பிப்ரவரி 24, 2009

குளியல் நேரம்

காலைப் பொழுதில் எனக்கு பிடித்த நேரம்.. குளியல் நேரம்தான்..! மிதமான சூட்டில், சீராக கொட்டும் ஷவரின் (பொழினி?)அடியில்.. ஒரே சிந்தனை ஊற்றுப் பிரவாகம்தான் போங்களேன்..
என்னையே நான் சிலாகித்துக் கொள்ளும் வகையில் நகைச்சுவையான, தத்துவார்த்தமான, ஈஸ்வரபரமான, நிரீஸ்வர வாத சாதகமாக.. இவ்வாறு, விதம் விதமாக துணுக்குகள், சிந்தனையோட்டங்கள், சிறுகதைகளுக்கான கதைமுடிச்சுகள், எந்தெந்த தலைப்புகளில் நான் சிறுகதைகள், கட்டுரைகள் எழுத வேண்டுமென்கிற தீர்மானங்கள், தர்க்கரீதியான வாதப் பிரதிவாதங்கள் என்று ஒரேயடியாக எண்ணங்களின் அலைமோதல்கள்தான்..! அல்லது ஒருவித குவிதலுமற்ற எண்ணக்குவியல்!

சரி.. இந்த பல்வேறு சிந்தனைக் குவியல்களையே பட்டியல் போட்டு, பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதினால் என்னவென்று தோன்றியது.. இந்த பட்டியலில் வந்த தலைப்புகள் பின்வருமாறு:

எண்ணப் பறவை..
எழுத்து வியாபாரிகள்
யாருக்காக?
எனக்காக நான்..!
விமரிசகன்
சுருக்கெழுத்துப் போட்டி
ஹே! ராம் - விமரிசன மறுபதிப்பு
தேடித் தேடி எங்கோ ஓடுகின்றார்...!
அறிவுச் செறுக்கு..!
சப்தபதி - திருத்திய பதிப்பு..!

இந்த தலைப்புகளைப் பார்க்கும் போதே, இவற்றின் பின்னால் இருந்த சிந்தனை ஓட்டங்கள் •ப்ளாஷ் பேக்-ஆக, ஒரு கணம் ஓடி மறைகின்றன..!சரி பல கட்டுரைகள் இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு கட்டுரையாகிலும் எழுத வேண்டும் என்னும் எண்ணத்தில்தான் இந்த முயற்சி...! அதாவது குளியலில் பிறந்த அவியல்.

பலருடைய எழுத்துகளையும் படிக்கிற பாக்கியத்தினாலே, பல எழுத்தாளர்களின் பாணிகளையும், அவர்கள் எழுத்துகளின் நிஜ, அநிஜ சமாசாரங்களையும் ஒருங்கே அறிந்துகொள்ளவும், அவர்களின் அறிவுச் செருக்கினை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளும் பல உத்திகளை புரிந்துகொள்ளவும் முடிந்திருக்கிறது.

ஒருவர், பட்டவர்த்தனமாக, "என்னால் இது போன்ற நவீனம் தமிழில் இல்லையே என்ற குறை ஒழிந்தது" என்பர். மற்றொருவர், "நான் வந்தபின்னரே தமிழ் கூறும் நல்லுலகம் கவிதையினை கண்டிருக்கிறது. இதுகாறும் வந்தவையெல்லாம் கழுதைகள் அல்லவோ".. என்று வாசகரிடமே வினவிக்கொண்டிருப்பார்.. "கம்பன் முதல் கண்ணதாசன் வரை வந்தவர்கள் கவிதை என்ற பெயரில் காமத்தையும், காலணா காசுக்குப் பெறாத விஷயங்களையே சொல்லிவிட்டுச் சென்றார்கள்" என்பார்...!

வேடிக்கையென்னவென்றால் இவற்றைப் படிக்கும் வாசகர்கள் ஒன்று தங்கள் இரசனை இதுநாள் வரை பாமரத்தனமாய் இருந்து, இந்த புதுயுக எழுத்தாளர்களின் எழுத்துகளைப் படித்த நாள் முதலாய், பனை மரத்தளவுக்குப் போய்விட்டதாய் கற்பனைச் செய்துகொள்ளவேண்டும்....

