திராவிட செவ்விசை முன்னோடி - சீர்காழி முத்துத்தாண்டவர்
[சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் Novermber - 2015 பதிப்புக்காக திராவிட செவ்விசை முன்னோடியாம் சீர்காழி முத்துத்தாண்டவரைப் பற்றி எழுதிய கட்டுரை]
அடிநாதம்:
கருநாடக இசையென்று பரவலாக அறியப்படும் திராவிட செவ்விசையின் மரபு சங்ககாலத்திற்கும் முற்பட்டது என்று ஏற்கனவே பலரும் பலமுறை நிறுவியாயிற்று. சிலப்பதிகாரம், பரிபாடல், தொகை நூல்கள் என்று, சங்க இலக்கியங்களில் நெடுக விரவிக் கிடக்கும் சான்றுகளாலும், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்களின் மேற்கோள் செய்யுள்களாலும், ஓலைச் சுவடிகளில் மீட்டெடுக்கப்பட்ட ஒரு சில அரிய புத்தகங்களாலும், நம் முன்னோரது இசையின் பழமைக் கூறுகளையும், மரபுகளையும் நம்மால் ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது! பெருமை கொள்ள முடிகிறது. ஆயினும் இப்படித்தான் இருந்தது, பாடியிருப்பார்கள் என்று உறுதியிட்டுச் சொல்லக்கூடிய தொடர்ச்சி அற்றுப்போனதும் உண்மை,
இன்றும் சைவாலயங்களில் ஓதுவார்கள் இசைக்கும் திருமுறைகள், வைணவ ஆலயங்களில் பாடப்படும் பாசுரங்கள், அரையர் சேவை போன்ற இசையோடு கூடிய வழிபாடுகளில், எந்த அளவுக்கு செவ்விசை மரபின் தொன்மையைக் காப்பாற்றி நமக்கு அத்தொடர்ச்சியைத் தந்துள்ளன என்பதும் அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
தனித்தமிழிசை இயக்கம், பண் ஆராய்ச்சி, தமிழ் உருப்படிகளையே பாடுதல் என்று பயணித்தாலும், இவர்கள் பாடுவதும் பெரும்பாலும் பிற்கால பாடலாசிரியர்களாம் கோபால கிருஷ்ண பாரதியார், நீலகண்ட சிவன், பாபநாசம் சிவன் போன்றோரின் பாடல்கள்தாம். தேவார, திருவாசக, பிரபந்த பாசுரங்களோ, அன்றி சங்க இலக்கியப் பாடல்களோ, அல்லது பிற்கால இலக்கியப் பாடல்களையோ அல்ல! சிலப்பாதிகாரத்தின் இசை குறிப்புகள்கூட இசை இலக்கணங்களையும், மரபுகளையும் சுட்டுகின்றனவே தவிர எடுத்துக்காட்டுப் பாடல்களாக கூறியவொன்றும் இல்லை.
இப்போது நாம் செவ்விசையாகக் கேட்பதெல்லாம், ஏறக்குறைய 15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு முளைவிட்டு, பயிராக செழித்திருக்கிற இசை வடிவங்கள்தாம். இவற்றிலும், காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரைக்குமான பலவித இசை வகைகளின் கொடுக்கல் வாங்கல்களோடு!
எது எவ்வாறாயினும், இன்று செவ்வியல் மேடைகளில் பாடப்படும் பாடல்களின் “கீர்த்தனை” என்னும் இசைவடிவத்துக்கு பிள்ளையார் சுழிபோட்ட முதல் இசைப்பாடலாசிரியர் (சாகித்யகர்த்தா) சீர்காழி மூவர் என்று அழைக்கப்படும் தமிழ் மூவரின் முதலாமவரான முத்துத்தாண்டவர்.
