ஜூன் 30, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -81

महामुनिमनोनटी महितरम्यकम्पातटी-
कुटीरकविहारिणी कुटिलबोधसंहारिणी
सदा भवतु कामिनी सकलदेहिनां स्वामिनी
कृपातिशयकिंकरी मम विभूतये शांकरी ८१॥

மஹாமுனி மனோனடீ மஹிதரம்ய கம்பாதடீ-
குடீரக விஹாரிணீ குடிலபோ³ஸம்ஹாரிணீ
ஸதா³ வது காமினீ ஸகல தே³ஹிநாம் ஸ்வாமினீ
க்ருʼபாதிஶய கிம்கரீ மம விபூதயே ஶாம்கரீ 81

பெருமுனிவர் உள்ளத்தில் நடம்புரிபவளும், புகழ்பெற்ற அழகு கம்பைக்கரை குடிலில் வீற்றவளும், கோணலான அறிவின்மையை அழித்தவளும், அனைத்து உயிர்க்கும் அதிபதியானவளும், கருணையென்னும் பணியாளை உடையவளுமான சங்கர காந்தை எனக்கு நலமே வழங்கட்டும்.

பெருமுனி வோருள்ளில் பேறாய் நடம்செயும், பேச்சுறுமேர்
இருகம்பைக் கோட்டம் இருப்பிடம் ஈண்டும், இழுதைபின்னம்
கருக்கிடும், எல்லா கருவின் கடவளும், காருணிய
விருத்தியன் கொண்டநல் வேதியன் தேவி! விரைநலமே!

பெருமுனிவோர்-மஹாமுனிவர்; பேறு-பாக்கியம்; பேச்சு-புகழ்; ஏர்-அழகு; இரு-பெரிய; கோட்டம்-கரை; இருப்பிடம்-குடில்; ஈண்டும்-சேரும்; இழுதை-அறிவின்மை; பின்னம்-கோணல்; கருக்கு-அழி; கரு-உயிர்; கடவள்-அதிபதி; விருத்தியன்-வேலையாள்; நல்வேதியன்-சிவன்; விரை-விரைந்து தருக

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


பெருமுனிவோர் உள்ளில் பேறாய் நடம்செயும், பேச்சு உறும் ஏர் இரு கம்பைக் கோட்டம் இருப்பிடம் ஈண்டும், இழுதை பின்னம் கருக்கிடும், எல்லா கருவின் கடவளும், காருணிய விருத்தியன் கொண்ட நல்வேதியன் தேவி விரை நலமே!

ஜூன் 29, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -80

त्रियम्बककुटुम्बिनीं त्रिपुरसुन्दरीमिन्दिरां
पुलिन्दपतिसुन्दरीं त्रिपुरभैरवीं भारतीम्
मतङ्गकुलनायिकां महिषमर्दनीं मातृकां
भणन्ति विबुधोत्तमा विहृतिमेव कामाक्षि ते ८०॥

த்ரியம்ப³க குடும்பி³னீம் த்ரிபுரஸுந்த³ரீமிந்தி³ராம்
புலிந்த³பதி ஸுந்த³ரீம் த்ரிபுர பைரவீம் பாரதீம்
மதங்க³குல நாயிகாம் மஹிஷ மர்த³னீம் மாத்ருʼகாம்
ணந்தி விபு³தோத்தமா விஹ்ருʼதிமேவ காமாக்ஷி தே 80

காமாக்ஷி! உன்றன் விளையாடல்கள் அமைந்த பல்வேறு தோற்றங்களை, முக்கண்ணன் மனைவி, திரிபுர அழகி, இலக்குமி, வேடராசன் மனைவி கிராதி, திரிபுர பைரவி, பாரதி, மாதங்கி, மகிடனைக் கொன்றவள், மாத்ருகா என்றும் அறிஞர்கள் வருணிக்கிறார்கள்.

முக்கண்ணன் காந்தையள், முப்புர சுந்தரி, முப்புரத்து
துக்கை, கிராதி, துளவன்மார் தூயோள், சுருதிமாதா,
மக்கி மகிடன் மரித்தவள், மாதங்கி, மாத்ருகாவாய்
மிக்காய்ந்தோர் உன்னை வியந்துகா மாட்சி விதந்திடுமே!

காந்தை-பிரியமானவள்; துக்கை-துர்கை; கிராதி-வேடன் மனைவி; துளவன்-திருமால்; தூயோள்-இலக்குமி; சுருதிமாதா-பாரதி; மக்கி-அழித்து; மரித்தவள்-இறக்கச்செய்தவள்; மிக்காய்ந்தோர்-அறிஞர்; விதந்து-சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


முக்கண்ணன் காந்தையள், முப்புர சுந்தரி, முப்புரத்து துக்கை, கிராதி, துளவன்மார் தூயோள், சுருதிமாதா, மக்கி மகிடன் மரித்தவள், மாதங்கி, மாத்ருகாவாய், மிக்காய்ந்தோர் உன்னை வியந்து காமாட்சி விதந்திடுமே!

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -79

दन्तादन्तिप्रकटनकरी दन्तिभिर्मन्दयानैः
मन्दाराणां मदपरिणतिं मथ्नती मन्दहासैः
अङ्कूराभ्यां मनसिजतरोरङ्कितोराः कुचाभ्या-
मन्तःकाञ्चि स्फुरति जगतामादिमा कापि माता ७९॥

³ந்தா த³ந்தி ப்ரகடனகரீ ³ந்திபிர் மந்த³யானை:
மந்தா³ராணாம் மத³பரிணதிம் மத்²னதீ மந்த³ஹாஸை:
அங்கூராப்யாம் மனஸிஜதரோரங்கிதோரா: குசாப்யா-
மந்த:காஞ்சி ஸ்பு²ரதி ஜக³தா மாதி³மா காபி மாதா 79

தனது மென்னடையினால், தந்த்தத்திற்கு தந்தம் என்று யானைகளோடு போர் புரிந்தவளும், தனது மென்னகையினால் மந்தாரங்களின் கருவத்தைக் குலைப்பவளும், மன்மத விருட்சத்தின் முளைபோன்றதாம் தனங்களால் சோபிப்பவளுமான, ஆதி மாதாவுமான ஒருத்தி, காஞ்சி நகரில் விளங்குகிறாள்.

மென்னடை யில்தந்த வேழங்கட் கீடாய் மிருதமிடும்;
மென்னகை, மந்தாரம் மீதேகும் தற்கினை வேரறுக்கும்;
மன்மத மூல மதுர தனங்களால் வாமமுறும்,
அன்னையள் ஆதி அமைந்தனள் காஞ்சியில் ஆண்டிருந்தே!

மிருதம்-போர்; தற்கு-செருக்கு; மூலம்-மரம்; மதுரம்-முளை; வாமம்-சோபை,ஒளி.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


மென்னடை யில்தந்த வேழங்கட் கீடாய் மிருதமிடும்; மென்னகை, மந்தாரம் மீதேகும் தற்கினை வேரறுக்கும்; மன்மத மூல மதுர தனங்களால் வாமமுறும், அன்னையள் ஆதி அமைந்தனள் காஞ்சியில் ஆண்டிருந்தே!

ஜூன் 27, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -78

एका माता सकलजगतामीयुषी ध्यानमुद्राम्
एकाम्राधीश्वरचरणयोरेकतानां समिन्धे
ताटङ्कोद्यन्मणिगणरुचा ताम्रकर्णप्रदेशा
तारुण्यश्रीस्तबकिततनुस्तापसी कापि बाला ७८॥

ஏகா மாதா ஸகல ஜக³தாமீயுஷீ த்யான முத்³ராம்
ஏகாம்ராதீஶ்வர சரணயோ ரேகதாநாம் ஸமிந்தே
தாடங்கோத்³யன் மணிக³ணருசா தாம்ரகர்ணப்ரதே³ஶா
தாருண்யஶ்ரீ ஸ்தப³கித தனுஸ் தாபஸீ காபி பா³லா 78

குழைகளின் இரத்தினங்களிலிருந்து உதிக்கும் காந்தியால் செந்நிறமான காதுகளை உடையவளும், இளமைப் பொலிவால் பூங்கொத்தன்ன திருமேனியை உடையவளும், அனைத்துலகத்திற்கும் ஒரே தாயானவளும், ஏகாம்பர நாதர் திருவடிகளில் நிலைபெற்ற தியான முத்திரையை அடைந்தவளுமாயுள்ள இளந் தவப்பெண்ணாக ஒருவள் ஒளிர்கிறாள்.

குழைமணி தோன்றும் குருவில்சி வந்த குழையுடையாள்;
மழப்பொலி வாலே மலர்த்திரள் போலுடல் வாய்த்தவளாம்;
பொழிலெலாம் போற்றிப் புகலன்னை, ஏகம்பன் பொன்னடிகள்
புழங்குசிந் தைக்கை புனைந்திள ஐயையாம் பொம்மலன்றே!

குழை-தாடங்கம்,காது; குரு-ஒளி,காந்தி;  மழ-இளமை; மலர்த்திரள்-பூங்கொத்து; பொழில்-உலகு; புழங்கு-இலங்கும்; சிந்தை-தியானம்;கை-முத்திரை; ஐயை-தவப்பெண்; பொம்மல்-பொலிவு,ஒளிர்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


குழை மணி தோன்றும் குருவில் சிவந்த குழையுடையாள்; மழப் பொலிவாலே மலர்த்திரள்போல் உடல் வாய்த்தவளாம்; பொழிலெலாம் போற்றிப் புகல் அன்னை, ஏகம்பன் பொன்னடிகள் புழங்கு சிந்தைக்கை புனைந்திள ஐயையாம் பொம்மல் அன்றே!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...