ஜனவரி 12, 2016

எம்.எஸ்.வி - மெல்லிசையின் வடிவம், விளக்கம்

[சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் செப்டம்பர் - 2015 பதிப்புக்காக எம்.எஸ்.வீ-யென்னும் மெல்லிசை மேதையை நினைவு கூறுமுகமாக எழுதிய கட்டுரை]


“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
  உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்”

தெய்வத்தாய் படத்தில் மக்கள் மனத்தில் நீங்காமல் இடம் பெற்ற மூன்றே எழுத்துகளில் உலகே அறிந்த மக்கள் திலகம் எம் ஜி.ஆருக்காக, டி.எம்.எஸ் என்னும் குரல் வளத்தில் ஒப்பிலாத மற்றொரு மெல்லிசைக் கலைஞர் அவர்கள் பாட, அண்மையில் மறைந்த ஆனால் தம்முடைய இசையினால் தமிழ், தெலுங்கு, மலையாள பட இரசிகர்களை 50 வருடங்களுக்கும் மேலாகக் கட்டிப்போட்டு, வாழும் புகழோடு இருக்கும் எம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்-துக்களால் திரையிசை உலகே கொண்டாடும் மேதை இசையமைத்த பாடல்!

“மெல்லிசை” என்னும் மூன்றெழுத்துச் சொல்லும் “மன்னர்” என்கிற மூன்றெழுத்துச் சொல்லும் சேர்ந்து இவருக்கு “மெல்லிசை மன்னர்” என்ற பட்டம் அமைந்தது, ஒரு பொருத்தமான பெருமை.

திரையுலகின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த எஸ்.வீ. வெங்கட்ராமன், ஸி.ஆர்.சுப்பராமன், ஜி.வி.ராமநாதன் என்கிற மேதைகளின் அடியொற்றி வந்து, புதிய சகாப்தத்தை திரையிசைக்குக் கொண்டுவந்த சாதனையாளரே நம்முடைய எம்.எஸ்.வி.  திரையிசைத் திலகம் என்று போற்றப்பட்ட மறைந்த கே.வி.மஹாதேவன் காலத்தில் அவருக்கு இணையாக, மதிக்கப்பட்ட மாமேதையே எம்.எஸ்.வி.

இவருக்குப் பின்னால் வந்த, அவரவர் காலத்தில் புது அலைகளை உருவாக்கிய இசைஞாநி இளையராஜாவாகட்டும், இசைப்புயல் ஏ.ஆர்.ரெஹ்மானாகட்டும், மற்ற இசையமைப்பா-ளர்களாகட்டும், இவருடைய பாதிப்பு இல்லாமல், இவரின் இசையை நுணுக்கமாக உய்த்துத் துய்க்காமல், இசையமைத்து விடவில்லை, இசைச் சிகரங்களை அடையவில்லை என்று நிச்சயமாகக் கூறலாம்.

இசையென்னும் கடலின் கரையில் நின்று பார்ப்பவர்களுக்கே பேரின்பம் உண்டு. அதில் மூழ்கி முத்தெடுப்பவர்களின் இன்பத்துக்குக் கேட்பானேன்! அவருடைய வாழ்க்கைச் சரித்திரம், அவர் இசையமைத்த படங்கள், பாடல்கள் என்ற பட்டியல்கள் இணையம் முழுவதும் இறைந்து கிடக்கின்றன. இவ்வாவணப் பதிவின் நோக்கம் அவற்றையெல்லாம் மீண்டும் பட்டியலிட அல்ல,  அவருடைய பாடல்களில், திரையிசைப் பாதையில் அவர் சாதித்த சில உச்சங்களைக் காட்டுவதே! அதுவும் அவ்வளவு எளிதன்று! மலையாக குவிந்திருக்கும் நவரத்தினங்களில் ஒரு சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கும் செயலே அது.