அல்லது, இதுநாள் வரைக்கும், காலுக்கும் கடைப்பட்ட எழுத்துக்களைத் திரும்பிப் பாராமல், இந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்காக தவம் செய்து கொண்டிருக்க வேண்டும்... எவ்வகையிலே பார்த்தாலும், வாசக அன்பர்களுக்கு, இந்த எழுத்துலக பிரம்மாக்களால், மறு பிறப்பு அளிக்கபட்டதாகவே கொள்ளலாம்.

இதை எழுதும் போதே.. இதை இரசிக்கவும் இரசித்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும், என் பெயரை(பென்னாத்தூர் அஷோக் சுப்பிரமணியம்), பெ..சு எனச் சுருக்கி, என் எழுத்துடனான தங்களின் அந்நியோன்னியத்தை என்னுடனேயே இருக்கும் அந்நியோன்னியாமாக, கற்பித்துக் கொண்டு, என் சிந்தனைக்கு தங்களின் அங்கீகாரம் மூலமாக, என்னையேத் தங்களின் சொந்தமாக்கிக் கொண்டு, மெத்தப் படித்தவர்களிடையே சிலாகித்துக் கொள்ளும் கூட்டமும், .. இதெல்லாம் இலக்கியமா...? எழுத்தா?.. வெறும் வாக்கியப் குப்பைக் குவியல்..என்று காட்டமாக விமரிசிக்கவும், இடைப்பட்டு எந்த ஒரு பாதிப்பும், இதை ஒட்டிய, வெட்டிய கருத்தெதுவும் இல்லாமல் நிர்குணப் பிரம்மமாக பொழுதைப் போக்கமட்டுமே இதை படிக்கும்... வெவ்வேறு கூட்டம் இருப்பதை உணராமல் இல்லை..!

இந்த சமயத்தில், விருப்பு, வெறுப்பு ஏதும் இல்லாமல், விஷய விசேஷத்துக்காக மட்டும் படிக்க சிறுவயதிலிருந்தே ஊக்குவித்த என்னுடைய தாயாரை என்னால் நினைக்காமல் இருக்கமுடியவில்லை. அம்மா! உன்னை நினைக்கும் போதே நெஞ்சில் ஈரம் கசிகிறது..

சிறியவனாகையால், நீ, நீண்ட காலம் வாழ, இருக்கிறானா, இல்லையா என்ற கேள்வியை என்னுள்ளும் விதைத்து தடுமாற வைத்திருக்கிற எல்லாம் வல்ல (இதுவும் சந்தேகமே..!) இறைவனை வேண்டுகிறேன்.

அவன் இல்லையெனில், உன்னுடைய மனோ நலமே உன்னை வாழ வைப்பதாக!.. எல்லா உறவுகளையும், தற்காலிகாமான, ரயில் சிநேகிதமாக எண்ணவேண்டும் என்று, அறிவு சொன்னாலும், இதயம் ஏனோ கனக்கிறது, உன்னுடைய தவிர்க்கமுடியாத, என்றைக்கோ வரப்போகிற பிரிவுக்காக..!

உலக்கத்திலேயே மிகப்பெரிய அதிசயம் இதுதானாம்.. இன்று இறந்தவனுக்காக, நாளை இறக்கப்போகிறவன் அழுவதுதான்..! நான் வாய் வேதாந்தியாக இருக்க விரும்பவில்லை அம்மா! ஏனென்றால், நான் மிகவும் மதிக்கிற உன்னாலேயும் கூட நிறைய வாய்வேதாந்தம் தான் பேச முடிந்திருக்கிறது. முக்கியமான, கடினமான சோதனைகளிலெல்லாம் நூற்றுக்கு நூறு வாங்கிவிட்டு, சுலபமான சோதனைகளில் நீ பூஜ்யம் வாங்கியிருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்..! சரி..! உன்னைப் பற்றிய எண்ணத்திரட்சியிலே...சிந்தனையோட்டம் திசை மாறிவிட்டது...உன்னைப்பற்றி, ஒரு புத்தகமே எழுத முடியும் போது, ஓரிரு பத்திகளில் அடக்க மனமில்லை..! மனமே..திசை மாறு!.. எண்ணங்களே.. ஒரு கட்டுக்குள் வாருங்கள்!

பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட, இப்போது,இன்னும் நிறைய பேர் எழுதுகிறார்கள், நிறைய பேர் படிக்கிறார்கள்..! மூடி வைத்துப் பேசியதையெல்லாம், வெளிச்சத்திலே, கொண்டுவந்து விசாரணை செய்யும் சிந்தனைச் சிற்பிகள் நிறைய பேர் ஏற்பட்டிருக்கிறார்கள்.. நல்லதுதான்.. மிகவும் ..ல்....து.....தான்..! ஆனால், எல்லாவற்றிலுமே, ஒரு வியாபார நோக்கம் இருப்பதாகத்தான் படுகிறது..! மிகுந்த உற்சாகத்தோடு, பலவித சமூகக் கேடுகளை, மிகவும் உணர்ச்சிகரமாக, வாசகர்களின் முன்னால் வைக்கும் பல எழுத்தாளர்கள்.. அதற்குமேல் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால்.. பார்த்துக் கொண்டே இருக்கவேண்டியதுதான்.. ஒன்றும் செய்திருக்கமாட்டார்கள்..!

வாசகர்களும், இவற்றைப்பற்றிப் படிக்கும்போது, 'உத்சு, உத்சு' என்று சொல்லி, உணர்ச்சி வசப்பட்டு, பரிதாபப்பட்டு, கோபப்பட்டு,ஆத்திரப்பட்டு, தங்கள் உணர்ச்சிகளை வடித்துக் கொள்கிறார்களே தவிர அதற்குமேல் ஒன்றுமே செய்வதில்லை..! அவர்களால் முடிந்தததெல்லாம், எழுதிய எழுத்தாளனை, தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு, அவனைச் சமூகச் சிந்தனைச் சிற்பியாக்கிப் பாராட்டிக்கொண்டிருப்பதுதான்..! (ஆனால், அப்படிக் கொண்டாடப்படுவதற்கும், பிரம்மா, மச்சக்கலவையை அந்த எழுத்தாளன் பிறக்கும்போது, தாராளமாகத் தெளித்திருக்கவேண்டும்!)
எனக்குத் தெரிந்து ,இன்றைய எழுத்தாளர்களில், எந்த எழுத்தாளரும், கண்ணெதிரே நடக்கும் நிஜ சமூகக் கட்டுப்பாட்டுக்கு மீறிய, சில பணம், பலம் பொருந்தியவர்களின் செயல்களை தைரியமாக விமரிசிக்கத் துணிவதில்லை..! நிஜமாக, அரசியல் சார்பு இல்லாமல், (இருந்திருந்தாலும், எழுத்திலே தெரியாத) விந்தன், நா. பார்த்தசாரதி, தேவன், .சு. நல்ல பெருமாள், ஜெயகாந்தன் போன்றவர்களின் எழுத்துக்களில் ஒரு உண்மையிருந்தது,( இதை மறுப்பவர்களும் உண்டு!) எழுத்தாளர்கள், எழுத்தின் மூலமாக ஏராளமாகச் சம்பாதிக்காத காலத்தில்.

சினிமாக்காரர்களாவது பரவாயில்லை, வியாபாரநோக்கத்துடனே என்று வைத்துக் கொண்டாலும், சில சமூகச் சீர்கேடுகளையாவது, படம் பிடித்துக் காட்டுகிறார்கள் (அவற்றிலும் வியாபார உபாயங்கள் நிறைய உண்டு!)..பாவம் ஏழை எழுத்தாளர்.. முதுகெலும்பில்லாதவர்.. ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக எழுதுபவர்.. எப்படி சமூக அவலங்களைப் பற்றி எழுதுவார்..? இந்த நாட்களில், எழுதிதான் பிழைக்க முடியுமா..? - என்று வாசகர்களிடையே ஒரு பரிதாபத்தையும் பெற்றுவிட்டார்கள்..! பிறகென்ன, எழுத்துவியாபாரம் அவர்களைப் பொருத்த வரையில், மிகவும் வெற்றிகரமாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது...!

பத்திரிக்கை, மற்றும் இதர "மீடியாக்களில்" (
ஊடகத் தளங்கள்..!) இப்போது பார்ப்பதெல்லாம் குழாயடிச்சண்டைகளுக்குக் குறைவில்லாத எழுத்துப் பரிமாற்றங்கள்தான், ஏதாவது கட்சியைச் சார்ந்து, தங்கள், மற்றும் தோழமை கட்சிகளைத் தவிர்த்து, மற்ற எல்லோரையும். எல்லா விஷயங்களுக்கும் விமரிசிப்பது தான் பத்திரிக்கை, வார, மாத இதழ்களின் தர்மமாக இருக்கிறது.
கதை, நாவலாசிரியர்களோ, மூக்கணாம் பட்டி முனியம்மாளின் முறை தவறிய காதலையும், குற்றவாளிகளின் கற்பனைப்பஞ்சத்துக்கு தீனி போடும் வகையிலே, வக்கிர குற்றங்களை கற்பனையிலே உருவாக்கி, அவற்றை தீர்த்து வைப்பதிலும், தங்கள் வார்த்தை வார்ப்புகளிலும், சக்தியைச் செலவழிக்கிறார்களே தவிர உருப்படியாக ஒன்றும் செய்வதில்லை.

அப்படியே தப்பித் தவறி, சா. கந்தசாமி போன்றவர்களின் சாயாவனங்கள், வித்தியாசமாக சொல்ல வருவதை, சாகித்ய அகாதமி பரிசு கொடுத்து, விருது படங்களின் அந்தஸ்துக்குக் கொண்டு சென்று, அறிவு ஜீவிகளின் குறுகிய வட்டத்திலேயே சுருக்கிவிடுகிறார்கள்.

தெரியாமல்தான் கேட்கிறேன்..! நமது நாட்டிலே, பலதார மணம் சட்டபூர்வமாக தடையென்றிருக்கும் போது, எத்தனை பிரபலங்களுக்கு, எல்லோருக்கும் தெரிந்தே குறைந்த பட்சம் இரண்டு தாரங்கள்..? சரி, முதலாவதுக்குப் பிறகு வந்ததெல்லாம் தாரமில்லையென்றால், சேர்த்துக்கொண்டது என்று அர்த்தமா..? வீட்டிலே ராமனை எதிர்பார்க்கும் நம் மக்களுக்கு, கற்பு என்பது, பெண்களுக்கே மட்டும் என்று, இன்னமும் மூளைச்சலவை செய்துகொண்டிருக்கிற சினிமாக்காரர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, இது சம்மதம்தானா..?

தனிவாழ்வில் சமூகத்தால் செய்யப்பட்ட ஒழுங்கு வரைமுறைகளை மீறியவர்கள், பொதுவாழ்வில் அனுமதிப்பதுதான் சரிதானா..? இவற்றைப் பற்றி ஏன் யாருமே வெளிப்படையாக எழுதுவதில்லை..? பேசுவதில்லை...! ராஜ ராஜ சோழனின் பாரம்பரியதை மல்லுகட்டி இழுத்துவந்து, தங்களின் கலாச்சார உன்னதத்தைப் பறைசாற்றிக் கொள்பவர்கள், அந்நாளைய, குடியாட்சி முறையில், முறை தவறி நடந்தவர்களின் அரசியல் வாழ்வைப்பற்றி அறிவார்களா..?

அவ்வரசனுடைய குடவோலை மக்களாட்சியிலே, தவறு செய்தவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் உடனடி சுற்றமும் அரசியல் பதவிகளுக்கான தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அறிவார்களா..? ஒருவேளை, ராஜ ராஜனும், தமிழ் மன்னன்தானே, சொல்வது ஒன்றாயும், செய்வது மற்றொன்றாயும் இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ..?

