நவம்பர் 01, 2015

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -7

வீதிவழியே வந்த இளம் பெண்ணின் அழகிலே தனையிழந்து அவளைப் பலவாறாகப் பாராட்டி, தன்னுடைய பேச்சாலே கவரப்பார்க்கிறானாம் ஓரிளைஞன்! காலம் காலமாக இளைஞர் செய்வதும், கதைகளும், கவிதைகளும், திரைச்சித்திரங்களும் வற்றாத கருக்களமாக கொள்வதும் இதுதானே.. கலித்தொகையில் குறிஞ்சி நில இளைஞன் கூற்றாக இவ்வாறு கபிலர் சொல்லுகிறார். இது நெடும்பாடல், அதில் இறுதி சில வரிகள் இங்கே தரப்படுகின்றன.

நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப்
போதரவிட்ட நுமரும் தவறு இலர்
நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்கு
பறை அறைந்தல்லது செல்லற்க என்னா
இறையே தவறு உடையான்
 கபிலர். கலித். 56 : 30 – 34

அழகியே! உனைக்கண்டு இங்கு இளைஞர் கூட்டம் பித்துபிடித்து அலைகிறது..அந்த வேதனை புரியாமல் நீ ஒன்றும் சொல்லாமல் போகிறாயே!. அது எங்களை மேலும் கொல்கிறதே! ஆனால், உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. உன் பெற்றோரைச் சொல்லியும் குற்றமில்லை. மதயானை நீராடப்போவதை முரசறைந்து அறிவிக்கும் அரசன் நீ வெளியே வருவதை சொல்லாமல் விட்டானே.. இது அவனது குற்றமே! என்கிறான் அந்த இளைஞன். 

எப்படியாவது எதையாவது சொல்லி, தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தைத் திருட விரும்பும் ஒவ்வொரு இளைஞனும் செய்வதுதான்!  இன்றைய இளைஞன் இதையே எவ்வாறு சொல்லலாம் என்றால், இதோ இப்படி…

உன்குற்றம் அன்றே வெளியே செலவிடுத்த
உன்பெற்றோர் குற்றமும் அன்றென்பேன் - தன்முரசைக்
கொட்டி மதயானை நீராடும் செய்திபோல்
சுட்டாவேந் தின்குற்ற மே

வேந்தனுக்கு எங்கே போவார்கள்.. வேண்டுமானால் அப்படிப்பட்ட அழகியைப் பற்றி செய்தியாகப் போடாத செய்தித்தாள் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

உன்குற்றம் அன்றே வெளியே செலவிடுத்த
உன்பெற்றோர் குற்றமும் அன்றென்பேன் - தன்னேட்டில்
முன்பக்கச் செய்தியாகப் போடாத ஆசிரிய
ரின்மலை போல்குற்ற மே!

இன்றைய இளைஞர் இதையெல்லாம் இன்னும் கொச்சையாக இச்சையைக் கொட்டிச் சொல்லுகிறார்கள். நயமும் இல்லை! நாகரீகமும் இல்லை என்பதே உண்மை. 


இந்த காலத்தில், இப்படிப் பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் பேசுவதை ஈவ்-டீசிங் என்றே கூறுவார்கள். இலக்கியக்காலக் காதலில் ஈவ் டீசிங் என்பது கூட கண்ணியமாக கருதப்பட்டது போலும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...