ஓர் இசையமைப்பாளருக்கு, இசையறிவு மட்டும் இருந்தால் பற்றாது. சொல்லப்படும் கதையும், அதில் பாட்டு வரும் கட்டங்களும், இயக்குநர் மனதில் இருக்கும் காட்சியமைப்பும், பாடலாசிரியரின் சொற்களுக்கு ஏற்ப இசையமைப்பும் தகுந்த பாடகரைக் கொண்டு பாட வைத்தலும், என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒரு காட்சியின் வீச்சைக் காட்டுகிற சொற்களை, இசையில் அப்பாடலுக்கு உரிய வலிவு, மெலிவு, நயம் இவற்றோடு வடிப்பது எளிதான செயல் அல்ல! இது புதியதை உருவாக்கும் பணி. கேட்போர் அத்துணைப் பேரின் நாடித் துடிப்பையும் ஓரளவு ஊகித்து செயலாற்ற வேண்டிய பணி.

எம்.எஸ்.வி அவர்களின் திரை சகாப்தத்தை பல விதங்களில் நாம் ஆராயமுடியும். அவர் பணியாற்றிய பெரும் இயக்குநர்கள், அல்லது மிகப்பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அல்லது கவிஞர்கள்  அல்லது பாடல்களைப் பாடிய இசைக் கலைஞர்கள்  அல்லது கையாண்ட இசை வகைகள், இராகங்கள் என்று பலவகைகளிலும் பார்க்கலாம்.

இயக்குநர்கள் என்று பார்க்கப்போனால், அவரது பல வெற்றிப் படங்களைத் தந்து மறைந்த இயக்குநர்கள் பீம்சிங், ஏ.சி.திருலோகச்சந்தர், பி.மாதவன், சி.வி. ஸ்ரீதர், இயக்குநர்  சிகரம் பாலசந்தர் போன்றோர் மிகச் சிறப்பாக எம்.எஸ்.வியை பயன் படுத்தியுள்ளனர்.

பீம்சிங்-எம்.எஸ்.வி கூட்டணி:
பீம்சிங்கின் “பா-வரிசைப்” படங்களின் பாடல்கள் 50 களின் இறுதியிலும், அறுபதுகளிலும் தமிழகத்தின் தெருக்களில் முழக்கமிட்டன. காலம் கடந்து அவை இன்றும் பசுமையான பாடல்களாக, பொருளும், இசையும், உச்சரிப்புத் தெளிவும் என்று எல்லாம் கலந்து இரசிகர்களின் உள்ளங்களை அன்றும் கொள்ளை கொண்டன, இன்றும் கொள்கின்றன. பதிபக்தி, பாகப்பிரிவினை, பாசமலர்,பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா,பார்மகளே பார், பச்சை விளக்கு, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களின் பாடல்களை யார் மறக்கமுடியும்? 

சி.வி.ஸ்ரீதர்-எம்.எஸ்.வி கூட்டணி:
அறுபதுகளில் திரையுலகில் தன்னுடைய அற்புதமான திரைக்காவியங்களால், எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர்! முதலில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பின்பு தனியாக எம்.எஸ்.வி என்று வெற்றிக்கூட்டணிகளை அமைத்து இயக்கிய சுமைதாங்கி, நெஞ்சில் ஓர் ஆலயம்,கலைக் கோவில், காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை,ஊட்டி வரை  உறவு, சிவந்தமண், போன்ற படங்கள் கதைகளுக்காக மட்டுமல்லாமல் கட்டிப்போட்ட இசைக்காகவும் வெற்றிப் படங்களாயின.

கே.பாலச்சந்தர்-எம்.எஸ்.வி கூட்டணி:
அறுபதுகளின் தொடக்கத்தில், பெரும்பாலும் மற்றுமொரு மதிக்கத்தக்க இசையமைப்-பாளரான வி.குமாரே பாலச்சந்தர் படங்களுக்கு இசையமைத்தார். அறுபதுகளின் இறுதிகளிலும், எழுபதுகள், எண்பதுகள் என்று பாலச்சந்தர்-எம்.எஸ்.வி கூட்டணி வெள்ளி விழா கூட்டணியாக அமைத்ததில் இரசிகர்களுக்குக் கிடைத்தன பல நினைவில் நின்ற பாடல்கள். பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, அவர்கள், அவள் ஒரு தொடர்கதை, நிழல் நிஜமாகிறது, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற பல படங்களின் வெற்றிக்கு எம்.எஸ்.வியின் பாடல்களும், பின்னணி இசைக் கோர்ப்பும் உறுதுணை என்பது உறுதி.

பி.மாதவன்  இயக்கி எம்.எஸ்.வி இசையமைத்த  தெய்வத்தாய், ராமன் எத்தனை ராமனடி, வியட்நாம் வீடு, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை போன்ற படங்களின் பாடல்கள் இன்றும் இனிப்பவை.

எத்தனையோ இயக்குனர்களுக்காக இவர் அமைத்த, இன்றும் இளமையோடு உள்ள பாடல்கள் எண்ணிக்கை இந்த  ஆவண வரைவுக்குள் அடங்காதது. அதே நேரத்தில் கீழ் காணும் பாடல்களைச் சொல்லாமலும் விடமுடியாது.

தெய்வத்தாயில், இந்த புன்னகை என்ன விலை, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்,  ஒரு பெண்ணைப் பார்த்து, வியட்நாம் வீடு படத்தில்,  பாலக்காட்டுப் பக்கத்திலே, உன்கண்ணில் நீர் வழிந்தால், உயர்ந்த மனிதன் படத்தில், நாளை இந்த வேளை பார்த்து, வெள்ளிக் கிண்ணம்தான் போன்ற பாடல்கள் இசையமைப்பின் புதிய பரிமாணங்களைத் தொட்டவை.

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே. நீயே உனக்கு என்றும் நிகரானவன் வாழ நினைத்தால், கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, மானாட்டம் தங்க மயிலாட்டாம் பூவாட்டம் வண்ண தேராட்டம், பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே, தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, சட்டி சுட்டதடா, காலமகள் கண் திறப்பாள், நினைக்கத் தெரிந்தமனமே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே, அமைதியான நதியிலே ஓடம், ஆறுமனமே ஆறு, சிரிப்புவருது சிரிப்புவருது. சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது, ராமன் எத்தனை ராமனடி போன்ற பாடல்களை என்று கேட்டாலும் இன்றுதான் சமைக்கப்பட்ட விருந்துபோல் சுவையாக இருக்கின்றன.

எம்.எஸ்.வியும் இராகங்களும்:
எல்லா திரை இசைப்பாடல்களுமே கருநாடக இசையென்றறியப்படும் தமிழிசையின் பரந்த நிலவெளியில் அடங்குபவைதான். மெல்லிசை என்பதால் ஒரு இராகத்தை அடிப்படையாகக் கொண்டாலும் படைப்பாளிகளின் கற்பனை இராக எல்லைகளைத் தாண்டி செய்யும் சோதனை முயற்சிகளாலேயே மெல்லிசை தனித்துவம் பெறுகிறது, தவிரவும் பாரம்பரிய இசையறிவு இல்லாத பாமரருக்கும் இரசிக்கமுடிகிறது.

இசையமைப்பாளரின் ஆழமான பாரம்பரிய இசையறிவோடு, மற்ற இசை வடிவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமும், அவற்றைப் பொருத்தமாக நம்மிசையோடு சேர்த்து செய்யும் இரசவாதமும்தான் அவரை ஒரு உன்னதப் படைப்பாளியாக உலகுக்கு அடையாளம் காட்டும்.

எம்.எஸ்.வி எத்தனையோ பாடல்களை பாரம்பரிய இசையாகவே வழங்கியுள்ளார். அவருடைய பிற இசைக் கலப்பு அவருடைய அழகியல் புரிதலைக் காட்டுவதாகவே உள்ளன. எடுத்துக்காட்டுகளாக சில பாடல்கள் இங்கே:

