அக்டோபர் 18, 2011

மீண்டும் வேண்டும் சுதந்திரப் போர்

 [ கால ஓட்டத்தில் சில மனதுக்குப் பிடித்த விஷயங்களை, நேரமின்மை என்கிற ஒரு சுய நொண்டிச் சமாதனத்திலே, தள்ளிப்போடுகிற குணம் எல்லோருக்குமே இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் அதிகமே. ஆனாலும், இந்த கவித்துவ வெளிப்பாடு, கடந்த ஆண்டுமுதல் எல்லோரையும் பரபரப்பாகி, இப்போது முழுவதுமாக ஓய்ந்துவிடாமல், ஆனால் வெகுவாக மந்தமாகி, மரணப்படுக்கைக்குத் தள்ளப்பட்டிருக்கிற, 2G முதல் மற்ற எல்லா ஊழல் செய்திகளுக்குக்கிடையில், ஆற்றாமை காரணமாக எழுதப்பட்டது. ஆனால், எழுதி என்ன பயன் என்ற எண்ணத்திலே இங்கே இடுகையாகப் பதியாமல் போனது..! மக்களின் மறதி மண்ணாகிப் போகாமலிருக்க, இது போன்ற ஆதங்க வெளிப்பாடுகள் தேவை என்கிற எண்ணம் இன்று இதை தற்செயலாக மீண்டும் படிக்கையில் ஏற்பட, இதோ கொள்வாருக்காக விரிக்கப்படுகிற கவிதைக் கடைச் சரக்கு! ]

மீண்டும் சுதந்திரப் போரினைச் செய்வோம்
அடிமைப் புத்தியின் அசதியைத் தொலைத்து
மாண்டநம் முன்னோர் உயிர்விலை விளைத்த
விடியலை வீணாய் செய்து விடாமல்!
அன்னிய உருவிலே, அடக்கு முறையிலை
ஆனால் இங்கே எத்தனை தளைகள்?
அன்னிய மொழிமுதல் அனைத்து கலப்பையும்
ஊனாய் உயிராய் உவந்து விட்டோம்!
தாலிகள் கோடியில் தாரை வார்த்தித்
தாலியின் கைகளில் கொடுத்து விட்டோம்

தொகைபல கோடியில் இருந்தும் தலைமைத்
தகைமை கொண்டோர் ஒருவரும் இல்லை!
தொகைபல கோடியில் சேர்ப்பதும் அரசியல்
பகைவரை அடியொடு அறுப்பதும், மக்கள்
மனங்களில் ஆயிரம் பிரிவுகள் விதைப்பதும்
வனங்களில் வாழ்பவை போல்நிலை ஆக்கலும்
ஆள்பவர் இங்கே ஆடிடும் ஆட்டம்
ஆட்டின மக்கள் பாடுதிண் டாட்டம்
பிணங்கள் தின்னும் சாத்திர மெல்லாம்
பேய்க்குணம் கொண்ட மக்களி னாலே

ஆள்பவர் வழியிலே மாக்களாய் ஆவதா?
தோள்வலி குன்றிநாம் தோல்வியில் துவள்வதா?
நம்மொழி நம்மினம் நம்கலா சாரம்!
நாவிலே நயம்பட நவிலத் தானா?
அன்னை மடிதனை அறவே மறந்து
அவலப் பிறப்பாய் திரியத் தானா?
என்பெலாம் கூசிடும் உணர்வுகள் இற்றதா?
எண்ணவும் இயலாச் செயலுமொ ழிந்ததா?
அரசியல் பிழைத்தால் அறமே கூற்றென
அருந்தமிழ் இளங்கோ அறிந்ததும் பொய்யா?

வாய்மை வெல்லும் என்னும் வாசகம்
வாய்-மெய் தனைவெலும் என்றோ வாகிடும்?
அரசிடம் தொடங்கி, அடித்தள மக்கள்
அனைவரும் சமமென ஆச்சுது ஊழலில்
கல்வியில் தொடங்கி கார்ப்பரேட் வரையில்
பாழும் பணமே பாயுது வெள்ளமாய்
கலைகள் எல்லாம் காசில் மாசாய்
குலைந்து போனது குப்பை மேடாய்!
மக்கள் உணர்வில் மறத்துப் போனார்.
சுவாசம் மறந்து மரித்துப் போனார்.

ராமன் வந்தே ஆண்டால் என்ன?
ராவண னால்நான் மாண்டால் என்ன?
மணியடித் தாலே கிடைக்குது சோறெனும்
மானங் கெட்ட வாழ்வே போதும்!
என்றே இருந்தால் எங்கே வாழ்வு?
எத்தனை நாட்கள் இத்தனைத் தாழ்வில்?
எழுமின் எழுமின் என்னுயிர் மக்காள்
கழுவில் கிடந்த நாட்களைத் தொலைத்து
உழுமின் உள்ளச் சிந்தனை நிலத்தை
பழுதில் எண்ணம் வளர்ப்பீர் உளத்தில்

அரசியல் அவலம் அடித்தளம் அரிக்கும்
கரையான் போல! அறிவீர் அறிவீர்
புரையோ டிப்போய் புழுத்து விடாதீர்.
உரமுடன் உள்ளத் துடிப்புடன் எழுவீர்
சூரியன் பெயரால் சூழ்ந்திடும் இருளை
வீரியங் கொண்டு விரட்டுவோம் வாரீர்!
சூழ்சியில் மக்களை சுரண்டிடும் கேடரும்
வீழ்ந்திட, விடுதலை பெற்றிட வாரீர்!
அயலான் நம்மை அடிமைப் படுத்த
அழகாய் வகுத்த, பிரித்தே ஆளும்

சூழ்ச்சிப் பின்னலை பிடித்துக் கொண்டார்
சூதினை நம்முள் விதைத்து விட்டார்
சூதை வென்று தருமம் வெல்ல
பாதைக் காட்டி கீதை தந்த
பார்த்தன் சாரதி கண்ணன் கனிவுடன்
பார்த்தருள் புரிவான் பாரதம் விழித்திடும்
அதுவரை சுதந்திர வேள்வித் தீயை
அணைய விடாதீர் ஆருயிர் நண்பீர்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...