கிருதியும், கீர்த்தியும்:
பொதுவாக கீர்த்தனை, கிருதி என்று சொல்லப்படும் இசைவடிவங்கள் இரண்டுமே வழக்கத்தில் இருப்பினும், கட்டமைப்பில் இரண்டுமே சற்று வேறுப்பட்டவை மூலச்சொல்லை எடுத்துக்கொண்டால் கிருதி என்பது கீர்த்தி என்ற சொல்லின் திரிபாகத்தான் இருக்கமுடியும். இறைப்பொருளின் கீர்த்தியைப் பாடும் இசைவடிவமே கிருதி எனப்படுவது. அதேபோல் கீர்த்தனை என்ற சொல்லும் கீர்த்தி மற்றும் ஆராதனை என்ற இரண்டு சொற்களின் கூட்டாகவே கொள்ளலாம். இவை இரண்டுமே, பல்லவி, அனுபல்லவி, சரணம் (எடுப்பு, தொடுப்பு, முடிப்பு) என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டவைதாம் இவ்விரண்டுக்குமான வேற்றுமைகளை பின்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போமே!
செய்யுள் வடிவப் பாடல்களே இசைப்பாடல்களாக இருந்து வந்த நிலையில், முத்துத்தாண்டவர்தான் (ஏறக்குறைய கருநாடக இசையின் கொள்ளுப்பாட்டன் எனப்படும் புரந்தரதாசரின் சமகாலத்தவர் அல்லது சற்றே பிந்திய காலத்தவர்) புதிய இசைவடிவத்தைப் பழக்கத்துக்கு கொணர்ந்தார் என்றே உறுதியாகச் சொல்லலாம். இவர் அமைத்துத் தந்த பாதையில் பயணித்தவர்கள்தான், பின்பு வந்த இசைப்பாடலாசிரியர்கள் எல்லோருமே! இவருக்கு முன்னோடியாக யாராவது இருந்திருக்கக் கூடுமா என்று, சமகால இசையாசிரியர்கள் வரலாறுகளையும், படைப்புகளையும் நோக்கும்போது, தெளிவாகத் தெரியவில்லை.! கன்னட தேசத்தைச் சார்ந்த புரந்தர தாசர், கனகதாசர் போன்றோர் ஏறக்குறைய சமகாலத்தவர்களானாலும், அவர்கள் கீர்த்தனை கட்டமைப்பை கடைபிடிக்கவில்லை. அதேபோல்தான் முன்னவரான ஆந்திரத்து அன்னாமாச்சாரியாரும். பத்ராசல இராமதாசர் இவருக்கும் பின்னால் வந்த திருவையாற்று மூவருக்கும் இடைபட்டவர். இவரும் கீர்த்தனை அமைப்பையொட்டி உருப்படிகள் செய்திருப்பதால், முத்துதாண்டவர் காலத்திலேயோ, அல்லது அவரது காலத்துக்குப் பிறகோ இவ்வமைப்பு ஒப்புக்கொள்ளப்பட பொது இசை வடிவமாகிவிட்டிருந்தது என்று அறியலாம்.
முத்துத்தாண்டவர் வாழ்க்கை சரித்திரம் சுருக்கமாக:
முத்துத்தாண்டவரது வாழ்க்கைச் சரித்திரத்தைப் பற்றி பல இணையதள கட்டுரைகள் உள்ளன. இசைப்பேரறிஞர், முனைவர் திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம் முத்துத்தாண்டவரின் கூடவே இருந்து பாடல்களைத் தொகுத்ததாகக் கூறப்படும் சிதம்பரம் அமிர்தகவி குப்பையா பிள்ளை பரம்பரையில் வந்தவர். இவர் 2000ம் வருடம் பதிப்பித்த சீர்காழி மூவர் கீர்த்தனைகள் (இரண்டு பாகங்களில்) புத்தகத்தின் முதல் பாகத்தில், முத்துத்தாண்டவரின் வாழ்க்கை சரிதம் விரிவாகச் சொல்லப்படுகிறது, இதுவும் கூட செவிவழிச் செய்திவழியாகப் புனையப்பட்ட வரலாறே தவிர உறுதி செய்யப்பட்ட ஒன்றல்ல. தவிரவும் இப்போது பதிப்பில் இல்லாத யாழ்பாணத்து நீர்வேலி பண்டித நடராஜ பிள்ளையவர்களால் 1960களில் பதிப்பிக்கப்பட்ட முத்துத்தாண்டவர் என்கிற புத்தகமும் (இணையத்தில் PDF புத்தகமாகக் கிடைக்கிறது), அதில் அவர் கேள்விபட்ட அளவில் தாண்டவரது சரித்திரத்தையும், சில பாடல்கள் உருவான வரலாற்றையும் விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுருக்கமாக இங்கே: இவர் சோழநாட்டில் சம்பந்தமூர்த்தி நாயனார் அவதரித்த சீர்காழி என்னும் சிவத்தலத்திலே பாணர் குலத்தில் 1500களில் பிறந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. இவருடைய பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் “தாண்டவன்” என்பதாம். எப்படி இவர் முத்துத்தாண்டவர் ஆனார்? சிறு வயதிலேயே சூலை நோயால் பீடிக்கப்பட்டிருந்த இவர், இவர் குலத்தொழிலில் ஈடுபடாமல் சிவபக்தியிலேயே நாட்டமுடையவராக இருந்துவந்தார்.
