கலித்தொகைச் சொல்லும் அன்றைய கருத்து:
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை …..
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 18 : 10 – 11
பொருள்:
இல்லற வாழ்க்கையாவது – கணவனும் மனைவியும் வாழ்நாள் வரையும் ஒருவரை ஒருவர் தம்முள் தழுவியும் ஒவ்வொரு சமயம் ஒன்றன் கூறாடையை உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும் வருந்தாது – உள்ளம் ஒன்றிக்கலந்து பிரியாது இருப்பவர்களுடைய வாழ்க்கையே வாழ்க்கை !.
இன்றைய காட்சி எப்படி?
வழக்கு மன்றங்களின் படிகளில் வாழ்க்கை ஏறி, மணமுறிவுகள் மலிந்துவிட்ட இக்காலத்தில், கருத்தடைக் கருவிகள் கற்பை சில ரூபாய்களுக்குள் முடிந்துகொண்டுவிட்ட இக்காலத்தில், திருமணம் ஆவதை விட, மணமுறிவுகள் மிகவும் வேகமாக நடைபெறுவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
புரிதலின்மை, புரிதலுக்கு மனமின்மை, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்கிற வாழ்க்கை முறை இவையே இவற்றுக்குக் காரணம். அற்ப காரணங்களுக்காக மணமுறிவு கோருவது மிகவும் சாதாரண காட்சியாக ஆகிவிட்டது இன்று. கடைசி மாற்றுவழியாக இருக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பு, ஒரு வசதியான கருவியாக மாட்டிக்கொண்டு அத்தகைய மணமுறிவுகளை மறைமுகமாக ஊக்குவிக்கின்றன என்றே தோன்றுகிறது..
அந்த வருத்தத்தில் எழுதியது:
அறத்தின் வழியினில் இல்லறம் பூண்டு
சிறப்புடன் வாழ்ந்தனர் அன்று - மறந்தே
துறக்கவும் தூக்கி எறியவும் தோதாம்
உறவுக ளெல்லாமே இன்று
கணவன் மனைவி உறவுகள் எல்லாம்
இணங்கும் வரைதானென் றாச்சு - வணங்கி
அணங்கை அனுசரித் தாலே மணக்கும்
தணலாய் தகிக்குமன் றி