ஆகஸ்ட் 30, 2018

குருபூர்ணிமை 2018

(முன்னரே எழுதி முகநூலில் இட்ட கவிதை)

கண்ணில் கருணைத் தேக்கும்
  கருத்தில் கசுமலம் நீக்கும்
எண்ணில் இகபர இன்பம்
  எளிதில் கிடைக்க அருளும்
அண்ணல் ஆல்கீழ் அமர்ந்த
  அரனார், தென்பால் நோக்கும்
வண்ணன் திருவருள் ஒன்றே
  மண்ணில் குருவருள் என்பேன்

பேசா திருந்தும் ஞானம்
  பெய்தான் நால்வர்க் கன்றே!
ஈசா! என்றே நாளும்
  ஏத்தித் துதிக்க எம்மில்
ஆசா பாசம் எல்லாம்
  அறவும் அருள்வான் அவனே!
நேசா எனநெக் குருகி
  நினைவேன் அவன்தாள் மலரே!

காணும் காட்சி யாவும்
  கல்விக் கூடம் ஆகும்
பேணும் அறிவை நன்றாய்
  பெருக்கும் திறமை கண்டீர்
தாணு எனவோர் தணற்றூண்
  தருக்கை அழித்துப் பொசுக்கும்
கோணும் மனப்பே யதனை
  கூத்தில் கொன்று முடிக்கும்

குருவும் அவனே கோதில்
  குணமும் அவனே கோமான்
அருளே நமக்கு வேண்டும்
  அதுவே அறிவைத் தூண்டும்
மருளை அகற்றும் மனத்தில்
  மதியில் மயலும் மயங்கும்
திருவாய் குருவாய் தேசன்
  தினமும் நம்முடன் இருப்பான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...