சீர்காழித்தலம் திருத்தோணிபுரம் என்ற பெயரால் அறியப்பட்டுவந்தது. அங்கு ஆலயத்து இறைவரும் இறைவியும், திருத்தோணியப்பர் மற்றும் திருநிலை நாயகியாவர். இவ்வாலயத்துக்கு தினமும் சென்று திருமுறைகளைப் பாடுவதிலும், சில நேரங்களில் வெகு நேரம் தங்கிவிடுவதுமாக இருந்தார் நமது தாண்டவர். ஒரு சமயம், இரவில் தவறுதலாக கோவிலில் வைத்து பூட்டப்பட, வெளியே போக வழியறியாது, வருந்தி இறைவியின் சந்நிதியில் உருகிப் பாடிக்கொண்டே இருந்தாராம்; அப்போது அம்பிகையே கோவில் அர்ச்சகரின் சிறுபெண் வடிவில் வந்து அன்னம் அளித்து அவருடைய பசியை ஆற்றி, அவருடைய நோய் நீங்க தில்லைச் சென்று சபாநாதரைப் பாடி, நோயை நீக்கிக்கொள்ளும்படி பணித்து மறைந்தாளாம். மறுநாள் அவண் வந்து அவரைக்கண்ட அர்ச்சகரும் கோவில் அதிகாரிகளும் ஏதோ தெய்வச் செயல் நடந்திருப்பதையும், அவருடைய முகம் முத்து போன்று ஒளிர்ந்ததையும் கண்டு, அவரை முத்துத்தாண்டவர் என்றே அழைக்கத் தொடங்கினார்காளாம்; அம்மையின் உத்தரவுபடியே, தில்லைநாதனைப் பாட தில்லைக்குச் சென்று அடியார் ஒருவர் வாக்கிலுதித்த “பூலோக கயிலாச கிரி” என்ற சொற்றொடரை வைத்தே முதல் கீர்த்தனையை அவர் பாடி நோய் நீங்கப்பெற்றதாகவும்,இவருடைய சரித்திரத்தை எழுத முனைந்தவர்கள் எழுதியுள்ளனர். இது சுந்தரமூர்த்தி நாயனாரின் ஒரு வரி, சேக்கிழாரின் ஒரு சில பாடல்களாகி, கோபாலகிருட்டின பாரதியாரின் முழுநீள இசை நாடகமான நந்தனார் சரித்திரம் போன்று, கற்பனை விரிந்துகொண்டேபோன கதைதான்.