ஆபேரி: கங்கைக் கரைத்தோட்டம் ராகங்கள் பதினாறு, பூமாலையில் ஓர் மல்லிகை
ஆபோகி: வணக்கம் பலமுறை சொன்னேன்,  நானின்றி யார் வருவார்,  தங்க ரதம் வந்தது, மங்கையரில் மஹாராணி
மோஹனம்: பாடும்போது நான் தென்றல் காற்று (சுமதி என் சுந்தரி), மலர்கள் நனைந்தன பனியாலே, தங்கத் தோணியிலே
அடாணா: யார் தருவார் இந்த அரியாசனம்
அம்ருதவர்ஷிணி: நேரம் பௌர்ணமி நேரம், சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வார்?
ஆனந்த பைரவி: போய்வா மகளே
ஆரபி:ஏரிக்கரையின் மேலே
ஆஹிர்பைரவி: உள்ளத்தில் நல்ல உள்ளம்,
பாகேஸ்ரீ: நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, நிலவே என்னிடம் நெருங்காதே, மயக்கும் மாலைப் பொழுதே, கலையே என் வாழ்க்கையில் திசை, பொன்னெழில் பூத்தது புது வானில்
ப்ருந்தாவன சாரங்கா: பொன்னொன்று கண்டேன், முத்துக்களோ கண்கள்,
சந்த்ரகௌன்ஸ்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே
தர்பாரி காநடா: வசந்தத்தில் ஓர் நாள்
மதுவந்தி: நந்தா நீயென்நிலா, காதல் காதல் என்று பேச - ஹெல்லோ மைடியர் ராங் நம்பர்
கௌரி மனோஹரி:  கௌரி மனோஹரியைக் கண்டேன், மலரே குறிஞ்சி மலரே
ஹமீர் கல்யாணி: என்னுயிர் தோழி கேளொரு சேதி
கல்யாணி: இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்
கரஹரப்ரியா: மஹாராஜன் உலகை ஆளுவான், மாதவிப் பொன் மயிலாள்
லதாங்கி: ஆடாத மனமும் உண்டோ
சிந்துபைரவி: உனக்கென்ன மேலே நின்றாய்
பந்துவராளி: ஏழு ஸ்வரங்களுக்குள்
மஹதி: அதிசய ராகம்
வாசந்தி: கேட்டேன் கண்ணனின் கீதோபதேசம்

ஒரு பானைச் சோற்றுக்கு..:
சில இசை நுணுக்கங்களை எம்.எஸ்.வி அவர்கள் கையாண்டது போல அழகுணர்ச்சியோடு செய்தவர்கள் யாருமில்லை என்றே சொல்லலாம்.

உயர்ந்த மனிதன் படத்தில் வரும், “வெள்ளிக்கிண்ணந்தான்” என்ற பாடல் உதடுகள் ஒட்டாச் சுரங்களைக் கொண்ட நிரோஷ்டா என்ற இராகத்தில் தொடங்குவதைப் பார்க்கலாம். இரண்டு மத்தியம சுரங்களை அடக்கிய 36 இரண்டு மத்தியம இராகங்களை மறைந்த கர்நாடக இசை மேதை தஞ்சாவூர் கல்யாணராமன், அடையாளம் காட்டி, அவற்றில் பாடல்களையும் பாடியுள்ளார். நமது திரை இசை மேதையோ சில நேரங்களில், இரண்டு காந்தாரம், இரண்டு மத்தியமம் என்றெல்லாம் சேர்த்தமைத்து புதிய மெட்டுக்களை உருவாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாகச் சொல்ல, “ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான், ராஜ போகம் தரவந்தான்“ என்ற பாடலில், அடுத்த இரண்டு வரிகளின் சுரங்களைக் (கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த கன்னமிரண்டினில் இன்னொரு ரகசியம் சொல்ல) கூர்ந்து கவனித்தால் புரியும். “காரிஸ” என்பது முதல் நான்கு சொற்களின் இசைக்குறிப்பு. இந்த “க” சாதாரண காந்தாரம் எனப்படும், “சிந்த” என்ற சொல்லுக்கான இசைக்குறிப்பு  “ரிகமா” என்பதாகும். இதில் வரும் “க”, அந்தர காந்தாரமாகும். அடுத்த நாகன்கு சொற்களின் சுரக்குறிப்பு, “தாபம” என்பதாகும் இதில் வரும் “ம” சுத்த மத்தியமாமகவே ஒலிக்கும்; ஆனால், “சொல்ல” என்பதன் சுரக்குறிப்பாம் ,”மபாப” என்பதில் வரும் “மா” இரண்டாவது மத்தியமமான, “ப்ரதி மத்யமத்தைக்” காட்டுவதாக உள்ளது. இவற்றின் சங்கமத்தால் நெஞ்சில் நின்று துள்ளும் ஒரு மெட்டினை நிரந்தரமாகப் பதித்தவர் எம்.எஸ்.வி. இது போன்ற இசை நுணுக்கங்கள் ஏராளம் அவருடைய இசையமைப்பில்

குறைந்த இசைக் கருவிகளை வைத்தும், ஏன் ஒரே இசைக் கருவியை வைத்தும் இசையமைத்திருக்கும் எம்.எஸ்.வி, 150க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வைத்தும் சில பாடல்களைச் செய்துள்ளார், பட்டத்து ராணி என்கிற பாடலில். தவிரவும் அப்பாடலில் சவுக்கடியையே ஒரு இசைக் கருவியாகப் பயன்படுத்தியிருப்பார் எம்.எஸ்.வி. அப்பாடலிலும், பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலிலும் ஒலிக்கும் பாங்கோ இசைக்கருவியின் முழக்கம் இல்லாத மெல்லிசை மேடைகளே அந்நாளில் கிடையாது.

சில நேரங்களில் ஒரே இராகத்தில் பல பாடல்களைச் செய்யும் போது, பெரும்பாலும், ஏதேனும் ஒன்றிரண்டைத் தவிர மற்றவையெல்லாம் அந்தளவுக்கு நினைவில் நில்லாமல் போய்விடும். அவ்வாறு இல்லாமல் ஒரு இராகத்தையே பலவித வடிவங்களில், அதுவும் பாட்டுக்குப் பொருத்தமாகக் கையாண்டு நினைவில் நிற்கச் செய்ததில் எம்.எஸ்.விக்கு இணை அவரேதான்! எடுத்துக்காட்டாக, ஆபோகி இராகத்தில் “தங்க இரதம் வந்தது” என்ற டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா பாடிய கலைக்கோவில் படப் பாடலும், “நானன்றி யார் வருவார்” என்ற டி.ஆர்.மஹாலிங்கமும், ஏ.பி.கோமளாவும் மாலையிட்ட மங்கைப் படத்திற்காகப் பாடிய பாடலும் அமைப்பில் வெவ்வேறாக உள்ள கர்நாடக இசை வடிவம் மாறாத சிறப்பான வெற்றிப் பாடல்கள்.  “வணக்கம் பலமுறைச் சொன்னேன்” என்னும் “அவனொரு சரித்திரம்” படப்பாடலுக்கும் மேற்கத்திய இசைத் தொடக்கத்தோடு இயல்பாக வந்து அமர்ந்துகொள்ளும் அற்புதப் பாடலும் ஆபோகிதான். “அவளுகென்று ஓரு மனம்”, படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பீ.சுசீலா குரலில் ஒலிக்கும் “மங்கையரில் மஹராணி” என்ற பாடலும் ஆபோகிதான்! ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட ஆபோகி இராகப் பரிமாணங்கள்!

இசை நுணுக்கங்களை விரித்துச் சொல்ல ஒரு சில பக்கங்கள் போதாதெனினும், இன்னுமொரு பாடலைச் சொல்லியே ஆகவேண்டும். மீனவ நண்பன் படத்தில் வரும் “தங்கத்தில் முகமெடுத்து” என்ற ஜேசுதாஸ், வாணி ஜெயராம் பாடிய பாடல் இதுவரைக்கும் யாருமே முன்பும், பின்பும் செய்திராத கற்பனை. சிவரஞ்சனிக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்து நடுவில் ஒரு சிறிய வரிமட்டும் மோஹன கல்யாணிபோலே காட்டி மீண்டு சிவரஞ்சனியில் சேர்ந்தது அவருடைய மட்டில்லா கற்பனைக்கும், கவிநயத்தோடே கூடிய இசை உணர்வுக்கும் ஒரு சோறு பதம்!

ஒருவர் மெட்டை மற்றொருவர் திருடுவது என்பது கலையுலகில் நடப்பதுதான். ஆனால் வேறு மொழியில், இசை வடிவத்தில் வந்த மெட்டுக்களை, நம் திரையிசைக்கு ஏற்ப மாற்றி அழகான, இயல்பாகக் படைப்பதற்கு மிகுந்த திறமை வேண்டும். அவ்வாறு வந்தவைதான், காதலிக்க நேரமில்லை படத்தில் வரும், “அனுபவம் புதுமை” என்னும் பாடலும், புதிய பறவை படத்தில் வரும், “பார்த்த ஞாபகம் இல்லையோ” என்பதும்! முதலாவது, “பெஸமே மூச்சோ” என்னும், ஸ்பானிஷ் மொழிப்பாடலையொட்டியது; மற்றது, டாங்கோ என்னும் நடன வடிவத்துக்கான “ஸ்வே வித் மீ” என்கிற பாடலையொட்டியது.

