நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகள், ஒவ்வொன்றும் ஒரு நவரத்தினம்! அகத்திணை கருத்துக்களே பெரும்பாலும் இடம்பெறும் கலித்தொகையில் இப்பாடல் வாழ்வியலுக்குத் தேவையான ஒன்பது அறக்கருத்துக்களை ஒரே பாடலில் சொல்லியிருத்தல் சிறப்பு.
'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்' என்பது, புணர்ந்தாரை பிரியாமை;
'பண்பு' எனப்படுவது, பாடு அறிந்து ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை;
'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்;
'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை;
'நிறை' எனப்படுவது, மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்;
'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல். (கலித்தொகை 133:6-14)
- வருந்தியவர்க்கு உதவி அவர்களைத் துன்பத்திலிருந்து தேற்றுதல்;
- தம்மோடு கலநதோரைப் பிரியாமலிருத்தலே உறவைப் போற்றுதல்;
- உலகோர் வழக்கறிந்து ஊரோடு ஒத்து வாழ்தலே பண்பாம்;
- சுற்றத்தாரை சினவாதிருத்தலே அன்புடைமை எனப்படும்.
- அறியாதார் பேச்சைக் கேலி பேசாது பொறுத்தலே அறிவாகும்.
- சொன்ன சொல்லை மறவாது காபாற்றுதலே செறிவு எனப்படுவது
- மறைக்கப்படவேண்டியவற்றை பிறர் அறியாது காத்தலே நிறையெனப்படும்
- உறவேயாயினும் சார்பின்றி குற்றத்தைப் பொருத்து உயிரையும் எடுக்கவேண்டும்
- தம்மை போற்றாதவரையும் பொறுத்துக்கொள்வதே பொறை எனப்படும்.
மேற்கூறிய யாவும் இல்லார்க்கு ஏற்பக்கூறியதால் இப்பண்புகள் இல்லாதோர் சங்க காலத்திலும் இருந்தார் என்பது தெளிவு. இன்றும் இவையெல்லாமே தேவைப்படுகிற அறக்கருத்துக்கள்தான்.. ஆனால் கொள்வார்தாமில்லை இன்றும்.
இத்தனைப் பண்புகளையும் வெண்பாவால் சொல்ல பஃறொடை வெண்பாவால் மட்டுமே இயலும். என்னத்தான் முயன்றாலும், மூலப்பாடலே தெளிவாகவும், அழகாகவும், எளிதாகவும் சொல்வதை மறுக்க முடியாது.
பலவிகற்ப ப்ஃறொடை வெண்பா:
துன்பத் துழல்வாரைத் தேற்றலும் கூடினாரோ
டென்றும் பிரிந்துவி டாமையும் - அன்பொடு
சுற்றத்தைப் போற்றலில் சீற்றமில் பண்பதுவும்
கற்றலைக் காட்டிடும் கல்லார்சொல் தாங்கலும்
கற்பெனும் சொன்னசொல் காக்கும் திறனொடு
மற்றோர் ஒடுக்கம் மறைக்கும் ஒழுக்கமும்
சுற்றமே யாயினும் குற்றம் கடிதலும்
வற்றாப் பொறுத்தலை போற்றார்க்கும் நோற்றலும்
பற்றிடும் பண்பொன் பதென்பரே ஆன்றவர்
நற்றுணை யாய்கொள்வீர் நன்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam