டிசம்பர் 31, 2009

சென்னயில் கச்சேரி ஸீஸன் 2009-2010

ஜனவரி ஒன்று, 2010:

அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போது, ஏதோ எல்லா கச்சேரிகளுக்கும், செல்லப்போவதாக நிச்சயம் செய்துகொண்டு வந்தாலும், சென்னை போக்குவரத்து நெரிசல்களும், மற்ற வாகன வசதி சிக்கல்களும், உறவினர் வருகைகளும், அழைப்புகளும் ஒட்டுமொத்தமாக நேரத்தை ஆக்ரமிப்பு செய்து கொள்ள, முடிந்த நேரத்தில் செல்லக்கூடிய கச்சேரிகள் மிகவும் குறைவுதான்.

இந்தவருடம், சௌமியா, டி.என்.எஸ், க்ருஷ்ணா, சஞ்சை, அஷோக் ரமணி, சங்கர நாராயணன் இவர்களின் கச்சேரிகளுக்குத்தான் செல்ல முடிந்தது... தவிர சில உதிரி ஆய்வு விரிவுரைகள்-விளக்க நிகழ்வுகள், குறிப்பாக எஸ்.ஆர்.ஜானகிராமன் அவர்கள் பார்த்தஸாரதி அரங்க நிகழ்ச்சி, என்று சில்லரை சில்லரையாக நிகழ்ச்சிகள்.

சௌமியாவின் சென்னை ம்யூஸிக் அகாதமி கச்சேரி மிகவும் நிறைவு. அதிகம் பாடப்படாத கோரி ஸேவிம்பராரே (கரஹரப்ரியா) அழகாகப் பாடப்பட்டது.. அதிக ஆர்ப்பாட்டமில்லாத கச்சேரி.

நாரதகான சபாவில், டி.என்.எஸ் அவர்களின் கச்சேரி, நிறைவான ஒன்று. ஆள் இளைத்தாலும், இசையில் இளைக்காத, இளமை உள்ளவர் சேஷூ. அவ்ர் எடுத்துக்கொண்ட பெரிய உருப்படி சிந்தாமணி ராகமும், ஸ்யாம ஸாஸ்த்ரியின் "தேவி ப்ரோவ" க்ருதியும்தான். அவரால் மட்டுமே செய்யமுடிந்த செயல், அந்த ராகத்தை அவ்வளவு விரிவாகப்பாடியது.

டி.எம்.க்ருஷ்ணாவின் அகாதமி கச்சேரி, வேகமும், விவகாரமும் நிறைந்த, கைத்தட்டல்களை அள்ளிக்கொண்ட கச்சேரி. பாபனாசம் சிவனின், அப்பன் அவதரித்த கதாம்ருததில் பாடிய மின்னல் ஸ்வரப் பின்னல்களுக்குப் பிறகு பாடிய தோடி கொஞ்சம் சுமார் ரகம்தான். ப்ருந்தாவன ஸாரங்க க்ருதியான சௌந்தர்ராஜத்துக்கு பாடப்பட்ட ராக ஆலாபனை மிகவும் சுமார் ரகம்தான்.. க்ருஷ்ணா ரொம்பவும் பேசுகிறார். ரசிகர்களின் கூட்டம் இன்று இருக்கும், நாளைக்கே வேறு திசைக்கு மாறிவிடும்.. வித்யா கர்வம் நியாயமானது என்று வாதிப்பவர்கள் பலர் இருந்தாலும், வித்தைக்கு அழகு வினயம்..

சஞ்சய் நன்றாகப் பாடுகிறார், குரல் சிறிது கனைசலாக இருந்தாலும். அன்று பாடிய ஆபோகி நன்றாக இருந்தது.. ஆனால் கோபால க்ருஷ்ண பாரதியின் "சபாபதிக்கு" தேவலாம் ரகம். ஆகிரி நல்ல முயற்சி.. ஆனால் வந்தது வராமல் பாடுவது கஷ்டம்தான்.. அகாதமி கச்சேரியில் அவருக்கு குரல் கொஞ்சம் படுத்தல். அதனாலேயே நிறைய ஸ்ருதிக்குற்றங்கள், தவறல்கள்..

இவர் எம்.டி.ஆர் மாதிரி பாடுகிறார்.. கல்யாணராமனாய் மாறிவிடுகிறார். ஏன் அவரைப்போல பாடமாட்டேன் என்கிறார்? சஞ்சய், நீங்கள், நீங்களாகப் பாடுவதே பிடித்திருக்கிறது..

அஷோக் ரமணி, இவர் குரலில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. மேல் ஷட்ஜத்தில் சேரும் சமயங்களில் தேய்தல் இருக்கிறது.. ஆனால், அபரிமிதமான ஞானமும், தாளக் கட்டுப்பாடும் அமைந்த பாட்டு இவருடையது. காம்போஜியில் பாடிய மரிமரி நின்னே, கச்சேரி மேடைகளில் மிகவும் அபூர்வமாகப் பாடப்படும் க்ருதி.. மிகவும் நிறைவாகப் பாடினார். அவர் பாடிய பல்லவி திஸ்ர ரூபகம், ஸங்கீர்ண நடை (இதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்). மிகவும் கஷ்டமான ஒன்று.. மிகுந்த கவனத்துடன் பாடினார். ஷண்முகப்ரியா ராகத்தில் ஒரு இடத்தில் ஸ்ருதி விலகிய உடனே, அதை அவசரமாக முடித்துவிட்டால் போல பட்டது...! கூட்டிக் கழித்துப் பார்த்தால் நிறைவான கச்சேரி... ஆனால் கூட்டம்? நம் ரசிகர்கள் ஆர்பாட்டத்துக்கும், ஆரவாரத்துக்கும் ஆர்.எம்.கே.விக்கும் தான் கூடுவார்கள் போலிருக்கிறது...!

டி.வி.எஸ்.. விவகாரங்கள் குறைந்த, இசையனுபவம் மட்டும் மிகுந்த சுகமான கச்சேரி...

இன்னும் கச்சேரிகள் இருக்கின்றன செல்வதற்கு, ஊருக்குக் கிளம்புவதற்குள்.. மீண்டும் எழுதுகிறேன் ஊருக்கு வந்தவுடன்..!

3 கருத்துகள்:

 1. வணக்கம் நிஜன்.

  டி.எம்.கிருஷ்ணாவின் உடல்மொழி எனக்கு பிடித்துள்ளது. அதை அலட்டல் என்று சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அது குறித்த என்னுடைய பதிவு http://vurathasindanai.blogspot.com/2010/01/blog-post.html

  ஆனால் அவரின் பேச்சை நான் கேட்டதில்லை. அதிகம் பேசுகிறார் என்பதற்கு உதாரணம் சொன்னால் ஒரு வேளை புரியலாம்.

  ஆனந்த விகடனில் கிருஷ்ணா சம்பிரதாயங்களை மீறுவதாக எழுதியிருந்தனர். பின்னர் அதற்கு கிருஷ்ணா எழுதிய பதிலையும் பிரசுரித்திருந்தனர். அது ஏற்புடையதாகவே இருந்தது. இப்பொழுதுள்ள சம்பிரதாயமே 100 வருடத்துக்கும் கீழாகவே கர்நாடக இசையில் ஏற்பட்டது. எனவே சம்பிரதாயத்தில் இருந்து சற்று விலகி புது முயற்சி செய்வதில் தவறில்லை என்று! :-)

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சாணக்கியன்.

  பாடகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவரவர்க்கே உரித்தான உடல்மொழி உண்டு. ஆனால், சுப்பராம தீக்ஷிதரின் ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினியை ப்ரமாண ஸாஸ்த்ரமாக ஆராய்ச்சி செய்யும், எடுத்துக்கொள்ளும் க்ருஷ்ணா, அதே சுப்பராம தீக்ஷிதரின் ஸங்கீத ப்ராசீன பத்ததியையும் படித்திருப்பார் என்று நம்புகிறேன். காயகரின் குற்றங்களாக சொல்லப்பட்ட இருபத்தைந்து விஷயங்களில்,'ப்ரசாரி - அதாவது, பாடும்போது நடைபோடுவதுபோல, கை முதலிய அவையங்களை நீட்டியும், மடக்கியும், வளைத்தும் தூக்கியும் தணித்து சேட்டைகளோடு பாடுவது', பற்றியும் படித்திருப்பார். மற்றொரு வலைப்பதிவில் இந்த இருபத்தைந்தைப் பற்றியும் எழுதுகிறேன்.

  இவ்விதச் சேட்டைகளை, எல்லோருமே ஒரளவுக்குச் செய்கிறார்கள் என்றாலும், இவர் செய்வது, மன்னிக்கவும், மிகையாகவே இருக்கிறது. பாவத்தோடு ஒன்றிவிட்டார் என்று கருதினாலும், தவிர்க்கமுடியாததாகவே இருந்தாலும், இந்த அளவுக்கு தேவையில்லை என்பது பலவருடங்களாக பல இசையரசர்களின்/இசையரசிகளின் கச்சேரிகளைக் கேட்டுவந்துள்ள பலரும் ஒத்துக்கொள்வார்கள்.

  பல சமயங்களில் அவர் மாறுப்பட்ட, புரட்சிக்கார வித்வானாகக் காட்டிக்கொள்கிறாரே தவிர,அவர் அப்படியில்லை. அவர் அன்று பாடிய ப்ருந்தாவன ஸாரங்காவை பூர்வாசாரியரான வேங்கடமகியின் இலக்கண ஸ்லோகம் "ப்ருந்தாவனீ ஔடவீ ச ஸக்ரஹா கதவர்ஜிதா", ப்ருந்தாவனீ என்றழைப்பது உண்மைதான். சம்ப்ரதாயத்தில் ப்ருந்தாவன ஸாரங்காவாக ஆகிவிட்டிருப்பதும் உண்மைதான். அவர் பாடிய சௌந்தர்ராஜம் க்ருதியிலும், "ப்ருந்தாவன ஸாரங்கா" என்றே வருகிறது. இந்த செய்தியை அவர் சொன்னது கூட, தன்னுடைய ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்ஸினி படித்த செய்தியைப் பறைசாற்றுவதற்காகத்தான். கூடவே ப்ரயோகங்களையும் பாடிக்காட்டியிருக்கலாம். வகுப்பு எடுத்தது போல இருந்திருக்கும்.

  நான் பெரிய சம்ப்ரதாயவாதியல்ல..100 வருடத்துக்கும் குறைவான கச்சேரி அமைப்பு பற்றியும், தென்னிந்திய இசை வளர்ச்சிப் பற்றி ஓரளவுக்குப் படித்திருக்கிறேன் என்ற முறையிலும் கிருஷ்ணாவின் கருதப்படுகிற சம்ப்ரதாய மீறல்களினைப் பற்றி கவலையும் கொள்ளவில்லை.

  ஆனால், அவர் கருத்துக்களை வெளியிடுகிற விதத்திலே ஒருவித மரியாதை இன்மையும், ஆரவாரத்தன்மையும் வெளிப்படுகிறது. இது என்னுடைய கருத்துமட்டுமல்ல, பலருடைய பரவலான கருத்தும்தான்.

  உங்களுடைய கருத்துரைக்கு நன்றி. உங்கள் வலைப்பூ பக்கங்களும் மிகவும் சுவாரசியமாக உள்ளன!

  பதிலளிநீக்கு
 3. விரிவான பதிலுக்கு நன்றி நிஜன். கர்நாடக இசையை ரசிப்பதில் நான் இப்போதுதான் தொடக்கப்பள்ளி மாணவன்.

  உண்மைதான், காலங்காலமாக பல ஜாம்பவான்களின் இசையை கேட்டு வந்தவர்களுக்கு அது தேவையில்லாதது என்று புரியலாம். ஆனால் புதியவர்களை இசை கேட்க வைக்க அதுவும் பாரம்பரியமாக கர் நாடக இசையுடன் எந்த தொடர்பும் இல்லாத குடும்பங்களிலிருந்து வருபவர்களுக்கு இது உதவும். இசை இன்னும் புதிய 4 பேருக்கு போய்ச்சேரும்.

  கர் நாடக இசை கேட்கும் பழக்கம் இல்லாத என் நண்பர் ஒருவரிடம் தற்போதுதான் கேட்கப் பழகியிருக்கும் நண்பர் ஒருவர் சொன்னது, “ ஒலித்தட்டுகளை கேட்காதீர்கள். கட்சேரிகளை தொலைக்காட்சியில் பாருங்கள். அவர்களது முக பாவங்களோடு பார்க்கும்போது உங்களுக்குப் பிடிக்கும்”.

  என்னுடைய வலைப்பூ தங்களுக்கு சுவாரசியாக இருப்பது குறித்து மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...