அக்டோபர் 28, 2011

எல்லாம் சிவபயம்


வெற்றுச்சுவரைப் பார்க்கின்றேன்

முற்றுமுணரும் நிலைவேண்டி
கற்றதுவெல்லாம் காய்ந்துப்போக
இற்றதுஎண்ணம் என்றேயாக  4

முடிவும்முதலும் இல்லாத
முடிச்சுப்போட்ட மூலமெது?
மூளையின்மூச்சு முட்டும்மட்டும்
மூலைகள்தோறும் தேடுகிறேன்.. 8

அதுவாஅவரா ஜடமாஉயிரா?
எதுவுமில்லா சூனியமதுவே
விதையொன்றாகி விளைநிலந்தேடி
விந்தையுலகை எட்டிப்பார்த்து   12

வினைகளமாடி விதிமுடிவாலோ
வருமுதிர்வாலோ விழுந்தபின்னர்
மீண்டுமதுவாய் மறைவதுதானே
மீண்டும்மீண்டும் காணுமியற்கை?  16

இடையில்வாழ்கை! எத்தனைநித்திரை?
தொடர்ந்தகனவுகள்? தொய்ந்த நினைவுகள்!
விழித்தகணங்களும் எத்தனை வேதனை?
விழுந்துஎழுந்த கதைகள் ஆயிரம்  20

அழுதகண்கள் அதுபல்லாயிரம்
கேட்டாலுந்தன் பழவினையென்பார்.
இருந்தபிறப்புகள் யாரேஅறிவார்?
எல்லாம்கடந்தவன் நாடகமென்பார். 24

சுழற்சியில்லா நிலையினைநாடு
சுத்தப்பிரம ஜோதியைகூடு
பிறவிகளில்லா பெருநிலைதேடு
துறவினைநாடி அடைவாய்வீடு  28

காலந்தோறும் ஞானிகள்ஜாதி
ஞாலத்தோர்க்கு உரைத்தபாடம்
அவனேஎழுதி அவனேநடத்தி
அவனேகளிக்க நடக்கும்கூத்தெனில் 32

எதற்காயித்தனை நாடகம்செய்தாய்?
இறைவாஎன்று கேட்கத்தோன்றி
அதையுமறிவு கழித்துப்போட்டது
இறைபொருளென்ன ஆணவக்குறியா? 36

விதையில்லாத விருட்சமில்லை
இயற்கையின்நியதி இதுவேயாகில்
இறைக்கும், வித்து இருக்குமன்றோ?
முதலில்லாமல் முடிவும் உண்டோ? 40

அகன்றுவிரியும் அண்டம் தொடங்கிய
அணுவின்முதலும், பூஜ்ஜியநொடித்துளி
தொடங்கி, இன்றும் முடியாப்பயணம்
தொடரும், முடிவில் காலக்கோடும் 44

ஜனித்தவேளை, கடவுள் என்னும்
கருத்தும் ஒன்றாய் உதித்தவேளை!
காலம் என்னும் அருவப்பொருளும்
காணும் அண்ட உருவப்பொருளும் 48

தானேநிகழ்ந்த தற்செயல்அற்புதம்!
ஏனோதோன்றுது எனக்குள்ளாக.
ஆனால்படித்த படிப்பும்பயமும்
ஊனில்கலந்த உலகியல்வழக்கும் 52

ஒத்துப்போகச் சொல்வதினாலே
செத்துப்போக சிந்தனையெல்லாம்
சத்தியமாகச் சொல்வேனெந்தன்
சித்தமெல்லாம் சிவபயமே! 56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...