ஜனவரி 19, 2010

நம்பிக்கை - உணர்தல்

இந்த நாள், இனிய நாள் என்று எல்லா நாட்களையும் தொடங்குவது, ஒரு எண்ணம். ஆனால் இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே என்று ஏங்குவதும், அந்த நாள் இனி வருமோ என்று வாடுவதும், என்றுதான் உண்மையான விடியலோ என்ற புலம்பலும்தான் வாடிக்கையாகி விட்டது.

சன் டீவியில் வரும் மிகவும் குறைவான நல்ல நிகழ்ச்சிகளில், அதிகாலையில் வரும், "இந்த நாள் - இனிய நாள்”, ஒரு சுவையான, பயனுள்ள நிகழ்ச்சி. மறைந்த தென்கச்சி கோ. சுவாமிநாதனும், தற்போது சுகி. சிவமும் நல்ல செய்திகளைப் பயனுள்ள வகையிலே சொல்லி வருகிறார்கள். இந்த வாரத் தொடக்கத்தில், நம்பிக்கை - உணர்தல் என்பவற்றைப் பற்றிய சுகி. சிவத்தின் எண்ண வெளிப்பாடுகள் சிந்திக்கவைக்கும் செய்திகள். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே புழக்கத்தில் இருக்கிற, நன்கு அறிமுகமான வார்த்தைகள். எத்தனைச் சொற்களை அவற்றின் உட்பொருளை அறியாமல், உணராமல் நாம் சொல்லாடல் செய்கிறோம் என்று என்னை உணரவைத்த மணித்துளிகள் சுகி. சிவம் பேசிய தருணங்கள்.

நம்பிக்கை, உணர்தல் என்பவை இரண்டுமே தனிமனித அனுபவங்களாகக் கொள்ளப்பட்டாலும், நம்ப வைப்பதும், நம்புவதும், பிறர் ஊக்கியோ, அல்லது சுய சிந்தனையில் பிறந்த முடிபினாலோ ஏற்படுபவை. நான் அல்லது நாங்கள் நம்புவதை நீயோ, நீங்களோ, பிறரோ நம்பவில்லையானால், பிணக்கும், மனக்கசப்பும், சமயங்களில் சண்டைகளும் ஏற்பட்டுவிடுகின்றன.

கடவுள் நம்பிக்கை, கடவுள் இல்லை என்ற நம்பிக்கை, சமய நம்பிக்கை, சாதி நம்பிக்கை, கருத்தில் நம்பிக்கை, காதலில் நம்பிக்கை, தலைவனில் நம்பிக்கை என்று எல்லாமே கட்சிகட்டும் விவகாரங்கள், மற்றும் அடிப்படையிலே பிரிவினை ஏற்படுத்துபவை. ஒன்றுபடுத்துவது போல தோன்றி, கூட்டங்களைச் சேர்த்து, உன்பலமா, என்பலமா என்று தோள் தட்டுபவை.

உணர்தல் என்பது உள்ளொளி பெருகுதல், நம்பிக்கை உள்ளிட்ட அத்தனை மாயங்களும் அருகுதல்; உள்ளுக்கு மெய்யைக் காட்டும் தரிசன வாயில். உணர்ந்தபின் உவகை, உணர்ந்தவரோடும், அல்லாதவரோடும், சமநோக்குடைமை, கண்டவர் விண்டிலராகும் தன்மை இவையெல்லாம் தானாகவே அமைகின்றன. ஏனென்றால் உணர்ந்தவர் உணர்வது ஒன்றுதாம். சொல்லுக்கடங்கா, வேற்றுமைகளும், சுயபுத்தி என்கிற ஆணவமும் அடங்காத மனங்கள் உண்மையின் தரிசனத்துக்குப் பண்படாதவை, தொலைவில் உள்ளவை. நான், எனது என்பவை ஒழிந்தாலே, அதன் விளைவாம் கட்சிகூட்டல்களும் அழிந்து, சுயதரிசனத்துக்கும், உண்மையின் தேடலுக்குமான பக்குவம் வந்துவிடும்.

எனக்கும் கூட சிந்திப்பது எளிதாக செயலாக்கம் கடினமாக உள்ள ஒன்று இது. இதற்காகத்தான் சொன்னார்களோ... ? “ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள்.. ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்: என்று?

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...