டிசம்பர் 04, 2011

சென்னை கச்சேரி மேளா 2011-2012 - 001


டிசம்பர் 3, 2011

டிசம்பர் முதல் தேதியே சென்னை ஸீசன் ஆரம்பித்துவிட்டது. கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், நாரதகான சபாவில் கச்சேரி ஸீசனை ஆரம்பித்து வைத்துவிட்டாலும், நானும் இந்தவருடம், நவம்பர் இறுதி வாரத்துக்கே சென்னை வந்துவிட்டாலும், சில காரணங்களால், இன்றுதான் என்னால் முதல் கச்சேரிக்கு செல்ல முடிந்தது.

என்னுடைய கச்சேரிக் கணக்கு அபிஷேக் ரகுராம், மற்றும் டி.எம்.க்ருஷ்ணா இவர்களுடன் ஆரம்பித்தது. நானும், அண்ணாவும் கச்சேரி அரங்கத்துள் நுழையும் போது, அபிஷேக் தன்யாஸி பாடிக்கொண்டிருந்தார். போன வருடமே எழுதியிருந்தபடி, அபரிமிதமான குரல் வசதி, நினைத்ததை, நினைத்த அதே நொடியில் குரலில் கொண்டுவரக்கூடிய அசாத்திய உழைப்பு, அதற்கு ஈடான ஜெட்வேக கற்பனைச் சரவெடிகள், அவற்றை கையாளும் லாவகம் என்று அபிஷேக் மிரட்டுகிறார்.

ஒரு பெரிய ரோலர்கோஸ்டரில் தொடர்ந்து இரண்டு மூன்று முறை சென்றுவந்தார் போல சில சமயம் நமக்கு அயற்சி ஏற்பட்டு விடுகிறது. ராகத்தில் ஓரளவாவது இருந்த விஸ்ராந்தியும் சௌக்யமும், தானத்திலும், பல்லவியிலும் இல்லை. திஸ்ரத்ரிபுடையில், கண்டநடையில், “இனி ஒருகணம் உனை மறவேன் யதுகுல திலகா நான்" என்கிற பல்லவி வரிகளை உருட்டியும் மிரட்டியும், ஓடியும் சாடியும், உருண்டும் பிரண்டும் அபிஷேக் பாடியது பிரமிக்கும் படியாக இருந்தும், ரசிக்கும் படியாக இல்லை. தன்யாஸியிலிருந்து, ஸ்ரீரஞ்சனி பின்பு பூர்விகல்யாணி என்று தானத்திலும், பல்லவியிலும், பிறகு ஸ்வர கல்பனையிலும் பாடியது ரசிக்கும் படியான விஷயம்தான். ஆனால் அந்த வேகம், கற்பனைகளில் அழகுக்கும், அதை ரசிப்பதற்கும், குந்தகமாக அமைந்ததுதான் வருத்தத்துக்குரியது.

அபிஷேக், அவரது குரலை பொன்போல் காக்க வேண்டும், இளமையின் வேகம், அளவுக்கு மிஞ்சிய குரலுபயோகம் இரண்டு குரல்நாணை பாதிக்காமல் பாதுகாக்கவேண்டியது அவரது கடமை.

பின்னால் வந்த குதம்பை சித்தர் பாடலும் ஏறக்குறைய கழைக்கூத்தாடி விவகாரம்தான். விவகாரத்தில் விதரணையை விட்டுவிடக்கூடாது. இறுதியாகப் பாடிய "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ"வும் சலிப்புத்தட்டும் அளவுக்கு மேல் கீழ் சஞ்சாரங்களுடன். ஆத்ம விசாரமாக, பரிதவிப்புடன் பாடிய சாஹித்யத்தை அகடவிகடமாக செய்தது ஏனோ ரசிக்கவில்லை.

கச்சேரியென்பது, கைதட்டல்கள் மட்டுமில்லை என்பதை இன்றைய முன்னணி நட்சத்திரக் கலைஞர்கள் உணரவேண்டும்.

வயலின் வாசித்த மைசூர் ஸ்ரீகாந்தும், மிருதங்க நெய்வேலி நாராயணனும்,கஞ்சீரா கோபாலக்ருஷ்ணனும் அனுசரணையாக ஈடுகொடுத்தது கச்சேரியின் நிச்சயமான ஆறுதலான அம்சம்.

அடுத்துவந்த டி.எம். க்ருஷ்ணாவின் கச்சேரி. லயச்சக்ரவர்த்தி காரைக்குடி மணி மிருதங்கம், ராமானுஜாசார்யுலு வயலின் துணையுடன் ஆரம்பித்த கச்சேரி, மிகவும் மோசமான மைக் அமைப்பின் காரணமாக, சரியாக சமன் செய்யப்படாது, மேடையில் இருந்தவர்களுக்கும் அவஸ்தை.. அரங்கத்திலிருந்த ரசிகர்களுக்கும் அவஸ்தை.

க்ருஷ்ணாவின் பளிச் குரல் இன்று கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. மைக் கட்டாயம் 50 வது விழுக்காடாவது இதற்குக் காரணம். ஆரம்பத்தில். நீலகண்ட சிவனின், என்றைக்கு சிவ க்ருபை வருமோ என்கிற முகாரி ராகக் கீர்த்தனயுடன், செளகமாக, செளக்யமாக ஆரம்பித்த கச்சேரி, ஸாரங்காவில் அருணாசல நாதம் கீர்த்தனையுடன் மெதுவாக க்ருஷ்ணாவில் குரலில் சூடுபிடிக்க வைத்தது. ராகம் பாடியதில் வந்த சங்கதிகளே அடிக்கடி வந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் கீர்த்தனை பாடியது கச்சிதம்.

அடுத்து ராகம்பாடாமல், ரீதிகௌளையில்,”த்வைதமு ஸுகமா அத்வைதமு ஸுகமா' என்கிற த்யாகராஜ க்ருதி. இதில் "ககன”-வில் பாடப்பட்ட நிரவல் செம்மங்குடி ரகம். முழுக்க முழுக்க வார்த்தைச் சிதைவுகளுடன். ஆளுமை பிரமிப்பு, ஆனால் படைப்பு க்ருதியின் வார்த்தை அழகுகளுக்குச் செய்யப்பட்ட அநீதி. "ககன, பவன, புவன, தபன, ஆதி" (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், புவி) என்ற வார்த்தைகளை இதற்குமேலும் சிதைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். சும்மா, "ககனககக பவனகக ககககக" என்று ஒரு 3 நிமிஷம் சொல்லிப்பாருங்கள்.

த்யாகராஜர் மன்னிப்பாராக. அவர் மன்னித்தால் என்ன? ரசிகர்கள் கைதட்டினார்களே என்று கேட்கலாம்.. பெரும்பாலான ரசிகர்கூட்டத்துக்கு வேண்டியதெல்லாம், அவர்கள் கேட்பதெல்லாம் எடுப்பான எடுப்பு, வேகமான தொடுப்பு, அதிரடியான முடிப்பு! என்கிற மேஜிக்தான். அர்த்தபாவம் எல்லாம் அவர்களுக்கு அநாவசியம். தெலுங்குதானே, நன்றாகக் கெடுக்கட்டும் என்கிற மனோபாவமோ என்னவோ..! க்ருஷ்ணா நல்ல கலைஞர்தான்! ஆனால் கைத்தட்டல்கள் ஆதிக்கத்திலும், புகழ் தரும் போதையிலும் இருக்கிறார். தன்னம்பிக்கைக்கும், "தான்" என்பதற்கும் வித்தியாசம் அவருக்குத் தெரியாதா என்ன? காலம் பெரிய சமனி. இவரையும் மீட்டு கொண்டுவரும் என்று நம்புவோம்.

வார்த்தைகளின் பொருளுக்கேற்ப அங்க அசைவுகளோ, கை வீச்சுகளோ இருந்தால் குற்றமில்லை. பாடகர்களின் சங்கதிகளுக்கு அவர்கள் கை வீச்சு, தலையாட்டல்கள் ஓரளவுக்கு உதவுவது வாஸ்தவம்தான். ஆனால், என்றைக்கு சிவக்ருபை க்ருதியில் வரும் இந்த வரிகளின் போது, வயலின் அல்லது மிருதங்க வித்வான்கள் பக்கம் கையைக்காட்டுவது, அனர்த்தமாகி விடுகிறது. “ கண்டாலும் பேசார்! இந்த கைத்தவமான பொல்லாச் சண்டாள உலகத்தைத் தள்ளி ஸத்கதி செல்ல" குறிப்பாக, "சண்டாள" என்னும் போது, வயலின் பக்கமோ, மிருதங்கம் பக்கமோ, அல்லது ரசிகர்கள் பக்கமோ கையைக் காட்டினால்...?

இது க்ருஷ்ணாவுக்கு மட்டுமல்ல, கைவித்தையிலே கைதேர்ந்த அனைத்து வித்வான்கள், விதூஷகிகளுக்கும்தான்.

நேரமில்லாத காரணத்தினால் வெளியே வரவேண்டிய கட்டாயம். முழு கச்சேரியையும் கேட்க முடியவில்லை. ஒருவேளை, நான் கிளம்பியபிறகு, கச்சேரி மிகவும் நன்றாக இருந்ததோ என்னவோ..! மீண்டும் கேட்காமலா போய்விடுவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...