இது ஒருபுறம் இருக்க, மற்றமொழிகளின் உச்சரிப்புகளுக்குப் பாடுபடும் கலைஞர்கள் தமிழில் பாடும்போது, ஏனோதானோ என்று இருந்து, ளகர,லகர, ணகர,  நகர, னகர, ழகற உச்சரிப்புகளில் கோட்டைவிடுவது கொடுமை மட்டுமல்ல! தமிழிசை இரசிகர்களை துச்சமாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கல்லாது வேறென்ன? எல்லா மொழிகளிலும் பாடுங்கள்! ஆனால் தமிழிலும் நிறைய பாடுங்கள்! துக்கடா நிலையிலிருந்து, முதன்மை நிலைக்குக் கொண்டுவாருங்கள்! மற்ற மாநிலங்களுக்குச் செல்லும்போது அம்மொழிகளில் பாடுங்கள்! உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை! உங்களையெல்லாம் பண்ணிசை ஆய்வு செய்து, பழம் பெருமைகளைத் தோண்டியெடுக்கவா சொல்லுகிறோம்? இப்போது புழக்கத்தில் இருக்கும் செவ்விசை கட்டமைப்பிலேயே, கடந்த 5 நூற்றாண்டுகளில் வெளிவந்துள்ள கணக்கற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினாலே போதுமே!

குறைகளேதானா? நிறைகள் இல்லையா?
என்னடா! ஒரே பிலாக்கணமாக இருக்கிறதே! நல்ல விடயங்களே சொல்வதற்கு இல்லையோ என்று கேட்பவர்களுக்கு: இல்லை! இல்லை! அவ்வாறு சொல்வதற்கில்லை. கடந்து சென்ற பல தலைமுறைகளைவிடவும், இப்போது செவ்விசைக் கூறுகளை அறிவியல் கண்ணோட்டதோடு, ஆராய்வு மனப்பான்மையோடு அணுகவும், எல்லாம் பழமை என்று ஒதுக்கிவிடாமல், பழம்பொலிவை மீண்டும் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், துடிப்புள்ள அடுத்த தலைமுறையினர் உருவாகித்தான் வருகின்றனர். குரு பரம்பரையாலே தரப்பட்டது என்று குருட்டுத்தனமாகத் தொடராமல், “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்என்ற வகையிலே, உணர்வார்ந்த அணுகுமுறைகளைத் தவிர்த்து, அறிவார்ந்த அணுகுமுறையிலே அணுகுவதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். இணையத் தொழில் நுட்பத்தின் வழியே பல இசையறிஞர்கள் விட்டுச் சென்ற பாடல்கள்பாடல்களை பொருள் சிதையாமல், உச்சரிப்புக் குறைகள் இல்லாமல் பாடுவதில் அக்கறை கொள்கிறார்கள்.  என்ன செய்வது!  பெருகிக்கொண்டே வரும் போட்டிச் சூழலில், சுழலில், எல்லாத்துறைகளிலும் இருப்பது போல, சீரிய எண்ணங்களோடும், இலக்குகளோடும் வரும் பெரும்பாலனவர்கள், தனிநின்ற சோதியாக இருக்கமுடியாமல், சிக்குண்டு, புதைந்து, அகண்ட சோதியில் ஐக்கியம் ஆகிவிடுவதுபோல, இத்துறையின் கட்டாயங்களுக்காட்பட்டு அமிழ்ந்து விடுகிறார்கள். இசையைத் தொழிலாகக் கொண்டவர்கள் வாழ்கைப்படகை ஒட்ட பொருள்தேடலும் தேவைதான்! அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றுகிற, அதேநேரத்தில் செவ்விசையின் அடிப்படைக் கட்டமைப்பும் நீர்த்துப்போகாத சூழலை இரசிகர்களும், கலைஞர்களும் ஒன்று சேர்ந்துதான் உருவாக்கவேண்டும்.

எங்கே செல்லுமிந்த செவ்விசைப் பாதை?
எல்லாமே ஒரு மாயச்சுழலில் சிக்கிக்கொண்டு, ஒன்றையொன்று சார்ந்து, இது இப்படித்தான் என்று செவ்விசையின் உயிர்ப்பை, ஒரு பாரம்பரியக் கலையின் சீர்மையை மெல்ல, ஆனால் உறுதியாகத் தொலைத்துக் கொண்டிருப்பதைக்கூட உணராமல் இந்த வணிகக் கலாசாரப் புதை குழிக்குள் சென்று கொண்டிருக்கிறார்களோ என்று ஐயம் தோன்றுகிறது. ஆனால் பாரம்பரிய இசையென்பது பல நூற்றாண்டுகளைக் கடந்து, பல கலாச்சார சீரழிவுகளையும் கடந்து, மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, பாதுக்காக்கப்பட்டு இன்று வரை நின்று நிலைத்துக்கொண்டுதான் இருக்கிறது. எல்லாமே சுழற்சிதானே! எந்தவித வணிகக் குறுக்கீடுகள் இல்லாமல், இசையை இசைக்காகவே கொண்டாடும் காலமும் வரும், வணிக ஆசைகளுக்கு ஆட்படாமல், இசைக்காகவே தம்மை அர்ப்பணித்துக்கொள்ளுபவர்களும் என்றுமே இருப்பார்கள்!  இன்றும் கூட இருக்கிறார்கள்.. இந்த இசை விழாக்கள் விழுந்தாலும் விழும்.. விழுதுகள் ஊன்றிய விருட்சமாகிய இசை விழாது!

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி சார்.. டிசம்பர் சீசனில் சென்னையில் இருப்பேன்.. நீங்கள் சென்னயில் இருந்தால் சந்திக்கலாம்..

      நீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...