ஆகஸ்ட் 27, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 78

प्रेमाम्बुराशिसततस्नपितानि चित्रं
कामाक्षि तावककटाक्षनिरीक्षणानि ।
सन्धुक्षयन्ति मुहुरिन्धनराशिरीत्या
मारद्रुहो मनसि मन्मथचित्रभानुम् ॥78॥

ப்ரேமாம்புராஶி ஸததஸ்னபிதானி சித்ரம்
காமாக்ஷி தாவக கடாக்ஷ நிரீக்ஷணானி |
ஸன்துக்ஷயன்தி முஹுரிந்தன ராஶி ரீத்யா
மாரத்ருஹோ மனஸி மன்மத சித்ரபானும் ||78||

காமாக்ஷீ! உனது கடைக்கண் பார்வைகள் அன்பு கடலினில் எப்போதும் நீராட்டப்பட்டிருந்தும், விறகுக் குவியலைப்போல் காமவைரியின் நெஞ்சில் காம நெருப்பை அடிக்கடி தூண்டுகின்றன; இது விந்தையல்லவா!

கடைக்கண்ணின் பார்வைகள், காமாட்சீ, அன்பாம் கடலதனில்
இடையில்நீ ராட்டில் இருந்தும், விறகின் இராசிகள்போல்,
படைமல ரோன்றன் பகைவர்க்கு காமத்தீ பற்றுதற்கு
இடையின்றி தூண்டுமாம்! ஈதே யொருவிந்தை என்பதுவே!


இராசி-குவியல்; படைமலரோன்-மலர்படையோன் மன்மதன்;

ஆகஸ்ட் 26, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 77

संसारघर्मपरितापजुषां नराणां
कामाक्षि शीतळतराणि तवेक्षितानि ।
चन्द्रातपन्ति घनचन्दनकर्दमन्ति
मुक्तागुणन्ति हिमवारिनिषेचनन्ति ॥77॥

ஸம்ஸார கர்ம பரிதாபஜுஷாம் நராணாம்
காமாக்ஷி ஶீதளதராணி தவேக்ஷிதானி |
சந்த்ராத பந்தி கனசந்தன கர்தமந்தி
முக்தாகுணந்தி ஹிமவாரி நிஷேசனந்தி ||77||

காமாக்ஷீ! பிறப்பிறப்பென்னும் கோடை வெப்பத்தின் தாபத்தால் தவிக்கின்ற மாந்தருக்கு, உன் குளிர்ச்சி தரும் கடைக்கண் பார்வைகள் நிலவாகின்றன; கெட்டியான சந்தனக் குழம்பும் ஆகின்றன; முத்து மாலையாகின்றன; பனிநீர்த் தெளிப்பாகின்றன.

பிறப்பிறப் பாய பெருங்கோடை வெப்பினில் பேதுறுமாம்
திறமிலா மாந்தர்க்குன் சீதக் கடைக்கண்கள் திங்களதும்,
பொறைசந்த னக்குழம் பும்முத்து மாலையும், பூத்தசிறு
நறுபனித் தூவலும், ஞாலத்தில், காமாட்சீ, நாடுவதே!


வெப்பு-தாபம்; பேதுறுதல்- தவித்தல்; - திறமிலா-வலிமையிலா; திங்கள்-நிலா; பொறை-கனம்;

ஆகஸ்ட் 25, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 76

आकाङ्क्ष्यमाण फलदान विचक्षणायाः
कामाक्षि तावक कटाक्षक कामधेनोः ।
सम्पर्क एव कथमम्ब विमुक्तपाश-
बन्धाः स्फुटं तनुभृतः पशुतां त्यजन्ति ॥76॥

ஆகாங்க்ஷ்யமாண பலதான விசக்ஷணாயா:
காமாக்ஷி தாவக கடாக்ஷக காமதேனோ: |
ஸம்பர்க ஏவ கதமம்ப விமுக்தபாஶ-
பந்தா: ஸ்புடம் தனுப்ருத: பஶுதாம் த்யஜந்தி ||76||

தாயே காமாக்ஷி! விரும்பிய பலனைத் தருவதில் தேர்ந்த உனது கடைக்கண்ணாம் காமதேனுவின் தொடர்பினாலேயே மாந்தர்கள் பற்றுகளின் கட்டுகளிலிருந்து விடுபட்டு, பசுத்தன்மையை தெளிவாக விட்டுவிடுகிறார்களே. சைவ சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் என்ற மூன்றும், கடவுள், உயிர், தளை என்ற மூன்றைக் குறிப்பன. விருப்பங்களும் தளைகள்தாமே. விரும்பியவற்றை நிறைவேற்றும் ஒன்றே, விருப்பங்களை உடைத்து, தன்னோடு பசுவாகிய உயிர் ஐக்கியமாகச் செய்யும், அதாவது பசுவின் பற்றே பசுவை பற்றிலிருந்து (பாசம்) விடுவிக்கிற விந்தையைக் கூறுகிறார் மூககவி.

விரும்பும் பலனை விரைந்தே தருமுன் விழிக்கடையாம்
கருணைச் சுரபிக் கருவியால் காமாட்சீ, கட்டுகளைத்
தருவதாம் பற்றின் தளைநீங்கி மாந்தர்கள் தாம்பசுவாம்
ஒருநிலை நீங்கி ஒளிபெற லும்தாயே உன்னருளே!


சுரபி-தேவப்பசு,காம்தேனு; கருவி-தொடர்பு;

ஆகஸ்ட் 24, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 75

नीलाळका मधुकरन्ति मनोज्ञ नासा-
मुक्तारुचः प्रकटरूढ​ बिसाङ्कुरन्ति ।
कारुण्यमम्ब मकरन्दति कामकोटि
मन्ये ततः कमलमेव विलोचनं ते ॥75॥

நீலாளகா மதுகரந்தி மனோஜ்ஞ நாஸா-
முக்தாருச: ப்ரகடரூட பிஸாங்குரந்தி |
காருண்யமம்ப மகரந்ததி காமகோடி
மன்யே தத: கமலமேவ விலோசனம் தே ||75||

அன்னையே காமகோடி! உன் கருங்கூந்தலானது வண்டுகள் போலவும், அழகான மூக்கில் அணிந்துள்ள மூக்குத்திகள், நீரிலிருந்து வெளிவந்த தாமரைத் தண்டின் முளைகள் போன்றும், உந்தன் கருணையோ தேன்போன்றும் இருக்கின்றன. இவற்றால் உன்னுடைய கடைக்கண்ணாயது, தாமரைப்பூ போன்றே தோன்றுகிறது.

வண்டுகள் போலாம்நின் வார்கருங் கூந்தல்; வனசமலர்த்
தண்டின் முளைபோலாம் தாய்காம கோடீ, தளிமமின்னும்
ஒண்நாசிப் பூணும்; உயர்தேனைப் போன்றதாம் உன்கருணை;
கண்கள் இவற்றால் கமலம்போல் தானே கருத்தினிலே!


வார்-நெடிய; வனசமலர்-தாமரை; தளிமம்-அழகு; நாசிப்பூண்-மூக்குத்தி; கமலம்-தாமரை;

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...