சீர்காழித்தலம் திருத்தோணிபுரம் என்ற பெயரால் அறியப்பட்டுவந்தது. அங்கு ஆலயத்து இறைவரும் இறைவியும், திருத்தோணியப்பர் மற்றும் திருநிலை நாயகியாவர். இவ்வாலயத்துக்கு தினமும் சென்று திருமுறைகளைப் பாடுவதிலும், சில நேரங்களில் வெகு நேரம் தங்கிவிடுவதுமாக இருந்தார் நமது தாண்டவர். ஒரு சமயம், இரவில் தவறுதலாக கோவிலில் வைத்து பூட்டப்பட, வெளியே போக வழியறியாது, வருந்தி இறைவியின் சந்நிதியில் உருகிப் பாடிக்கொண்டே இருந்தாராம்; அப்போது அம்பிகையே கோவில் அர்ச்சகரின் சிறுபெண் வடிவில் வந்து அன்னம் அளித்து அவருடைய பசியை ஆற்றி, அவருடைய நோய் நீங்க தில்லைச் சென்று சபாநாதரைப் பாடி, நோயை நீக்கிக்கொள்ளும்படி பணித்து மறைந்தாளாம். மறுநாள் அவண் வந்து அவரைக்கண்ட அர்ச்சகரும் கோவில் அதிகாரிகளும் ஏதோ தெய்வச் செயல் நடந்திருப்பதையும், அவருடைய முகம் முத்து போன்று ஒளிர்ந்ததையும் கண்டு, அவரை முத்துத்தாண்டவர் என்றே அழைக்கத் தொடங்கினார்காளாம்; அம்மையின் உத்தரவுபடியே, தில்லைநாதனைப் பாட தில்லைக்குச் சென்று அடியார் ஒருவர் வாக்கிலுதித்த “பூலோக கயிலாச கிரி” என்ற சொற்றொடரை வைத்தே முதல் கீர்த்தனையை அவர் பாடி நோய் நீங்கப்பெற்றதாகவும்,இவருடைய சரித்திரத்தை எழுத முனைந்தவர்கள் எழுதியுள்ளனர். இது சுந்தரமூர்த்தி நாயனாரின் ஒரு வரி, சேக்கிழாரின் ஒரு சில பாடல்களாகி, கோபாலகிருட்டின பாரதியாரின் முழுநீள இசை நாடகமான நந்தனார் சரித்திரம் போன்று, கற்பனை விரிந்துகொண்டேபோன கதைதான்.
உறுதி செய்ய அகச்சான்றுகளோ, வேறு புறச்சான்றுகளோ, அவருடைய பாடல்களிலும், வேறு எங்கும் கிடைக்கவில்லை. அவருடைய வாழ்க்கை வரலாறு எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். அவருடைய ஆழ்ந்த இறை பக்தியும், அவை அனுபூதியாக பாடல்களில் வந்த வடிவமும், இசையுலகிற்கு அவர் விட்டுச் சென்ற புதிய இசைப்பாடல் கட்டமைப்பும், நின்று நிலைத்து, செவ்வியல் இசையின் வடிவமைத்தவர் என்று சரித்திரத்தில் அவர் பெயரைப் பொறித்துவிட்டன. அவர் பக்தியில் திளைத்த உயர்ந்த இசைப்பாடலாசிரியராயிருந்தார் என்பதில் யாருக்கும் சற்றும் ஐயமே இருக்கமுடியாது.
இக்கட்டுரையின் முக்கிய நோக்கமும் முத்துத்தாண்டவரின் இசை முத்துக்களை, வடிவமைப்பை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதுதான்!
பாடல்களின் அமைப்பும், சிறப்பும்:
12ம் நூற்றாண்டுகளின் இறுதியில் தெலுங்கு சோழர்களின் ஆட்சிகாலம் முடிந்து, விஜயநகர ஆட்சியாளார்களின் சார்பில் ஆளவந்த கன்னட-தெலுங்கு நாயக்க மன்னர்கள் தஞ்சையையும், மதுரையையும் ஆளத்தொடங்கி, பின்பு அது மராட்டிய வழித்தோன்றல்களின் ஆட்சிகளாகத் தொடர்ந்த இடைப்பட்ட மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளில், தூயதமிழ் பாடல்கள் என்பது அருகி வடமொழி விரவிக் கலந்த கவிதைகளே பரவலாயின. இவற்றின் தாக்கத்தை தாயுமானவ சுவாமிகள், அருணகிரி நாதர் போன்றோரின் பாடல்களில் இன்றும் காணலாம். தனித்தமிழ் மரபுக்கவிதைகளைக் கட்டிக்-காப்பவர்கள் இருந்தாலும், இசைவடிவங்களில் மணிப்ரவாள நடையே மேலோங்கியிருந்தது என்பது வெளிச்சம்.
இந்த தாக்கமானது, முதல் இசைப்பாடலாசிரியரான முத்துத்தாண்டவரையும் விட்டுவைக்கவில்லை. ஒருவேளை அந்நாளைய தமிழ் நாட்டின் பேச்சு வழக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும்.
“பூலோக கயிலாச கிரி” எனத்தொடங்கும் அவருடைய முதற்பாடல், அவர் தில்லைத்தலத்தின் அழகைக் கண்டு வியந்து பாடியதாக அமைந்தது. இன்று பரவலாக அறியப்படும் கீர்த்தனை வடிவை அமைத்துக் கொடுத்தது. இவரது பாடல்கள் பொதுவாக, “கவித்துவம்” நிரம்பிய பக்தி வெளிப்பாடுகளேயன்றி, மரபுக்கவிதை என்ற கட்டமைப்புக்குள் வராதவை. ஆனால் அவற்றிலும் எதுகை, மோனை, இயைபு, முரண்தொடை போன்ற அழகுகளெல்லாம் நிரம்பியிருக்கும். எடுத்துக்காட்டாக, “பூலோக”, “புவனத்தில்”, போன்ற முதற் சொற்களும், “சாலோக”, “சாமீப”, “சாரூப”, “சாயுச்சிய”, “சபைவாணர்” போன்றவையும் மோனை அழகைக் கொண்டவைதாம். அதேபோல் நாலு, மேலு, காலு, ஆலி என்று எதுகைகளுக்கும் பஞ்சமில்லை. இப்பாடல்களினால், வடமொழிச் சொற்களை கையாளுவதை இவர் வலிந்து விலக்காததையும் நாம் அறிந்துகொள்ளலாம். ஏறக்குறைய சமகாலத்-தவரான தாயுமானவரின் பாடல்களிலும் இத்தகைய வடமொழிச் சொல்லடுக்குகள் உண்டு
தாண்டவரின் நாட்டியப் பதங்கள்:
இவருடைய பாடல்களில் நாட்டியம் நிருத்யம் என்ற இரண்டும் சேர்ந்து ஆடுவதற்கு ஏற்ப பரதநாட்டியச் சொற்கட்டுக்களை பாடலோடு இணைந்தே செய்திருக்கிறார். இந்த வழிமுறைகளை இவருக்கு அடுத்த நூற்றாண்டில் வந்த ஊத்துக்காடு வேங்கட கவி, பின்பு வந்த கோபாலகிருட்டின பாரதி, நீலகண்ட சிவன், பாபநாசம் சிவன் வரை எல்லோரும் கடை பிடித்திருக்கிறார்கள்.
மலயமாருத இராகத்தில் அமைந்த “கண்டபின் கண்குளிர்ந்தேன்” என்ற பாடலிலும், சாருகேசியில்
அமைந்த “ஆடிய வேடிக்கைப் பாரீர்” என்ற பாடலிலும், சிவனுடைய நடனத்தின் எழிலை பரதத்தின் சொற்கட்டுக்களாலேயே பாடியிருப்பார், அவை இயல்பாக பாடல்வரிகளோடேயே பின்னிப் பிணைந்திருக்கும். இயல்பாகவே வந்த பாணர் பரம்பரையின் இசை மற்று நாட்டிய அறிவு இவரது பாடல்களில் விவரமாக, அழகாக, இயல்பாக ஒளிர்வதைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக மலயமாருதத்தில் அமைந்த, “கண்டபின் கண்குளிர்ந்தேன்” என்ற பாடலின் சரணத்தில், திந்தோம் திரிகிட தோதிமி எனவே சிந்தித்து நின்றாடு உம்பர்கள் கோனை” வரும் வரிகளைக் கூறலாம். இதே போன்று பல பாடல்களிலும் உண்டு.
பின்னாளில் நீலகண்ட சிவன் தன்னுடைய பூர்விகல்யாணி இராகத்தில் அமைந்த “ஆனந்த நடமாடுவார் தில்லை” என்ற பாடலின் சரணத்தில், “தஜ்ஜம் தகஜம் தகதிமி தளாங்குதக ததிங்கிணதோம், தளாங்குதக ததிங்கிணதோம், தகதிமிதக ததிங்கிணத்தொமென்று” என்று அமைத்தது இப்பாணியை ஒட்டியே!
