நவம்பர் 05, 2015

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் - 11

ஒரு தலைவனும் தலைவியும் ஒருவருக்கொருவர் அழகை வருணித்துக்கொள்ளும் அழகைக் கீழ் வரும் கலித்தொகைப் பாடலின் வரிகள் எவ்வளவு சுவைபட கூறுகின்றன! பெண்களின் உடலை வருணிப்பதாயினும் அக்கால இந்திய இலக்கியமரபில் கட்டுப்பாடு என்று ஏதும் இருக்கவில்லை என்பதை பலபாடல்களும் உணர்த்துகின்றன. இதற்குக் காரணமும், இன்று போல வக்கிரமாக அந்த நாளைய சமுதாயத்தினர் ஆண்-பெண் உறவைப் பார்க்கவில்லை; ஒரு கண்ணியமான பார்வையே இருந்திருக்கிறது..

தலைவன்:
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல
அகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி
நுதல் அடி நுசுப்பு என மூவழி சிறுகிக்
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும் கால்
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான்

தலைவி:
அஃது அவலம் அன்று மன
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக்
காயாம் பூம் கண்ணிக் கரும் துவர் ஆடையை
மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய் ஓர்
ஆயனை அல்லை பிறவோ அமரர் உள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன் (கலித்தொகை 108: 1- 1-13)

தலைவன் கூறுவது:

ஏனடி! உன் கலவிக்குறி, தோள், கண் என மூன்றும் பெரிதாக, நெற்றி, பாதம், இடை என்ற மூன்று சிறிதாக இருக்கும் பேரழகியாக நீ உள்ள கவலையில், மன்மதனும் தனக்கு வேலையில்லை என்று தன்னுடைய படைக்கலன்களாம் கரும்புவில், மலர்பாணம் இவற்றை கைவிட்டான். ஆய்ச்சியர் பெண்ணே நீ தயிர்க்கலயம் சுமந்து விற்பதற்காக சென்று, களைத்தபோதும் என்னைப் பார்த்து புன்னகைத்தாயே! அது என் வாழ்வையே பகையரசனைத் தாக்கும் ஒரு அரசனின் உக்கிரத்தோடு தாக்குகிறதே! என்னை வெறுப்பவளே! நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்கிறான். இதில் பெண்களுக்கு அழகு தருவன எவை என்று கூறுவதோடு மட்டுமில்லாமல், அத்தகையவளைக் காணும் இளைஞர்களுக்கு மன்மதனின் மலர்கணையில்லாமலே ஆசை வரும் என்பதையும் கூறி, அதனால் அவனுக்கு வேலையில்லை என்கிறார். 

தலைவி கூறுவது:

இவ்வாறு: தயிர்கலயம் சுமந்து விற்பதில் எனக்கொரு வருத்தமும் இல்லை. என்னுடைய சுற்றமே ஆய்ச்சியர் கூட்டம். நாங்கள் ஆய்ச்சியர் குலப் பெண்கள். காயாம்பூ மாலை சூடி, கருஞ்சிவப்பாடை அணிந்து, கையிலொரு கோலை எந்தி, அதை நிலத்தில் ஊன்றி ஆநிரை கூட்டத்தின் முன்னே நிற்கும் நீ ஆயனோ? அல்லையோ? அல்லது அமரருள் ஒருவனோ? அல்லது சூரியனின் மகனோ? 

இது தலைவனுக்கும் தலைவிக்குமான உரையாடல் பாடலின் ஒருபகுதிதான்! கருத்தோ பழையது.. கவிதையோ இன்றும் புதுமணம் மாறாதது.

இன்றோ தனிக்கவிதை என்று ஒன்றுமில்லை.. சினிமாப் பாடல்கள்தான் பொதுமக்கள் கவிதை என்று ஆகிவிட்ட பிறகு, மெல்ல, ஆனால் உறுதியாக பாடல்கள் ஆபாசத்தின் விளிம்புக்கு வந்துவிட்டன. இரட்டைப் பொருளும், காமத்தைத் தூண்டக்கூடிய சொற்களும், தரக்குறைவான வருணனைகளும் மலிந்து விட்டன. மெல்லிய காதல் உணர்வையோ, அழகியல் இரசனையோ அருகியே விட்டது எனலாம். மறைந்த கவிஞர்கள் சிலரேகூட,  இரண்டு விதமாகவும் பாடியிருக்கிறார்கள். அவர்கள் நெல்லும் பயிரிட்டார்கள்.. கூடவே களையையும் நட்டார்கள் என்பதுதான் உண்மை. இப்போதைய பாடல்கள், தமிழில் சொல்லக்கூசுகிற சொற்களை ஆங்கிலத்தில் போட்டு நிரப்பி அவற்றுக்கு காட்சியாக்கம் என்ற பெயரில், சொற்களின் ஆபாசத்துக்குச் சற்றும் குறையாது செய்கின்றனர். கண்ணதாசன், வாலி போன்றோர் எத்தனையோ கவின்மிகு கவிதைகளைத் தந்திருந்தாலும் கடந்த தலைமுறைகளில், மக்களின் இரசனைக்கு ஏற்ப எழுதுகிறோம், அல்லது இயக்குநர்கள் கேட்கிறார்கள் என்ற கேடயத்துள் கேவலத்தையும் நடத்தினார்கள். ஆனாலும் அவற்றிலே இன்னும் அழகுணர்ச்சியும் மிச்சமிருந்தது.  பிறகு வந்த கவிஞர்களோ இவற்றை கேவலமாகவே நினைக்கவில்லை.. இன்னும் 50 வருடங்களுக்குப் பிறகு இன்றைய கவிதைகளே பூடகமாகச் சொன்னதாகக் கூட சொல்லுமளவிற்கு சீர்கெடலாம்.. சரி விடுங்கள்! காலம் போகிற போக்கிலே ஏதெல்லாம் போகப்போகிறதோ! அது சரி….குத்தாட்டம் என்ற பெயர் தமிழ் மொழிக்கு வந்ததெப்போது என்று யாராவது சொல்லுவீர்களா?

இன்றைய கருத்துக்காக இரண்டு வெண்பாக்கள்.. மிகவும் உரசாமல் கோடிட்டு காட்ட மட்டும்!

அன்று:

காமன் கணையும் களைத்திடப் பெண்ணேநீ
ஏமத் தெழிலாய் எதிருற்றாய் - சேமம்
இழந்தேன் செறுநர் இடித்த படைபோல்!
அழகாமோ சொல்வாய் அறிந்து

ஏமம் - பொன்; செறுநர் - பகைவர்

இன்று:

வாடியென் கப்பக் கிழங்கே எனப்பாடி
டாடிமம்மி என்றதி லூடிப்பின்   - ஓடிப்போய்
கல்யாணம் தான்கட்டிக் கத்தானே கற்பிப்பார்
பொல்லாக் கவிஞர்கள் இன்று 


இப்பாட்டு எளிதாகப் புரியுமென்பதில் ஐயமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...