கல்வியின் தெய்வம் கலைவாணி
கண்களில் ஒளியென இருப்பாய்நீ
செல்வமும் நீயே அதுவிளைக்கும்
செழிப்பும் நீயே என்றுணர்வோர்
நல்லுளத் தேற்றி உனையிருத்தி
நாள்தொறும் அறிவுச் சுடரேற்றி
வல்லமை எல்லாம் பெற்றுநலம்
வளங்கள் கூடி வாழவருள் (1)
அண்டம் அகண்டம் என்றாகி
அளக்க வொண்ணாப் பொருளாகி
விண்டோர் உரைக்கரும் விந்தையென
விரிந்து பரந்து கிடக்குதம்மா
கண்டதன் கரையில் காட்சியதை
கடுகள வேனும் உணரறிவை
தண்டார் தாமரை மலராளே
தளரா தென்னுள் தருவாயோ? (2)
உண்டென் பார்க்கும் நீயுண்டு
உனைமறுப் பார்க்கும் நீயுண்டு
வண்டார் குழலீ வாணியெனை
வற்றா ஞானத் திருத்தியுனை
செண்டாய் மலர்ந்து மணம்பரப்ப
செகத்தோர் வியந்து வணங்கவருள்
ஒண்தா மரைமலர் மீதிருந்து
ஓங்கா ரத்தை இசைப்பவளே (3)
காணும் கலைகள் யாவும்நீ
ககனம் நிறைந்த காட்சியளே
தோணும் சிந்தனைச் சொற்களெலாம்
தோய்ந்து நிறைந்த தூயவளே
வேணும் அறிவை விழைவோர்க்கு
வேகத் தொருவழி தந்தவரை
மாணும் வகையில் உயர்த்திடுவாய்
மால்மகன் மனையாள் மாட்சியளே (4)
சாணைப் பிடித்த கூரெனவே
சடுதியில் சிந்தனை சீர்படவே
நாணைப் பூட்டி நாவில்லால்
நாற்கவி நானும் பாடிடவே
வீணைக் கையில் ஏந்திநிதம்
வியக்க வோரிசை மாந்திடவே
ஆணை ஒன்றை அருள்வாயே
அன்னம் அமர்ந்த அழகியளே (5)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam