ஏப்ரல் 15, 2009

க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை – மீண்டுமொரு பார்வை.

சில சமயங்கள் நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளும், நம்பிக்கைச் சார்ந்த எண்ணங்களும், நம்மை உண்மைகளிலிருந்து விலக்கி, திரிந்த நோக்கினையும், அபிப்பிராயங்களையும் தந்துவிடும். திங்களன்று, கலிஃபோர்னியாவுக்கு வந்த பிறகு, ஐந்து நாட்களின் அலைச்சல், சாப்பாடு காரணமான சங்கடங்கள், உளைச்சல்கள் தந்த அயர்வுகள் அகன்றபிறகு, மனமும், உடலும் ஒரு நிலைக்கு சமன் ஆகியிருக்கிறது. சங்கீதத்தின் சிறப்பு என்னவென்றால், எந்த வித உணர்ச்சிகளின் உச்சமும், வெளி விளிம்புகளும், நொடிகளில் சமனாகி விடுகின்றன. நான், எனது என்கிற எண்ணங்களிலிருந்து விலகி, விஷயம், விஷய-சாரம் என்கிற அளவிலே மனம் திரும்பிவிடுகிறது.

என் பெண், என் பெண் சார்ந்த இசைப் பள்ளி, நானும் ஒர் இசையாசிரியன் என்கிற வட்டங்களிலிருந்து விலகி வந்து பார்க்கும் போது, நிரவல், கல்பனா ஸ்வர போட்டிகளின் நடுவர்களின் எண்ண ஓட்டங்களும், அவர்களுடைய குடைசலான கேள்விகளின் பின்புலமும் ஓரளவுக்கு தெளிவாகின்றன. உண்மையிலேயே, இந்த வருடம் கடுமையான போட்டிதான்! ஸப்-ஜூனியர் தொடங்கி, ஸீனியர் வரைக்கும், எல்லாதரப்பிலும், அபரிமிதமான திறமைசாலிகள், உழைப்பாளிகள். இவர்களில் சல்லடைப் போட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால், அது கட்டாயம் கடினமான காரியம்தான் நடுவர்களுக்கு. நான் ஏற்கனவே சொல்லியிருந்தால் போல, சில நடுவர்களின் துடுக்கான விமரிசனங்களும், கிண்டலான, தன்மானத்தை தூண்டிவிடுகிறார் போல பேச்சும், போட்டியின் அங்கமாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்டத் தாக்குதல்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

தவிரவும், அவர்களும் சாதாரண மனிதர்கள்தான், கடவுளர்கள் அல்லர். எல்லோருக்கும் நடந்தவைகளிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமானால், அவர்களுக்கும் அது முடியும். இளமை இரத்தம், புகழ், தொழில் வெற்றி என்பவை எத்தனையோ பேரை என்னவெல்லாமோ செய்ய வைக்கும்போது, இதெல்லாமும் கடந்து போம்.

நான் நண்பர்கள் இரவி கிரணிடமும், சந்தான கோபாலன், மற்றும் சௌமியாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்கள் எல்லோரும், சொன்னதும் இதுதான். யாரிடம் அதிகம் எதிர்பார்த்தார்களோ, அவர்களையே அதிகம் குடைந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு கச்சேரி வித்வானாக, விதூஷியாக பரிமளிக்க வேண்டுமென்றால், அதற்கு வித்தை தெரிந்தால் மட்டும் போதாது, துரிதமாக, உறுதியாக, புத்திசாலிதானத்தனமாக, பதட்டமில்லாமல் சவால்களை, போட்டிகளினை எதிர்நோக்கும் திறமை வேண்டும். இல்லாவிட்டால் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கச்சேரிப் போட்டியில் வென்ற இளைஞர் வருண் கணேசன் அப்படியொன்றும் குற்றமில்லாத பாடகர் இல்லை. இருந்தாலும், அவருடைய துரிதமான எதிரடிகளும், மிகவும் நம்பிக்கையோடு கூடிய வெளிப்பாடும், உடனுக்குடன் நிலைமைக்கு தன்னை சரி செய்துகொள்ளும் போக்கும், நிச்சயமாக பாராட்டத் தக்கவைதான். கட்டாயம் அந்த பரிசுக்குத் தகுதியானவர்தான். அவருக்கு பெரிய எதிர்காலம் இருப்பதை, அவருடைய கண்களில் இருக்கும் தேடலும், நெருப்பும், அவர்தன்னை மேடையில் நிர்வகித்துக்கொள்ளும் பாங்கும் உறுதிப்படுத்துகின்றன.

கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம்.. ஹூஸ்டனைச் சேர்ந்த திருமதி ராஜராஜேஸ்வரி பட் அவர்களின், பள்ளியின் மிகவும் ஸூஸ்வரமான, ஞான பூர்வமான சிறுவ சிறுமியரின் குழுவிசைதான். சிறந்த பள்ளிகளுக்கான போட்டியில், 13ம் தேதி (திங்களன்று) இந்த பள்ளியும், ஸான்ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியின் ஸாரடோகாவைச் சார்ந்த திருமதி. அனுராதா ஸ்ரீதர் அவர்களின் குழுவும் முதல் கட்டமாகப் பங்கேற்றன. முதலில் பாடிய ராஜராஜேஸ்வரி குழுவினரில் பாடிய அவருடைய புதல்விகள் கீர்த்தனா, க்ருதி பட் இருவரும், நல்ல முதிர்ந்த இசைப் பயிற்சியும் ஞானமும் பெற்ற சிறுமிகள். குறிப்பாக, க்ருதி பட் நல்ல அழுத்தமான சங்கீதமும், ஸ்ருதி சுத்தமும், அபரிமிதமான தன்னம்பிக்கையுடன் பாடுகிறார்.

திருமதி. அனுராதா ஸ்ரீதர் பற்றியோ கேட்கவே வேண்டாம். நிதானமான, ஆழமான, காதுகளை நிறைக்கும் லால்குடி இசைப் பாரம்பரியம். ஒருவர் கூட சோடைபோகாத ஒத்த இசை வெளிப்பாடு. தேர்ந்த விதூஷியான அவர் வயலின், வாய்ப்பாட்டு, விசில் என்று ஒரு அசத்தலான குழுவையே தயார் படுத்தியிருக்கிறார். உமையாள் புரம் சிவராமனின் தயாரிப்பான விக்னேஷ் வெங்கட்ராமனின் ம்ருதங்க வாசிப்போடு, இந்த குழுவின், பைரவி ராக முருகன் மீது அமைந்த லால்குடி ஸ்ரீ கோபாலய்யரின் க்ருதியும், கல்யாணியில் தீக்ஷிதரின் கமலாம்பாவும், லால்குடி ஸ்ரீ ஜெயராமய்யரின் பஹாடி தில்லானா என்று ஒரே ஆற்றொழுக்காக அமைந்த ஸூஸ்வர சௌந்தர்ய லஹரி (இன்னிசை அழகு வெள்ளம்). வாய்பாட்டிலும் அசத்திய ஸ்ருதி/ஜெயஸ்ரீ சாரதி சகோதரிகள், அபூர்வா முரளி, ஹரிணி ஜெகந்நாதன் மற்றும் வயலின் பக்க பலமான பார்த்திவ் மோஹன், விசிலிசை வித்தகன் நரேன், மாயா, நயந்தாரா, அனன்யா என்று மிகவும் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, குழு.

இன்னும் ஒரு பள்ளி இருக்கிறதாம், வரும் வெள்ளிக்கிழமையன்று போட்டியிட. எத்தனையோ திறமைகள் எங்கெல்லாமோ கொட்டிக்கிடக்கின்றன. இசையென்றால் சென்னை என்கிற ஏகபோக உரிமை மெல்ல மெல்ல, ஆனால் நிச்சயமாக இழக்கப்படும். அது நல்ல மாற்றம்தான். இசைக்கு எல்லைகள் கிடையாது, கூடவும் கூடாது…!

1 கருத்து:

  1. Dear Mr. Ashok,

    This article link was sent to me a few days back. I was extremely impressed by your writing; sorry, I am unable to reply back in Tamil.
    I would like to thank you for your very kind words about my son Varun Ganesan who you refer to in this article. I just saw your blog on Tamil Issai; will read and listen to it.

    Thanks,

    Sekar Ganesan (sganesan60@gmail.com)

    பதிலளிநீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...