இலக்கியவேல் மாத இதழின் ஜனவரி, 2016 பதிப்புக்காக எழுதப்பட்ட கட்டுரை...
ஊத்துக்காடு வேங்கடகவி
செவ்விசை
வளர்த்தச் செம்மல்களின் வரிசையில், துருவ தாரகையாக, தனித்தன்மையோடு விளங்கிய மற்றொரு
மாமேதையும், மகானுமானவர் ஊத்துக்காடு வேங்கடகவி! பெரும்பாலும்,
ஹரிபஜனைகளிலும், ஹரிகதைகளிலும், நாட்டிய மேடைகளிலும், சிறிதளவே செவ்விசை மேடைகளிலும்
கேட்கப்பட்டு வந்த இவரது அரிய, இசை நுணுக்கங்கள் நிறைந்த, உயரிய உருப்படிகளை செவ்விசையுலகம்,
சில உயர்ந்த இசைக்கலைஞர்களின் ஊக்கத்தாலும், தளராத முயற்சியாலும், இப்போதுதான், சுமார்
கடந்த முப்பது ஆண்டுகளாக திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளது; இவரே நமது இம்மாதத்திய
கட்டுரையின் நாயகர். இவரைப் போன்ற இசைவாணர்களின் இசைப்படைப்புகளை, செவ்விசை மரபின்
வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினை, முறையாக, முழுவதுமாக ஆய்வு செய்து அறிந்து கொள்ள ஒரு
சில பக்கங்கள் போதாது; எனினும், அடிக்கோடிட்டு காட்டினால் ஆர்வமுள்ளவர்கள் மேலும் தேடிச்
செல்லுவார்கள் அல்லவா?
வேங்கடகவியின் வாழ்க்கைச் சுருக்கம்:
இவருடைய வரலாற்றை பற்றியும் தெளிவான ஆவணங்கள்
இல்லாமையால், அவருடைய ஒன்றுவிட்ட தமயனார் காட்டு கிருஷ்ணய்யரின் (திரு. ரவிகிரண் அவர்களது
கவி பற்றிய “வம்சாவளி” ஆய்வு, இவருடைய சகோதரின் புதல்வராகக் காட்டுகிறது) குறிப்புகளைக்
கொண்டும் மற்றும் அவர் பரம்பரை வழி உறவினர்கள் மூலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திரட்டப்பட்டு,
செவிவழிச் செய்தியாகத் தொகுக்கப்பட்டவற்றைக் கொண்டும் கூறப்படுகிற, சரி பார்க்கவியலாத
வரலாறுதான் நாம் படிப்பது எல்லாம்! பொதுக்
கருத்தாக, இவர் 16ம் நூற்றாண்டின் இறுதியில்
வாழ்ந்தவர் என்றே நம்பப்படுகிறது. அதற்குச் சான்றாக, வேங்கடகவி, அவருக்கு சிறிது காலம்
முன்னர் வரை இருந்த ஞானிகள், இசையறிஞர்களைப் பற்றி அறிந்திருந்ததோடல்லாமல், அவர்களைப்
பற்றித் தம் பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளதைச் எல்லோரும் சுட்டுகிறார்கள். அறுதியிட்டு கூறமுடியாவிட்டாலும், இவருடைய காலம்
சுமார் 1700 முதல் 1765 வரை என்று கணிக்கப்பட்டுள்ளது. இறுதி வரை திருமண வாழ்வில்லாமல், இசையாராதனையும்,
கிருஷ்ண பக்தியுமே முதலும் முடிவுமாகக் கொண்டு வாழ்ந்தவர் நமது கவி.
இவர் மன்னார்குடியில் தன்னுடைய தாயாரின் இல்லத்திலே
பிறந்தாலும், பாபநாசத்துக்கு அருகிலேயுள்ள ஊத்துக்காடு கிராமத்திலே வளர்ந்ததால், “ஊத்துக்காடு
வேங்கடகவி” என்று அழைக்கப்படுகிறார். தந்தையார் சுப்புகுட்டி ஐயர், தாயார் வெங்கம்மா;
(சில ஆவணங்களில் தந்தையார் இராமசந்திர வாதூலர் என்றும், தாயார் கமலநயனி என்று குறித்திருக்கிறார்கள்!)