தாண்டவர் கற்பனையில் கண்ட தாண்டவக் காட்சி:
இவருடைய மேம்பட்ட கற்பனை வளத்துக்கு, மேற்கண்ட மலயமாருதப்பாடலே சான்று. சிவபெருமான் நடனத்தைக் இவர் இவ்வாறு கற்பனை செய்தார். “பிறை நிலவும், கங்கையும் அவர் முடியிலிருந்துகொண்டு அசைந்து ஆடுமாம்; அமரர்களும் முனிவர்களும் “சிவ சிவ” என்று பேரொலி எழுப்பி வணங்குவார்களாம்; தேவலோகத்து இசைக்கலைஞர்களாகன நாரதரும், தும்புருவும் சந்தித்து இணைந்து பாடுகிறார்களாம். இந்த விந்தையான நாட்டியக் கச்சேரிக்கு, திருமாலும் இயைந்து மத்தளம் கொட்டுகிறாராம்; பிரமன் தாளக்கருவியை முழக்கி நட்டுவாங்கம் செய்கிறாராம்; அப்போது மேலே சொல்லப்பட்ட ஜதிச் சொற்களை எண்ணி தன்னுடைய காற்சதங்கைகள் ஒலிக்க நடனம் ஆடுகின்றாராம் கூத்தபிரான்.அத்தகைய காட்சியைக் கண்டு முத்துத்-தாண்டவருடைய கண்கள் குளிர்ந்தனவாம்; அவர் பிறவி எய்திய பயனையும் அடைந்துவிட்டாராம். ஆதிசங்கர சௌந்தர்ய லஹரியில், வாணி, உமையின் ஒரு “ஆஹா” என்ற சொல்லின் இனிமைக்கு வெட்கி தாம் வீணையை மூடிவைத்தாகச் (சுலோகம்: விபஞ்யா காயந்தி) செய்த ஒரு கற்பனைப் போன்றதே இதுவும்.
படிக்கவே சுவை! முறையொடு இசை பயின்று குரல் வளமிக்கோர் இசைக்கும்போது எவ்வளவு இனிமை? கூடவே இவற்றை அபிநயித்து ஆடும் நாட்டியமும் இருந்தால் இறைவனையே கண்முன்னால் நிறுத்திவிடாதா?
எல்லோரும் அறிந்து வெகுவாகப் பாடப்படுகிறா மாயாமாளவ கௌளை இராகத்தில் அமைந்த “ ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண் ஆயிரம் வேண்டாமோ” என்ற பாடலில் சரணமானது, பல்லவி, அனு பல்லவிகளை விட மத்தியமகாலம் எனப்படும் வேகமாகப் பாடுகிற ஒரு அமைப்பைக் கொண்டது. இதில் ஆடல்வல்லாரோடு யாரெல்லாம் ஆடினார்கள், எவையெல்லாம் ஆடின என்று ஒரு பெரிய பட்டியலையே மூன்று சரணங்களில் இடுகிறார்.
தாமரைப் பாதத்தணிந்த சிலம்புகள், “கிண் கிண்” என்று ஒலியெழுப்பும் சலங்கைகள், உரித்து தரித்த புலித்தோல் ஆடை, சிவந்த கைகளில் ஏந்திய மான்மழு, காதணிந்த பொற்குழைகள், தலையணிந்த கங்கை, இளம் பிறைய, விரித்த செஞ்சடை, மணிகள் பதித்த ஆரங்கள், மலர் மாலைகள், கழுத்தைச் சுற்றிய படமெடுக்கும் அரவம், கொன்றை மலர் மாலை, இறைவன் ஏறி வருகிற தில்லையின் தேர், பெருந்திரளாக வரும் வேதியர்கள், தில்லைவாழ் அந்தணர்களாம் மூவாயிரம்பேர், தில்லை நகரத்து காரணி காளி, நிர்த்த கணபதி, வேலனாம் முருகர், நான்முகன், திருமால், இந்திரன், முப்பது முக்கோடி தேவர்கள்,முனிவர்கள், பதஞ்சலி மற்றும் புலிப்பாணியான வியாக்கிர பாதர், நந்தி, சிவகாமி அன்னையென்று ஒரு பெரிய பட்டாளமே உடனாட தில்லைக் கூத்து நடந்ததாம்.
இதே போன்ற கற்பனையை பாபநாசம் சிவனவர்கள் “கபாலி நாதனின்” பவனியைப் பற்றி “காணக்கண் கோடி வேண்டும்” என்று பாடியதை சென்ற மாதக் கட்டுரையில் சுட்டியிருந்தேன்”.