இசைப் பாடகர்களைக் கையாண்ட விதம்:
எத்தனையோ இசைப் பாடகர்களும், பாடகிகளும், இவரது மோதிரக்கையால் குட்டுபட்டவர்களே. யாரை எவருக்குப் பயன்படுத்தலாம் என்பதை மிகவும் நேர்த்தியாக அறிந்திருந்தார் எம்.எஸ்.வி.  டி.எம்.எஸ், பி.சுசீலா, பி.லீலா, ஜேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, வாணி ஜயராம், சாய் பாபா, சதன், ஏ.எல்.ராகவன், ஜிக்கி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சித்ரா என்று பலரையும் பல நடிக நடிகையருக்காகப் பொருத்தமாகப் பயன்படுத்தியவர்.

டி.எம்.எஸ் அவர்களை, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் போன்ற வர்களுக்குப் பொருத்தமாக பயன் படுத்தியதோடல்லாமல், ரஜினிகாந்த்க்கு தானே முதலில் பாடி அவரின் வெற்றிக்கு ஒரு காரணமானவரும்  எம்.எஸ்.வி. மூன்று முடிச்சு படத்தில் வரும் “வசந்த கால நதிகளிலே” என்ற பாடலில், வரும் “மணவினைகள் யாருடனோ” என்ற வரிகள் எம்.எஸ்.வியிம் குரலில் ஒலித்தது, ரஜினியின் வில்லத்தனத்துக்குப் பொருத்தமென்றால் அவ்வளவு பொருத்தம்.

ஜேசுதாசை காதலிக்க நேரமில்லைப் படத்தில், “நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா” என்ற பாடலைக் கொடுத்துவிட்டு, மீண்டும் தமிழுலக்கு, “தெய்வம் தந்த வீடு” பாடலின் மூலம் மறு அறிமுகம் செய்ததும் இவரே. முதல் அறிமுகம் வீணை மேதை பாலச்சந்தர் செய்தது என்றாலும், நிலைக்கச் செய்தவர் எம்.எஸ்.வியே. அவரை மக்கள் திலகத்துக்கு பாடவைத்ததும், மக்களை அக்குரலும், எம்.ஜி.ஆருக்கு பொருந்துவதே என்று காட்டியதும் இவரே.

எம்.எஸ்.வியும் எம்.ஜி.ஆரும்:
நடிகர் திலகம் படங்கள் பலவற்றுக்கு இவர் இசை அமைத்திருந்தாலும், மக்கள் திலகத்துக்கும் இவருக்கு இருந்த பிணைப்பு அலாதியானது. எம்.ஜி.ஆரே சிறந்த இசை இரசிகர். அவரை மகிழ்விப்பது அவ்வளவு எளிதான செயலாகவும் இருக்கவில்லை. ஆனாலும், அவருடைய விருப்பையும், அவரது இரசிகர்களின் நாடித் துடிப்பையும் துல்லியமாக அறிந்திருந்தார் எம்.எஸ்.வி. அந்த கூட்டணியில் நினைவில் நின்ற பாடல்கள் பல, அவற்றுள் ஒரு சில, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை..

எம்.எஸ்.வியின் இசையில் எம்.எஸ்.வி:
தன்னை ஒரு பாடகராக என்றுமே அவர் முன்னிருத்திப் பாடியதில்லை என்று கேள்வி. இயக்குநர்கள் சில சமயம் இவரை சில காட்சிகளின் அழுத்தத்துக்காகப் பாடச் சொல்லியிருக்கிறார்கள். அவர் பாடும் பாடல்கள், அவர் பாடவே எழுதப்பட்டவைபோல இருக்கும்; ஆலால கண்டா, அல்லா அல்லா, சொல்லத்தான் நினைக்கிறேன், எனக்கொரு காதலி இருக்கின்றாள் போன்றவை இவரது குரலின் உயிர்ப்பை இன்னும் சொல்லிக்கொண்டிருப்பவை. இவர் வி.குமார் இசையில் பாடிய “உனக்கென்ன குறைச்சல்” என்ற பாட்டை தனியாக அமர்ந்து கேட்டுப்பாருங்கள்!  ஒரு புது நம்பிக்கைப் பிறக்கும்!

எம்.எஸ்.வியும் கவிஞர்களும்:
எம்.எஸ்.வி பல பெரிய முன்னாளைய கவிஞர்களின் பாடல்களுக்கு இசை அமைத்திருந்தாலும் கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும்தான் எம்.எஸ்.வியின் இசைக்குப் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். உடுமலை. நாராயண கவி, கே.டி.சந்தானம், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், மருதகாசி போன்ற முன்னோடிக் கவிஞர்கள் காலத்திலெல்லாம் சி.ஆர்.சுப்பராமன் போன்றோருக்கு உதவியாளராக இருந்த எம்.எஸ்.வி. அவர்களது பாடல்களுக்கும் இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்தகாலத்தில், அவருக்கு கண்ணதாசனோடு ஏற்பட்ட அன்புப் பிணைப்பு, தமிழ் திரையுலகிற்கு மறக்கமுடியாத காதல் பாடல்களை, களிப்புப் பாடல்களை, தத்துவப்பாடல்களை என்று பல வகைகளிலும் அள்ளித் தெளித்திருக்கிறது. “ஆலய மணியின்” என்ற பாடலை இன்று அதிகாலை வேளைகளில் கேட்டாலும் தமிழத்தின் ஒரு கிராமியக் காலைப் பொழுதின் காட்சிகள் கண்ணில் விரியுமே!  “நினைக்கத் தெரிந்த மனமே” என்ற பாடல் இன்னும் பிரிவாற்றாமையில் இருப்பவர்களுக்கு ஓர் ஆற்றுப்படுத்தும் மருந்தாக இருக்கிறதே. “பொன்னொன்று கண்டேன்”, “காலங்களில் அவள் வசந்தம்”, “அன்று ஊமைப் பெண்ணல்லோ” போன்ற  பாடல்கள் இன்றும் காதல் இரசவாதம் செய்கின்றவையாகவே இருக்கின்றனவே! இந்த கூட்டணி போல் மனித உணர்வுகளை கவிதையும் இசையும் சரியான விகிதத்தில் கலந்தளித்த கூட்டணி ஏதுமில்லை.

கவிஞர் வாலியோடு எம்.எஸ்.விக்கு இருந்த தொடர்பு வாலிபக் கருத்துகளும், வாளிப்பான புரட்சிக் கருத்துக்களும் நிறைந்திருக்கும் மக்கள் திலகம், மக்கள் கலைஞர் ஜெயசங்கர் மற்றும் ரவிச்சந்திரன் போன்றவர்களின் படங்களுக்கு எழுதிய துடிப்பான பாடல்களைக் கொண்டது. கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக, எம்.எஸ்.வி மிகவும் விரும்பி இசையமைத்தது வாலியவர்களின் பாடல்களுக்கு என்று உறுதியாகக் கூறலாம்.

இறுதியாக (தற்காலிக):
நிறைவோடு நிறைவு செய்யமுடியாத பணி, எம்.எஸ்.வி போன்ற வாழ்நாள் சாதனையாளாரைப் பற்றி எழுதுவதும் பேசுவதும்.எனினும் அளவு கருதி நிறைவு செய்வதற்கு முன்பு: எம்.எஸ்.வி ஒரு சகாப்தம் என்பதையெல்லாம் கடந்து, இவர் எத்தனை உள்ளங்களின், எத்தனை உணர்ச்சிகளின் இசை வடிகாலாக இருந்திருக்கிறார் என்பதே இவர் வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கைக்குப் பெருமை. பெரிய விருதுகளை இவருக்குக் கொடுக்காத சிறுமைக்காக சில அமைப்புகள் வெட்கப்படவேண்டும். இவரது இசை, வாழ்வு என்று எல்லாமே இசை மிக்கது. இவரைப்போல் மற்றொரு படைப்பாளி மீண்டும் பிறந்துதான் வரவேண்டும் என்பவர்களின் பட்டியலில் முதல் வரிசையில் இருப்பார் நம் எம்.எஸ்.வி.

திரையிசைத் தேனிசை தித்திக்கத் தந்தவா திகட்டாமல் தந்தவா
நரையுடன் திரைவர நலமது குறைந்துமே நயமிகு இசையினை
வரையிலா வள்ளலாய் வழங்கிய வித்தகா விலையிலா முத்துநீ
உரைபெறும் உம்மிசை உலகினில் நிலைபெறும் உம்பெயர் என்றுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...