பெண்களின் கற்பினைபற்றி, பெரிதாகக் கொண்டாடும் நமக்கு, சினிமாவில், பத்துப்பேருடன், கட்டிப்பிடித்து காதல் செயபவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி கேள்விகேட்க முடியாமல் போனது ஆச்சரியமே!

ஒரு ஆடவனும், ஒரு பெண்ணும், கட்டிப் பிடித்து, மிக அருகில் இருக்கும் போது, நடிப்புக்கென்று என்று வைத்துக் கொண்டாலும்கூட, இனக்கவர்ச்சியான உணர்வுகள் ஏற்படுவதில்லை என்பது வெறும் வாதமாகத்தான் இருக்கமுடியுமே தவிர உண்மையாக இருக்கமுடியாது.. அப்படி அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், பெரும்பாலோருக்கு, தங்கள் சகோதர, சகோதரிகளும், பெண், பிள்ளைகளும், தெரியாத ஆடவர்களையும், பெண்களையும் தொட்டுப் பேசுவதும், கட்டிப்பிடித்து ஆடுவதும் சம்மதமாக இருக்குமல்லவா..?

உண்மை அதுவல்லவே..! எனக்கு மற்றொன்றும் தோன்றுகிறது. சமூகத்தோடு, ஒட்டுமொத்தமாக, நம்முடைய சொந்த வாழ்வில் இயலாததை சினிமாவிலாது பார்த்து திருப்தி அடைகிறோம் என்று நினைக்கிறேன்..! ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு', நம் சமூகப் பானைக்கு ஒரு சோறு பதம்!

ஆயிற்று, மார்கழிமாத எம்.எல்.வி யின் திருப்பாவை, திருவெம்பாவை, மற்றும் சீர்காழி, டி.எம்.எஸ் ன் பக்திப் பாடல்களுக்கு நடுவே, "ஐயய்யோ பத்திக்கிச்சி பத்திக்கிச்சி...", கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா?” போன்ற
குத்துப்பாட்டுக்கள் தெருவெங்கும் தமிழ் முழக்கமாக ஆகிவிட்டது,..!

பச்சையான உண்மையென்னவென்றால், தற்கால எழுத்துக்களும், சினிமாக்களும், நமது சமூகத்தின் 'செக்ஸ்' பித்துக்கு வித்திட்டு, உரம்போட்டுக் கொண்டிருக்கின்றன. விரகதாபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றன!

காமம் என்பது மனித உணர்வுகளில் இயல்பான, அவசியமான ஒன்று! மனித உயிர் பிறந்து, வளர்ந்து, தேய்ந்து, அழியும், பாதையிலே, ஒருவயதுக்குப் பின் ஏற்படும், சில உடல்ரீதியான மாற்றங்களினாலும், சில சுரப்பிகளின் ஹார்மோன் உற்பத்தியாலும், இயற்கையாக ஏற்படுவது. (புனிதம் என்று சொல்லி ஒரு உன்னதத்தை தர விரும்பவில்லை!) ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானதுதான்.. இழிவான விஷயமில்லை..!

ஆனால், காமிரா வக்கிரவாதிகளின் கண்கள் வழியாக பெண்களின் மார்பகங்களினையும், தொப்புளையும், விரசமான இடுப்பு அசைவுகளினையும், பின்னழகு என்ற பெயரில், சதைக்கோளங்களையும், விதவிதமான கோணங்களில், காட்டும்போது, ரிஷிய சிருங்கரே ஆனாலும், அம்பேல் ஆவது திண்ணம் என்றால்.. சாதாரண மனிதர்களின் கதி..?
முக்கோணத்துக்கும், நாற்கோணத்துக்கும் வித்தியாசம் தெரியாத, நுனி நாக்கு ஆங்கிலம் மட்டுமே கைவந்த பெரும்பாலான நடிகையர், கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி தவறாமல் பேட்டி கொடுப்பதும், அதை இந்த தாரதம்மியம் இல்லாத பத்திரிக்கைகள் வெளியிடுவதுமான வெட்கக்கேடு, தினமும் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது?

