ஜனவரி 06, 2016

ஷோடஸ கணபதி 16 - ஸ்கந்தபூர்வஜர் (கந்தனுக்கு மூத்தோன்)

ஸ்கந்த பூர்வஜர் பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் கூறியதிலிருந்து…

கடைசிப் பேருக்கு வந்துவிட்டோம். 'ஸ்கந்த பூர்வஜர்' என்பது ஷோடச நாமாவில் கடைசி. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்குத் தமையனார் என்று அர்த்தம். முருகனுக்கு மூத்தவர். அதைவிட, 'முருகனுக்கு முன்னவர்'என்றால் அழகாக இருக்கிறது. 'பூர்வஜர்'என்றால் முன்னால் பிறந்தவர். 'அக்ரஜர்'என்றும் சொல்வதுண்டு.

'உடன்பிறப்பு'என்று தமிழில் சொல்வதுபோல் ஸம்ஸ்க்ருதத்தில் 'ஸஹோதரர்'. 'ஸஹ'என்றால் 'உடன்'.ஸஹோதரர் என்றோ உடன்பிறப்பு என்றோ சொன்னால் அண்ணாவா, தம்பியா என்று கண்டுபிடிக்க முடியாது. அண்ணா என்று குறிப்பிட்டுக் காட்டும் வார்த்தை 'பூர்வஜர்' இதேமாதிரி தம்பிக்கு 'அநுஜர்'. ராமாநுஜர் என்றால் ராமனுக்குத் தம்பியான லட்சுமணர். 'கஜமுகாநுஜர்' என்று ஸுப்ரம்மண்யருக்கு 'அமர'த்தில் ஒரு பெயர் சொல்லியிருக்கிறது. பிள்ளையாருக்குத் தம்பி என்றே முருகனுக்கு ஒரு பேர்;அவருக்கு அண்ணா என்றே இவருக்கும் ஒரு பேர்! அப்படிப்பட்ட ஸஹோதர பாந்தவ்யம்!

முருகனின் தமையர் என்பதன் சிறப்பு

நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஷோடச நாமாக்களில் விக்நேச்வரர் சிவனுடைய புத்ரரென்றோ அம்பாளுடைய புத்ரரென்றோ காட்டப் பெயர் எதுவுமில்லை. அதாவது, இன்னாருக்குரப் பிள்ளை என்று பேரில்லை. இன்னாருக்கப் பதி என்றும் பேர் இல்லை. அவருக்கு பிரம்மச்சாரியாகப் பல உருவ பேதங்கள் இருக்கிற மாதிரியே பத்னி ஸமேதமாகவும் இருக்கின்றன. வல்லபை என்பவளோடு வல்லப கணபதியாக இருக்கிறார். ஸித்தி, புத்தி என்பவர்களுக்கு அவர் பதி என்றும் கேள்வி பட்டிருக்கலாம். ஸித்தி-புத்திகளிடம் அவருக்குப் பிறந்த புத்ரர்களும் உண்டு. அவர்களுக்குத் தகப்பனார் என்று தெரிவிப்பதாகவும் பேரைக் காணோம். ஆனால் பேர் வரிசையைப் பூர்த்தி பண்ணுமிடத்தில், மங்களமான ஸ்தானத்தில் 'ஸ்கந்தனுக்குத் தமையன்'என்று மட்டும் உறவு முறையைச் சொல்லும் ஒரு பெயர் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஏன் அப்படி?

பொதுவாக, சின்ன வயஸுக்காரரொருத்தரை அவரைவிட வயசில் பெரியவரைச் சொல்லி, அவருக்கு இவர் இன்ன உறவு- பிள்ளை, மருமான், மாப்பிள்ளை, தம்பி என்று ஏதோ ஒன்று சொல்கிறதுதான் முறை. இங்கேயோ வித்யாஸமாகத் தம்பி பேரைச் சொல்லி, அவருக்கு அண்ணா என்று இருக்கிறது. ஏன் இப்படி?

ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் சரித்திரத்தோடு விக்நேச்வரருக்கு அவ்வளவு நெருங்கிய ஸம்பந்தம் இருப்பதால்தான்! தம்பியுடைய ஜனனம், விவாஹம், ஸந்நியாஸம் என்ற மூன்று ரொம்ப முக்யமான வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் அண்ணன்காரருக்கு முக்யமான பார்ட் இருக்கிறது. அதனால்தான்!

