ஒரு கற்பனை உரையாடல் (கண்ணன் துவாரகைக்கு குடிபெயர்ந்து செல்கையில்)
தோழி:
ராதையே நீயிங்கு செய்வதென்ன - த்வாரகையின்
பாதையில் கண்ணன்தேர் விரைவதற்கு நிற்கையிலே?
பேதைபோல் நீயிங்கு கண்ணனின்றி கண்ணீரும்
வாதையுமாய் கழித்திடவோ காலமெலாம் காத்திருந்தாய்?
பாரங்கே கோபியர்கள் கூடிநின்று கோவென்று
ஆரமுதன் தேர்க்காலைப் பற்றிநின்று அரற்றிகண்
நீரதனை பெருக்கிநதி தீரத்தையும் மீறுகையில்
தூரமவன் செல்லுகிறான் துவளாதோ உன்மனது?
ராதை:
கண்ணனோடு ராஸமதில் களித்திருந்த காலமெல்லாம்
எண்ணத்திலே என்றென்றும் நீடித்து இருக்குதடி
தண்ப்ருந்தா சோலையதின் ஆத்மாவே ( கண்ணன்மணி | நீல மணி )
வண்ணனிங்கு வாழுகிறான் திண்ணமது என்னுளத்தில்
ஓடிவந்து கண்மறைத்து மாயமெல்லாம் காட்டியவன்
தேடிபலர் வாட்டமுற ஓடிதன்னை ஒளித்தவந்தான்
கோடிகாலம் வாழ்ந்ததுபோல் குளிர்ந்திருக்கு உள்ளமெல்லாம்
போடியவன் போகட்டுமே போதுமவன் நினைவெனக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam