ஜனவரி 13, 2016

தமிழிசை வளர்த்த செம்மல்கள் - 1

சிவபுண்ய கானமணி சிவன்

[சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் October - 2015 பதிப்புக்காக சிவபுண்ய கானமணி, தமிழ் தியாகய்யா பாபநாசம் சிவன் அவர்களின் 125 வருட நினைவு நாளுக்காக எழுதிய கட்டுரை]

இதோ! மார்கழி இசை மாதம் மலர ஆரம்பிக்க இன்னும் சிறிது நாட்களே! சென்னையின் ஒவ்வொரு மூலையிலும், முறையாகக் கட்டப்பட்ட இசை வளாகங்களிலோ, அல்லது தினமொன்றாக முளைக்கும் “எங்கள் வீட்டு மாடி சபா” அமைப்புகளிலோ ஆரம்ப நிலை கலைஞர்கள் முதல், இசை உச்சத்தின் பல்வேறு படிகளில் இருக்கும் வெற்றியாளார்கள் வரை இசை மழையாகப் பொழியப்போகின்றனர்.
ஆனால், பெரும்பாலும் இசைமூவர் என்று போற்றப்படும் தியாகராஜர், ஸ்யாமா சாஸ்த்ரிகளின் தெலுங்கு கீர்த்தனங்களோ அல்லது முத்து ஸ்வாமி தீக்ஷிதரின் சமஸ்க்ருத கீர்த்தனைகளோதான், மேடைகளில் கோலோச்சும். தமிழ் உருப்படிகள் மிகவும் குறைவாக, பொதுவாக கச்சேரிகளில் இறுதி உதிரிகளாகவே பாடப்படும்; அல்லது இடையில் “நானும் தமிழில் பாடியிருக்கிறேன்” என்ற அறிக்கை உருப்படிகளாக மட்டுமே இருக்கும்.
மேலே சொன்ன மேதைகளின் இசை உருப்படிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இசை நுட்பத்திலும், கருத்தாக்கங்களிலும், இறை உணர்வின் வெளிப்பாட்டிலும், மேன்மையானவைதாம். ஆனால் ஐயத்துக்கிடமின்றி இன்றைய கர்நாடக இசையின் தாயகமாக இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இருந்துகொண்டிருக்கும் தமிழகத்தின் செவ்விசை மேடைகளில், தமிழ் மொழிப் பாடல்கள் புறந்தள்ளப்பட்டிருக்கும் விந்தை வேறு எந்த மொழி பேசும் மாநிலத்திலும் நடவாதது.
இசைக்கு மொழி இரண்டாம் பட்சம்தான் என்பார்கள் சிலர்; இசையே மொழிதானே என்பர் வேறு சிலர்; இதில் எதற்கு மொழியைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்று கேட்பவர்களின் வாதங்களோ, தெலுங்கிலேயே இருக்கலாம், சமசுகிருதத்திலேயே இருக்கலாம் என்பதற்கான சப்பைக்கட்டுத்தான்.
தெலுங்கு மூவருக்கு முன்பேயான சீர்காழி தமிழ் மூவர்களாம், முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, மற்று அருணாசல கவிராயர் போன்றோரும், இணை காலத்தவரான கோபால கிருஷ்ண பாரதியும், பின்னவர்களான நீலகண்ட சிவனும், மஹா வைத்தியநாத சிவனும், கோடீச்வர ஐயரும் இந்த கட்டுரையின் நாயகரான பாபநாசம் சிவனென்று அறியப்படும் போலகம் இராமய்யா அவர்களும், அழகு தமிழில், கவித்துவம், இசை நுணுக்கங்களும் நிரம்பிய பாடல்கள் ஆயிரக்கணக்கில் செய்திருந்தாலும் கச்சேரி மேடைகளில் என்னவோ அருகியே கேட்கபெறுவன. இது பெரிய விவாதத்திற்கு உரிய தலைப்பு! வேறொரு கட்டுரையில் பார்ப்போம்!
சிவபுண்ணிய கானமணி என்று காஞ்சி மஹாசுவாமிகளால் கௌரவிக்கப்பட்ட பாபநாசம் சிவன் தமிழ் இசை உலகின் தனிப்பெரும் தாரகை என்பதிலே ஐயமே இல்லை! எத்தனையோ பட்டங்களும், விருதுகளும் பெற்றிருந்தாலும், சிவனின் இசை நிறைந்த இறைப்பணிக்கு ஏற்ற விருது அவர் பெற்ற இந்த பட்டமே!