பிறந்தது, ஆவணி மாத, மகம் நட்சத்திரத்தில். இளமைப் பருவத்தில் பூரனுர் நடேச பாகவதர்
என்பவரிடம் இசை இலக்கணங்களைப் பயின்றிருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரிடம் மேலும் கற்றுக்கொள்ளமுடியாமல்,
தாயாரின் அறிவுறுத்தலில், ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணரையே சரணடைந்து, தனது
குருவாக பாவித்துப் பாடத்தொடங்கினார். முத்துசுவாமி தீக்ஷிதருக்கு திருத்தணியில் முருகன்
நாவில் கற்கண்டு இட்டு பாடப் பணித்தார்போல், இவருக்கும் காளிங்க நர்த்தன கிருஷ்ணரே
குருவாக இருந்து அருள் புரிந்து இசைச் செல்வத்தை வழங்கியதாக கேள்வி வழிக் கதை. இவர்
காளிங்க நர்த்தன கிருஷ்ணரையே குருவாகக் கொண்டதற்கு சான்றாக பல பாடல்கள் உண்டு. குறிப்பாக
கீழே கொடுக்கப்பட்டுள்ள ரீதிகௌளை இராகப் பாடலை
வரிகளைப் படித்தாலே புரியுமே!
பல்லவி: காதலாகி வசமிழந்தேன் - குரு நாதனரவிந்த
பாதமலர் கண்டு போதை மிகக் கொண்டு, பேதையென
நின்று”
அனுபல்லவி: சீதளத் திருமுகம் முழுமதி நிலவோ
சிந்தை கொள்ளை கொள்ளை என்ற செயல்
விளைவோ?
பூதல மீதினில் ஈடிணையுளவோ? -
என்
புண்ணிய குருநாதன் சந்நிதி முன்னின்று!”
சிருங்கேரி மடத்தின் ஆசியோடு நடக்கும் “அம்மன்
தரிசனம்” என்னும் மாத இதழின் ஆகஸ்டு 2014 பதிப்பில்,
க.சுந்தரராமமூர்த்தி என்பார் நமது கவி பற்றி எழுதிய கட்டுரை மிகவும் சுவையானது! (http://ammandharsanam.com/magazine/August2014unicode/page005.php)
பெரும்பாலும் வேறு எங்கும் படிக்கவியலாத பல செய்திகளைச் சொல்லுகிறார் க.சுந்தரராமமூர்த்தி!
இவர் வேங்கடகவியை முத்துத்தாண்டவரின் சமகாலத்தவராகக் கூறுகிறார். ஆனால் முத்துத்தாண்டவரின்
காலமோ ஒரு நூற்றாண்டு முற்பட்டது என்றே அவருடைய வரலாற்றை எழுதியவர்கள் கணிக்கிறார்கள்.
எப்படியாயினும் முத்துத்தாண்டவரின் அடியொற்றியோ, அவராகவே, அமைத்துக்கொண்ட பாணியிலோ,
இவர் செய்த இசைவடிவங்கள் தனித்தன்மையோடுதான் விளங்குகின்றன. இவரின் இசையிலேயே திளைத்து அவற்றை வாசித்துப் பரவச்
செய்த உருத்ரபசுபதி என்ற நாதசுரக் கலைஞர் மூலமாகவும், காட்டு கிருஷ்ணய்யருடைய பரம்பரையினர் மூலமாகவும்
இன்று அவை நமக்கு கிடைத்திருக்கின்றன. அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஹரிகதா விற்பன்னரான
நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், காட்டு கிருஷ்ணய்யரின் பெண் வழியாகத் தொடர்ந்த
ஆறாம் தலைமுறையினர். இவருடைய தளரா முயற்சியாலேதான் வேங்கடகவியின் அற்புதப் பாடல்கள்
வெளியுலகத்துக்குத் தெரிந்து, பரவியிருக்கின்றன. எழுபதுகளில் வெளிவந்த இவருடைய கிருஷ்ண
கானம் என்கிற இசைத்தட்டில் வந்த பாடல்கள் பலவும் வேங்கடகவியின் அபரிமிதமான இசையோடு
கூடிய கவித்துவத்துக்கு ஒரு சோற்றுப் பதம். குறிப்பாக, காளிங்க நர்த்தன வர்ணனைப் பாடலின்
சொற்சிலம்பத்திலும், சொற்கட்டு சொல்லலங்காரத்திலும் சொக்காதவர்களே கிடையாது.
இருமொழிப் புலமையும் இசை வளமையும்:
வேங்கடகவிக்கு முன்பும், பின்பும் அவரைப்போல,
தமிழ், சமசுகிருதமென்று இரண்டு மொழிகளில் வியத்தகு புலமையோடு பாடல்களைப் புனைந்தவர்கள்
இருக்கவில்லையென்று உறுதியாகக் கூறலாம். இவருடைய இசை வார்ப்புகள், தமிழ், சமசுகிருதம், இசை என்ற மூன்றிலும் இவருக்கு இருந்த
ஆழ்ந்த புலமையை, அழகுணர்ச்சியை ஒருங்கே காட்டுவன. இவரது பாடல்களில் இயல்பாக அமைந்த
எதுகை, மோனை, சீர் மற்றும் அடி இயைபு, நாவோடு உறவாடும் சொல்லாட்சி, எல்லாமே அவருடைய
காலத்திலே புதுமையாக மட்டுமன்றி, இன்றும் வியப்பையூட்டுபவை. இவருடைய பாடல்கள் ஒவ்வொன்றுமே
புராண, இதிகாச நாயக-நாயகிகளின் உரையாடல்களை, கதை நிகழ்வுகளை ஒரு தேர்ந்த கதைச் சொல்லியின் திறனோடு
நம் கண்முன்னே விரிப்பவை. சங்க இலக்கியங்கள், தேவாரம், திவ்வியப் பிரபந்தம், சேக்கிழார்
பெருமானின் பெரியபுராணம், அருணகிரிநாதர், சைவ,
வைணவ ஆச்சாரியர்களின் சமய இலக்கியங்களென்று தமிழ், சமசுகிருதம் இரண்டிலும் ஆழ்ந்து
கற்ற மேதாவிலாசம், ஒருங்கே இவருடைய பாடல்களின் சொற்பின்னல்களில் மின்னுவது வியப்புக்குரியது.
பாடுவோர்க்கும், கேட்போர்க்கும் அளப்பரிய இன்பம் தருவதும் கூட!
தமக்கு
முன்பிருந்த இசை முன்னோடிகளாம் புரந்தரதாசர்,
சோமநாதர், நாராயண தீர்த்தர், அன்னமாச்சாரியர் இவர்களது இசைப் பாடல்களின் நுணுக்கங்களையும், வட இந்திய பக்தி
இயக்கத்தைச் சார்ந்த மீராபாய், கபீர்தாஸ், துளஸீதாஸ், மற்று மராட்டிய ஞானதேவர், நாமதேவர்,
துக்காராம், ஜெயதேவர், சைதன்யர், பத்ராசல இராமதாசர், இவர்களது இசைப் பாடல்களையும் இவர் அறிந்திருந்தது
இவருடைய பாடல் புனைவுகளுக்கு பக்தி நெறியும், இலக்கணச் செழுமையும் சேர்த்தன.
வேங்கடகவிப்
பாடல்களின் இசைச் செறிவு:
தமக்கு
முன்னாள் இருந்தவர்களின் இசை இலக்கண மரபின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே வேங்கடகவி பாடல்களை
இயற்றினார். பழந்தமிழ் இராகங்களையும், தன்னுடைய காலத்துக்கு சற்றே முந்தயவர்களாகவோ,
சமகாலத்தவராகவோ இருந்த வேங்கடமகி, கோவிந்த தீக்ஷிதர் இவர்களின் சதுர்தண்டிபிரகாஸிகை,
சங்கீத ஸுதாநிதி போன்ற நூல்களில் காணப்படும் இராக அமைப்புகளையும் இவர் நல்ல புரிதலோடு
பயன்படுத்தியுள்ளதைக் காணலாம். பல பாடல்களில் இவர் பழந்தமிழ் இராகப்பெயர்களை பொருத்தமாக
அமைத்தாரென்றும் கூறப்படுகிறது. வெளிவந்துள்ள பதிப்புகளில் ஒரு தில்லானாவைவை “புறநீர்மை”
என்னும் பழந்தமிழ்ப் பண்ணில் அமைத்திருப்பதைக் காணலாம்.
முத்துத்தாண்டவருடைய
பாடல்களில் சொற்கட்டுக்களோடு (ஜதிச் சொற்கள்) சேர்ந்த அமைப்புகள் இருந்திருந்தாலும்,
வேங்கடகவியைப்போல், பல்வேறு தாளங்களில் அமைந்த அழகும், மத்திய, வேக கால பாடல் வரிகளும்
இவர் கையாண்ட அளவுக்கு இருக்கவில்லையென்றே கூறலாம். தவிர கதிபேதங்களையும், சுரோதாவாஹம்,
கோபுச்சம், டமருகம் போன்ற யதி அமைப்புகளையும், இவருடைய கீர்த்தனைகளில், வெகு எளிதாகக்
கையாண்டுள்ளார். தாள வகைகளில், இவர் புரந்தரதாசரது சப்த சூளாதி தாள கட்டமைப்பையொட்டி
பல தாளங்களில் தன்னுடைய கீர்த்தகனைளைச் செய்துள்ளார் கண்ட துருவம், கண்ட மட்டியம்,
கண்ட ரூபகம், மிஸ்ர அட, மிஸ்ர ஜம்ப, சங்கீர்ண மட்டியம் என்று பொதுவாக சங்கீத மும்மூர்த்திகளின்
கீர்த்தனைகளிலும் காணப்படாத, தாள வகைகளையும் இவருடைய பாடல்களில் காணலாம். இவருடைய இசையறிவை
அறிவிக்கும் விதமான வரிகளும் இவருடைய பாடல்களிலேயே உண்டு! முதல் சப்தரத்தின கீர்த்தனையின்
எட்டாவது சரணத்தில், “அகணித ராக, நவவித தாள
க்ரம, லய, கதி, ஸ்வர தந்த்ரீ ஸமன்வித” என்று கூறியிருப்பார். கணக்கிலடங்கா இராகங்களாம்;
புதுவிதமான பல தாள வரிசைகளாம்; இலயம் மாறாத, கதி பேதங்களைக் கொண்ட, சுரங்கள்…” என்று
சொல்லும் விதத்திலேயே தன்னுடைய இசையறிவின் ஆழத்தைப் புலப்படுத்திவிடுகிறார் கவி.
பொதுவாக
இவர் தாம் குருவாக மனதில் வரித்துக்கொண்ட கிருஷ்ணனைப் பற்றியே பாடியிருக்கிறார் என்று
பலரும் நினைத்தாலும், அவையே பெரும்பாலும் புழக்கத்தில்
இருந்தாலும், இவர் தம்முடைய அத்வைத மார்க்கத்தையொட்டியே பல தெய்வங்களின் பேரிலும் பாடியுள்ளார்
என்னும் உண்மை, இவரது மற்ற பல கீர்த்தனைகளைப் பார்த்தாலே விளங்கும். தான, பத வர்ணங்கள்,
கீர்த்தனைகள், இராகமாலிகைகள், ஜாவளி, தில்லானா, காவடிச் சிந்து என்று அவருடைய காலத்தில்
இருந்த அத்தனை செவ்வியல் வடிவங்களிலும், பாடல்கள் புனைந்துள்ளார்.
ஊத்துக்காடு
மகானின், பாடல்கள் சிலவற்றில் யதியென்று சொல்லப்படும் அமைப்பும் உண்டென்று ஏற்கனவே
பார்த்தோம். எடுத்துக்காட்டாக நாட்டை இராகப் பாடல் ஒன்றில் சுரோதவாஹ யதி (நதி விரிவு
போல) எவ்வாறு அமைத்திருக்கிறார் என்று பார்ப்போம்.
“ஆடினான் நர்த்தனம் - ஆடினான்
ராஸ நர்த்தனம் - ஆடினான் ஸரஸ ராஸ நர்த்தனம்
ஆடினான் ஸுந்தரிகளுடன் ஸரஸ ராஸ
நர்த்தனம் - ஆடினான் வ்ரஜ ஸுந்தரிகளுடன் ஸரஸ ராஸ நர்த்தனம்”!
ஜதிச்சொற்களின்
போக்கிலேயே, அதாவது, தகிட, தகதிமி, தகதகிட, ததீம்தகிட, தத்தீம்தகிட என்று சொல்லடுக்குகள்
வருவதுபோல் பாடல்களை அமைப்பதில் நம் கவி வல்லவர். “நான் என்ன தவம் செய்தேனோ யமுனை”
என்ற பாடலில் அடுத்து வரும் இவ்வரிகளைக் கூர்ந்து கவனியுங்கள். “நதித் துறைவனிவன்
- பதத்திணையில் மனம் - இருத்திய பலரில் - ஒருத்தியென மிக”என்று எல்லா சொற் கூட்டமைப்பும்,
“தகத்-தகதகிட” என்று எட்டு மாத்திரை அளவில் ஒரு துள்ளல் நடையில் அமைந்திருக்கும். முன்பே
எடுத்துக்காட்டிய “நாதன் அரவிந்த பாத மலர் கண்டு போதை மிகக் கொண்டு,
பேதையென நின்று” என்ற வரிகளும், “தாம்த தக தக்க” என்ற அமைப்பிலேயே செல்லுவதைக் கவனியுங்கள்!
