அக்டோபர் 09, 2015

நானாபடேகரின் அடியொற்றி:

நாமெல்லோரும் பல சமுதாயத்தின் அவலங்களை, பிரச்சினைகளை வெற்றாய் எதிரெதிர் துருவங்களின் எல்லைகளுக்குக் கொண்டு சென்று, அல்லது நின்று கொண்டே பார்க்கப் பழகிவிட்டோம். தீர்க்க அல்ல! பெரும்பாலும், நம்முடைய இயலாமையையோ அல்லது பிரச்சினையின் பிரமாண்ட பரிமாணததையோ காரணம் காட்டி, நம்முடைய சமூக அக்கரையை, அனுதாபத்தைக் காட்டுவதோடு நிறுத்திக்கொண்டு, நமது கடமை முடிந்ததாக எண்ணுகிறோம்

அரசியலில் இருப்பவர்களுக்குத்தான், மேலும் மேலும் பிரச்சினைகள் பெருக வேண்டும், அவலங்கள் அமோகமாக வேண்டும். அப்போதுதான், அவர்களது அன்றாட வாழ்வுக்கும், பிழைப்புக்கும், உத்தரவாதம். தீர்ப்பது அவர்கள் நோக்கமாக பெரும்பாலும் என்ன, நிச்சயமாக, இருப்பதில்லை. முடிந்தால் வளர்த்துவிட்டு அந்த நெருப்பிலே குளிர்காயத்தான் எண்ணுகிறார்கள்.

எவ்வளவு பெரிய பிரச்சினையானாலும், சிந்தனையில் திண்மை இருந்தால், சீரிய நோக்கிருந்தால், ஒரு உண்மையான தீர்வைக் காணலாம் என்பதற்கு மராட்டிய நடிகரான, நானா படேகரின் அண்மை அறிவிப்பே சான்று. விவசாயிகள் இறக்கும் போதெல்லாம், எதிர்கட்சிகள் ஆளும் கட்சியினர் அதற்கு மொத்த காரணமும் என்பது போல பழி சுமத்துவதும், குறிப்பாக மோடி என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு அதை செய்வதையும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

நானா படேகர் செய்வதை நீங்களும், நானும் கூட செய்யலாம். பணம் படைத்தவர்கள் எல்லோரும் செய்யலாம்! மனம் படைத்தவர்களாகவும் மாறிவிட்டால்! பெருமளவில் சம்பாதிக்கும் பெரிய நிறுவனங்களும், அவற்றில் லட்சக்கணக்காக சம்பாதிக்கும் உயர் மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், கோடிக்கணக்கில் குவிக்கும் நடிக, நடிகையரும், ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட சதவிகித சம்பாத்தியத்தை, இதற்காகவே தொடங்கப்பட்ட பொதுத்தொண்டு நிறுவனம் வாயிலாக, கொடுத்து, பாதிப்பில் இருக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்யமுன்வந்தால், நம் நாட்டில் மற்றொரு விவசாயி தற்கொலைக்கு முயல்வாரா? ஏன் அரசியல்வாதிகளும் அவர்கள் அடிக்கின்ற கொள்ளையில் ஒருபங்கை இதுபோன்ற தருமத்திற்கு செலவிட்டால், அவர்களுக்கு ஓரளவுக்காவது பரிகாரமாகும்.

பருவமழை பொய்த்தல், மாநிலங்களுக்கிடையேயான நீர் பகிர்வு சண்டையினால் நீர் வரவின்மை, கடன் சுமை, பெரிய வர்த்தக நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும், மொத்த கொள்முதல் என்ற பெயரில், அடிமாட்டு விலையில் கீழ்தட்டு விவசாயிகளின் வாழ்வாதாரங்களில் கைவத்தல் என்று எத்தனையோ சுமைகளுக்கு நடுவே, இந்தியாவின் விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது.. விவசாயிகள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்

ஒருபுறம் வருங்கால சந்ததியினரின் தொகை கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டே போகிறது! மற்றொரு புறம் விளை நிலங்கள் அருகிக்கொண்டே வருகின்றன. நீரின்மையால் விளைந்த பயிர்களும் கருகிக்கொண்டே இருக்கின்றன. விளச்சலளவும் சுருங்கிக்கொண்டே வருகின்றன. இதில் விவசாயத்தில் வருமானமும் இல்லை, வாழ்க்கை வளமும் இல்லையென்று பாரம்பரிய விவசாயிகள் தொழில்களை கைவிடுவதும், அவர்கள் சந்ததியினர் வேறு தொழில்களுக்குச் செல்வதும் எத்தனை பேராபத்து?

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று சொன்னவர்கூட உழவையே முன்னிறுத்திப் பாடினார்.

ஒருங்கிணைந்த சிந்தனையும், அதிவேகச் செயல்பாடுகளுமே அழிவுக்குச் செல்வதற்கு வேகத்தடையும், முடிந்தால் மீள்வதற்கும் வழி.

விவசாயம் இல்லாமல், வெறும் பணத்தையா நமது வருங்காலம் உண்ணப் போகிறது

நானா படேகரின் முயற்சியிலே முடிந்தால் நாமும் பங்குகொள்வோமே..! இதற்காக சுயநலமில்லாத, சார்பில்லாத, உழவர் நலத்தைக் காப்பதே உடனடி தேவை என்பதை தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி செயல் படுவோமே.. 

இதற்கு வெறும் லைக் மட்டும் போட்டு கைகழுவாமல், உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களைத் தெரிவியுங்கள் பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...