அப்பரின் மந்திரமாய நீறும் தாண்டவரின் அருமருந்தும்:
ஒவ்வொரு கலைஞனுக்குமே தமது முன்னோடிகளின் தாக்கமும், அவர் விட்டுச் சென்ற தடங்களைப் பின்பற்றுதலும் இருக்கும். திருநாவுக்கரசப் பெருமானின், “மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு” என்கிற பாடலின் தாக்கமாகத்தான், தாண்டவரும் காம்போதி இராகத்தில் அமைந்த, “ அருமருந்தொரு தனி மருந்திது அம்பலத்தே கண்டேன்” என்று பாடுகிறார். இதில் நீறைப் பாடாது நீறணிந்த நெற்றிக்கண்ணனாரையே “மருந்தாகப்” போற்றிப் பாடுகிறார்.
“திருமருந்துடன் பாடும் மருந்து, தில்லையம்பலத்தில் ஆடும் மருந்து, இருவினைகள் அருக்கும் மருந்து, ஏழை அடியார்க்கும் இரங்கும் மருந்து, திரித்தி தித்தியென்றாடும் மருந்து, தேவாதி மூவர்கள் காணா மருந்து, கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து, காலனைக் காலால் உதைத்த மருந்து” என்றெல்லாம் அம்பலத்-தண்ணலையே பவ நோய்களைப் போக்கும் மருந்தாகப் போற்றிப் பாடுகிறார்.
தன்குற்றங்களைச் சொல்லியும் தயைவேண்டல்:
பாபநாசம் சிவனைப்பற்றிய கட்டுரையில் சுட்டப்பட்டிருந்த “பொல்லாப் புலியிலும்” என்ற பாடலைப் போலவே, காமவர்த்தினி (பந்துவராளி) இராகத்தில் “ஈசனே கோடி சூரியப் பிரகாசனே கனகசபை” என்ற பாடலில், தான் குற்றங்களையெல்லாம் சொல்லி, உயர்குணங்கள் இல்லாதோனாயினும் தனக்கு கனகசபேசன் அருள் புரியவேண்டும் என்று எல்லாச் சரணங்களையும் முடித்திருப்பார்.
அறியேன் நெஞ்சில் நேசம் பிறியேன் வருங் கருமம்
குறியேன் அறிவில் லாத சிறியேன் என்னை நீயாளாய்
நினையேன் உனை வேடமும் புனையேன் சிவகங்கையில்
நனையேன் கொடியதீ வினையேன் உய்யவே யாளாய்
துதியேன் வணங்கா வஞ்ச மதியேன் என்றாலும் சபா
பதியே நம்பினேன் சிவ கதியே தந்து எனையாளாய்
தாண்டவரின் பாடல்களில் சைவநெறி:
பொதுவாக இவருடைய கீர்த்தனைகளில், பல புராண செய்திகளை சொல்லியிருப்பார்; சிதம்பர
நகர வருணனைகளும், கோவிலின் வருணனைகளும் பல பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. முத்துத்தாண்டவர் பாடல்களில் அத்வைத சிந்தனைகளும் ஏராளமாக உண்டு. ஆபேரி இராகத்தில் அமைந்த ‘என்னை எனக்குத் தெரிய சொல்வாய்- தில்லைப் பொன்னம்பலத்தரசே” என்ற பாடலில், “ தன்னையறியும் அறிவது நீ சற்றும் தப்ப ஒண்ணாதிப்போ சாமி சமயம்” என்று பாடி, “தன்னை அறிவதுவே மெய்ஞான போதம்” என்னும் சைவ சித்தாந்தக் கருத்தை மிகவும் எளிதாகக் கூறிவிடுவார்.
எத்தனையோ பாடல்களைப் பற்றி விவரித்து எழுதலாமென்றாலும், கல்யாணி இராகத்தில் அமைந்த “ஆடினதெப்படியோ நடனம் நீர் ஆடின தெப்படியோ” இவருடைய தத்துவத் தேடலை, சைவசித்தாந்த புரிதலை தெளிவாக அடிக்கோடிட்டு காட்டுவதாகும். அத்துவிதம் (அத்வைதம்) என்ற சொல்லே வியப்புக்குரிய சொல். ஆதி சங்கரர் காலத்துக்குப் பிறகே இச்சொல் புழக்கத்துக்கு வந்தது. இது இறைபொருள்/தத்துவம் என்பதை தெளிவாக இரண்டல்ல என்று குறிக்கும் சொல்! ஆனால் அவனை நிச்சயமாக ஒன்றென்றோ, ஒன்றுமில்லாத சூனியமென்றோ கூறவில்லை. இதைப் பற்றி ஒரு வெண்பாவை சிலநாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.