இராமயணத்தைச்
சுருக்கமாக, ஒரு கனராகமாலிகை கீர்த்தனையில் நாட்டை, கெளை, வராளி, ஆரபி, மணிரங்கு போன்ற
இராகங்களில் அமைத்து மிகவும் அழகாகப் பாடியுள்ளார். தியாகய்யரின் பஞ்சரத்தினத்திலும்
மணிரங்கு நீங்கலாக மற்ற நான்கு இராகங்களைக் காணலாம். தியாகய்யர் “ஸ்ரீராகத்தைக்” கையாண்டிருப்பார்.
மணிரங்குவும், ஸ்ரீராகமும் கூட நெருக்கமான இராகங்களே! தியாகய்யருக்கு இவருடைய கீர்த்தனை
அமைப்புகள் முன்மாதிரியாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்று தோன்றவில்லை?
தியாகய்யருக்கும்,
தீக்ஷிதருக்கும் முன்னோடி:
பஞ்சரத்தின
கீர்த்தனை போன்ற பல சுர/சாஹித்ய சரண அமைப்புகளை தியாகய்யரே முதலில் செய்தவர் என்று
பலரும் நினைத்துக்கொண்டிருப்பர். அதேபோன்று, நவாவரண கீர்த்தனை என்னும் ஸ்ரீசக்ரத்தின்
ஒன்பது சுற்றுகளில் வீற்றிருக்கும் அதி தேவதைகளையும் பாடும் அமைப்பும், தீக்ஷிதருக்குப் பின் வந்ததென்றும் பொதுவாக எண்ணமுண்டு.
ஆனால், தியாகய்யருக்கு முன்பே, வேங்கட கவி, “சப்தரத்னா” (ஏழு இரத்தினங்கள்), என்ற ஏறக்குறைய
அதே கன இராகங்களில் இயற்றியுள்ளார். தியாகய்யர் பஞ்சரத்தினத்துக்கு முன்மாதிரிப் படிவமாக
இக்கீர்த்தனைகளே இருந்திருக்கக்கூடும் என்றும் கருத இடமுண்டு. அதேபோல் காமாட்சியம்மன்
பேரில் செய்திருக்கும் நவாவரண கீர்த்தனைகளே தீக்ஷிதரின் கமலாம்பா, நவாவரண கீர்த்தனைகளுக்கு
முன்னோடி என்பதும் தெளிவு.
சென்ற திருத்தலங்களும்,
பாடிய தெய்வங்களும்:
தீக்ஷிதரைப்
போலவே நம் கவியும், பல திருத்தலங்களுக்கும் சென்று, “திருத்தல கீர்த்தனைகளைப்” பல தெய்வங்களின்
மேலும் பாடியுள்ளார். இவர் சென்ற தலங்களின் பட்டியலில், சிக்கில், ஸ்ரீரங்கம், திருவாரூர்,
பழனி, தணிகாசலம், திருப்பரங்குன்றம், திருக்கண்ணபுரம், பண்டரிபுரம், உடுப்பி, மதுரை,
மைலை, திருவல்லிக்கேணி, சிதம்பரம், காஞ்சி, மன்னார்குடி, கூத்தனூர், திருவானைக்காவல்,
போன்றவையும் அடங்கும்
ஆஞ்சநேயர்,
காமாட்சி, கிருஷ்ணர், லட்சுமி, மீனாட்சி, நரசிம்மர், நடராஜர், பார்த்தசாரதி, ராஜராஜேஸ்வரி,
இராமர், அரங்கநாதர், சரசுவதி, முருகர், சௌரிராஜப் பெருமாள், மன்னார்குடி இராஜகோபாலர்,
சூரியன், திருவாரூர் தியாகராசர், வினாயகர், பண்டரிநாதர், அகோர வீரபத்திரர என்று பல
தெய்வங்களையும் தன்னுடைய கீர்த்தனைகளில் இவர் பாடியுள்ளார்.
