மார்ச் 01, 2016

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 3


ஆனைத்தாண்டவபுரம் கோபாலகிருஷ்ண பாரதியார்

சிறு அறிமுகம்:

தமிழோடு இயைந்து இறைவனை இசையையால் பாடிய இசைப் பாடலாசிரியர்கள் வரிசையில், இந்த மாதம் நாம் காணப்போவது ஆனைதாண்டவபுரம் கோபால க்ருஷ்ண பாரதியாரைப் பற்றி!
எல்லோரும் அறிந்த, அல்லது இணைய தளங்களின் மூலம் அறிந்துக்கொள்ளக்கூடிய தகவல்களேயாயினும், அவருடைய இசைப் படைப்புகளை விரிவாகக் காணுமுன், நம் கோபாலக்ருஷ்ண பாரதியாரைப்பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்.
சங்கீத மும்மூர்த்திகளாகிய தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், மற்று சியாமா ஸாஸ்த்ரிகளின் சமகாலத்தவரான இவர்,  நாகப்பட்டினத்தை அடுத்த நரிமணம் என்னும் ஊரில், இசைபாரம்பரியம் மிக்க குடும்பத்தில், ராமசாமி பாரதி என்னும் அந்தணருக்கு மகனாகப் பிறந்தார்.
முடிகொண்டான், மற்றும் ஆனைதாண்டவபுரம் ஊர்களில் வசித்தாலும், நரிமணத்தையே நிரந்த இருப்பிடமாக ஆக்கிக்கொண்டார். கனம் க்ருஷ்ணையர், அனந்தபாரதி, சிதம்பரம் சிவசங்கர தீக்ஷிதர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்றோரிடம் கர்நாடக இசை நுணுக்கங்களைக் கற்ற பாரதி, தஞ்சைய ஆண்ட மராத்திய மன்னரான அமரசிம்மரின் அரசவையில் இருந்த இந்துஸ்தானி செவ்விசை வல்லுநரான இராமதாஸ் என்பவரிடம் அவ்விசையின் நுணுக்கங்களையும் கற்றறிந்தார்.
தியாகராஜரும், கோபாலக்ருஷ்ணரும் ஒருவருக்கொருவர் இசையில் மதிப்பு கொண்டிருந்தனர்.  “சபாபதிக்கு வேறு தெய்வம்” என்ற பாடலை எழுதி தியாகராஜ ஸ்வாமிகளின் முன்பாகப் பாடிக்காட்ட அவரும் இவருடைய இசைப்புலமையை மெச்சிப் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

நந்தனார் சரிதம்:
கோபாலக்ருஷ்ண பாரதியாரின் பல பாடல்களில் ஒரு சிலவேனும் கச்சேரி மேடைகளில் இன்னும் சில தமிழார்வமுள்ள இசைக்கலைஞர்களால் பாடப்பட்டும், இசைக்கப்பட்டும் வந்தாலும், பொதுவாகவே தமிழ் கீர்த்தனகளுக்கே உரித்தான சாபக்கேடாம் “துக்கடா” என்று இடையூடும் சிறு கீர்த்தனை வெளிப்பாடாகவே பெரும்பாலும் இருந்து வருகின்றன.  நந்தனார் சரித்திரத்தை, இசைப் பேருரையாகவும், ஹரிகதை வடிவத்திலும் மறைந்த எம்பார் விஜயராகவாச்சாரியாரும், டி.எஸ்.பாலக்ருஷ்ண சாஸ்திரிகளும் மிகவும் விரிவாகச் செய்வார்கள்; தவிரவும் மறைந்த நந்தனார் சரித்திரத்தை ஹரிகதையாகச் செய்திருக்கிறார்; அண்மைக் காலங்களில், விசாக ஹரி அவர்களும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நந்தனார் சரித்திரத்துக்கு, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் சிறப்புப் பாயிரப்பாடல் பெறுவதற்கு இவர் பட்ட பாடே ஒரு சுவையான கதை! கோபாலகிருஷ்ண பாரதியாரே ஒரு அந்தணராக இருந்தாலும், அவருடைய காலத்தில் வாழ்ந்த அந்தணர்களின் ஆதிக்க மனப்பான்மையை வெறுத்ததால், நந்தனார் கதையின் மூலத்தில் இல்லாத அந்தணப் பண்ணையாரைக் கற்பனை செய்து அவருடை அடிமையாக நந்தனாரைச் சித்தரித்து, அவ்வந்தணப் பண்ணையார் இவரைக் கோவிலுக்குப் போவதைத் தடுத்ததாகவும், பிறகு சிவபெருமானின் லீலையினால், மனம் மாறியாதாகவும் கதையைப் புனைந்துவிட்டார்.  
தன்னுடைய சொந்த கற்பனையிலே சமூக சீர்திருத்த கருத்தாக இவர் சொல்லப்போக, சிவநெறியிலும் தமிழ்ப்புலமையிலும், சிறந்திருந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளை, இது உண்மைக்குப் புறம்பான கற்பனை என்பதால், தாம் சிறப்புப் பாயிரம் எழுதுவதை விரும்பவில்லை. கோபாலகிருஷ்ண பாரதியாரைப் பார்க்காமலும் தவிர்த்து வந்தார். பிறகு எவ்வாறு, எந்த சூழ்நிலையில் அதை எழுதிக்கொடுத்தார் என்பதை, தமிழ்த்தாத்தா உ.வே.சா தன்னுடைய சுயசரிதத்திலே விவரித்துள்ளார்.

