ஏப்ரல் 12, 2009

க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை..

வட அமெரிக்காவில் வருடந்தோரும் நடைபெறும் இசை மேளா… த்யாகராஜரின் பெயராலே அவருக்குச் சற்றும் சம்மதமிருந்திருக்காத வகையிலே, நடைபெறுகிற விழா என்றுதான் தோன்றுகிறது சில விஷயங்களைப் பார்க்கும் போது! இந்த ஆராதனை, சென்னை சங்கீத ஸீசனுக்குப் பிறகு, ராசி ஜிப்பா குர்த்தாக்களும், போத்தீஸ், ஆரெம்கேவீ பட்டுப்புடவைகளும், புத்தம் புதிய நகை டிசைன்களும் போட்டிப் போட்டுக்கொண்டு உலா வரும் இடம்.

விட்டுவந்துவிட்ட கலாச்சார அடையாளங்களை தங்கள் குழந்தைகளிடம் தேடும் பெற்றோர்கள் ஒன்று சேரும் இடம். வருடா வருடம் போட்டிப் போட்டுக்கொண்டு இங்கேயே பிறந்து, வளர்ந்து, கலாச்சார சூழலோ, மொழி பழகலுக்கு சரியான வாய்ப்புகளோ இல்லாமல், கர்நாடக இசையை தங்கள் வேர்ச் சொத்தென ஸ்வீகரித்து, அதிகபட்ச உழைப்புடனும் ஆர்வத்துடனும் இசை பயின்று வரும் சிறுவ, சிறுமியரும், இளைஞ, இளைஞிகளும், அவர்களின் அதிகரித்து வரும் ஆரோக்கிய போட்டி மனப்பாங்கும் அதிசயிக்கத் தக்கவை!

இங்கேயே திரிசங்கு நரகத்தில் (சிலருக்கு சொர்க்கமாகவும் இருக்கலாம்) உழலவேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய சங்கீத ஆசிரியர்களுக்கு, இது ஒரு வடிகாலாக இருப்பது மட்டுமல்லாமல், தங்களுக்கு தாய் தேசத்தில் கிடைத்திருக்கக் கூடிய, வேண்டிய அங்கீகாரமும், கவன ஈர்ப்பும் இதன் மூலம் ஓரளவுக்குக் கிடைப்பது உண்மைதான்.

ஆனால், இந்த போட்டிகள் ஆரோக்கிய சூழ்நிலைக்கு இங்கே வளரும் குழந்தைகளை இட்டுச்செல்கின்றனவா அல்லது, புண்பட்ட சீழ்நிலைக்கு தள்ளுகின்றனவா என்பது, கோடி ரூபாய் கேள்வி..

போட்டியை கணிக்கவரும் சில இசைத் தாரகர்களும், தாரகைகளும், ஏதோ தாங்கள் வளரும் போதே அபரிமிதமான அறிவோடு வளர்ந்தார்ப் போல நடந்து கொள்ளுவதும், அமெரிக்க ஐடல் போட்டி நடுவர்களைப் போல, அவமதிப்பாகப் பேசுவதும், நடத்துவதும், கொஞ்ச நஞ்ச ஆர்வத்தினை இங்கே வளரும் வருங்கால இசை கலைஞர்களிடையே குலைப்பதாகத்தான் இருக்கிறது.

இதைத்தான் சொன்னேன், இதெல்லாம் தியாகராஜருக்கே சம்மதமாயிருந்திருக்குமா என்று.

வித்தைக்கழகு விநயம். இந்த விநயத்தை பயிற்றுவிக்க வேண்டிய மூத்த கலைஞர்களே, விநயம் வீசை என்ன விலை என்று கேட்கும் நிலையில் இருந்தால்… அவர்களுக்கெல்லாம் ஓரே வேண்டுகோள்.. தயவுசெய்து தியாகராஜ ஸ்வாமிகளின் சரிதத்தினை தினமும் பாடம் செய்யுங்கள்…

நமது இசைக்கலை தெய்வீகக் கலை, பரம்பொருளோடு ஐக்கியமாக ஒரு எளிய சாதனம், என்பதிலிருந்து வெகு தூரம் விலகி வந்து, வெறும் போட்டி படோடாபமான கச்சேரிகள், என்றெல்லாம் ஆகிவிட்டிருப்பது, அந்த சில இந்திய கர்நாடக இசை வாணர்களின் குறைவான புரிதலையே காட்டுகிறது.. போட்டிகள் தேவைதான், கலையை வளர்ப்பதற்காக.. கலைவாண, வாணிகளின் தேடலை அதிகரிப்பதற்காக, ஊக்குவிப்பதற்காக!