இவற்றைத்
தவிர இவர் பல இசை நாடகங்களையும் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் பலவும் இன்னும்
ஏட்டுச் சுவடிகளிலேயே இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. சைவ நாயன்மார்களாம் கண்ணப்பர்,
விறன்மிண்டர், குங்கிலியக்கலயர், மாணிக்கவாசகர், அப்பூதி அடிகள், காரைக்காலம்மையார்
வைணவ பெரியோர்களாம் திருமங்கையாழ்வார், பத்ராசல இராமதாசர் போன்றவர்களைப் பற்றிய இசை
நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
மற்ற
தனியன்களாக, தோத்திரப் பாடல்கள் வடிவில், மாதவ
பஞ்சகம், ரங்கநாத பஞ்சகம், நடராஜ பஞ்சகம், நரஸிம்ஹ பஞ்சகம். ஆஞ்ஜனேய பஞ்சரத்தினம்,
அஹோர வீர பஞ்சகம் என்று செய்துள்ளார்.
பக்தி நெறிப்
பெரியார்களைப் பற்றிய குறிப்புகளங்கிய பாடல்கள்:
ஆதி
கவியாம் வால்மீகி, வேதங்களையும், புராணங்களையும் தொகுத்த வியாசர், சுகமுனி, கோபிகா
கீதம் வனைந்த ஒரியக் கவி ஜெயதேவர், ஆண்டாள் நாச்சியார், திருமங்கை ஆழ்வார், அறுபத்து
மூன்று நாயன்மார்கள் என்று தன்னுடைய முன்னோடிகளாய் பக்தி நெறியிற் சிறந்த பெரியோரைப்
பாடியதும் இவரது சிறப்பு. இவருடை சப்தரத்தின கீர்த்தனைகளில் ஒன்றான, “ஆளாவதென்னாளோ சிவமே, அடியார்க்கு அடியார்க்கு
அடியனாய்” என்ற பரசு இராகப் பாடலின் சரண வரிகள் “புன்மைப் பிறவி போகவேணும் - எடுத்தால் புண்ணியப் பிறவியாக வேணும் - இன்னவரில்
ஒருவரைப் போலே - இணையொன்றும் இல்லாப் பதத்திணையாக வேணும்” என்றிருக்கும். பின்வரும்
ஆறு சுர-சாகித்ய சரணங்கள் ஒவ்வொன்றிலும், சில நாயன்மார்களென்று, அறுபத்து மூன்று நாயன்மார்களின்
பெயர்களையும் குறிப்பிட்டு, அவை சரணத்தின் “இன்னவரில்
ஒருவரைப் போலே” என்ற வரியுடன் இணைந்து கொள்ளும்படியாக அமைத்திருப்பார் வேங்கடகவி. எடுத்துக்காட்டாக இரு சரணங்களை மட்டும் இங்கு தருகிறேன்:
1.
காழிமணம் சிவபாதமகன் திருநாவரசன்,
மணிவாசக சுந்தரன் எனும் (இன்னவரில்)
2.
சிறுத் தொண்டர் திருநீலகண்ட
விறன்மிண்ட நமிநந்தி தண்டி அடிகளெனும் (இன்னவரில்).
சப்தரத்னாவில்
“பஜனாம்ருத பரமானந்த” என்று தொடங்கும், முதல்
கீர்த்தனை, சமசுகிருதத்தில் அமைந்ததாகும். இப்பாடலிலும், இவர் முதல் சைவக்குரவர் நால்வரையும்
குறிப்பிட தவறவில்லை. கிழே தரப்பட்டுள்ள, அச்சரணத்தின் வரிகளைப் படிக்கும் போதே தெரியும்
இவரை ஆட்கொண்ட அருளாளர்கள் யாரெல்லாம் என்று!
“சிவஹரி சரவணபவ குஹ பஜன நிரந்தர
மாலாலங்க்ருத சோப
வாகீச, சிவபாதஹ்ருதய சுத, மணிவாசக சுந்தர, டிண்டிம
கவிராஜ,
மதுரகவி ராஜ, ராமானுஜ, குலசேகர,
விஷ்ணு சித்த, பரகால
புரந்தர, துளசிதாஸ, சரணாரவிந்த”
பதிப்புகளில்
வெளிவந்துள்ள பாடல்கள்:
நீடாமங்கலம்
கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் மனைவியார் திருமதி இராஜம்மாள் அவர்கள் ஸ்ரீகிருஷ்ண கானம்” என்ற தலைப்பில் இரண்டு பகுதிகளாக 69 பாடல்களுக்கு இராக-தாள-சுர
குறிப்புகளோடும், காமாட்சி நவாவரணப் பாடல்களை தனிப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்
தவிர, வெறும் பாடல்களாக, இராக-தாள குறிப்புகளோடு
மட்டும் கூடிய “ராஸ கானம்”, என்ற தொகுப்பை மூன்று பகுதிகளாக, ஏறக்குறைய இருநூறு பாடல்களோடும்
பதிப்பித்திருக்கிறார். சித்திரவீணை இசைக்கலைஞர் திரு. இரவிகிரண் அவர்கள் காமாட்சி
நவாவரணம், சப்தரத்னா கீர்த்தனைகள் அடங்கிய
ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்.
கச்சேரி மேடைகளில்
ஒலிக்கும் பாடல்கள்:
1940களுக்குப்
பிறகு கச்சேரி மேடைகளில் கீழ்காணும் பட்டியலில் உள்ள பாடல்கள் பரவலாக ஒலிக்கத் தொடங்கி
இரசிகர்களின் செவிகளை நிறைத்துள்ளன. சிம்மேந்திரமத்யமத்தில்
'அசைந்தாடும் மயிலொன்று', கானடாவில், 'அலைபாயுதே', 'மத்யமாவதியில் ‘ஆடாது அசங்காது
வா', காம்போஜியில் 'குழலூதி', மோகனத்தில் ‘ஸ்வாகதம் க்ருஷ்ணா”, தோடியில் “தாயே யசோதா”,
சுருட்டியில் “பார்வையொன்றே போதுமே”, போன்ற பாடல்களை கேட்காத செவ்விசை விரும்பிகள்
இருப்பார்களா என்பது ஐயமே! குறிப்பாக மதுரை மணி ஐயரின் குரலில் ஒலித்த “தாயே யசோதா”
பாடலை யாரே மறந்திருக்க முடியும்? பெரும்பாலும் வெளிவராத பல பாடல்களை மதுரை வித்வான்
டி,என் சேஷகோபாலன் அவர்கள், கிருஷ்ணகானம் என்ற தலைப்பிலேயே ஒலிநாடாவிலே, 1980-களில்
வெளியிட்டிருந்தார்கள். ஸ்ரீரஞ்சனியில் ‘நீதான் மெச்சிக்கொள்ளவேண்டும்”, தேவமனோஹரியில்
“உய்ந்தது உய்ந்ததென் மனமே”, மணிரங்குவில் “யாரென்ன சொன்னாலும்”, கல்யாணியில் “சென்றுவா
நீ ராதே”, கன்னடவில் “சொன்னாலொழிய மனம்”, பிலஹரியில், “கண்ணைத் திறந்துபார்
மனமே”, போன்ற பாடல்களை
கச்சேரி மேடைகளில் அதிகம் பாட வைத்த பெருமை அவருடையதே. அதே போன்றே, திரு. சித்திரவீணை
இரவிகிரணின் சீரிய முயற்சியாலும், பரப்புதலாலும்,
சப்தரத்னா மற்றும் காமாட்சி நவாவரணம் போன்றவையும் பிரபலம் அடைந்திருக்கின்றன.
இன்னும் எத்தனையோ கீர்த்தனைகளுக்கு சுர-தாள குறிப்புகள் செய்யப்படவேண்டும், புழக்கத்துக்கு
கொண்டுவரப்பட வேண்டும். http://www.venkatakavi.org/ என்ற இணையதளத்தில், பல பாடல்களின்
முறையாகத் தொகுக்கப்பட்ட ஒலி/காணொளிப் பதிவுகளாக உள்ளன; விருப்பமுள்ளவர்கள் கேட்டு
இரசிக்க, முடிந்தால் பாடிக் களிக்க! பாடல்களின் சுவையை எழுத்தில் படிப்பதைவிடக் கேட்பதில்
இன்னும் எவ்வளவு மகிழ்ச்சி!
செவ்விசை
மேடைகளில் இவருக்கு உரிய மதிப்பு இன்னும் பெருமளவில் கிடைக்கவில்லையாயினும், வருங்காலம்
அதை கட்டாயம் அளிக்கும்! கதிரவன் ஒளியை கங்குல் எத்தனை நாள்தான் மறைத்திருக்கும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam