ஏப்ரல் 27, 2009

மெய்ப்பொருள் - விமரிசனம்

பிரமாண்டம், பெரிய தயாரிப்பு மற்றும் விளம்பர செலவு, மார்க்கெட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஹீரோ, ஹீரோயிணி, பிற நட்சத்திரப் பட்டாளம், பாடல்களுக்கு வெளிநாட்டு லொகேஷன்கள், சினிமா ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கிறது என்கிற சுய, மற்றும் திணிக்கப்படுகிற, வர்த்தக வரையறுப்புகள், இவை எதுவுமில்லாமால், கதை, சொல்லும்விதம், வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்கிற முனைப்பு, கதையும், காமிராவுமே உண்மையான நாயக நாயகிகள் எனும் வெளிப்பாடு, இவைகளோடு மட்டும் வந்திருக்கிற படம் “மெய்ப்பொருள்”.

ஸாம் (நியூரோ ஸர்ஜன்), மனைவி தேவி (தென்றல் மாத இதழின் நிருபர்), இவர்களின் நண்பன் விஸ்வா, விண்வெளி இயல்பியல் (அஸ்ட்ரோ பிஸிஸிஸ்ட்) விஞ்ஞானி ராஜன் என்னும் நால்வரைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது. தவிர விஸ்வாவின் காதலி லக்ஷ்மி (கொசுறு), ஸாமின் பெற்றோர்கள், மனோத்ததுவ நிபுணர், முதலில் வந்து கொலையுண்டு போகும் தம்பதியினர், அவர்களின் குழந்தை, குழந்தையைக் கடத்தி செல்லும் வெள்ளைக்காரப் பெண்மணி, மூளை அறுவை சிகிச்சைக்காக வரும் சிறுமி, அவளின் பெற்றோர்கள், தென்றல் பத்திரிக்கையின் குழு, போட்டி நிருபிணி(?), சர்ஜரிக்காக அமெரிக்கா வரும் தமிழ்ப்பட ஹீரோ தரன், என்று இணைப்பாத்திரங்கள் கதை நகர்த்திகள்!

நடித்தவர்கள் எல்லோருமே புதுமுகங்கள், என்பதுடன் படத்தயாரிப்பிலும் பங்களித்திருக்கிறார்கள். இயக்குநர்களான நாட்டிகுமாரும், க்ரிஷ் பாலாவும், இணை இயக்குநர் நாராயனும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். செயற்கைத்தனம் இல்லாத இயல்பான நடிப்பு. மிகவும் தேர்ந்த நடிகர்களே இறுக்கமான உணர்ச்சிகளை காட்டும்போது, சமயங்களில் கேலிக்கூத்தாக ஆகிவிடுவது உண்டு. ஆனால், இந்த மூவர் கூட்டணி அதிலும் சாத்திருக்கிறது. க்ரிஷ் பாலாவுக்கு கதாநாயக பாத்திரம் கொஞ்சம் “ஓவர்லோட்”-தான். சில இடங்களில் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும், நிறைய இடங்களில் அளவாக நடித்திருக்கிறார்.

அனுஷாவுக்கு அழகான, துறுதுறுவென்னும் முகம், துள்ளலான உருவம் என்றிருந்தாலும், நடிப்பில் ஒரு செயற்கைத்தனம், நம்பகமின்மை தெரிகிறது. தங்கள் நடிப்பில் கவனம் செலுத்திய இயக்குநர்கள் சக நடிகர்களின் மீது சரியான கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவோ, வெளியீட்டாளராகவோ வரும் நபர், நன்றாக தமிழ் பேசுபவராக இருந்திருக்கக் கூடாதா?

உளவியல் சார்ந்த திரில்லர்கள் எடுப்பதற்கு, நல்ல பரந்த,, ஆழ்ந்த படிப்பும், புரிதலும், ஆராய்ச்சியும், நம்பத்தகுந்த கதைக்கோர்வையும் தேவை. இவைகள் எல்லாமே இக்குழுவிடம் இருக்கிறது என்று தெரிகிறது.

கதை என்ன? மூச்! முழுவதும் சொன்னால் மெய்ப்பொருளைக் காண்பது எப்போது…! நன்றாகப் படித்தவர்கள் கூட சில சமயங்களில் தங்களுக்கு வரும் செய்திகளை, செய்தியின் நம்பகத்தன்மை, சொல்பவரின் நம்பகத்தன்மை, என்று ஆராயமல் அப்படியே நம்பிவிடுவதால் விளையக்கூடிய விபரீதங்களை சுட்டுவதே இக்கதையின் அடியிழை!

மீதியை “வெள்ளித்திரையில் காண்க” என்பதைவிட முழுவதுமே வெள்ளித்திரையில் காண்க!

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” –

வித்தியாசமான முயற்சி என்பதாலேயே, சில குறைகள் இருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி!

ஸான் ப்ரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியை மிகவும் அழகாகக் காட்டியிருக்கிற க்ரிஸ் எல்ரிட்ஜ், பின்னணி இசையமைத்திருக்கும் ஜான் மஸே, படத்தொகுப்பு செய்திருக்கும் B.லெனின் எல்லோருமே, படத்தின் தொய்வில்லாத கதை நகர்வுக்குக் காரணம்! பாடல்கள் இல்லாத தமிழ்படமா? இதிலும் உண்டு.. ஆனால் ஆங்கிலப் படங்களைப் போல பின்னணி இசையாக மட்டுமே சேர்த்திருப்பதும், மாண்டேஜாகக் காட்சிகளை அமைத்திருப்பதும் வித்தியாசம்தான்..!

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஸேன்ஹோஸேயில் ஐஎம்ஸீ-6 திரையரங்கில் வெளியிடப்பட்ட முன்னோட்டக் காட்சிக்கு குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் என்று நல்ல கூட்டம். இந்தப்படம் சென்னை போன்ற மாநகரங்களில் கட்டாயம் வெற்றி பெறும் சாத்தியக்கூறு உள்ளது.

இந்த படத்துக்கான விழுக்காடு என்று பார்த்தால் 70% கொடுக்கலாம்!

1 கருத்து:

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...