மார்ச் 01, 2018

பெரியவா ஜெயேந்திர ஸரஸ்வதி அஞ்சலி

28,பிப்ரவரி, 2018, காலை 7.30, மார்கன் ஹில், கலிஃபோர்னியா.

நேற்று செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து நிலையில்லாமல் இருந்த மனத்திற்கு அனந்த் அவர்களின் அற்புத அனுபவத்தில் முகிழ்த்த கவிதை நயமிகு அஞ்சலியாக இருந்தது. 

சிறுவனாகவும், வளர்ந்தபிறகும், காஞ்சியிலும், கலவையிலும் நான் மஹாப் பெரியவரோடு, புதுப்பெரியவரை தரிசனம் செய்த நாட்களும், பின்பு ஒரு தீபாவளித் திருநாளில் (80-ல்) அவரை என்னுடைய ஆத்ம குருநாதர் டி.என்.எஸ்ஸோடு, சென்று தரிசித்ததும், அண்மையில் என்னுடைய பெண்ணின் திருமணப் பத்திரிக்கையை அவர்கையில் கொடுத்து ஆசி பெற்றதும் நினைவுக்கு வந்தன. அனந்தர் அளித்த கவிதை நடையிலேயே பிறந்தது இவ்வஞ்சலிக் கவிதை..

சந்திர சேகர ஜகத்குரு வழியினில் சந்ததம் நின்றவராம்
  சங்கர நெறியினை தன்வழி யாகவே தரணியில் தந்தவராம்
அந்தமில் உறுதியை ஆஶ்ரம வாழ்வினில் அனுதினம் கண்டவராம்
   அகிலம் முழுவதும் அரன்குடி கீழெனும் அருள்வழி தந்தவராம்
சிந்தனைச் சீலமும் செயல்களில் தூய்மையும் சீரென நின்றவராம் 
   சீவனை ஈஸ்வர சேவைக் கென்றே தினமும் தந்தவராம்
நிந்தித் தார்க்கும் நிறைபுகழ் வோர்க்கும் நிறையென நின்றவராம்
  நெஞ்சினில் யார்க்கும் நேரிய கருணை நினைந்திடு மறையவராம்

இந்திர சரஸ்வதி எனும்யதிப் பேரொடு இணைஜெயம் கொண்டவராம்
  ஈர்த்திடும் தேஜஸ் இணையில் ஆளுமை இணைந்தே பிறந்தவராம்
முந்தை பிறப்பதில் முடியாச் சேவைகள் முடித்திட வந்தவராம்
  முற்றுந் துறந்த முனிநிலை ஏற்றதில் மூழ்கி  முடித்தவராம்
விந்தை உலகோர் வேதனை செய்தும் விளைந்திடு குறையிலராம்
  வேதன் தந்த வேடத் தீதொரு விளையாட் டென்றவாரம்
கந்தை கமண்டலம் கடுநிய மத்தொடு காத்தவோர் நேரியராம்
  கண்ணீ ரோடவர் கழல்கள பணிந்து கறைகள் கரைத்திடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...