15- நாமா ஹேரம்பரைப்
பற்றி மஹாஸ்வாமிகளின் அருள் வாக்கு:
ஹேரம்பர்:
'ஹேரம்பர்' என்பது
அடுத்த பெயர். எனக்குத் தெரிந்தவரையில் அந்த வார்த்தைக்கு தாது பிரித்து யாரும் இதுவரை
'கன்வின்ஸிங்'காக அர்த்தம் சொல்லவில்லை. நான்தான் ஸரியாகத் தெரிந்து கொள்ளவில்லையோ
என்னவோ? பாஸ்கர ராயர் என்று மஹான்கள் கோஷ்டியில் வைத்து மரியாதை செய்யவேண்டிய ஒரு மந்த்ர
சாஸ்த்ர மஹாபண்டிதர். அவருடைய லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம் ரொம்பவும் ப்ரக்யாதி வாய்ந்தது.
அப்படிப்பட்டவர் கணேச ஸஹஸ்ர நாமத்திற்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். அதில் ஹேரம்ப
நாமத்திற்கு என்ன பாஷ்யம் செய்திருக்கிறாரென்று பார்த்தேன். 'ஹேரம்பர்'என்றால் சைவ
தந்த்ர ப்ரவர்த்தகர் (சைவ ஆகமத்தைத் தோற்றுவித்தவர்) என்றும், அபரிதமான சௌர்யம் (சூரத்தன்மை)
படைத்தவர். என்றும் அந்த பாஷ்யத்தில் அர்த்தம் பண்ணியிருக்கிறது. பாஷ்யகாரர் மஹா பெரியவர்
தானென்றாலும், நிஜத்தைச் சொல்ல வேண்டுமானால், அதைப் படிப்பவருடைய குறையாலோ என்னவோ,
அந்த இரண்டு அர்த்தமும் எப்படி அந்தப் பேருக்குக் கிடைக்கிறது என்று தெளிவுபடவில்லை!ஆராய்ச்சியாளர்களானால்,
தமிழ் 'எருமை'தான் 'ஹேரம்ப'ஆயிற்று என்கிறார்கள்!
ஸம்ஸ்க்ருதத்தின்
பெருமை எல்லா வார்த்தைகளுக்கும், பெயர்களுக்கும் அவற்றின் அக்ஷரங்களை நன்றாக தாது பிரிந்து
அர்த்தம் சொல்ல முடிவது தானென்றாலும் அப்படியில்லாத exception -களும் இருக்கின்றன.
"இன்ன காரணத்தால் இப்படிப் பெயர்"என்று தாது பிரித்துச் சொல்ல முடிவதை 'யௌகிகம்'என்பார்கள்;
Etymological -ஆக derive பண்ணக்கூடியது 'யௌகிகம்'.அப்படியில்லாமல், "என்ன காரணமோ
தெரியாது, ஆனால் இந்த வார்த்தைக்கு இப்படித்தான் அர்த்தம்; இந்தப் பேர் இன்ன பேர்வழியைத்தான்
குறிப்பிடுகிறது"என்று இருப்பவை 'ரூடி'. 'ஹேரம்ப'என்ற வார்த்தை இந்த 'ரூடி'யில்
வருவதாகவே தோன்றுகிறது.
பஞ்ச பாண்டவர்கள்
வனவாஸத்திற்கு முந்தி இந்த்ரப்ரஸ்தத்திலிருந்து ஆட்சி நடத்தினபோது தர்மபுத்ரர் ராஜஸ¨ய
யாகம் பண்ண ஆசைப்பட்டு, அதற்கு முன்னால் நாலு திசை ராஜாக்களையும் ஜயித்துக் கொண்டு
வருவதற்காகத் தம்பிகளை அனுப்பினார். அப்போது தக்ஷிணத்திற்குப் போய் அங்கே இருந்த ராஜ்யங்களை
ஜயித்தவன் ஸஹாதேவன். அவன் ஜயித்த அந்த ராஜ்யங்களில் ஒன்றுக்கு ஹேரம்பம் என்று பாரதத்தில்
பேர் கொடுத்திருக்கிறது. ஒருவேளை அதுதான் பிற்கால மைஸுரோ என்னவோ?மைஸூர் என்பது மஹிஷூர்-
மஹிஷ ஊர் - என்பதன் திரிபுதான். மஹிஷம் (என்றால்) எருமை. 'ஹேரம்ப'த்திற்கு எருமை ஸம்பந்தம்
சொல்கிறார்களே! அந்த ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஸஹாதேவனிடம் தோற்றுப் போனார்கள். ஆனாலும்
அவர்கள் தங்களைப் பற்றி ரொம்பவும் தற்பெருமை அடித்துக் கொள்கிறவர்களென்று தெரிகிறது.
