சொல்லத்தான் நினைக்கின்ற ஆசைகோடி
சொற்கூட்டில்
அடங்காதென் உள்ளமாடி
கொல்லத்தான் செய்கிறதே என்னவோடி
கொட்டத்தான் முடியாமல் தடுக்குதேடி
வல்லனாய்தான் வைக்கவில்லை வானுளோனும்
வகையும்தான் தெரியவில்லை இங்குநானும்
அல்லலாய்தான் அவதியுற்று அலைவதொன்றே
அவனெனக்கு
விதித்ததென்று கொள்ளுவேனோ?
அங்கலாய்த்து அங்கலாய்த்து என்னகண்டேன்?
அங்குமிங்கும்
அலைந்தலைந்தும் என்னசெய்தேன்?
தங்கியெந்தன் மனம்நிறுத்தும் தகையறியேன்
தந்திரங்கள்
தெரியாமல் தவித்திருக்கேன்
எங்குமுளான் என்பவனோ எனக்குமட்டும்
எங்குளானோ என்றகேள்வி யில்மறைந்தான்!
அங்கதமாய் ஆகிற்றே ஆகவாழ்வும்
அன்றாடாம் அவதியொன்றே அணுக்கமிங்கே!
உள்வயமாய் முடங்கிநின்று உளைச்சலோடு
உன்மத்தம்
பிடித்தவன்போல் ஆனதேனோ?
கள்ளருந்திக் கருத்தழிந்து காய்ந்தவர்போல்
கண்ணிருந்தும்
குருடாகிப் போனதேனோ?
பள்ளமென்று பார்த்தாலும் பாரான்போல்
படியென்று
ஏறியேனோ வீழ்ந்துபட்டேன்!
எள்ளிபலர் எனைப்பார்த்து எக்களிக்க
ஏனோநான் எனக்கேதான்
விதித்துவிட்டேன்!
நல்லதொரு வீணையென எனைச்செய்தாய்
நான்முகனின்
நாயகியே நாவமர்ந்தாய்
நில்லெனவே பணித்தென்னை நேர்கோட்டில்
நிறுத்திடவே
நெறியொன்றும் செய்யாயோ?
ஒல்லைதந்து ஒழிப்பதெலாம் ஒழிதராமல்
ஒழுங்கிலெனை
ஒழுக்கிநின்று ஒளிசெயாமல்
வல்லனாக்கி வான்புகழ்கொள் வழிசெயாமல்
வாடியுளம்
வருந்துவனோ வாணிசொல்நீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam