ஜனவரி 19, 2012

வெண்பா பைத்தியம்…சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாற் போல, என்னுடைய நண்பர் இராசா  என்னை வெண்பா இலக்கணம் பற்றி ஏதோ கேட்கப் போக, பரணில் தூங்கிக்கொண்டிருந்த வெண்பா பிசாசு என்னை மீண்டும் பிடிக்க, உடனே ஒரு வெண்பா!


இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா… வெண்பாக்களுக்கே உரியவை, “இதனால் இது” என்கிற காரண விளக்கங்களும் அல்லது “எதனால் இது” என்கிற கேள்வி-பதில்களும் அல்லது “இவ்வாறிருக்க அவ்வாறு ஏன்” என்கிற காரணம் ஒற்றிய கேள்விகளும்!


அந்த அடிப்படையை ஒட்டித்தான், எண்ணம் எப்படி வாழ்வைப் புதுக்குகிறது என்று எழுதியதும். திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்கள் எழுதிய யாப்பிலணக்கண நூலைப் ஒருமுறை படித்து சரிபார்த்துக்கொண்டேன்..


பண்ணிலாமல் பாடலுண்டோ கண்ணிலாமல் காட்சியுண்டோ

உண்ணிலார்க்கு ஊட்டமுண்டோ எண்ணிடாது ஏற்றமுண்டோ

வண்ணமுதாம் வாழ்வினிலே எண்ணிறந்த இன்பமுண்டே

எண்ணியென்றும் வாழுவதே வாழ்வு

ஜனவரி 18, 2012

தந்திரப் பேச்சு -- கவிமாமணி இளையவன்[நான் இரசித்த சில கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். மின்பெருவெளி  வலையிலே, எத்தனைச் செல்வங்கள் கொட்டிக் கிடக்கின்றன? எத்தனை சிந்தனையாளர்கள் எவ்வளவு இலகுவாக எழுதுகிறார்கள். வெண்பா எழுதுவது பற்றி நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கையில், வலையில் "வெண்பா வடிக்கலாம் வா" என்கிற ஒரு குழுமம் உருவாக்கப்பட்டு, வெகு நாட்களாக நான் தொடர்பில்லில்லாத என்னுடைய "தென்றல்" துவக்ககால நண்பர் திரு. வாஞ்சிநாதனை நினைவு கூர்ந்து, வலையில் தேடும்போது வாஞ்சியைக் காணவில்லை; ஆனால் வாஞ்சையுடன் என்னை எண்பத்தைந்தாம் வருடம் டொராண்டோ நகரில் ஒருநாளை பகிர்ந்துகொண்ட மதிப்பிற்குறிய மின்னணுவியல் துறை பேராசிரியர் பசுபதி தானுமுவந்து பகிர்ந்துகொண்ட கவிதை இதோ...! கவிமாமணி இளையவன்.. அவர் தமிழே இனிமை, இளமை – யாருக்கும் இளைக்காத புலமை! நீங்களும் ரசிக்கலாமே!]தந்திரப் பேச்சு -- கவிமாமணி இளையவன்


போஜன் என்பவன் ஒர்அரசன்
புலவர் போற்றும் பேரரசன்
பூஜை எல்லாம் சிவன்மேலே
பொழுதும் நினைவு அவர்மேலே

ஏழை ஒருவன் "சிவபெருமான்"
எங்கும் இல்லை" எனச்சொன்னான்
வாழை மரபாய்க் கொடைத்தன்மை
வாய்ந்தோன் போஜன் இதைக்கேட்டான்

"சிவனை இல்லை என்கின்றாய்,
சொல்வது எப்படி" எனக்கேட்டான்
அவனோர் ஏழை ஆனாலும்
அறிவின் திறனால் விடைசொன்னான்

சங்கர நாரா யணன்எனவே
சங்குத் திருமா லிடம்பாதி
அங்கம் தந்தார் மீதியினை
அன்பாய்ச் சக்திக் களித்திட்டார்

இரண்டு பாதி போனதனால்
இனிமேல் சிவனார் "ஏ'தென்றான்
அருமை விளக்கம் எனப்போற்றி
அரசன் கேள்வி சிலகேட்டான்.

சந்திர கலையது எங்கென்றான்
சந்தி ரனிடமே போச்சென்றான்
விந்தை! கங்கை எங்கு' என
"வந்தே சங்கம் இங்" கென்றான்

சிவனின் வீரம் எங்கென்றான்
சேர்ந்தது உங்களை எனச்சொன்னான்
தவழும் திருவோ டெங்கென்றான்
தனதே அதுவென விடைசொன்னான்

ஏழையின் கையில் திருவோடு;
ஏந்தல் பார்த்தான் கனிவோடு
வாழும் தந்திரப் பேச்சுக்கு
வரிசை அளித்தான் மகிழ்வோடு !

ஜனவரி 16, 2012

இயற்கை


[இன்று ஒரு கவிதை.. "தானே" புயலுக்குப் பிறகு நடக்கும் அரசியலைப் பற்றி ஒரு செய்தியைப் படித்தேன். அதன் பாதிப்பில் எழுத தொடங்கிய கவிதை அனுமன் வால் போல் நீண்டு கொண்டே போக, வழக்கம் போல் பொசுக்கென்று முடித்துவிட்டேன்.. இன்னும் எழுதிப் பழக வேண்டும்! ]

cy_295_3.jpg


ஆறறிவு மனிதர்களின் ஆரவாரப் போலித்தனம்
ஓரறிவு மில்லாத இயற்கையிலே இருக்கவில்லை

மனிதசக்தி அறியவொண்ணா மாசக்தி ஐந்தனிலும்
கனிவுமுண்டு கடுஞ்சீற்றக் கூற்றாகிக் காய்வதுண்டு!

ஆனாலும் அங்கேயோர் மதமென்ற பேதமுண்டோ?
வீணாக இனமென்றும் மொழியென்றும் கூச்சலுண்டா?

நிலமதிர்வும் கடற்கோளும் பேய்க்காற்றுப் பெரும்புயலும்
நீர்மலிந்து பெருவெள்ளக் காடாகும் நிலையதுவும்,
தீயெழுந்து எரிமலையாய் கொதிகுழம்பாய்ச் பொழிவதுவும்,
வேர்பிடுங்கி எறிந்திவரை அடியோடு அழித்திடுவோம்,
மாயட்டும் மாற்றுசாதி - வாழட்டும் நம்சாதி
என்கின்ற வன்மத்தின் வெளியீடாய் இருப்பதில்லை!

கன்மத்தின் குறியீடாய் கதைசொல்வர் ஒருமதத்தார்!
இயற்கைதரும் ஜிக்ஹாதி எனமுழங்கும் ஒருமதத்தார்!
மயக்கமின்றி தெளிவீரே தீர்ப்பிடுநாள் வெகுவிரைவில்
மீட்பரிங்கு வரவேண்டி பாவிகளே மாறிடுவீர்!
தயக்கமின்றி தெரிவிப்பார் தேவதூதன் கட்சியினர்

கேட்பவர்கள் கேட்கநெய்யும் கேப்பையிலே வடியுதென்பார்.
முயற்சியின்றி முயங்கிமூலை முடங்கிமக்கள் இருப்பரென்றால்
தடியெடுக்கும் தண்டல்காரர் படியளக்கும் பகவனாவார்
படிந்தால்பார் இல்லையெனில் பரலோகம் உனக்கிருக்கு!

அரசின்வழி அறவின்வழி என்றகாலம் கடந்தகாலம்!
அரவின்வழி, அடக்குமுறை, எதிர்த்தாலே அழிக்கும்வழி!
உறவின்வழி பிழைக்கின்ற ஊரேய்க்கும் பிழைகள்பல
சிறப்பாக சீரழிக்கும் சிங்காரம் இக்காலம்.

ஆயிரமாய் ஜாதியிங்கு இருந்தாலும் அன்னியர்கள்
புகுவதென்ன நீதியென்ற பாரதியும், நம்மவரே
தாயனைய தேசமிதை துகிலுரியும் துச்சர்களாய்
மிகுநீச மோசர்களாய் போவரென அறிந்திருந்தால்
வெதும்பித்தான் மாய்ந்திருப்பான் வெற்றாக போனதென்று!
இதுஎன்னால் பொறுப்பதில்லை வெந்தீயில் தீயட்டும்
எழுதியவென் வலக்கையும் உலக்கையென ஆகட்டும்
பழுதுபட்ட சமுதாயம் பாழாகப் போகட்டும்
என்றல்லோ மனம்வெறுத்து சலித்திருப்பான்? சபித்திருப்பான்?
அன்றேதன் தமிழாலே "அறம்"பாடி அழித்திருப்பான்.

மதத்தாலும் மொழியாலும் நிலத்தாலும் நீராலும்
உதவாத பலவாத பிடிவாத மடமைகளால்
விடமாக வளர்ந்திருக்கும் பிளவாக்கும் மனப்போக்கும்
முடமாகி உயிர்ப்பின்றி ஜடமான நிலையதுவும்
மாறிநம்மில் புதுநோக்கும் புத்துணர்வும் பிறந்திடவே
சீறியதாய் புதுவாழ்வு மலர்ந்திடவே இயற்கையெனும்
தாயவளின் வீரியமே பிரளயமதாய் பொங்கட்டும்!
நேயமுடன் மீண்டுமனிதம் புனிதமுடன் மலரட்டும்!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...