ஒன்றானால் கூறலாமே ஒன்றென்றே - அத்வைதம்
ஒன்றல்ல இல்லாத ஒன்றுமல்ல? - நன்றுநோக்கின்
ஒன்றுக்கு மேலான ஒன்றென்றும் இல்லையது
ஒன்றுக்கும் ஒப்பிலா ஒன்று
இதே கருத்தை பதினைந்தாம் நூற்றாண்டிலே பாடலிலே அற்புதமாகச் சொல்லிவிட்டார் நம் தாண்டவர். அப்பாடலின் சரணங்கள் ஒவ்வொன்று அற்புதமானவை.
ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றிரண்டு மல்ல
நன்றல்ல தீதல்ல நாதவிந்து மல்ல
அன்றல்ல இன்றல்ல ஆதியந்த முமல்ல
மன்றுள் மரகத வல்லிகொண் டாடநின் (றாடின)
இறுதியாக சில சிந்தனைகள், செய்திகள்:
தாண்டவரின் இசைப்பாடல்களில் நிரம்பிய கவித்துவமும் இருந்தன, அவருடைய முழுமுதல் நம்பிக்கையான சைவநெறி சார்ந்த கருத்துக்களும் இருந்தன, ஆற்றோட்டமான நடையும் இருந்தது; நடமாடி வந்த சொல்லொழுக்கும் இருந்தது. எல்லாவற்றையும் விஞ்சி, சைவ நாயன்மார்களின் திருமுறைக்கும், மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்தும், சற்று குறைவில்லாத பக்தி நெறி, அதுவும் இசையோடு கூடி பண்டிதர் பாமரர் என்று எல்லோரையும் ஈர்க்கக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது. முத்துத்தாண்டவர் காலத்தில் எந்த இராகங்கள் எல்லாம் புழக்கத்தில் இருந்தனவோ தெரியாது. இப்போது அவருடைய பாடல்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் மெட்டுக்கள் பலவும் பின்னாளில் அமைக்கப்பட்டவையேபோல் தோன்றுகின்றன. அவருடை பரம்பரை-யினர் வழியாக தமிழ்ப்பண் முறையிலே வந்திருக்கும் சிலபாடல்கள், சாதாளி, மேற்செம்பாலை, அந்தாளிக் குறிஞ்சி, பாலையாழ், சோமராகம், அந்தி, சாயரி, சாயவேளர் கொல்லி, செவ்வழிப்பாலை, மேகராகம், முல்லைப்பாணி, சாமரம், தக்கேசி, இந்தளம், பழம்பஞ்சுரம், செந்துருத்தி, தக்கராகம், பழந்தக்கராகம், காஞ்சி, மருதயாழ் போன்ற பண்பெயர்களைத் தாங்கிவந்தாலும், அவற்றின் இன்றைய கருநாடக சங்கீத இணை/ஓப்பு இராகங்களிலேயே பாடப்படுகின்றன. இணைய இசைத்தளங்களில் இவருடைய பலபாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன. உங்களுக்காக இந்த மாதத்திய பரிந்துரைப் பாடல்கள்:
“அருமருந்தொரு”, “ஆடிக்கொண்டார்”, ஆரார் ஆசைப்படார்”, “ஈசனே கோடிப்ரகாசனே”, “உனை நம்பினேன்”, “காணாமல் வீணிலே”, “சேவிக்க வேண்டுமைய்யா”, “தெரிசித்தளவில்”, “மாயவித்தை”, “அம்பர சிதம்பர”, “ஆடினதெப்படியோ”, “மற்வாதிரு நெஞ்சமே”, “கண்டபின் கண்குளிர்ந்தேன்”
இன்னும் இசைவாணர்கள் சுரக்குறிப்பிலிருந்தும் பாடாத பல அருமையான பாடல்கள் இருப்பினும், அவை ஏட்டளவில் இருப்பதுமட்டுமே உண்மை. விரித்த கடையில் கொள்ளும் இசைவாணர்கள் மிகவும் குறைவு. முயன்றால் செவ்விசையில் அற்புதமான தமிழ்பாடல்கள் மேடைகளிலே ஒலிக்கலாம்..
arumai arumai
பதிலளிநீக்கு