அதனால் பெருமை பீற்றிக் கொள்பவர்களை ஹேரம்பர் என்று சொல்வதுண்டு என்று தெரிகிறது. அந்த
தேசத்திலே விக்நேச்வரருடைய எந்த ரூப
பேதம் ரொம்பவும்
பூஜிக்கப்பட்டதோ அதற்கே ஹேரம்ப கணபதி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
இது வெறும்
guess தான். தப்பாகவும் இருக்கலாம். முடிவாக என்ன தோன்றுகிறதென்றால், "அர்த்தம்,
கிர்த்தம் பார்க்காதே!ஹேரம்ப என்ற சப்தம் காதுக்கு நன்றாக இருக்கோ, இல்லியோ?என்னை மாதிரியே
அதிலே காம்பீர்யம், மாதுர்யம் இரண்டும் இருக்கோ, இல்லியோ?என்னை அப்படிக் கூப்பிட்டால்
பொருத்தமாக இருக்கோ, இல்லியோ?பின்னே கூப்பிட்டுவிட்டுப் போயேன்!டிக்ஷ்னரி பார்ப்பானேன்?"என்று
விக்நேச்வரரே சொல்லி இப்படிப் பேர் வைத்துக் கொண்டாற் போலிருக்கிறது!
ஹேரம்ப நாட்டு
வாஸியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாரத தேசம் முழுக்கவே ப்ரஸித்தமாகி விட்டவர் ஹேரம்பர்.
பாலகணபதியில் ஆரம்பித்து ஷோடச கணபதிகள் என்று பதினாறு மூர்த்திகள் இருப்பதிலும் ஹேரம்ப
கணபதி இருக்கிறார்; நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஷோடச நாமாக்களிலும் அந்தப் பேர்
இருக்கிறது.
சிங்கம் பூஜிக்கும்
யானை
ஹேரம்பருடைய ஸ்வரூபம்
விசேஷமானது. அவருக்கு ஐந்து முகங்கள். ஐந்தும் யானை முகந்தான். 'பஞ்ச மாதங்க முக'என்று
ஒருத்தர் கீர்த்தனம்கூட பாடினார்.திருவாரூரிலுள்ள அநேக விக்நேச்வர மூர்த்திகளில் பஞ்சமுகராக
இருக்கப்பட்டவரின் மீது தீக்ஷிதர் பாடியது என்று தெரிகிறது.
சிவனுக்கு ஐந்து
முகங்கள் உண்டு. சிவ பஞ்சாக்ஷரி த்யானத்தில் அப்படித்தான் இருக்கிறது. ஆசார்யாள் கூட
அதை வைத்து வேடிக்கை பண்ணியிருக்கிறார். ஐந்து முகமிருப்பதால் ஈச்வரனுக்குப் 'பஞ்சாஸ்யன்'என்று
பெயர். 'பஞ்சாஸ்யம்'என்று சிங்கத்திற்கும் பெயர். இந்த இடத்தில் 'பஞ்ச'என்றால் விரிந்த,
பரவலான என்று அர்த்தம். 'ப்ரபஞ்சம்'என்றால் நன்றாக விரிந்து பரவியது என்று அர்த்தம்.
இங்கே 'பஞ்ச'என்றால் ஐந்து என்றும் அர்த்தம் பண்ணிக் கொண்டு ஐம்பூதங்களால் ஆனது ப்ரபஞ்சம்
என்றும் சொல்லலாம். அது இருக்கட்டும் சிங்கம், சிவம் இரண்டுக்கும் பஞ்சாஸ்யப் பேர்
இருக்கிறது. யானைக்கு சிங்கம் என்றால் ஒரு பயம். 'ஸிம்ஹ ஸ்வப்னம்'என்றே சொல்கிறோம்.
ஒரு யானை சொப்பனத்தில் சிங்கத்தைப் பார்த்தாலும் பயத்திலேயே ப்ராணனை விட்டுவிடுமாம்.
சிங்கத்துக்குத் தன்னைவிட உருவத்திலே ரொம்பப் பெரிசாக இருக்கும் யானையைத் தீர்த்துக்
கட்டணும் என்று ரோஷம் பொங்கிக் கொண்டிருக்குமாம். ஒரு யானையைப் பார்த்துவிட்டால் தன்
பலம் அத்தனையையும் திரட்டிக் கொண்டு அதன் மஸ்தகத்தைப் பேயறையாக அறைந்து பிளப்பதற்குப்
பாயுமாம். இப்படிப் பட்ட பஞ்சாஸ்யம் (சிங்கம்) ஒரு யானையைப் பூஜை பண்ணினால் அது பெரிய
ஆச்சர்யம்தானே?அந்த ஆச்சர்யத்தைத்தான் ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.
மஹாதந்தி-வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா
திருச்செந்தூரிலுள்ள
ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் மேல் அவர் பாடிய புஜங்க ஸ்தோத்திரத்தில் முதல் ச்லோகமான விநாயக
ஸ்துதியில் இப்படி வருகிறது.
ஸதா பாலரூபாபி விக்நாத்ரி - ஹந்த்ரீ
மஹா தந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா
விக்நேச்வரர் எப்போதும்
குழந்தையாயிருப்பவர் - ஸதா பால ரூபர். ஆனாலும் - அபி என்றால் ஆனாலும்;'ஸதா பாலரூப அபி';எப்போதும்
குழந்தையாயிருந்தாலும், மலையாக இருக்கும் விக்னங்களையும் பிளந்து தள்ளுகிறார். 'விக்நாத்ரி'-
விக்ன மலையை, 'ஹந்த்ரீ'- அழிக்கிறவர்.
