ஜூலை 29, 2013

ஆண்டவன் யார்?


ஆண்டவன் என்றச் சொல்லில் எனக்கு ஆதிக்கம்தான் தெரிகிறது
வேண்டுதல் என்றச் சொல்லில் எனக்கு வேட்கை பிச்சைப் புரிகிறது
தோண்டிநல் ஞானம் தன்னில் கண்டால் கடவுளைக்காண முடிகிறது
ஈண்டிதை  ஏனோ மானுடம் இன்னும் எட்டிப்பார்க்க மறுக்கிறது

தாண்டவன் என்றும் காப்பவன் என்றும் காலம் சொன்னக் கருத்தெல்லாம்
மூண்டநல் அறிவில் தோன்றியமுத்துச் சிந்தனைச் சிற்பக் கோலங்கள்
தீண்டிய தென்றல் தெரிந்த நெருப்பு தணித்த நன்னீர் நிலங்கள்மற்றும்
வேண்டிய மட்டும் கற்பனை தன்னை வாரி வழங்கும் விண்வெளியும்

பஞ்ச பூதம் என்றுச் சொல்லி பதறிட நம்மை அடித்ததுவும்
கொஞ்சம் கூட கூச்சமு மின்றி மூளைச் சலவை செய்ததுவும்
நெஞ்சில் ஈரம் இல்லார் சுயத்தின் நலமே கருதி வாழத்தான்
அஞ்சச் செய்து அடிமை களாக்கி  என்றும் நம்மைச் சுரண்டத்தான்

பகுத்தறி வென்றால் கடவுள் என்பான் உளனா இலனா என்றவினா
புகுதல் மட்டும் தானா என்று கேட்பது தானே பகுத்தறிவு?
பகுத்தறி வாளர் பட்டா ளத்தில் எத்தனை பேர்கள் படித்த வர்கள்?
தகுதியாய் பேச்சு மட்டும் கொண்டு தரக்குறை வானோர் ஆயி ரமாய்

மீண்டும் மீண்டும் தோன்றும் கேள்வி தோன்றிய முதற்பொருள் யாதென்று?
நீண்டிய நேரமும் வெளியதன் மூலமும் என்றோ எங்கோ எதுவென்று!
தாண்டிய கல்வியும் கேள்வியும் ஒன்றும் இதுவரை எனக்குத் தரவில்லை.
மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்தில் மீளாப் புதிரும் புதிதில்லை

அணுவைப் பகுத்த அறிஞரும் கூட அணுவிலும் உலகம் கண்டாரே!
நுணுகிய மின்துகள் உள்ளேயுமோர் அண்டம் இருப்பதைக் கண்டாரே!
அணுவைப் பகுத்தால் அத்துணை ஆற்றல் அழிவும் ஆக்கமும் தருமாமே!
அணுகிப் பார்த்தால் ஆண்டவன் என்பான் ஆக்கம் மட்டும் தருவானோ?

கடவுள் என்றச் சொல்லைக் அறிந்தேன் உள்ளொளி இங்கே தோன்றியது
கடவுள் கற்சிலை மட்டும் இல்லை என்னும் உண்மைப் புரிகிறது
கடந்த எல்லாம் கணத்தில் மறைந்து புறவயம் முற்றிலும் அடங்கியதும்
கடந்த மனதின் உள்ளொளி சோதி  குன்றின் மேலே ஒளிர்கிறது.

புறவழி மூடி அகம்தனை நோக்க அலையும் மனது அடங்கிவிடும்
உறவுகள் என்னும் தளைகளும் அறுந்துளம் எளிதினில் உன்வசம் ஆகிவிடும்
சிறகுகள் பெற்றுச் சிந்தனைக் குதிரையில் காற்றினும் கடுகி பறந்திடுநீ
இறப்பும் பிறப்பும் என்றிடும் எல்லைகள் இல்லை என்றே அறிந்திடுநீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...