அவர்களை நினைத்தாலும் பரிதாபமாகத்தானே இருக்கிறது. தேவைக்கு மேற்பட்ட ஆசைகளுக்கான, தூண்டில்கள், பலதிசைகளிலும் தொங்கிக்கொண்டிருக்கும் போது, மாட்டுகின்ற மீன்களாகத்தானே நம்மில் பலரும் இருக்கிறோம்..? பாரதி சொன்னான்...மோகத்தைக் கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு.." எல்லாவற்றிலும் சமூக நோக்கோடு எழுதிய பாரதி, இதையும் சமூகத்துக்கு ஒட்டுமொத்தமாக சேர்த்து சொல்லியிருக்கலாம்..! இது பிரச்சினையான பொருளானதால், மேல் கொண்டு எழுதாமல்....தொங்கவிடுகிறேன்...

மனக்குரங்கு, மறுபடியும் தாவுகிறது... கச்சேரிகளின் விமரிசன கேலிக் கூத்துகளுக்கு வருவோம். ஒரு கச்சேரியைப் பற்றிய விமரிசனப் படிவம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு சின்ன மாதிரி.... படித்துப்பாருங்களேன்.. "திரு. பாடகர், தோடி ஆலாபனையை விஸ்தாரமாகச் செய்தார்...பின்னால் வந்த ரஞ்சனி.. ஒஹோ..! தன்யாஸி துக்கடாவில் ஒரு ஆத்ம விசாரணை நடந்திருக்கிறது பாருங்கள்.. கண்ணில் ஜலமே வந்துவிட்டது..! ஆர்.டி.பி.. சங்கராபரணம்.. நிரவல், கல்பனா ஸ்வரக் கோர்வைகள், தனி ஆவர்த்தனம்.. எல்லாம் திரு. பாடகரின் உயர்ந்த உழைப்புக்கும், பாடாந்தரத்துக்கும், வித்வத்துக்கும் சாட்சி...கச்சேரி ஒட்டுமொத்தமாக அத்புதம் என்றுதான் சொல்லவேண்டும்!"

ராகம்-தானம்-பல்லவி என்பது, தமிழில் கூட இப்போதெல்லாம் ஆர்.டி.பி என்றாகிவிட்டது..! மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், பாடகரின் ஞானத்தைப் பாராட்டுவதா அல்லது விமரிசகரின் வித்வத்தைப் பாராட்டுவதா என்று ஐயம் எழக்கூடும். ஆனால் பாருங்கள்.. இந்த விமரிசகர், மேம்போக்கானவர் என்று கட்டாயம் சொல்லலாம்..!

ஆங்கிலமாகட்டும், தமிழாகட்டும், எந்த விமரிசகர் எழுதுகிறார் என்பதைப் பொருத்து, வாக்கிய அமைப்புகள், சொற்பிரயோகங்கள், முத்திரை கேலி, நக்கல்,குட்டு, ஷொட்டு எல்லாம் இருக்கும். கச்சேரி குழாமின் பெயர்க¨ளையும், பாடல்களையும் மாற்றிவிட்டால், இவர்களது சொல்லாட்சி, மற்றும், உண்மையான தேர்ச்சி, எல்லாம் வெளிச்சமாகிவிடும்.

ஆனால் பெரும்பாலான கச்சேரிகளும் அந்த ரகத்துக்குள்ளேயே இருப்பதால் இதைப் பற்றியும் குற்றம் சொல்லவும் முடியாமல் போகிறது.

விமரிசனம் என்று வந்துவிட்டால், விமரிசிக்கப்படும் பொருளை.. இதனால், இந்த விஷயத்தை ரசிக்கவேண்டும்.. தோடி ராக ஆலாபனையில், இந்த விசேஷப் பிரயோகங்கள் நன்றாக இருந்தன... அல்லது.. கல்பனா ஸ்வரம்பாடும் போது, இந்தமாதிரி கோர்வை ரசிக்கும்படியாக இருந்தது.. வார்த்தைகள் எழுதிக்கொள்ள வசதியாக உச்சரிக்கப்பட்டன. இதுதான் இராக லக்ஷணம்.. இதன் மரபை ஒட்டிய, இலக்கண சுத்தமான பாட்டு என்று, வாசகரை தங்களின் உயரத்துக்கு இல்லாவிட்டாலும், ஒரளவாவது உயர்த்துவதுதானே, விமரிசகரின் கடமை...

பொத்தாம் பொதுவாக எழுதினால், தனிப்பட்ட மனிதரின் அபிப்பிராயமாகத்தான் கொள்ளலாமே தவிர, நேர்மையான விமரிசனமாகக் கொள்ளக்கூடாது..! நீங்கள் வேண்டுமானலும் பாருங்கள், கலையில் மட்டுமல்ல, சமூக, அறிவியல் துறைகளில்கூட, விமரிசனம் என்பது, ஏதோ, மேலெழுந்த வாரியாக இருக்கிறதே தவிர, விஷயபூர்வமாக இருப்பதில்லை..! விமரிசனம் எழுத ஒவ்வொரு துறைக்கும், பொருளுக்கும், மாதிரிப் படிவங்களை தயார் செய்து, விஷயம் தெரிந்த, கட்சி சேராத, விலைபோகாத, விமரிசகர்களை உருவாக்க வேண்டும்.

ஆனால் என்னபண்ணுவது.. உலகத்தில் எல்லாவற்றுக்கும் கட்சியென்று ஆகிவிட்டது. இருவர் இருந்தால், இரண்டு கட்சிதான். சமயமார்க்கம் என்பதும் கட்சிதான்..! நீங்களே சொல்லுங்கள்.. கடவுள் எப்படி சர்வ வல்லமை பொருந்தி, சர்வ வியாபியாக இருக்கமுடியும்..? கடவுளையே 'டம்மி' ஆக்கிவிட்டு அவன்பெயரால் மனிதர்கள், சமயக்கட்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் போது..?
நமது தேசத்தின் மதமாகிய இந்துமதம் (வெளிநாட்டவரை விரட்டிவிட்டாலும், அவர்கள் நமக்குக் கொடுத்த அடையாளத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்..!) எனப்படுவது, 'ஸனாதன தர்மம்' அல்லது, 'எப்போதும் நிலைத்திருக்கும் நெறி' என்பதல்லவா..? அது அப்படியிருக்கும்போது, எதற்காக இதைக் காப்பாற்ற நம்மில் பலரும் போராடுகிறோம்.. அல்லா, புத்தன், ஏசு, மற்றும் எண்ணிறந்த நமது கடவுளர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.. இந்த அற்ப மனிதர்களை நம்பி நீங்கள் இருக்க வேண்டியிருக்கிறதே என்று..!

குளியலின் போது, பலவித எண்ணங்கள் தோன்றி, வந்த வேகத்திலேயே, எண்ணப் பலகையிலிருந்து, அழிந்துவிடும்....எழுதிக் கொண்டிருக்கும் போதே, மற்ற விஷயங்களைபற்றிய எண்ணங்கள்.. சிதறித், தேய்ந்து, மறைந்து விட, இப்போதைய என்னுடைய உடனடி செய்கை என்னவாக இருக்கவேணும் என்று நினைக்கிறீர்கள்..?...முற்றுப்புள்ளிதான்.. அதாவது தற்காலிகமாக..!

மீண்டும் குளிப்பேன்...!

பிற்சேற்கை:

[ஏறக்குறைய, 10 வருடங்களுக்கு முன், ஸான்·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில், முதன் முதலாக தமிழ் பத்திரிக்கையின் (தென்றல்) ஆசிரியராக இருந்தபோது எழுதப்பட்டு, பழைய குறுந்தகட்டு சேமிப்பிலிருந்து கண்டெடுக்கப்பட்டது! 10 வருடங்கள் எவ்வளவோ விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருந்தாலும், புதிய தளங்கள், மனிதர்கள், சிந்தனைகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும்,, என்னில் மாற்றங்களை நிகழ்த்தியிருந்தாலும், என்னுடைய அடித்தளச் சிந்தனைகளின் உருவாக்கம் எப்போது தோன்றியது என்று யோசிக்கவைக்கிறது. இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டுமோ? ]


அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...