திரு.க்ளீவ்லேண்ட் சுந்தரமும், அவருடைய சகாக்களும் இதைத் தொடங்கிய காரணமும், 32 வருடங்களாக நடத்திவருகிற உறுதியும், மிகவும் சிறந்தவைதான், பாராட்டத்தக்கவைதான். ஆனால், அவர்களுக்கே கூடத்தெரியாமலோ என்னவோ, இந்த விழா வேறு நிலைக்கு கடத்திச் செல்லப்படுகிறது, மிகவும் மெதுவாக, ஆனால் உறுதியாக…

க்ளீவ்லேண்ட் வட அமெரிக்காவின் திருவையாறாகி விட்டிருப்பது உண்மைதான். இந்த பாரம்பரியமும் போற்றிப் பாதுக்காக்கப் படவேண்டியதுதான். ஆனால் இந்த விழா நேரம் தவறாமை, மீறாமை, போட்டிகளின் விதிமுறைகள் என்பதில் மிகவும் கடுமையான ஒழுங்கினைக் கடைபிடிக்கவேண்டும். இதைச் சொல்வதன் காராணம், இப்போது அப்படி இல்லை என்பதால்தான்!

போட்டியாளருக்கென்று விதிமுறைகள் இருப்பது போல, நடுவர்களுக்கும் சரியான வழிகாட்டுதல் இருக்கவேண்டும். உதாரணமாக, சில நடுவர்கள் அனுமதிக்கப் பட்ட நேரத்துக்கு மேலாக சிலரை பாட அனுமதிப்பது, கேள்விகள் கேட்பது, போட்டியாளர்களை கிண்டலாகப் பேசுவது போன்றவற்றைக் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.

சென்னை அகேடமியின் நேர ஒழுங்கினை இங்கும் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும், கச்சேரிகள் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிக்கப்படவேண்டும். இந்தமுறை போட்டிமுடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்குவது தள்ளிப்போனது, திருமதி சுதா ரகுநாதனின் கச்சேரி குறித்த நேரத்துக்கு ஆரம்பித்து முடிக்காததினால்..மிகவும் நன்றாகத்தான் பாடினார். நேரத்தைப்பற்றிய நினைவு அவருக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஆர்கனைசர்களுக்கு?

நேர ஒழுங்கு கடைபிடிக்கமுடியுமானால், பல போட்டிகளில் பங்கெடுக்கும் பலர், அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்காமல் குறித்த நேரத்திற்கு சற்று முன்பாக குறித்த இடத்தில் இருக்கலாம்.. இதெல்லாம் வெகு இலகுவாக செய்யக்கூடியவைதான்..

இந்தியாவில் மட்டுமே இருந்தால் வணிக வெற்றி இருக்காது என்பதால்தானே இசைக்கலைஞர்கள் வெளிநாடுகளுக்கு வருடம் தவறாமல் வருகிறார்கள், வர ஆசைப்படுகிறார்கள். இவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இசை ஆர்வலர்களை, பிரியர்களை, ரசிகர்களை, கற்பவர்களை, கற்பிப்பவர்களை, ஏதோ இரண்டாம்தர இசைகுடிகள் போல நடத்துவது, நடந்துகொள்வது, வருத்தம் தரக்கூடிய விஷயம்தான். டாலரோ, டாயிட்ச் மார்கோ, யூரோவோ, பவுண்டோ இவைகள் முக்கியமாக இருக்கும் போது, இவற்றை செலவழிக்ககூடிய புலம் பெயர்ந்த குடிகளும் முக்கியமானவர்கள்.

சென்னை ஆர்.ஆர் சபா, சாஸ்த்ரி ஹால், அகேடமி, நாரதகான சபா, க்ருஷ்ணகான சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாக்கள் இவற்றுக்கு வரும் ரசிகர்கள் எப்படியோ, அதே போல்தான் க்ளீவ்லேண்டுக்கு, அமெரிக்கா முழுவதிலுமிருந்து வரும் ரசிகர்களும். அவர்களை மதிக்க அந்த சில இசைக் கலைஞர்கள் கற்றுக்கொள்வார்களா? காலம்தான் பதில் சொல்லும்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...