இவரின் வாழ்க்கை வரலாறும், அவருடைய இயற்பெயரான போலகம் (அவர் பிறந்த ஊர்) இராமசர்மன் (இராமய்யா) பாபநாசம் சிவனாக மாறியதும் பல இணைய தளங்களிலுளும், இவரின் இளைய புதல்வியும், தந்தையின் அடியொற்றி நூற்றுக்கணக்கில் பாடல்களை எழுதியுள்ள, வாழும் சாஹித்யகர்த்தாவுமான, திருமதி ருக்மிணி ரமணி அவர்கள் எழுதிய “ஸ்ரீ பாபனாசம் சிவன் சரிதம்” என்ற புத்தகத்திலும் படித்தே தெரிந்து கொள்ளலாம். இவரது இசை உருப்படிகளின் தொகுப்பும் தேடி அறிந்துகொள்வது எளிதே.
ஆனால் அவரது பாடல்களில் காணப்பெறும் இசை நுணுக்கங்களும், சொல்லாட்சியும், எளிமையும், இனிமையும் பற்றி பொதுவாக மேடைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வல்லுனர்கள் போற்றிப் பேசினாலும், விரிவான ஆக்கங்கள் காணப்பெறுவதில்லை. இக்கட்டுரையின் நோக்கம், விரிவாக இல்லையென்றாலும், ஓரளவுக்காவது இவற்றைத் தொட்டுச் சுட்டுவதுதான். விரிவாக என்றால் ஆராய்ச்சி நூலே எழுதவேண்டியிருக்கும்.
கச்சேரி மேடைகளில் மறைந்த இசைமேதைகள் மதுரை மணி ஐயராலும், டி.கே பட்டமாள், செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்றோர்களால் பரவலாகப் பாடப்பட்டு புழக்கத்தில் இருக்கும் “எப்போது பசுமை” உருப்படிகளான, “காவா வா கந்தா வா வா”, “நானொரு விளையாட்டு பொம்மையா”, “சரவணபவ எனும் திருமந்திரம்”, “காபாலி”, “காணக் கண்கோடி வேண்டும்”, “உன்னையல்லால் வேறு” , “கற்பகமே கருணக் கண் பாராய்”, “என்னத்தவம் செய்தனை?” மற்றும் நடன மேடைகளில் ஆடப்படும் பல அழகு பத வர்ணங்களைப் பற்றியும் பலரும் அறிவார்கள், கேட்டிருப்பர்.
உன்னைத்துதிக்க அருள்தா” என்று திருவாரூர் தேரோட்டத் திருவிழாவில் வீதிவிடங்க சுவாமியைத் தரிசித்த பக்தி பெருக்கில் பாடத் தொடங்கிய இவருடைய நா, சென்னையில் மைலையில் கற்பாகாம்பாள் சமேத கபாலி ஆண்டவனின் அருட்ப்பார்வைக்காட்பட்டு, அங்கேயே தங்கி ஆயிரக்கணக்கான பாடல்களை எழுபதுகளின் தொடக்கம் வரை எழுதவைத்தது.
எதுகை, மோனை, சுரங்கள் சொற்களாக இயல்பாக பொருளோடு அமைந்த விந்தையென்று எத்தனையோ அழகுகள் இவர் பாடல்களில். சொற்களையோ, இராகங்களையோ இவர் தேடிச் செல்லவில்லை. இவரது பாடல்களோடு, அவை தாமாக ஒட்டிக்கொண்டன என்பதுதான் உண்மை. சமசுகிருதத்தில் திருவனந்தபுரத்தில் வையாகரணி பட்டம் பெற்ற இவர், தமிழை முறையாகக் கற்றதில்லை; இருப்பினும், இயற்கையாக இருந்த அழகுணர்ச்சியும், இறையருளாள் பொருத்தமாக அமைந்தவிட்ட சொற்களுமாக, இவரது இசைப்பாடல்கள் நெஞ்சை அள்ளும் இசை மணிக்குவியல்தான்.