அப்புறம்தான் அவர்
யானையாக இருந்தும் சிங்கத்தால் பூஜிக்கப்படுவதாக
வருகிறது. மஹா
தந்தி - வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா
'தந்தி' (Danti) என்றால் யானை. தந்தத்தை உடையதாயிருப்பதால்
தந்தி. கணபதி காயத்ரீயில் தந்தி என்ற பெயரைச் சொல்லியே நமக்கு நல்லறிவைத் தூண்டி விடுமாறு
பிரார்த்தித்திருக்கிறது. பிள்ளையார் ' மஹா
தந்தி வக்த்ர அபி'; பெரிய யானையின் முகத்தைப் பெற்றிருந்த போதிலும், 'பஞ்சாஸ்ய மாந்யா'- சிங்கத்தால் பூஜிக்கப்
படுபவர். நடக்கமுடியாத ஸமாசாரங்கள் பிள்ளையாரிடம் சேர்ந்திருப்பதாக கவி சமத்காரத்துடன்
ஆசார்யாள் பாடியிருக்கிறார். சின்னக் குழந்தை விக்ன மலையையே பிளந்து தள்ளுகிறது என்று
முதலில் சொல்லிவிட்டு, அதே ரீதியில் நடக்க முடியாதது நடக்கிறது என்று தொடர்ந்து காட்டுவதாக
'யானையாயிருந்தும் பஞ்சாஸ்யத்தால் பூஜிக்கப்படுகிறது' என்று அவர் சொல்லும்போது, 'பஞ்சாஸ்யம்'என்றால்
சிங்கம் என்றே கேட்கிறவர்களுக்குச் சட்டென்று தோன்றும். சிங்கம் எங்கே பிள்ளையாரைப்
பூஜித்தது என்று யோசிக்கும் போதுதான், 'பஞ்சாஸ்யம்' என்பதில் சிலேடை பண்ணியிருக்கிறாரென்று
புரியும் இங்கே பஞ்சாஸ்ய என்பது சிங்கம் அல்ல சிவன் என்று புரியும். த்ரிபுர ஸம்ஹாரத்துக்குப்
பரமசிவன் புறப்பட்டுத் தேரச்சு முறிந்தபோது விக்நேச்வர பூஜை பண்ணினாரல்லவா?அதைத்தான்
பஞ்சாஸ்யமான்ய என்று சொல்லியிருக்கிறாரென்று புரியும்.
ஐந்து முகம்கொண்ட
ஸிம்ஹவாஹனர்
பஞ்சாஸ்ய மான்யர்
மட்டுமில்லை; தாமே பஞ்சாஸ்யராக ஐந்து முகத்தோடு விளங்கும் ரூபம்தான் ஹேரம்பர். அற்புதமான
மூர்த்தியாக இருப்பவர் அவர். ஐந்து கஜ சிரஸுகள்; பத்து கைகள். வாஹனம் என்னவென்றால்
ஸிம்ஹம்; பஞ்சாஸ்யம்! ஸிம்ஹத்தைக் கண்டு யானை பயப்படாதது மட்டுமில்லை; அதை அடக்கி அதன்
மேலேயே ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது! பஞ்சமுகத்தால் தகப்பனாரை ஞாபகப்படுத்துவது
போல ஸிம்ஹவாஹனத்தால் தாயாரை ஞாபகப்படுத்துகிறார். அம்பாள் தானே ஸிம்ஹவாஹினி? மஹா கணபதி
என்ற மூர்த்திக்கும் பத்துக் கை உண்டு. ஆனால் ஐந்து முகமோ, ஸிம்ஹ வாஹனமோ கிடையாது.
ஹேரம்பர்தான் அப்படியிருப்பவர். நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி கோவிலில் செப்புத் திருமேனியாக
ஹேரம்ப மூர்த்தி இருக்கிறார். திசைக் கொன்றாக நாலு திசைக்கு நாலு முகமும், அந்த நாலுக்கும்
மேலே சேர்த்துக் கிரீடம் வைத்தாற் போன்ற ஐந்தாம் முகமுமாக ஐந்து யானைத் தலைகளைப் பார்க்கிறபோதே
ஆனந்தமாக இருக்கும்.
ஷோடஸ
கணபதி 15 - ஹேரம்பர் (ஐம்முகர்)
அஞ்சுதல்
போக்கிடும் ஐம்முக மூர்த்தியாய் ஆனவுரு
குஞ்சரக்
கோவாம் குமரன் தமையனை கும்பிடவே
நெஞ்சம்
கனிந்தே நிகளம் துகளாய் நெறிபடவும்
வஞ்ச மிலாமல்
வளமிகு வாழ்வை வழங்குவனே
añcutal
pōkkiṭum aimmuka mūrttiyāy āṉavuru
kuñcarak
kōvām kumaraṉ tamaiyaṉai kumpiṭavē
neñcam
kaṉintē nikaḷam tukaḷāy neṟipaṭavum
vañca
milāmal vaḷamiku vāḻvai vaḻaṅkuvaṉē
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam