ஜூன் 05, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 96

जलधिद्विगुणितहुतबहदिशादिनेश्वरकलाश्विनेयदलैः
नलिनैर्महेशि गच्छसि सर्वोत्तरकरकमलदलममलम् 96

ஜலதி த்விகுணித ஹுதவஹ திசா தினேச்வர கலாச்வினேயதலை: |
நலினைர் மஹேசி கச்சஸி ஸர்வோத்தர கர கமலதலம் அமலம் ||96||

மகேசுவரியே! 4-6-10-12-16-2  ( நான்கு கடல்கள், ஆறு கனல்கள், பத்து திக்குகளும், பன்னிரண்டு ஆதித்யர்கள், பதினாறு கலைகளும், இரண்டு அசுவினி தேவர்களும் ) என்ற எண்ணிக்கைகளில் இதழ்களுள்ள கமலங்கள் வழியே (சக்கரங்கள்), தூய்மையும், யாவற்றுக்கும் மேற்பட்ட, ஆயிரம் இதழ்களுடைய கமலத்தை நீ அடைகின்றாய்!

கடலின், கனலாறின், காட்டையீ ரைந்ததன், காலையதன்
வடிவாமீ றாறின், மதிகலை ஈரெட்டின், வானிருவர்
வடிவின் கமல மடல்கள் வழியாய் மகேசுவரீ!
அடைந்தாய் உயர்தூய ஆயி ரமிதழ்கொள் அம்புயத்தே

கடல் நான்கு; கனல் ஆறு; காட்டை - திசை; ஈரைந்து - பத்து; காலை - சூரியன்; மதிகலை - சந்திர பிறைகள்; வானிருவர் - அசுவினி தேவர்கள்;

ஜூன் 04, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 95

लोहितिमपुञ्जमध्ये मोहितभुवने मुदा निरीक्षन्ते
वदनं तव कुवयुगलं काञ्चीसीमां केपि कामाक्षि 95

லோஹிதிம புஞ்ஜ மத்யே மோஹித புவனம் முதா நிரீக்ஷந்தே |
வதனம் தவ குசயுகலம் காஞ்சீஸீமாம் கேςபி காமாக்ஷி ||95||

தாயே காமாட்சீ! செவ்வண்ணம் சேர்ந்தொளிரும் மண்டலத்தின் உள்ளிருக்கும், உலகயே ஈர்த்து வயப்பட வைக்கும், உன் முகத்தையும், இரு தனங்களையும், ஒட்டியாணம் அணியும் இடைத்தையும், சில புண்ணியர்களே காண்கிறார்கள்.

செங்குருதி வண்ணச் செறிவின் நடுவில் சிறந்தாளே
இங்குல கெல்லாமே ஈர்த்து வயப்படும் இன்முகமும்
கொங்கை களோடு குழைந்த அரையதும் கொண்டவளே
நங்கைகா மாட்சியே நல்லோரே காண்பர் நயந்துனையே

அரை- இடை;

ஜூன் 03, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 94

कनकमणिकलितभूषां कालायसकलहशीलकान्तिकलाम्
कामाक्षि शीलये त्वां कपालशूलाभिरामकरकमलाम् 94
கனக மணி கலித பூஷாம் காலாயஸ கலஹ ஶீ காந்திகலாம் |
காமாக்ஷி ஶீலயே த்வாம் கபால ஶூலாபிராம கரகமலாம் ||94||

காமாக்ஷி தாயே! பொன்னும் மணிகளும் இழைத்த அணிகளைப் பூண்டவளும், உருக்கிய இரும்பின் கருமையை தோற்கடிக்கச் செய்யும் நிறத்தை உடையவளும், கபாலமும், சூலமும் தரித்த தாமரைக் கரத்தினளுமாய தேவியே* உன்னைத் தியானிக்கிறேன்! (* - அதர்வண பத்திரகாளியாம் பிரத்தியங்கரா தேவி)

பொன்னும் மணியும் பொதிந்த அணிகளைப் பூண்டவளே;
மின்னும் கருமெஃகின் மேவும் நிறத்தினும் மிக்கவளே;
தன்கரத் தாமரைத் தங்குமோடும் சூலமும் தாம்கொண்ட

அன்னைகா மாட்சி! அகத்திலுன்னை வைத்துளேன் ஆட்பட்டே

ஜூன் 02, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 93

कुङ्कुमरुचिपिङ्गमसृक्पङ्किलमुण्डालिमण्डितं मातः
जयति तव रूपधेयं जपपटपुस्तकवराभयाब्जकरम् 93
குங்குமருசி பிங்கம் அஸ்ருக் பங்கில முண்டாலி மண்டிதம் மாத: |
ஜயதி தவ ரூபதேயம் ஜபபட புஸ்தக வராபயாப்ஜகரம் ||93||

குங்குமப்பூ போன்ற சிவந்த நிறத்தவளே! குருதியால் தோய்ந்திருக்கும் தலை முண்டங்களின் அணி வரிசையாலாகிய ஆரம் (மாலை) பூண்டவளே; செபமாலையும், மறைநூலும் கொண்டு, வரமும், அடைக்கலமும் காட்டியே தங்குகிற தாயாம் திரிபுரையே, உன்னுரு வெற்றியுடன் விளங்குகிறது!

குங்குமப் பூவண்ணம் கொண்டு சிவந்தே, குருதிதோய்ந்த
அங்கமில் முண்ட அணிவரி சையாலே ஆரமொடு
துங்க செபமாலை தொன்னூல் வராபயம் தோன்றுகரம்
தங்கும் செயவுரு தாய்தி ரிபுரையே தாரணையே


தொன்னூல் - மறைநூல்; தாரணை - ஒழுங்கின் உருவம்; செயவுரு - வெற்றியின் உருவம்

ஜூன் 01, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 92

विमलपटी कमलकुटी पुस्तकरुद्राक्षशस्तहस्तपुटी
कामाक्षि पक्ष्मलाक्षी कलितविपञ्ची विभासि वैरिञ्ची 92

விமலபடீ கமலகுடீ புஸ்தக ருத்ராக்ஷ சஸ்த ஹஸ்தபுடீ |
காமாக்ஷி பக்ஷ்மலாக்ஷீ கலித விபஞ்சீ விபாஸி வைரிஞ்சீ ||92||

தூய வெண்ணிற ஆடை அணிந்தவள், தாமரையில் குடியிருப்பவளும், புத்தகமும், ருத்திராக்கமாலையும் தாங்கும் அழகிய கையினள், இமைமுடியுடன் கூடிய அழகிய கண்களை உடையவள், அழகு வீணையைக் கையிலேந்தியவள், பிரமனின் மனையாளாம் சரசுவதியாக, காமாட்சி, நீயே விளங்குகிறாய்.

வெண்ணாடை பூண்டு வியன்தா மரைக்குடி வீற்றிருக்கும்
ஒண்ணியல் நூலும் உயரக்க மாலையும் உற்றகையாள்;
கண்மடற் கேசங்கூடும் கண்ணாள்; விபஞ்சீ கரமேந்தும்
வண்ணள்; விதிமனை வாணிநீ யேதான்கா மாட்சியுமே

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...