கர்நாடக இசைப் பாடல் இலக்கண மரபில், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் முறைமையும், தவிர நடை வேறுபாடுகளும், “மத்தியம காலம்” எனப்படும் வேகமாறுபாடுகளும் கொண்ட சரண அமைப்புகளும் உண்டு. பல்லவி என்னும் தொடுப்பின் முதல் சொல்லோடு அழகாக, அனுபல்லவி, மற்றும் சரணங்களின் இறுதிச் சொற்களும் சேர்வதே அழகு. இவர் பாடல்களில் அவை தாமாக வந்து அமைந்திருப்பது அழகோ அழகு.
எடுத்துக்காட்டாக, “மாயம் ஏதோ” என்கிற மாயாமாளவ கௌளை பத வர்ணத்தில், சரணத்தில், “ஆறுமுகா புகல் அறியேன் - என”வரும். பின்னால் வரும் சிட்டைசுர ஸாகித்யங்களில், முடிவுகளை நோக்கினால், “ மருக”, மகிழ்”, “குஹனே”, “தவழ்”, “சீல” என்ற ஒவ்வொரு முடிவும் “ஆறுமுகா” என்ற சொல்லோடு இயல்பாகப் பொருந்தி வருவன.
காப்பி இராகத்தில் அமைந்த “சோதனைச் சுமைக்கு ஏழை ஆளா” என்கிற பாடலில் அமைந்த சொற் சிலம்பம் மிகவும் உயர்வானது. அப்பாடலை முழுவதுமாகப் பார்ப்போம்:
பல்லவி:
சோதனைச் சுமைக்கு ஏழை ஆளா - சுப்ரமண்ய தயாளா - (மாளா/மீளா/தாளா)
சரணம்1:
பாதகமலம் மறவாத அடிமை - (உன் /என்) - பாதக மலம் அகலாதா - வாதா
சரணம்2: 
உனதருளிலும் என் வினைவலி பெரிதோ - உனக்கிரக்கம் இல்லையோ கந்தா - வந்தாள்
சரணம்3:
சூரசம்ஹாரா குமரா குருபரா - ராமதாசன் தொழும் பாலா - வேலா
இப்பாடலின் பல்லவியில், “ஆளா/தாளா” என்று அமைந்ததுமட்டுமல்லாமல், மாளா (இறந்துபடாத சோதனை), மீளா (மீளவே முடியாத சோதனை), தாளா (தாங்க முடியாத சோதனை) என்றெல்லாம் பாடிவிட்டு, அவனையே “தான் பணியும் தாளா” என்றும் பொருள் வரும் பாடியிருப்பது, வேறு எந்த இசைப்புலவரின் பாடலிலும் காணமுடியாத ஒன்று.
முதற் சரணத்தில் வரும், “பாத கமலம்” என்ற சொற்களே, அதன் இரண்டாம் வரியில், “பாதக மலம்” என்று பிரிந்து வேறு பொருளாக வருவதும், முதல் அடியைத் திருப்பிப் பாடும்போது “உன்” என்றும், இரண்டாம் அடியைப் பாடும்போது, “என்” என்றும் இருப்பதும் இசைக்கலைஞர்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாட்டுக்கு உறுதுணைதானே! சரண இறுதிகளில் அமைந்த அகலாதா/வாதா, கந்தா/வந்தாள், பாலா/வேலா போன்ற இறுதிச் சொல் எதுகையும் (வடமொழியினர் அந்த்யப்ராஸம் என்பர்), இவரது வடமொழிப் புலமை தமிழ்ப்பாடலுக்குத் தந்த வளமாகவோ, வரமாகவோதான் கொள்ளவேண்டும்.
இறைவனது அருட் கொடையினும், தன் ஊழ்வலி பெரிதா என்று கேட்கும் கற்பனை, “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்னும் சிவபுராண வரிகளின் வலிமைக்குச் சற்றும் குறையாத ஒன்று.
கனராகங்களாகட்டும், ஜனரஞ்சகமான இராகங்களாகட்டும், இராகங்களின் உருவையும் சாரத்தையும் ஒன்றாக சரியான விகிதத்தில் கலந்து, இலக்கண விதிகளுக்குச் சற்றும் வழுவாமல் கொடுப்பதில் தியாகய்யருக்குப் பிறகுத் தமிழ் தியாகய்யர் என்று போற்றப்படும் இவர் ஒருவராலேயே முடிந்திருக்கிறது.
தியாகய்யரின் அடியொற்றியே இவரும் தோடி, கரஹரப்ரியா போன்ற இராகங்களில் பல பாடல்களை அமைத்துள்ளார். ஜி.என்.பியின் குரலில் “தாமதமேன் ஸ்வாமி” என்கிற பாடலும், இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரலில் “கார்த்திகேய என்கிற” பாடலும் தோடி இராகத்தின் இரண்டு உச்ச பரிமாணங்கள். தியாகய்யரின் பரிதானமிச்சிதே என்ற பாடலின் மெட்டிலேயே “நிஜமுன்னை நம்பினேன்” என்ற பாடலும், “உண்டேதி ராமுடொக்கடு” என்ற ஹரிகாம்போதி பாடலின் மெட்டையொட்டி, “உண்டென்று உறுதி கொள்வாய் மனமே” என்ற பாடலும் அமைந்திருப்பது, இவருக்கு தியாகய்யரின் இசை நுணுக்கங்கள் மிகவும் அணுக்கம் என்பதற்கு அத்தாட்சி.
மைலை நாதராம் கபாலீச்வரரின் அதிகாரநந்தி உற்சவ ஊர்வலத்தை வர்ணிக்கும் “காணக்கண்கோடி வேண்டும் - காபாலியின் பவனி” என்கிற பாடல் காம்போதி இராகத்தில் போற்றப்படுகிற ஒரு உயரிய அரிய உருப்படி மட்டுமல்ல. இறைவனின் ஊர்வல அழகை வர்ணிக்கும் பாடல்களில் முதன்மையானதும் கூட!
பாபநாசம் சிவன் அவர்கள் தூய சமஸ்க்ருதத்திலேயே பல பாடல்களை இயற்றியுள்ளார்; அவையும்கூட, மொழியறியாதவர்களும் புரிந்துகொள்ளும் இலகுவான சொற்களைக் கொண்டு. அதேபோன்று, பெரும்பாலான பாடல்களில் சமஸ்க்ருத சொற்களும் கலந்து விரவி வந்தாலும், கேட்போருக்கு விளங்கும்வகையிலேயே அவை அமைந்திருப்பதே உண்மை!
இவருடைய இசையமைப்பை பற்றி இவரே கூறும் ஒரு வாக்குமூலமும் உண்டு, இவரது பேகடா இராகப் பாடலான, “கான ரசமுடன்” என்ற பாடலில். அதில் சரணத்தில் வரும் வரிகளில், “ தடையற என்றும் வாடாத முத்தமிழ் மலர் எடுத்து தொடரெழுவகை சுரமெனும் ம்ருதுவான நாரில் தொடுத்து நிதமும்” என்பார் சிவனவர்கள். அதாவது ஏழு சுரங்களை மிருதுவான நாரில் தொடுக்கும் மலர்மாலையாக இருக்கவேண்டுமாம் இறைவனைப் பாடும் இசையானது!
சிவன் இறையோடு முறையிடுவார், சண்டையிடுவார், கோபிப்பார், அழுவார் தொழுவார், தன்னையே நொந்துகொள்வார், தன் பாடல்களில்! மாயாமாளவ கௌளயில் அமைந்த கீழே வரும் பாடலை அவரே சென்னை ம்யூஸிக் அகாடமியில் பாடியிருக்கிறார்.
பல்லவி:
பொல்லாப் புலியினும் பொல்லாப் புலையனெனனைப்
புவிதனில் ஏன் படைத்தாய் சம்போ?”
அனுபல்லவி:
நல்லோரைக் கனவில் நான் நணுகமாட்டேன்
நல்லது சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்
சரணம்:
உன்நாமம் என் நாவாறச் சொல்லமாட்டேன்
நல்லது சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்.
என்னாளும் மூவாசை நான் தள்ளமாட்டேன்
என்னயன் உன் ஆலயத்துள் செல்லமாட்டேன்
மற்றொரு ஹரிகாம்போதி பாடலில், “ உனது மலரடியில் விழுவேன் தொழுவேன் - உருகி அம்மா அம்மா என்று அழுவேன்” என்று சொல்வதில் ஒரு குழந்தையின் பிடிவாதம் இருக்கிறது.
நாத்திகம் பேசுபவர்களுக்கு நயமாகப் புராண நிகழ்ச்சிகளைச் சொல்லிச் செய்த பாடல்கள் உண்டு. திஸ்ர கதியென்று சொல்லப்படும் துள்ளல் கதியிலே அமைந்து கேட்பதற்கு நெஞ்சை அள்ளும் கருத்தமைந்த கீழ்காணும் கரஹரப்ரியாப் பாடல், சூதாட்டத்திற்குப் பிறகு மகாபாரதப் பெரியவர்கள் நிலைமை, வீர வீமன், அர்சுனன் போன்றவர்களில் செயலின்மை, திரௌபதியின் அவலம், கண்ணன் துயர் தீர்க்கவந்து ஆடை கோடியாய் தந்து மானத்தைக் காப்பாற்றியது என்று நான்கே வரிகளில் துல்லியமாகக் காட்டிவிட்டார். பீஷ்மர் போன்ற அவைப் பெரியவர்கள் ஊமைகளாய், கண்ணிருந்தும் குருடர்களாய் போனதையும் சொல்லாமல் விடவில்லை.
பல்லவி:
இல்லையென்ற சொல்லொன்று மட்டும் வேண்டாம் - கஷ்டங்கள்
எத்தனை நம்மைத் துளைத்தெடுதாலும் - தெய்வம்
அனுபல்லவி:
தொல்லை தந்த தந்தையொழிந்தான் - புடமிட்ட 
ஸ்வர்ணமாய் ப்ரஹ்லாதன் சுடர் விட்டெழுந்த கதையறிந்தும்
சரணம்:
வீடுமன் முதலாம் ஊமை குருடர் நடுவிலே - வீமன்
விஜயனும் கற்சிலையாய் சமைந்த சபையிலே - உயிர்
வாடிக் கதறும் பாஞ்சாலி துயரற - ஆடை
கோடி கோடியாய் கொடுத்த கோவிந்தன் அருளிருக்க
ஏற்கனவே சொல்லியிருந்தாற்போல் பாபனாசம் சிவனின் இசைப் பாடல்களின் சிறப்பை எழுத்திலே காட்ட ஒரு சிறு கட்டுரைப் போதாது. இசை நுணுக்கங்களை எழுத்தில் வடிப்பதிலும் பாடிக் காட்டுவதிலேயே பொருளிருக்கும். ஆனால் ஊடகக்கருவிகளான “யூட்யூப்” போன்றவையும், இசைக்கான இணையதளங்களில் எண்ணற்ற இசைப்பதிவுகளைக் கொண்டுள்ள சங்கீதப்ரியா.ஆர்க் (sangeethapriya.org) தளத்திலும், தேடினாலே கிடைக்கக்கூடிய சிவனவர்களின் எத்தனையோ பாடல்களின் பதிவுகள், அவரவர்க்கு பிடித்தமான இசை வாணர்கள், வாணிகள் குரல்களிலேயே கிடைக்கின்றன. ஆர்வலர்கள் அங்கெல்லாம் சென்று கேட்கலாமே!
உங்களுக்காக சில பாடல்களைப் பரிந்துரைக்கிறேன் இங்கே. “அடித்தாலும் உனைவிட்டு”, “அத்புத லீலைகளை”, ஆனந்த நடமிடும் பாதன்”, “உமையோர் பாகனே”, “சிவகாம சுந்தரி”, “செந்திலாண்டவன்”, “நம்பிக்கெட்டவர் எவரய்யா?”, “நெக்குருகி”, “பார்வதி நாயகனே”,”பிறவா வரம் தாரும்”,”மாதயை புரிந்தருள்”, “மூலாதார”, “ஸ்ரீகணேச சரணம்”, “சதாசிவகுமாரா”, “மால் மருகா”.
சொல்லாமல் விடுப்பட்டபாடல்கள் ஏராளம்! பரிந்துரையும், பாடலுக்கான சுட்டலும் விழைபவர்கள் உங்களுக்குத் தெரிந்த இசை ஆர்வலர்களைக் கேட்கலாம் அல்லது எனக்கும் தெரிவித்தால் உங்கள் ஆர்வத்துக்கு என்னாலியன்றதைச் செய்யமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...