செவ்வாய், 19 ஜனவரி, 2010
நம்பிக்கை - உணர்தல்
சன் டீவியில் வரும் மிகவும் குறைவான நல்ல நிகழ்ச்சிகளில், அதிகாலையில் வரும், "இந்த நாள் - இனிய நாள்”, ஒரு சுவையான, பயனுள்ள நிகழ்ச்சி. மறைந்த தென்கச்சி கோ. சுவாமிநாதனும், தற்போது சுகி. சிவமும் நல்ல செய்திகளைப் பயனுள்ள வகையிலே சொல்லி வருகிறார்கள். இந்த வாரத் தொடக்கத்தில், நம்பிக்கை - உணர்தல் என்பவற்றைப் பற்றிய சுகி. சிவத்தின் எண்ண வெளிப்பாடுகள் சிந்திக்கவைக்கும் செய்திகள். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே புழக்கத்தில் இருக்கிற, நன்கு அறிமுகமான வார்த்தைகள். எத்தனைச் சொற்களை அவற்றின் உட்பொருளை அறியாமல், உணராமல் நாம் சொல்லாடல் செய்கிறோம் என்று என்னை உணரவைத்த மணித்துளிகள் சுகி. சிவம் பேசிய தருணங்கள்.
நம்பிக்கை, உணர்தல் என்பவை இரண்டுமே தனிமனித அனுபவங்களாகக் கொள்ளப்பட்டாலும், நம்ப வைப்பதும், நம்புவதும், பிறர் ஊக்கியோ, அல்லது சுய சிந்தனையில் பிறந்த முடிபினாலோ ஏற்படுபவை. நான் அல்லது நாங்கள் நம்புவதை நீயோ, நீங்களோ, பிறரோ நம்பவில்லையானால், பிணக்கும், மனக்கசப்பும், சமயங்களில் சண்டைகளும் ஏற்பட்டுவிடுகின்றன.
கடவுள் நம்பிக்கை, கடவுள் இல்லை என்ற நம்பிக்கை, சமய நம்பிக்கை, சாதி நம்பிக்கை, கருத்தில் நம்பிக்கை, காதலில் நம்பிக்கை, தலைவனில் நம்பிக்கை என்று எல்லாமே கட்சிகட்டும் விவகாரங்கள், மற்றும் அடிப்படையிலே பிரிவினை ஏற்படுத்துபவை. ஒன்றுபடுத்துவது போல தோன்றி, கூட்டங்களைச் சேர்த்து, உன்பலமா, என்பலமா என்று தோள் தட்டுபவை.
உணர்தல் என்பது உள்ளொளி பெருகுதல், நம்பிக்கை உள்ளிட்ட அத்தனை மாயங்களும் அருகுதல்; உள்ளுக்கு மெய்யைக் காட்டும் தரிசன வாயில். உணர்ந்தபின் உவகை, உணர்ந்தவரோடும், அல்லாதவரோடும், சமநோக்குடைமை, கண்டவர் விண்டிலராகும் தன்மை இவையெல்லாம் தானாகவே அமைகின்றன. ஏனென்றால் உணர்ந்தவர் உணர்வது ஒன்றுதாம். சொல்லுக்கடங்கா, வேற்றுமைகளும், சுயபுத்தி என்கிற ஆணவமும் அடங்காத மனங்கள் உண்மையின் தரிசனத்துக்குப் பண்படாதவை, தொலைவில் உள்ளவை. நான், எனது என்பவை ஒழிந்தாலே, அதன் விளைவாம் கட்சிகூட்டல்களும் அழிந்து, சுயதரிசனத்துக்கும், உண்மையின் தேடலுக்குமான பக்குவம் வந்துவிடும்.
எனக்கும் கூட சிந்திப்பது எளிதாக செயலாக்கம் கடினமாக உள்ள ஒன்று இது. இதற்காகத்தான் சொன்னார்களோ... ? “ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள்.. ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்: என்று?
வியாழன், 31 டிசம்பர், 2009
சென்னயில் கச்சேரி ஸீஸன் 2009-2010
அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போது, ஏதோ எல்லா கச்சேரிகளுக்கும், செல்லப்போவதாக நிச்சயம் செய்துகொண்டு வந்தாலும், சென்னை போக்குவரத்து நெரிசல்களும், மற்ற வாகன வசதி சிக்கல்களும், உறவினர் வருகைகளும், அழைப்புகளும் ஒட்டுமொத்தமாக நேரத்தை ஆக்ரமிப்பு செய்து கொள்ள, முடிந்த நேரத்தில் செல்லக்கூடிய கச்சேரிகள் மிகவும் குறைவுதான்.
இந்தவருடம், சௌமியா, டி.என்.எஸ், க்ருஷ்ணா, சஞ்சை, அஷோக் ரமணி, சங்கர நாராயணன் இவர்களின் கச்சேரிகளுக்குத்தான் செல்ல முடிந்தது... தவிர சில உதிரி ஆய்வு விரிவுரைகள்-விளக்க நிகழ்வுகள், குறிப்பாக எஸ்.ஆர்.ஜானகிராமன் அவர்கள் பார்த்தஸாரதி அரங்க நிகழ்ச்சி, என்று சில்லரை சில்லரையாக நிகழ்ச்சிகள்.
சௌமியாவின் சென்னை ம்யூஸிக் அகாதமி கச்சேரி மிகவும் நிறைவு. அதிகம் பாடப்படாத கோரி ஸேவிம்பராரே (கரஹரப்ரியா) அழகாகப் பாடப்பட்டது.. அதிக ஆர்ப்பாட்டமில்லாத கச்சேரி.
நாரதகான சபாவில், டி.என்.எஸ் அவர்களின் கச்சேரி, நிறைவான ஒன்று. ஆள் இளைத்தாலும், இசையில் இளைக்காத, இளமை உள்ளவர் சேஷூ. அவ்ர் எடுத்துக்கொண்ட பெரிய உருப்படி சிந்தாமணி ராகமும், ஸ்யாம ஸாஸ்த்ரியின் "தேவி ப்ரோவ" க்ருதியும்தான். அவரால் மட்டுமே செய்யமுடிந்த செயல், அந்த ராகத்தை அவ்வளவு விரிவாகப்பாடியது.
டி.எம்.க்ருஷ்ணாவின் அகாதமி கச்சேரி, வேகமும், விவகாரமும் நிறைந்த, கைத்தட்டல்களை அள்ளிக்கொண்ட கச்சேரி. பாபனாசம் சிவனின், அப்பன் அவதரித்த கதாம்ருததில் பாடிய மின்னல் ஸ்வரப் பின்னல்களுக்குப் பிறகு பாடிய தோடி கொஞ்சம் சுமார் ரகம்தான். ப்ருந்தாவன ஸாரங்க க்ருதியான சௌந்தர்ராஜத்துக்கு பாடப்பட்ட ராக ஆலாபனை மிகவும் சுமார் ரகம்தான்.. க்ருஷ்ணா ரொம்பவும் பேசுகிறார். ரசிகர்களின் கூட்டம் இன்று இருக்கும், நாளைக்கே வேறு திசைக்கு மாறிவிடும்.. வித்யா கர்வம் நியாயமானது என்று வாதிப்பவர்கள் பலர் இருந்தாலும், வித்தைக்கு அழகு வினயம்..
சஞ்சய் நன்றாகப் பாடுகிறார், குரல் சிறிது கனைசலாக இருந்தாலும். அன்று பாடிய ஆபோகி நன்றாக இருந்தது.. ஆனால் கோபால க்ருஷ்ண பாரதியின் "சபாபதிக்கு" தேவலாம் ரகம். ஆகிரி நல்ல முயற்சி.. ஆனால் வந்தது வராமல் பாடுவது கஷ்டம்தான்.. அகாதமி கச்சேரியில் அவருக்கு குரல் கொஞ்சம் படுத்தல். அதனாலேயே நிறைய ஸ்ருதிக்குற்றங்கள், தவறல்கள்..
இவர் எம்.டி.ஆர் மாதிரி பாடுகிறார்.. கல்யாணராமனாய் மாறிவிடுகிறார். ஏன் அவரைப்போல பாடமாட்டேன் என்கிறார்? சஞ்சய், நீங்கள், நீங்களாகப் பாடுவதே பிடித்திருக்கிறது..
அஷோக் ரமணி, இவர் குரலில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. மேல் ஷட்ஜத்தில் சேரும் சமயங்களில் தேய்தல் இருக்கிறது.. ஆனால், அபரிமிதமான ஞானமும், தாளக் கட்டுப்பாடும் அமைந்த பாட்டு இவருடையது. காம்போஜியில் பாடிய மரிமரி நின்னே, கச்சேரி மேடைகளில் மிகவும் அபூர்வமாகப் பாடப்படும் க்ருதி.. மிகவும் நிறைவாகப் பாடினார். அவர் பாடிய பல்லவி திஸ்ர ரூபகம், ஸங்கீர்ண நடை (இதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்). மிகவும் கஷ்டமான ஒன்று.. மிகுந்த கவனத்துடன் பாடினார். ஷண்முகப்ரியா ராகத்தில் ஒரு இடத்தில் ஸ்ருதி விலகிய உடனே, அதை அவசரமாக முடித்துவிட்டால் போல பட்டது...! கூட்டிக் கழித்துப் பார்த்தால் நிறைவான கச்சேரி... ஆனால் கூட்டம்? நம் ரசிகர்கள் ஆர்பாட்டத்துக்கும், ஆரவாரத்துக்கும் ஆர்.எம்.கே.விக்கும் தான் கூடுவார்கள் போலிருக்கிறது...!
டி.வி.எஸ்.. விவகாரங்கள் குறைந்த, இசையனுபவம் மட்டும் மிகுந்த சுகமான கச்சேரி...
இன்னும் கச்சேரிகள் இருக்கின்றன செல்வதற்கு, ஊருக்குக் கிளம்புவதற்குள்.. மீண்டும் எழுதுகிறேன் ஊருக்கு வந்தவுடன்..!
செவ்வாய், 10 நவம்பர், 2009
ரொம்ப நாளாச்சு.. மறந்தே போச்சு..
எழுத எத்தனையோ இருந்தாலும், இப்போதைக்கு ஒரு கவித்துவமான வெளிப்பாடு மட்டும்…! இது ஒரு பொது நிலை வெளிப்பாடுதான். எல்லோருக்கும், எண்ண அளவிலாது கடந்து செல்லக்கூடிய நினைவுதான். தவறான வெளிப்பாடு என்பவர்கள் தவிர்க்கலாம் – உண்மையானவர்கள் முகத்திலில் ஒரு சிறு புன்னகை வரலாம்….! முதல் காதல் இல்லாத உள்ளமே இருக்காது.. அதுவே முடிவான காதலாய் கொண்ட உள்ளங்கள், இதைப் படிக்க வேண்டாம்..! வாழ்ந்து முடிந்து, வயோதிகத்தில் அசைபோடும் நினைவுகளில் இதுவும் இருக்குமே!
“முதல் காதல்”
மூவாறு வயதினிலே முகிழ்த்தது என் முதல்காதல்
முதுமையதன் வாசலிலும் முகங்காட்டி முறுவலிக்கும்.
என்றோவென் எண்ணத்திலே ஏறிவிட்ட அவள் நினைவு
என்றென்றும் என்னுடனே இதயத்தில் பயணிக்கும்.
தூரங்கள், தேசங்கள், புதிதான நேசங்கள்
சுமையான பாசங்கள், சுமந்துவந்த வாசங்கள்
முதலென்று அறியுமா? முடிவைதான் அறியுமா?
மூச்செல்லாம் அவளென்று இருப்பதைத்தான் புரியுமா?
அவள்நினைவு கீற்றாக மனத்திரையில் ஓடுகையில்
அகம்நிறையும்- அண்ணாந்து பார்த்துகண் விழிப்பனிக்கும்!
பிறவுறவில் இருந்தாலும், பிழையென்று சொன்னாலும்,
அறமுறைக்கிது அடுக்காது விழைவதுவும் வீணாகும்,
என்றெல்லாம் தெரிந்தாலும், என்மனத்தின் ஓரத்தில்
என்றைக்கும் தங்கிவிட்ட ஏக்கம்தான் என்செய்யும்?
தேகத்தின் தாகத்தை தீர்ப்பதற்கா இக்காதல்?
மேகத்தில் கருமுகிலாய் கனப்பதற்கா இக்காதல்?
இதயத்தின் கருவறையில் காதலையே தெய்வமென
உதயத்தில் தரிசிக்க உள்ளத்தில் பூட்டிவைத்தேன்
எங்கிருந்தாலும் வாழ்கென்று வாய்சொன்னாலும்
என்னவளே என்னிதயத்தில் என்றைக்கும் வாழ்வாயா?
பொன்னியின் செல்வன் நாடகம் - ஒரு பார்வை
அவற்றின் பெருமைகளை உணர்ந்து, அவற்றின் நீட்சியாக இன்றைய சமுதாயத்தை நடத்திச் செல்லவும், குறைந்தபட்சம் அவற்றைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்லவும் கூட இன்றைய போக்கு இடமளிக்காமல் இருப்பது ஆழ்ந்த சோகத்தையும், கவலையையும் தந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரது தணியாத ஆர்வத்தினால், அப்பொக்கிஷங்கள் முழுவதும் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் விடாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
பல்லவப் பேரரசும், பின்னால் வந்த சோழர்களும், பிற்கால நாயக்கர்களும், தஞ்சை மராத்தியரும், கலைகளை வளர்ப்பதிலும், கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் காட்டிய அக்கறையின் அகச்சான்றாக, அக்காலத்திய அறிவுப்பொக்கிஷங்கள் ஓலைசுவடிகளாகவும், உயர்ந்து நிற்கும் தென்னகக்கோவில்களாகவும் பிரதிபலிக்கின்றன இன்றும்.
பெருவுடையார் ஆலயம் என்று தஞ்சையில் சிறந்த சிற்பக்கலை சின்னமாக, ராஜராஜ சோழனின் ஆட்சியின் உன்னத வடிவமாக உயர்ந்து நிற்கும், பெரிய கோவிலும், அதைப்போன்ற நூற்றுக்கணக்கான கோவில்களும் தமிழரின் பொற்கால கட்டிடக்கலைச் சிறப்பை இன்றும் உரத்துச் சொல்கின்றன.
சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கும், சரித்திரக் கதை புனைவோர்களுக்கும், வியப்பையும், கற்பனையயும் ஒருங்கே தரக்கூடிய அமர சின்னங்கள் அவை.
அமரர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, தமிழக சரித்திர வரலாற்றுக் கதை ஆசிரியர்களில் முதன்மையானவர், முக்கியமானவர். அவருடைய சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும், அவற்றில் உலவிடும் பாத்திரங்களும், சரித்திர ஆர்வலர்களையும், ஏன், ஆராய்ச்சியாளார்களையும் கூட பல்லவ, சோழ பேரரசுகளின் காலம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், இந்த மனிதர்கள் எல்லாம் உயிரோடு, இரத்தமும் சதையுமாக மாமல்லபுரத்திலும், வாதாபியிலும், தஞ்சையிலும், இலங்கையிலும் உலவி வந்திருக்கவேண்டும் என்றே எண்ணவும், நம்பவும் வைக்ககூடியவை..
செப்பேட்டு, கல்வெட்டு குறிப்புகளிலிருந்தும், சிறந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளிலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை அமரர் கல்கியின், ஈடு, இணையற்ற, கவித்துவமான கற்பன நயத்தோடு, உயிரோடு உலவிய பாத்திரங்களோடு, கற்பனைப் பாத்திரங்களையும் இணத்து புனையப்பட்ட அமரகாவியங்கள் இரண்டு நாவல்களுமே.
பொன்னியின் செல்வனின் சிறப்பு என்னவென்றால், கதைத்தலைப்பின் நாயகன், கதாநாயகன் இல்லை! கதாநாயகன் வந்தியத்தேவன் ஆனாலும், கதை இறுதியில் உத்தமச்சோழ சக்ரவர்த்தியின் மணிசூட்டு விழாவோடு நிறைவு பெறுகிறது. இந்த விசித்திர கதையமைப்பு, சரித்திர நிகழ்வோடு ஒத்துப்போவதானலும், இதற்கு முன்பும், பின்பும் இல்லாத காவியமரபு.
இந்த முரண் மரபே, திரைக்கதை ஆசிரியர்களையும், நாடகமாக்குவோரையும் சிறிது குழப்பகூடும். கதையில் வரும் ஏறக்குறைய அறுபது கதாபாத்திரங்களையும், பல்வேறு இடங்களையும், நம்பகமான முறையிலே வெளிக்கொணர்வது பெரும் பொருட்செலவு மட்டுமல்லாது, தயாரிப்புக்கும், கதை சொல்லும் நேர்த்திக்குமே பெரிய சவால்கள்.
ஸான்ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றமும், நாடகவடிவமாக்கி, இயக்கிய பாகீரதி சேஷப்பனும், அவருடைய தயாரிப்பு நிர்வாகக் குழுவும், நடிகர்களும் இந்த சவால்களை சந்தித்தது மட்டுமல்லாமல், அவற்றைக் கடந்து சாதித்திருக்கிறார்கள்.
தயாரிப்பு நிர்வாகத்திலும், காட்சி வடிவமைப்புகளிலும் ஸ்ரீதரன் மைனரும், வேணு சுப்ரமணியனும் ஆற்றிய பங்கு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய ஒன்று. காட்சிகளை வேகமாக நகர்த்துவதில், நடிக, நடிகையர்களை, காட்சிகளுக்கு மேடையில் குறித்த நேரத்தில் இருத்தியதில் பல்லவி நாகிரெட்டியின் சிரித்த முகத்திற்கு சிறப்பான பங்கு உண்டு.
தடுமாற்றங்களும், வசன மறப்புகளும், தொழில்வழி நாடக நடிகர்களுக்கே நேர்வதுதான். ஆனால் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே முக்கியம். நம்முடைய வளைகுடா நடிகர்கள், தங்களுடைய ஆர்வங்காரணமாக, சொந்த வேலைகள் மிகுந்த வார இறுதிகளை தியாகம் செய்தும், அலுவலக நெருக்கடிகள், வீட்டோர் அலுத்துக் கொள்ளல்கள் இவற்றை சமாளித்தும், நாக்கை உருட்டி, பிறட்டி போடக்கூடிய தமிழ் வசனக்களை, உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்கள் கெடாமலும், மிகவும் நேர்த்தியாக நடித்தது மட்டுமல்லாமல், ஏறக்குறைய அறுநூறுக்கும் மேற்பட்ட, நாடக ரசிகர்களை ஏறக்குறைய நான்கு மணி நேரத்திற்கு கட்டிப்போட்டது ஒரு உயரிய சாதனைதான்!
“தங்கத்திலே ஒரு குறையிருந்தால் அது தரத்தினில் குறைவதுண்டோ”?
பாகீரதி சேஷப்பன் சொன்னது போல, சரித்திர நாடகத்தினை, தூயத் தமிழ் வசனங்களோடு, இத்தனையாயிரம் மைல்களுக்கப்பால் அரங்கேற்றும் போது, அதற்கு உண்டான வரவேற்பினைப் பற்றிய சந்தேகங்களுக்கு, நேற்றைய இரசிகர் கூட்டம் உரத்துச் சொல்லிவிட்டது பதிலினை!
தலைமுறைகளைக் கடந்த, காவியம் இது என்ற அங்கீகாரத்தினை, அமரர் கல்கி வானுலகிலிருந்து பார்த்து, கண் விழிகள் பனித்துக் கொண்டிருப்பார்!