சிவபக்தி கீர்த்தனைகள்:
தில்லை நடராசர்பால் ஈர்க்கப்பட்ட முத்துத்தாண்டவர் போலவே, நம் பாரதியும் சிவபெருமானைப் பலவாறாகப் போற்றி கீர்த்தனைகளை செய்துள்ளார். அவற்றுள் நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் மிகவும் பரவலாக அறியப்பட்டவை, பாடப்பட்டவை. 1942-ல் முருகதாசா என்று அழைக்கப்பட்ட முத்துசுவாமி ஐயரின் இயக்கத்தில் வெளிவந்த நந்தனார் படப் பாடல்கள் இசைவாணரான, எம்.எம்.தண்டபாணி தேசிகரின் உருக்கமான குரலில் பட்டிதொட்டிகளில் எல்லாம் முழங்கியதோடு, இன்றும் இளமையோடு ஒலித்துக் கொண்டிருக்கின்றன.  இதற்கும் முன்பாக  அமெரிக்கரான எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் கே.பி.சுந்தராம்பாள் நந்தனாராகவும், மாபெரும் இசைக்
கலைஞரான மஹாராஜபுரம் விசுவநாத ஐயர் அவர்கள் வேதியராகவும் நடித்து வெளிவந்த படத்தின் படமொன்றும் உண்டு.

பிற கீர்த்தனைகளைப் பார்ப்பதற்கு முன்பு நந்தனார் படத்தில் வந்த சில கீர்த்தனைகளைப் பார்ப்போமா?

“ஐயே மெத்தக்கடினம்” என்ற பாடல் இராகமாலிகையாக புன்னாகவராளி, நாதநாமக்ரியா, ஜென்ஜோட்டியிலும் இன்றும் பசுமையாக இசைவிரும்பிகளின் காதில் ஒலித்துக்கொண்டிருப்பது உண்மை. அதிலும், நாத நாமக்ரியாவில் வரும், மானாபி மானம் விட்டுத் தானாகி நின்றவர்க்குச் சேனாதிபதி போலே ஞானாதி பதியுண்டு பாருமே கட்டிக் காருமே உள்ளே சேருமே அது போருமே அங்கே” என்ற வரிகளின் உருக்கமும், அவை தரும் நெகிழ்ச்சியும் சொல்லித் தெரிவதல்ல, உணர்ந்தே புரிபவை.