பலச்ருதியின் அனைத்துப் பயனும் பெற்ற முருகன்

ரஸமாக ஒன்று தோன்றுகிறது:இந்த ஷோடச நாமாக்களைச் சொல்கிறவருக்கு, 'வித்யாரம்பே' (கல்வி கற்கத் தொடங்கும்போது) , 'விவாஹே' (கல்யாணத்தின் போது) 'ப்ரவேசே' (ஒரிடத்திற்குள் செல்லும்போது) , 'நிர்கமே' (ஒரிடத்திலிருந்து புறப்படும்போது) , 'ஸங்க்ராமே' (சண்டை சச்சரவுகளில்) 'ஸர்வ கார்யேஷு (எல்லாக் கார்யங்களிலுமே) விக்கினம் உண்டாகாது என்று பலன் சொல்லியிருக்கிறது. இந்த ஒவ்வொன்றுக்குமே ஸ்கந்த சரித்திரத்தில் proof , சான்று, இருப்பதாகத் தெரிகிறது.

'வித்யாரம்பே:' பரமேச்வரனின் ஞான நேத்ர ஜ்யோதிஸிலிருந்து உண்டான ஸுப்ரம்மண்யருக்கு அக்ஷராப்யாஸம் என்ற அர்த்தத்தில் வித்யாரம்பம் அவசியமேயில்லை. அவரே 'ஒம் இத்யேகாக்ஷரம்' என்ற பிரணவத்திற்கு அர்த்தமாக இருந்து கொண்டு, அதைப் பிதாவுக்கு உபதேசம் பண்ணினவர். ஆனபடியால் அவர் விஷயத்தில் வித்யாரம்பம் என்பது ப்ரஹம் வித்யையை அநுபவமாக அநுஷ்டிக்கும் ஸந்நியாஸத்தை ஸ்வீகரிப்பதுதான். அப்படி அவர் ஸந்நியாஸி ஆனதற்கு விக்நேச்வரர் பழப் போட்டியில் ஜயித்ததுதான் காரணம்.

'விவாஹே':வள்ளி கல்யாண ஸமாசாரம். அதில் அண்ணாக்காரரின் முக்யமான பங்கை முன்னாலேயே பார்த்து விட்டோம்.

தம்பியின் இல்லறம், துறவறம் இரண்டிற்குமே அவர் தான் key கொடுத்திருக்கிறார். தம்பி குழந்தையாயிருந்த போது அவரை ஸந்நியாஸியாக்கி, அப்புறம் யௌவனத்தில் கிருஹஸ்தராக்கியிருக்கிறார்!தம்முடைய பரமபக்தையான ஒளவையையோ அவள் நல்ல யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டிய ஸமயத்தில் கிழவியாக்கி ஒரு ஸந்நியாஸினி மாதிரி செய்திருக்கிறார். பெரும்பாலும் பால ப்ரஹ்மசாரியாகவே நாம் பூஜிக்கும் ஸ்வாமியின் லீலை இப்படி வேடிக்கையாக இருக்கிறது!

'ப்ரவேச':இந்த லோகத்தில் இப்படி ஸுப்ரஹ்மண்யம் என்று ஒரு திவ்ய மங்கள் மூர்த்தி பிரவேசிப்பதற்கு- தோன்றுவதற்கு-காரணம் சூரபத்மாவின் நிபந்தனைப்படி விக்நேச்வரர் அவனுடைய ஸம்ஹாரத்திற்கு 'டிஸ்க்வாலிஃபை'ஆகியிருந்ததுதான். அதாவது, 'நெகட்டிவ்'ஆக ஸுப்ரஹ்மண்ய ப்ரவேசத்திற்குக் காரணம் அவர்தான்.