சனி, 20 ஜூன், 2009
ஆலிலை மேலொரு அழகிய பாலகன்
ஏக்நாத் ஈஸ்வரன் (1910-1999) அண்மையில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த தன்னையுணர்ந்த தத்துவ தரிசி. இந்தியாவில் நாக்பூர் பல்கலை கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக் கழகத்து ‘ஃபுல் ப்ரைட் அறிஞராக”, (Fulbright Scholar) 1960-களில் வந்த அவர், நீலகிரி பிரசுரம் (Nilgiri Press), மற்றும் “நீலமலை தியான வளாகம்” (Blue Mountain Center of Meditation), முதலியவற்றை நிறுவி, ஆன்மிகம், தியானம், பகவத் கீதை, உபநிஷத்துக்கள், தம்மபாதா போன்றவற்றுக்கு விளக்க உரையாக, நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவருடைய “தினசரி வாழ்க்கைக்கான பகவத்கீதை” தொடர் புத்தகங்களின் இரண்டாவது தொகுப்பான “ஆயிரம் சூரியர்களைப் போல” என்ற புத்தகத்தின் சில பகுதிகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்க்கண்டேயன் கிருஷ்ணனைப் பார்த்து, ‘மாயைப்” பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்க, நடக்கும் நிகழ்வுகளை, மிகவும் அழகாக, பிரமிப்பாக விளக்கியிருப்பார். அந்த விளக்கங்களை படித்தன் காரணமாக எழுந்த உள்ள எழுச்சியில் பிறந்த பாடல்தான் இதோ…! கவிதைக்கான முதல் காரணமான “உள்ள எழுச்சி” என்பதைத்தவிர மற்று இலக்கண விதிகளுக்கெல்லாம் உட்பட்டுள்ளதா என்று சிந்திக்காமல் எழுதிய வெளிப்பாடு இது…!
ஆலிலை மேலொரு அழகிய பாலகன்
கால்விரல் கனியிதழ் வாயினில் குலவிட
மாயங்கள் செய்கின்றான் – எல்லாமவன்
மாயயை என்றே சொல்கின்றான்.
ஆலமுண்ட நீலகண்ட ஆதிசிவ நாதன்
காலனை கடிந்தே கார்த்தமார் கண்டன்
காலமும் ஞாலமும் கடந்த மாயையின்
கருத்துரைக்கக் கேட்டான் – கண்ணனோ
கருத்தையே அழித்தான் – அகமாயக்
கருத்தையே அழித்தான் -
உள்ளிழுக்கும் மூச்சிலே உயிரெலாம் ஒடுங்கும்
உள்ளும் புறமுமென்ற உணர்வுமே அடங்கும்
எல்லாம் ஓய்ந்துவோர் எல்லையிலா மெளனம்
ஏகாந்தமாய் அங்கே நிலைபெறும் மோனம்
ஹூங்கார நிஸ்வாஸம் உண்டாக்கும் ப்ரபஞ்சவெளி
ஆங்கார மாயைதனை அழிக்கின்ற ஞானஒளி
இருவினை இருள்மாயக் களியினிலே களைப்பார்
கருமவினையில் இங்கே பிறந்திறந் திளைப்பார்-பின்
பரமயோக பாதன் பக்தியிலே திளைப்பார்.
எல்லாம் துறந்த துறவியருக்கும் இலக்கியமும், இலக்கணமும் துறக்கமுடியவில்லையே என்று நினைப்பதுண்டு. ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, அக்கூற்றையும் கவியாகச் சொன்னவர்கள் நம் துறவிகளும் ஞானியர்களும். கவிதை ஆசைமட்டும் எவரையும் விட்டதில்லை! இதற்குக் காரணம் எதுவாக இருக்கமுடியும்? சிந்திப்போம் அடுத்தமுறை சந்திப்பதற்குள்..
வியாழன், 18 ஜூன், 2009
தாயுமானவ சுவாமிகள்
வரகவிகள் வாக்கிலிருந்து பொழிகின்ற கவியமுதங்கள் உள்ளுக்குள் அவர்கள் உணர்ந்து, துய்த்த மெய்யமுதங்கள். பாரதியின் “பாருக்குள்ளே நல்ல நாடு” என்கிற கவிதையிலே, அவன் சொன்னது அத்தனையும் ஏதோ தன் உள்ளத்தில் பாரதநாடு எப்படி இருக்கவேண்டுமென்று நினத்து சொன்னதில்லை. வெற்றுப் பெருமிதத்திலே எழுதியவையும் இல்லை. நம் இலக்கியங்களும், முறிவுறாத சமய, கலை, கலாச்சார, மக்கள் வாழ்வு நெறி தொடர்வுகளைப் பற்றி விட்டுச்சென்றிருக்கும் அகச்சான்றுகளின் உண்மையினை உணர்ந்ததன் வெளிப்பாடே…
“ஞானத்திலே பரமோனத்திலே – உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு” – இந்தப் (பாருக்குள்ளே)
…. …. … …. …. …. … …. …. …. … ….