அதேபோன்று, மாயாமாளவகெளை இராகத்தில் அமைந்த “சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்” என்ற பாடலின், உயர்வான இசையும், கருத்தும் நந்தனார் தம் புலைச்சேரி மக்களை தம்மோடு திருப்புன்கூருக்கு அழைப்பதை கண்முன்னே நிறுத்துபவை. இப்பாடலுக்கு முதலில் இருந்த இராகம் செஞ்சுருட்டியாகும். இசைமேதை பாபநாசம் சிவன் அவர்களே அதை மாயாமாளவ கௌளையில் மெட்டமைத்து, தண்டபாணி தேசிகருக்குச் சொல்லிக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மெட்டும், பாட்டும் நந்தனின் உள்ளக்கிடக்கையை தெள்ளத்தெளிவாகப் படம்பிடித்து காட்டுகின்றன.  அற்பச் சுகத்தை நினைந்து, அரன் திருவடிகளை மறந்து, ஆசைக் கடலில் வீழ்ந்து, அறிவுக்கறிவை இழந்து, பாசத்தளைகள் நீக்கும் வழிதெரியாமல் பரிதவிக்கும் பாவிகளானதைக் கூறி, கற்பிக்கப்பட உருவமான இந்த மாய உலகை, கானல் நீராய் எண்ணி ஏமாறாமல் சிவலோக நாதனைக் கண்டு சேவித்திட, தம் புலைச்சேரிவாசிகளை அழைப்பதின் உருக்கத்தில் நெகிழ்வதை தேசிகரின் குரலில் கேட்கவேண்டும்.
சங்கராபரணத்தில் அமைந்த, “பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குதாம்”, பிலஹரி இராகத்தில் அமைந்த, “எல்லோரும் வாருங்கள்” (மூலம்: பெஹாக்), தோடியில் அமைந்த “வழிமறைத்திருக்குதே (மூலம்: நாட்டைக்குறிஞ்சி) என்று ஒவ்வொரு பாடலுமே இசைக்கடலில் முத்துக்குளித்த மகிழ்வைத் தருவன. வழிமறைத்திருக்குதே என்ற பாடல் கச்சேரி மேடைகளில் கோபாலக்ருஷ்ண பாரதியார் பாடிய நாட்டைக்குறிஞ்சி இராகத்திலேயே பாடப்படுகிறது

தில்லை பஞ்சரத்தினம்:
தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப்போலவே, அதே ஐந்து இராகங்களிலும் நம் பாரதியாரும் செய்துள்ளார். இவை தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் போல் பல சரணங்களயும், சுரமும், சாகித்தியமும் என்று பாடப்படும் அமைப்பையும் கொண்டவையல்ல. எளிய பல்லவி, அனுபல்லவி, சரணம் மட்டுமே கொண்டவை. அவை:  “அரஹரசிவசங்கர” (நாட்டை),  “சரணாகதியென்று” (கௌளை), “பிறவா வரம்தாரும்” (ஆரபி), “ஆடிய பாதமே (வராளி), “மறவாமல் எப்படியும்” (ஸ்ரீராகம்)

கச்சேரி மேடைகளில் வலம் வரும் கீர்த்தனைகள்:
 மறைந்த இசைக்கலஞர் கே.வி.நாராயணசுவாமி அவர்களும், இவ்வருடத்திய சங்கீத கலாநிதி சஞ்சை சுப்பிரமணியமும் பாடிய அளவுக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் ,பல கீர்த்தனைகளை எடுத்து கையாண்டவர்களில்லை.விதூஷிகள் சுகுணா வரதாச்சாரி, மற்றும் சௌம்யா போன்றோரும், கோபாலக்ருஷ்ணபாரதியாரின் இசை உருப்படிகளைப் தவறாமல் தங்கள் கச்சேரிகளில் பாடுபவர்கள்தாம்.

மறைந்த மதுரை மணி ஐயரின் கம்பீரமான குரலில் துள்ளி வரும் ஜோன்புரி ராகத்தில் அமைந்த “எப்போ வருவாரோ” என்ற பாடலைக் கேட்காத கர்நாடக இரசிகர்கள் உண்டா? பெஹாக் இராகத்தில் அமைந்த “ஆடும் சிதம்பரமோ ஐயன் கூத்தாடுஞ் சிதம்பரமோ” , “இரக்கம் வராமல் போனதென்ன காரணம்”,  செஞ்சுருட்டி இராகத்தில் அமைந்த “சிதம்பரம் போகாமல்”, சாமா இராகத்தில் அமைந்த “வருவாரோ வரம் தருவாரோ”, போன்ற பாடல்கள் என்பது நடன மேடைகளிலும், கச்சேரி மேடைகளில் “மற்றும் பிறபாடல்கள்” வகையிலும் பாடப்படுவதை எல்லோரும் அறிவோம். “நடனம் ஆடினார்” என்னும் வசந்தா இராக கீர்த்தனை வெகு காலமாகவே நடன மேடைகளை கம்பீரமாக அலங்கரிக்கும் உருப்படி. அரிதாக வெகு சிலரே பாடியுள்ள  கீர்த்தனைகளுளும் சில: ஹம்ஸத்வனியில், பாதமே துணை ஐயனே”,  சக்கரவாகத்தில் “அறிவுடையோர் பணிந்தேத்தும் “, அசாவேரியில், “ஆடிய பாதாத்தை தரும் “.

கச்சேரிகளில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பெருமையையும் சில கீர்த்தனைகள் பெற்றுள்ளன.  விரிவாகப் பாடப்படும் கீர்த்தனைகளின் நடுவில் நிரப்பிகளாக,   அடாணாவில் “கனக சபாபதிக்கு”, ஹமீர் கல்யாணியில் “ஏதோ தெரியாமல் போச்சுதே”, தேவகாந்தாரியில் “எந்நேரமும் உந்தன் சந்நிதியிலே”,  மாஞ்சியில் “வருகலாமோ” போன்ற கீர்த்தனைகள் பொதுவாகப் பாடப்படுகின்றன..

பெரிய கீர்த்தனைகளாகும் தகுதியை மனமுவந்து, ஆபோகியில் அமைந்த “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா”,  காம்போஜியில் அமைந்த, “திருவடி சரணம்”,  பூர்விகல்யாணியில் அமைந்த “காரணம் கேட்டுவாடி” போன்ற பாடல்கள் பாடப்படுகின்றன. மறைந்த இசைவாணி எம்.எல்.வியின் தேன்குரலிசையில் இசைத்தட்டாக வந்த “காரணம் கேட்டுவாடி” யூ-ட்யூப் காணொளி இணையதளத்தில் ஒரு எளிய சொடுக்கில் கேட்கக்கூடியது. மேலும் அவ்வப்போது சில இசைக்கலைஞர்கள், மிகவும் அரிதாக,  ரீதிகௌளையில் அமைந்த “தாண்டவ தரிசனம்”,  கல்யாணியில் அமைந்த “கண்டேன் கலிதீர்ந்தேன்”, முகாரியில் “தந்தை தாய் இருந்தால்” போன்ற அரிய பாடல்களையும் பாடுகிறார்கள்.

பிறவகைப் பாடல்கள்:
பெரும்பாலும் எல்லாமே, சிவபக்தியைப் போற்றும் கீர்த்தனங்களாகச் செய்திருந்தாலும், திருமணங்களில் பாடப்பெறும் நலுங்கு மற்றும் ஊஞ்சல் பாடல்கள், லாலி, கும்மி, கோலாட்டாம் இவற்றுக்கும் இவர் பாடல்களை இயற்றியுள்ளார். நாயன்மார்கள் சரித்திரங்களில், நந்தனாரை மட்டுமல்லாது, இயற்பகை நாயனார், காரைக்காலம்மையார், மற்றும் திருநீலகண்ட நாயனார் இவர்களது சரித்திரங்களியும் இவர் பாடியுள்ளார். இவருடைய கீர்த்தனங்களால் ஈர்க்கப்பட்ட ஆங்கிலேய துரை ஒருவரின் உதவியால், “முடிகொண்டான் பாரதி கோபாலகிருஷ்ணையர் இயற்றியது” என்ற பதிவோடு, புத்தகமாக, இவர் வாழ்நாளிலேயே பதிப்பிக்கப்பட்டன.
கீர்த்தனைகளின் அழகு:

கோபாலகிருஷ்ண பாரதியார் திருமணம் செய்துகொள்ளாமல் தமிழிசைத் தொண்டிலும், சிவபக்தி நெறியிலுமே தன்னை நிலை நிறுத்தியதால், உண்முகம் நோக்கும் பண்பு இயல்பாகவே அவருக்குக் கைவந்தது. அவை அவருடை பாடல்களில் மிகவும் அழகாக வெளிப்பட்டன. “தாண்டவ தரிசனம்”, என்னும் ரீதிகௌளைப் பாடலின் சரணத்தில்,

“ஆசை வலைக்குள் தங்கிப் பொங்கி மயங்கித் தடுமாறி மும்மலங்கள் மீறி யான் எனதென்றுரைக்கும் பாசமகல நெறி நிறுத்திட மாயவன் கோபாலகிருஷ்ணன் பணிந்திடும் உந்திருவடி” என்று பதி, பசு, பாசம் அல்லது ஆணவம், கன்மம், மாயம் என்னும் மூன்று மலங்களும் அகல தாம் பணிந்து சரண் புகுவது, சிவனின் திருவடிகள் என்கிறார்.

கல்யாணி இராகக் கீர்த்தனையான, “கண்டேன் கலிதீர்ந்தேன்”, என்ற பாடலில், தாம் அவ்வாறு சிவன் திருவடியைப் பற்றியதால் பெற்றவற்றைச் சொல்லுகிறார்.

அனுபல்லவி: நின்றேன் சந்நிதியருகில் நிர்மலாமிருதம் கொண்டேன்
                   வென்றேன் பொறிபுலன்களை விண்ணவர் போற்றும் பிரானைக்
சரணம்
:         அனாதி கற்பிதமாகிய மாயைகள் யாவையும் வென்றேன்
                   அதிச யானந்தம் கொண்டேன் ஆணவமலம் விண்டேன்
                   மனாதிகளுக் கெட்டாமல் மகிமை பொருந்திய தில்லையில்
                         மாயன் கோ பாலகிருஷ்ணன் தொழும் மாதேவன் திருமேனியைக்

இப்பாடலில், குறையில்லா அமிருதம் கொண்டதையும், பொறிகளையும், புலன்களையும,  புலன்களால் கற்பிக்கப்பட்ட மாயைகளை வென்றதையும், அதிசயிக்கதக்க ஆனந்த நிலை அடைந்ததையும், ஆணவம் ஒடுங்கியதையும், சிவபெருமானின் காட்சியைக்  கண்டதால், தாம் பெற்றதாக அறிவிக்கிறார்.

தியாகராஜரின் கெளை இராக பஞ்சரத்தின கிருதியைப் போன்ற அமைப்பிலேயே, ஆனால் முழுவதும் மத்தியமகாலமாகவேப் பாடப்படும், “சரணாகதமென்று நம்பி வந்தேன்” என்ற பாடல் ஒரு வித்தியாசமான இசை வார்ப்பு.சில பாடல்களின் எடுத்த பிறவியை நொந்தும் பாடியிருக்கிறார்; பின்பு பிறவித்துன்பம் தீர இறைவனடி புகலே வழியென்றும் பாடியிருக்கிறார்.

பந்துவராளி இராகப் பாடலான, “எதுக்கு இந்த சடலம் எடுத்தது அறிகிலேன் எனக்கும் சொல்லுமய்யா பொன்னைய்யா?” என்பது முதல் வகை.  “எப்போ தொலையும் இந்த துன்பம் சகதீசன் கருணை இருந்தாலல்லோ இன்பம்” -  என்னும் கௌரீமனோகரி இராகப் பாடலில்,  என்று “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்” என்று குறளின் கருத்தைப் பாடலாகப் பாடியுள்ளார்.

இறைவன் வாய்மொழியாகவே ஒரு பாடல்: தன்னுடைய பக்தன் நந்தன் தன்னை பார்ப்பதற்கு ஏற்ப, சற்றே விலகச் சொல்லி, நந்தியை விளித்து இறைவன் கூறுவதாக அமைக்கப்பட்ட, பூர்விகல்யாணி இராகப் பாடலின் ( “சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதானம் மறைக்குதாம்” )சரண வரிகள் வழியாக இறைவனின் பார்வையில், சாதியும், உயர்வும் தாழ்வும் இல்லை என்பதையும், நந்தனைப்போல் உயர்ந்த புண்ணிய புருடன் யாருமில்லையென்றும் அழகாகச் சொல்லியிருப்பார் நம் கோபாலகிருஷ்ண பாரதி.

இறைவனை அந்தமும், ஆதியும் இல்லாதவன் என்பதைக் குறிக்க, ‘அநாதி’ என்று சொல்வதுண்டு.  அதை வைத்து, முகாரி இராகத்தில், “தந்தை தாய் இருந்தால் இவ்வுலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐய்யா” என்று பாடி, அவன் அநாதியானதால், அவனுற்ற துன்பங்களைப் பட்டியலிடுகிறார்.  “அந்தமில் நடனம் செய்யும் அம்பல வாணனே அருமையாகவே பெற்று ஒருமையுடன் வளர்க்க தந்தை தாய் இருந்தால் இவ்வுலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா” என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் பாடலில், கல்லில் அடிபட்டதையும், கண்ணப்பன் கால் செருப்பால் கண்ணை மறைத்ததையும், அர்ச்சுனன் வில்லால் அடித்ததையும், சுந்தரர் பித்தன் என்றதையும், பிறம்பால் அடிபட்டதையும் அழகாக, வேடிக்கையாகச் சொல்லியிருப்பார்.

மற்றொரு சுவையான பாடல். தில்லையில் நடராஜரும், கோவிந்தராஜரும் ஒரே கோவிலில் எதிர் எதிர் சந்நிதிகளில் இருப்பார்கள். இவ்விருவரையும் ஒரே கீர்த்தனையில் இணைத்த பெருமை கோபாலகிருஷ்ண பாரதியாருக்கு மட்டும்தான். இதைப் பொதுவாக சஹானா இராகத்தில் பலரும் பாடினாலும், மதுரை டி.என்.சேஷகோபாலன் அவர்கள் சுருட்டியில் பாடியுள்ள விதம் அலாதியானது. பாடலின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவது.  மிகவும் அரிதான ஒன்றாகையால் அப்பாடல் முழுவதுமாக இங்கே தரப்படுகிறது. இணையத்தில் தேடினால் கிடைக்கும்!

ப:      தில்லை அம்பலத்தானை கோவிந்தராஜனை தரிசித்துக் கொண்டேனே
அப:   தொல்லுலகும் படியளந்து மனதிற்கேற்ப தொண்டர் 
         கலிதீர்க்க கருணை பொழியுமெங்கள்
ச1:    தும்பைப்பூ மாலைகள் தொடுத்து கொடுப்பதிங்கே
         துளசி கொழுந்தெடுத்து தொட்டு கொடுப்பதங்கே
         அம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே
         அஷ்டாக்ஷரம் என்று அன்பு செய்வதுமங்கே
ச2:    பரமசிவனே என்று பாடிக்கொள்வதிங்கே
         பாலக்ருஷ்ணா என்று பணிந்துகொள்வதுமங்கே -(கோ)
         அருமறைக்கு பொருளுக்கு எட்டாவடிவம் இங்கே
         ஆநந்தமூர்த்தி என்று ஆதரிப்பதும் அங்கே

கோபாலகிருஷ்ண பாரதியாருக்கு நேரடி மாணாக்கர்கள் என்று பலர் இல்லையென்றே தோன்றுகிறது. ஆயினும் தமிழ்தாத்தாவாம் உ.வே.சா, இவரிடம் சிறிதளவுக்கு இசை பயின்றதாகக் தம் சுயசரிதையில் கூறியுள்ளார். மற்ற இசைப் பாடலாசிரியர்களைப்போல், இவருடைய பாடல்களுக்கு சுர-தாள குறிப்புகளோடு கூடிய புத்தகங்களை பெரும்பாலும் யாரும் பதிப்பிக்கவில்லை. ஆயினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, சில இசைவாணர்கள் தாமாகவே செவிவழிக் கற்றலின் நினைவிலிருந்து, செய்திருக்கிறார்கள். இது அவசியம் நிறைவேற வேண்டிய பணி. தேர்ந்த இசைக் கலைஞர்கள் இம்முயற்சிக்கு மனம் வைத்தால், அது வருங்கால இசை மாணவர்களுக்கும், கலைஞர்களும் உறுதுணையாக இருக்கும். கச்சேரிகளில் நம் தமிழ்மக்கள் இவ்வரிய, உயர்ந்த தமிழிசைப் பாடல்களை நிறையப் பாடச் சொல்லி, இசைக் கலைஞர்களை வேண்டி கேட்டுக்கொள்ளவேண்டும். தமிழ் நாட்டிலாவது, தமிழ் கீர்த்தனைகளுக்கு, நமது செவ்விசை மேடைகளில் உரிய இடம் கிடைக்கவேண்டும். எறும்பூரக் கல்தேயாதா!

இதுபோன்ற அருள்மிகு இசைப்பாடலாசிரியர்களின் ஆக்கங்களைப் பற்றி எவ்வளவோ எழுதலாம் என்றாலும், எல்லாவற்றுக்கும் ஒரு தற்காலிக முற்றுபுள்ளி தேவைப்படுகிறதே! அடுத்த இதழில்  ஊத்துக்காடு வேங்டகவியின் இசைச் சிறப்பைப்பற்றிய பகிர்வோடு மீண்டும் சந்திப்போம்.




1 கருத்து:

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...