மார்ச் 06, 2009

தமிழ் என்னும் கடலில் மூழ்கி…

இந்த புதுகவிதை..நான் புகுமுக வகுப்பிலே படித்துக் கொண்டிருக்கும் போது, 1976-ல் எழுதப்பட்டது. வேலூர் ஊரிசு கல்லூரி கவிதைப் போட்டியிலே முதற்பரிசு வென்ற கவிதை… தமிழை பழகும் வகையிலே சொல்லித்தராமல்,பள்ளிகளில் இலக்கண பூதத்தைக் காட்டி,
விரட்டி தமிழ் ஆர்வத்தை தேய்த்துவிடுவதை கண்டு மனம் நொந்து எழுதப்பட்டது.

உயிரெழுத்தாம் மெய்யெழுத்தாம்
போதாவென்று உயிர்மெய்யெழுத்தாம்
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
மூழ்கி உணர்ந்து படித்தாலும்
மூளைக்கெட்டாப் போகுமென்றேன்!
நில்லென்றார். நின்றேன்! – பின்னால்
தமிழ் படையின் தலைவர் கூட்டம்!
ஆகுபெயர் ஆகாத தொழிற்பெயர்
எனக்கொவ்வாப் பண்பு பெயர்
இன்னும் எத்துணைப் பெயர்!
ஐயோ ஆளை விடுமென்று
என்றெடுத்தேன் ஓட்டம்ஸ
அதற்குள்ளா என்றென்னைப்
பிடித்திழுத்து வைத்து,
முற்றியதும் முற்றாததும்,
எச்சங்களும் எட்டிப்பிடிக்க
புணரியலும் யாப்பியலும்
அணி இலக்கணமும்
அணிவகுத்து துரத்திவர..
ஐயா.. போதுமது போதும்
தங்கத் தமிழ்தான்..
வங்கத் தமிழ்தான்..
சிங்கத் தமிழ்தான்..
கங்கைத் தமிழ்தான்..
கடாரத் தமிழ்தான்
டாரத் தமிழ்தான்..
தமிழ்தான்..
மிழ்தான்..
தான்..
ன்..

மரணமென்னும் மாயை

மரணம்,
உடல் துறந்து ஜடம் பிறந்த கணம்!
உயிர் இழந்து மெய் பொய்த்த தருணம்!!
வந்த நாளும், வழியும், விதையும் தெரிந்தாலும்
செல்லும் நாளும், இடமும், அறிய சிந்தையில்லை.

மரணம்,
நான், எனது எனும் அகமையம் அகற்றும் அத்வைதமா?
அதுவுமொழிந்த அந்தகாரச் சூனியமா?
சூனியத்திற்கெங்கே அந்தகாரமும் வெளிச்சமும்?

மரணமே,
உந்தன் மறுபக்கம்தான் என்ன?
வாழ்வின் சாளரத்தின் வெளியே தெரியும்
பாழ்வெளியில் பயிர்துளிர்த்தல் சாத்தியமா?
ஊழ் முடிந்து, உயிராய் உலகில் மீள முடியுமா?
நீ மீட்பனா, முடிப்பவனா?

மரணமே!
தந்தை, தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,
பெண்டு, பிள்ளை, நட்பு, சுற்றம்,
தொட்டுச் செல்லும் மனிதர்கள்,
கடந்து செல்லும் உறவுகள்,
மற்றும் காசுக்கான நேசங்கள் -
விந்தையான உறவுகள் -
முடிவில்லாக் காலக்கோட்டில்
வெறும் புலன்களுக்கெட்டாப் புள்ளிகள்.
விரிந்துகொண்டே இருக்கும் விண் வெளியின்
துச்சமான துகள்கள்!
இருந்தாலும், என் நிகழ்காலத்தின் நிழல்கள் -
என் வாழ்க்கைக் கோடையில் இளைப்பாற!
இவர்களை என்னிடம் தொடர்பறுத்து
எங்கே இட்டுச் செல்லுவாய்?
என்னை இவர்களிடமிருந்து பிரித்து,
எங்கே இட்டு செல்லுவாய்?
உன் உருவம் தெரியவில்லை!
நீ நேரத்தின் பரிமாணமா? பரிணாமமா?
நீ நீட்சியா, சுழற்சியா?

மரணமே,
விட்டுச் சென்ற சரித்திரங்களும்,
விஞ்ஞானமும் மெய்ஞானமும் மீண்டும் மீண்டும்
பட்டு விலகி பட்டு விலகி அனந்தகாலமாய்
இட்டு செல்லும் வருங்காலமும்,
பரமென்றும், அலகில் சோதியென்றும் - அம்
பரமென்றும் அழைப்பது உனைத்தானா?
நீ வெறும் முடிவா, முக்தியா?

மரணமே,
நீ கவிஞர்களின் கற்பனைகளையும் கடந்த பொருளா?
கற்பனைகளுக்குள் கட்டுறாத மாயமா?
ஜீவக்காற்றுக்கு அனுபோக உரிமை அளித்து,
அதைப் பறித்துக்கொள்ளும் சொந்தக்காரனா?
நீ காற்றா? அதை நிறுத்தும் வலிமையா?

மரணமே,
நீதான் உயிர், நிலைத்திருக்கும் உயிர்
எனெனில் நீதான் மரணிப்பதில்லையே!
நீதான் மாற்றம் - ஏனெனில் மாற்றமே நிலையானது.
நீயே பிறப்பித்து, நீ பிறக்கும் போது,
நீ நிகழ்வதால், நீயே இரண்டும் -
இல்லை இல்லை! நீ ஒன்றேதான்.
உன்னோடுதான் ஒன்றவேண்டும்!

ஆனால்,
வேண்டிப் பெறுவதில்லை நீ!
நீ என்று என்னில் ஜனிக்கிறாயோ,
அதுவரை, அதுவரை என் பயணம்!
இரண்டென்ற மாயையுடன்..!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...