யாகத்திலே தவ வேகத்திலே – தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு – இந்தப் (பாருக்குள்ளே)
இக்கவிதைகாட்டும் உண்மைகள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைப் போல், அரசியல், சமயம், கலாச்சார. சமூகச் சீரழிவுகள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சூழலிலும், இன்றைக்கும் பாரத்தின் பல இடங்களில் சாதாராண மக்களும் உணருபவை. பாரத தேசம் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பதற்கு காரணம், சிறிது காலமாகவே “கலாச்சாரங்களின் கலப்பிடமாக” இருந்துவரும் அமெரிக்காவுக்கு முன்பாக, ஏறக்குறைய 5000-ம் வருடங்களுக்கும் மேலாக அனைத்து திசைகளிலிருந்தும் மென்முறையாகவோ, வன்முறையாகவோ வந்திறங்கிய கலாச்சார நுகர்வுகளுக்கும், திணிப்புகளுக்கும், பாரதநாடு ஆட்பட்டிருப்பதால்தான்.
முரண்பாடுகள் என்பதாலேயே மோசமென்று பொருளில்லை. ஒட்டுமொத்த பாரத்தின் முதிர்ந்த சிந்தனை வளர்ச்சியையும், வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் அடிநாதத்தையுமே அவை காட்டுகின்றன.
ஆதிசங்கரர், புத்தர் தொடங்கி சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள தவஞானியர் எத்தனையோ! சமய சிந்தனையைச் செழுமைப் படுத்தியதிலும், மக்களின் பொதுவாழ்க்கை ஒழுக்கநிலைக்கக் கரைபடிமங்களாகவும் விளங்கியதில் இவர்களின் தத்துவ தரிசனங்களும், அவற்றின் இலக்கியப் பதிவுகளும் முக்கிய பங்கை ஆற்றி வந்திருக்கின்றன. இவர்களின் சிந்தனைப் பதிவுகளை, அவற்றில் அவர்கள் கால அரசியலின் உரசல்களை, அவற்றின் முழு சாரத்தை, புரிந்துகொள்ள ஒரு பிறவி இருந்தால் போதாது. ஆனாலும் என்னால் இயன்றவரை, சில முக்கியமான சமயச் சிந்தனையாளர்களை அறிந்துகொள்ளும் முயற்சியிலே, தாயுமானவ சுவாமிகளின் பாடல்களைச் அண்மையில் படிக்க நேர்ந்தது.
தமிழ்மொழியின் வனப்பிலே, வளப்பத்திலே உள்ள பெருமிதத்திலும், பிரமிப்பிலும் மட்டுமே படிக்க ஆரம்பித்த எனக்கு, இந்த செல்வங்களையெல்லாம் கடந்த 100 வருடங்களில் வேகமாக இழந்துகொண்டிருக்கிறோமே என்னும் பதைப்பு தோன்றினாலும், இழப்பும், மீட்பும் சுழற்சியே என்கிற உலக விதியின் உண்மை ஆறுதலைத் தருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் வேதாரண்யம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடு (வேதங்களை வளர்த்த வனம்) என்னும் சிவத்தலம் ஊரிலே சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பாக, தஞ்சையை விஜயரங்கசொக்கநாத நாயக்கர் ஆண்ட காலத்திலே, சைவ வேளாளர் குலத்திலே தோன்றிய கேடிலியப்பப் பிள்ளை, கெஜவல்லி அம்மை தம்பதியர்க்கு முதல் மகனாய் பிறந்தவர் சிவசிதம்பரம். இந்த பிள்ளை கேடிலியப்பபிள்ளையின் தமயனாருக்கு சுவீகாரமாகக் கொடுக்கப்பட்டார்.
தஞ்சை அரசரிடம் சம்ப்ரதியாக (பிரதான கணக்கர்) வேலை செய்து வந்த கேடிலியப்பப் பிள்ளை வேலை நிமித்தமாக திருச்சிராப்பள்ளியில் குடிபெயர்ந்து வசித்துவந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனுக்கு தாயுமானவர் என்றே பெயர்.. அவ்விறையின் மேல் கொண்ட பக்தியினாலே, 1707-வருடத்தில் பிறந்த தனது இரண்டாவது மகனுக்கு தாயுமானவன் என்றே பெயரிட்டார்.
இள வயதிலேயே அறிவுத்திறம் மிக நிரம்பியவராக விளங்கிய, சிராப்பள்ளியிலே பாடசாலை நடத்திவந்த சிற்றம்பலதேசிகரின் மாணவராக இவர், தமிழ், சம்ஸ்கிருதம், கணிதம், ஜோதிஷம் முதலியவற்றை கோதற்று கற்று, நல்ல நிபுணத்துவம் எய்தினார். தந்தைக்குப் பிறகு அவர் தஞ்சை அரசரிடம் சம்ப்ரதியாகவே வேலை செய்துவந்தார். காலப்போக்கில் அவர் மனம் உண்முகம் நோக்கி திரும்பியதும், சிராப்பள்ளியில் அவர் “மௌன குரு” என்று அறியப்பட்ட ஒரு மகானைச் சென்றடைந்ததும், பிறகு கௌபீனதாரியாய் திருச்சிராப்பள்ளியிலேயே துறவறம் பூண்டதும், இறுதியாக இராமநாதபுரத்துக்கு அருகேயுள்ள லக்ஷ்மீபுரத்தில், நிர்விகல்ப சமாதி அடைந்ததும் வரலாறு.
ஸ்ரீ ராமக்ருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) வெளியிட்டுள்ள தாயுமானவசுவாமி பாடல்கள் புத்தகமொன்று என்னுடைய புத்தகசேகரிப்பிலே வெகுநாட்களாகக் கிடந்தது. அண்மையில் அதை தூசிதட்டிப் படிக்கப்போக, “அடடா! இதை இத்துணை நாட்களாகப் படிக்காமல் விட்டுவிட்டோமே” என்று தோன்றியது.
தமிழ் ஞான மரபிலே வந்துள்ள எத்தனையோ ஞானிகளில், அருணகிரியார், வள்ளலார், பட்டினத்தார், பதினெண் சித்தர்கள், தாயுமானவ சுவாமிகள், போல எத்துணை மஹான்கள் எப்படியெல்லாம் கவிதைப் வெள்ளமாகப் பொழிந்திருக்கிறார்கள்?
கீழேயிருக்கும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பாடலை படிக்கும் போதே, தாயுமானவரின் ஆத்ம விசாரணயின் அகண்டம் உடனே புலனாகிறது.
அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி,
அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குள்ளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கு இச்சைவைத்து, உயிர்க்குயிராய்
தழைத்தது எது? மனவாக்கினில்
தட்டாமல் நின்றது எது? சமயகோடிகள் எலாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடவும் நின்றதுஎது?
எங்கணும் பெருவழக்காய்,
யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி, இன்பமாய்
என்றைக்கும் உள்ளது எது? மேல்
கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது? அது
கருத்திற்கு இசைந்தது அதுவே;
கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்
திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் என்னும் தலைப்பிலே எழுதப்பட்டுள்ள மூன்று பாடல்களிலுமே, குறிப்பிட்ட தெய்வம் என்று குறிப்பிடாமல், தூய அத்வைத வஸ்துவைக் குறித்த விசாரணையும், அந்த துரியபரம்பொருளின் வணக்கமுமாக செல்கின்றன பாடல்கள். காலமாய், வெறும் வெளியாய் விரிந்திடும் அகண்ட ககனமெங்கும் காலம் காலமாய் தவழ்ந்திடும் அனந்தகோடி உயிர்களை ஆக்கி, காத்து, அழித்து அந்தச் சுழற்சி நாடகமாடும், எல்லைகளில்லாப் பரமனுக்கு அஞ்சலியே முதல் பாடல்.
ஊர் அனந்தம்; பெற்றபேர் அனந்தம்; சுற்றும்
உறவு அனந்தம் வினையினால்
உடல் அனந்தம்; செயும் வினை அனந்தம்; கருத்
தோ அனந்தம்; பெற்றபேர்
சீர் அனந்தம்; சொர்க்க நரகமும் அனந்தம்; நல்
தெய்வமும் அனந்தம்; பேதம்
திகழ்கின்ற சமயமும் அனந்தம்; அதனால் ஞான
சிற்சக்தியால் உணர்ந்து
கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர்
கண்ணும் விண்ணும் தேக்கவே
கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலை;நம்
கடவுளைத்; துரியவடிவைப்;
பேர் அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும்
பெரியமௌனத்தின் வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆனந்தம் ஆம்
பெரிய பொருளைப் பணிகுவாம்.
இரண்டாம் பாடலில் அனந்தமான வேற்றுமைகளைச் சொல்லி, அதில் ஞானானந்தம் தரவல்ல கடவுளை, மெய்ப்பொருளைப் பணியவேண்டும் என்று சொல்கிறார் தாயுமானவர். இந்த பாடல், நாம் சாதாரணமாக கவனிக்கிற செய்திகளைச் சொன்னாலும், தத்துவத்தேடலின் முதல் படிகளை, படிப்போர்க்கு காட்டுவதே பாடலின் சிறப்பு.
அத்வைத வஸ்துவை; சொல்ப்ரகாசத்தனியை;
அருமறைகள் முரசு அறையவே
அறிவினுக்கு அறிவுஆகி, ஆனந்த மயம் ஆன
ஆதியை; அநாதி; ஏக
தத்துவ சொரூபத்தை; மதசம்மதம் பெறாச்
சாலம்பரகிதம் ஆன
சாசுவத புஷ்கல நிராலம்ப ஆலம்ப
சாந்தபத வ்யோமநிலையை;
நித்தநிர்மல சகித நிஷ்ப்ரபஞ்சப் பொருளை;
நிர்விஷய சுத்தம் ஆன
நிர்விகாரத்தைத்; தடஸ்தமாய் நின்று ஒளிர்
நிரஞ்சன நிராமயத்தைச்
சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு
திவ்ய தேஜோமயத்தைச்;
சித்பர வெளிக்குள் வளர் தற்பரமது ஆனபர
தேவதையை அஞ்சலிசெய்வோம்.
இந்த மூன்றாவது பாடலில் மறுபடியும் இன்ன தெய்வம் என்று சொல்லாமல், பரதேவதைக்கு அஞ்சலியாகவே செய்துள்ளார். அந்த பரதேவதையை இரண்டிலாத பொருளாய், ஒங்கார/பிரணவப் பொருளாய், ஆதியாய், அநாதியாய், ஒன்றாய தத்துவாமாய், பற்றுக்கோடில்லாத (சாலம்பரகிதம்), என்றும் உள்ளதாய், நிறைவாய் (புஷ்கலம்), தன்னைக் கொண்டாட ஆதரவு தேடாத (நிராலம்ப ஆலம்பமாய்), அதாவது தன்னை எந்த சமயக்கட்சியிலும் சேராத தன்மையனாய், நிர்மலனாய் (அழுக்கற்றவனாய்), உலகிற்கும், அண்ட வெளிக்கும் அப்பாற்பட்ட பொருளாய், புலன்களுக்கு எட்டாதவனாய், வடிவற்றவனாய், முற்றொழில் மூலகாரணனாய் (தடஸ்தம்),
குற்றமற்றவனாய்(நிரஞ்சனம்), பழுதுபடாதவனாய் ((நிராமயம்) ) கூறுகிறார். அந்தப் பரம்பொருள் நம் சித்தம் அறியாதபடி, நம் சித்தத்தில் நின்று இலங்குமாம்.
முதிர்ந்த தேடலின் உதிர்வான இப்பாடல்கள், அந்தகாலக் கட்டத்தில், மொழி வேற்றுமையில்லாத வடமொழிச் சொற்களை மிகவும் இலகுவாக, தமிழ்க் கவிதையின் இலக்கணக் கட்டமைப்புக்குள்ளேயே ஆளும் தன்மையைத்தான் காட்டுகிறது. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் அருணகிரிநாதரின் சொல்லாட்சியிலும், வடமொழிச் சொற்கள் விரவிக்கிடப்பதை பார்க்கலாம்.
மேற்கண்ட 3-வது பாடல், அருணகிரியாரின், “உருவாய் அருவாய், உளதாய், இலதாய்” என்கிற பாடலை ஒட்டியிருந்தாலும், இறைவனை, இவன் என்று கட்டம் கட்டாமல் பாடியிருப்பதிலிருந்து, அவரின் சமயம் தாண்டிய சிந்தனையையும், நோக்கினையும் காட்டுகிறது
பழுத்த சைவப்பிள்ளையான தாயுமானவர், தான் சார்ந்திருந்த சைவ சமயத்தைத் தாண்டிய சிந்தனகளைக் கொண்டிருந்தது, பிற்காலத்தவரான வடலூர் மகானான வள்ளலார் சுவாமிகளுக்கு, முன்னோடி என்றே கொள்ளலாம்..
இவருடைய துறவு எண்ணத்துக்கும், சமய சிந்தனை வளர்ச்சிக்கும், கவிதா மேதைக்குமான உந்துதலும், எழுச்சியும் எவரிடமிருந்து கிடைத்தது என்கிற கேள்வி தோன்றுகிறது! ஓரளவுக்கு அருணகிரியாரின் தாக்கம் இவருடைய பாடல்களில் தொனிக்கிறது..
எந்நாள்? கண்ணிகளில், அடியார் வணக்கம் பகுதியில் தேவார நால்வர்,பட்டினத்தார் பத்ரகிரியார், சிவஞான போதம் எழுதிய மெய்க்கண்ட சிவவாக்கியர், திருமூலர், அருணகிரியார் இவர்களை குறித்திருந்தாலும், குறிப்பாக,
“கந்தர் அநுபூதி பெற்றுக் கந்தர் அநுபூதி சொன்ன
எந்தை அருள்நாடி இருக்குநாள் என்னாளோ”
என்று அருணகிரியாரைக் குறித்துப் பாடியிருப்பதும், தன்னுடைய பாடல்களில், “சும்மா இரு” என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருப்பதும், இவர் அருணகிரியாரின் பாடல்களில் தோய்ந்திருந்தது தெரியவருகிறது. இவருடைய ஞானகுருவாக சிராப்பள்ளி மலையில் இவருக்குமுன் தோன்றி ஆட்கொண்ட மௌனகுருவும் அதுவே போதித்ததையும் படிக்கும் போது, இவருடைய குருவே அருணகிரியாராக இருக்கக்கூடுமோ என்று தோன்றுகிறது. அல்லது அருணை முனிவரின் குரு-சிஷ்ய பரம்பரையில் வந்திருக்காலாமோ என்றும் நினக்கத்தோன்றுகிறது .
எழுத ஆரம்பித்தால்வளர்ந்துகொண்டிருக்கிறது. மகான்களைப் பற்றி, படிப்பதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும்ஏராளமான செய்திகள்இருக்கின்றன. இருந்தாலும், இப்போதைக்கு இவ்வளவில் முடித்துக்கொண்டு, தாயுமானவர்பாடல்களைப்படிக்குந்தோறும், பகிர்ந்துகொள்ள மீண்டும்எழுதுவேன்…!