'நிர்கமே': 'ப்ரவேசம்'என்றால் ஒன்றில் புகுவது, 'நிர்கமம்'என்றால் ஒன்றைவிட்டுப் போய்விடுவது. வள்ளி கல்யாணம், பிள்ளையார் நடத்திக் கொடுத்து முடிந்தவுடன் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தாம் பிரவேசித்திருந்த இந்த உலகத்தை விட்டுவிட்டு ஸ்கந்த லோகம் என்கிற தம்முடைய நித்யவாஸ ஸ்தானத்திற்குப் புறப்பட்டுப் போய் விட்டார். இரண்டு பத்னிகளோடும் புறப்பட்டுப் போய் விட்டார். வள்ளி கதை வருவதற்கு முந்தியே தேவஸேனா கல்யாணமாகி இருந்தது. அவர் லோகத்தில் அவதாரம் பண்ணியதற்கு இரண்டு காரணம். சூரஸம்ஹாரம் ஒன்று. இன்னொன்று, அவருடைய மாமா மஹாவிஷ்ணுவின் இரண்டு பெண்களில் ஒருத்தி தேவராஜன் பெண்ணாகவும், மற்றவள் வேடராஜன் பெண்ணாகவும் வளர்த்து வந்தவர்களை அவர் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்பது.

முதலில் திருச்செந்தூர் தாண்டி ஸமுத்ரத்தில் போய் அஸுரஸம்ஹாரம் முடித்தார். அப்புறம் திருப்பரங்குன்றத்தில் தேவஸேனையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங்கே அவளோடு இருந்து கொண்டிருக்கும்போது நாரதர் வந்து சித்தூரில் வள்ளி அவரே நினைவாக ப்ரேமையில் உருகிக் கொண்டிருப்பதை சொன்னார். ஆகையால் திருப்பரங்குன்றம் கோவிலில் அவர் வள்ளி-தேவஸேனா ஸமேதராக இல்லாமல், ஒரு பக்கம் தேவஸேனையும், மறுபக்கம் வள்ளிக்குப் பதில் அவளுக்காகத் தூது சொல்ல வந்த நாரதருமாகத்தான் இருக்கிறார். ஸத்குருவானவர் ஜீவாத்மாவிடம் பரமாத்மாவின் க்ருபையை திருப்பி விடுவதற்கு ரூபகமாக நாரதர் வள்ளியிடம் ஸுப்ரம்மண்யரைத் திருப்பிவிட்டார். அதனால் சிவனுக்கும் குருவான ஸ்வாமி, நாரத குருவுக்குத் தன்னுடைய ஸந்நிதியிலேயே ஒரு பக்கம் இடம் கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

நாரதர் சொன்னதன் மேல் அவர் புறப்பட்டுப் போய் வேடன், விருத்தன், வேங்கைமரம் எல்லாமாக வேஷம் போட்டு அப்புறம் அண்ணாவின் அருளால் வள்ளியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அதற்கப்புறம் புக்தி-முக்தி என்கிற இம்மை மறுமைத் தத்வங்கள் இரண்டோடும் சேர்ந்துள்ள தம்முடைய ஸாந்நித்யம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என்று இரண்டு பத்னிகளோடும் 'ஹனிமூன்'மாதிரிக் கொஞ்சநாள் திருத்தணியில் இருந்தார். பிற்பாடு ஸ்கந்தலோகம் போய்விட்டார். அது தான் நிர்கமம். அதற்குப் படி போட்டுக் கொடுத்தது வள்ளி கல்யாணம். அதோடு அவருடைய அவதாரத்தின் இரண்டாவது 'பர்ப'ஸும் நிறைவேறி விட்டது. வள்ளி கல்யாணத்திற்குப் படி போட்டுக் கொடுத்தவர் யானையாக வந்து அவளைத் துரத்திய பிள்ளையாரேயாகையால், ஸுப்ரஹ்மண்யர் நம் லோகத்திலிருந்து ஸ்கந்த லோகத்திற்கு 'நிர்கமம்'பண்ணவும் அவர்தான் உதவி இருக்கிறார்.

'ஸங்க்ராமே:'ஸங்க்ராமம் என்றால் சண்டை, யுத்தம். 'ஸங்க்ராம சிகாவல'என்று 'கந்தரநுபூதி'யில்கூட வருகிறது. யுத்தத்தில் மஹா பராக்ரமம் காட்டிய ஸுர ஸேநாதிபதி ஸுப்ரம்மண்யர். அப்படி யுத்தம் ஆரம்பிக்கிறதற்கு பண்ணித் தானிருப்பார். ஏனிப்படிச் சொல்கிறேனென்றால் விக்நேச்வர பூஜை செய்யாமல் த்ரிபுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தகப்பனார், பண்டாஸுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தாயார் ஆகியவர்களுக்கும் விக்கினங்கள் ஏற்பட்டு, அவர்கள் அந்தப் பூஜை பண்ணிய பிறகுதான் விக்கினம் நிவிருத்தியாயிற்று என்பதால் தம்பிக்காரர் முதலிலேயே ஜாக்ரதையாக முழித்துக் கொண்டு பூஜை பண்ணித்தானே இருப்பார்?அது மாத்திரமில்லை. சூரஸம்ஹாரத்திற்கு இவர் புறப்படுவதற்கு முன்னாடி அவரோடு பழத்துக்குப் போட்டி போட்டு பந்தயம் வந்ததில் தோற்றே போயிருக்கிறார். அந்த விரக்தியில் ஆண்டியானார். அந்த ஆண்டி வாழ்க்கையிலாவது ஜயித்தாரா, அதாவது அது தக்கி நின்றதா என்றால் இல்லை. மாதா பிதாக்கள் வந்து கேட்டுக் கொண்டு, அஸுர ஸம்ஹாரத்திற்காகவே அவர் அவதரித்திருப்பதை ஞாபகப் படுத்தியவுடன், ஸந்நியாஸத்திற்கு முழுக்கு போட்டுவிட்டுச் சண்டைக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. அதனால் அண்ணா அநுக்ரஹம் இருந்தால்தான் கார்யம் ஸித்தியாகும் என்று இப்போது அவருக்கு நன்றாக புரிந்திருக்கும். ஆனபடியால் அவரைப் பூஜை பண்ணிவிட்டுதான் புறப்பட்டிருப்பார்.

'ஸர்வ கார்யேஷு':அண்ணாவுக்குப் போட்டியாகப் பழத்துக்குப் பந்தயம் புறப்பட்டது பலிக்கவில்லை. அவரைப் பிரார்த்திக்காமல் ஆண்டியானதும் நிற்கவில்லை என்பதால் யுத்தத்திற்குப் போகும் போது அவரைப் பூஜை பண்ணினாலும் பிற்பாடு வள்ளியை அடைவதற்காகப் போனபோது அவரை மறந்துவிட்டார். ஆசைவேகம் எத்தனை பொல்லாதது என்று லோகத்திற்குக் காட்டுவதற்காகவே இப்படி ஏற்பட்டது. விக்னமும் நிறைய வந்தது. அப்புறம் அவரை ப்ராத்தித்தே கார்யஸித்தி பெற்றார். அதனால் அதற்கப்புறம் 'ஸர்வ கார்யேஷு'என்றபடி எந்தக் கார்யமானாலும் அதை ஆரம்பிப்பதற்கு முன்னால் விக்நேச்வர பூஜை பண்ணித்தானிருப்பார். அதைப் பற்றி ஸந்தேஹமேயில்லை.

ஆகையாலேயே பிள்ளையாரின் ஷோடச நாமாக்களை முடிக்கிறபோது, அதற்குப் பலச்ருதியில் சொல்லப்படும் அத்தனை விதங்களிலும் விக்நேச்வரரின் அநுக்ரஹத்தைப் பெற்ற ஸ்கந்தரைக் குறிப்பிட்டு, அவருடைய பூர்வஜரென்று பூர்த்தி பண்ணியிருக்கிறது.

ஷோடஸ கணபதி 16 - ஸ்கந்தபூர்வஜர் (கந்தனுக்கு மூத்தோன்)

கந்தனின் மூத்தவன் காருண்ய மூர்த்தி கணபதியை
சொந்த முடனே தொழுவார் தமக்கில்லை சோர்வெதுவும்
தந்தி முகனவன் தாளினைப் பற்றினால் தாங்கிநமை
அந்த மிலாமல் அருள்புரிந் தாள்வான் அனுதினமே

kantaṉiṉ mūttavaṉ kāruṇya mūrtti kaṇapatiyai
conta muṭaṉē toḻuvār tamakkillai cōrvetuvum
tanti mukaṉavaṉ tāḷiṉaip paṟṟiṉāl tāṅkinamai
anta milāmal aruḷpurin tāḷvāṉ aṉutiṉamē

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...