மே 28, 2014

குறளின் குரல் - 769

28th May 2014

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
                        (குறள் 763: படைமாட்சி அதிகாரம்)

ஒலித்தக்கால் - ஆரவாரமிட்டு வந்தால்
என்னாம் - என்ன ஆகிவிடும்
உவரி - உப்புநீர் நிறைந்த கடலைப்போல்
எலிப்பகை - எலிகள்போல் எண்ணிக்கையில் பெருகி பகையாக வரினும்
நாகம் - ஒரு பாம்பானது
உயிர்ப்பக் - மூச்சுக்காற்றை விடுகையிலே
கெடும் - நலிந்து அழியும்.

எண்ணிக்கை மட்டுமே ஒரு படையின் சிறப்பைக் கூறாது. வீரன் ஒருவன் இருந்தாலே பெரும் படையையும் இல்லாதழிக்கும் ஆற்றலிருக்கும். அதற்கு கூட்டமாக வரும் வலிவில்லாத எலிகள் கடல்போல் ஆர்ப்பரித்தாலும், ஒரு நாகத்தின் மூச்சுக்காற்றிலேயே அழிந்துபடும் என்பதை உவமையாகக் கூறுகிறார் வள்ளுவர். நரிகள் கூட்டமே ஊளையிட்டு வந்தாலும் அரிமாவின் ஆற்றலுக்குமுன் நிற்கமுடியுமா?

கருத்தைக் கூற ஒருவமையும் எலிகளின் இரைச்சலுக்கு கடலின் ஆர்ப்பரிக்கும் ஒலியை மற்றோர் உவமையாகவும் கூறியது சிறப்பு. கடலென்று சொல்லாது, உவரி என்றது உப்பு நீர் நிறைந்த கடலைக் குறிப்பதாகும். உண்ணீராக இல்லாது, உப்பு நீராக இருப்பதைச் சொல்லி, அதைப்போன்ற எண்ணிக்கையில் பெருகியிருந்தாலும், பயனில்லாமையை அழகாகக் கூறும் குறள். 

எலியையும் அரவத்தையும் தொடர்புறுத்தி இலக்கியங்களில் பலபாடல்களை கி.வா.ஜவின் ஆராய்ச்சிப் பதிப்பு சுட்டுகிறது. குறிப்பாக கம்பன் பல இடங்களில் கூறுகிறார்,

“புற்றி னின்றுவல் வரவினம் புறப்பட்டப் பொருமி
 இற்ற தெம்வலி யெனவிரைந் திருதருமெலி” (மூலபல - 27)

“எலியெலாம் இப்படை அரவம் யானென
ஒலியுலாம் சேனையை உவந்து கூயினான்” (இரணியன் -50)

பெருங்கதைப் பாடலொன்று,  “பைவிரி நாகத் தைவாய்ப் பறந்த ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல ஒழிந்தோர் ஒழிய” என்று நயமாகக் கூறுகிறது.

வீரர் அல்லாதார் திரண்டு ஆர்ப்பரித்தாலும், வீரன் அஞ்சாமையைக் கூறும் பழமொழிப் பாடலொன்று,

மறுமனத்த னல்லாத மாநலத்த வேந்தன்

உறுமனத்த னாகி யொழுகின் - செறுமனத்தார்

பாயிரங் கூறிப் படைதொக்கா லென்செய்ப

ஆயிரங் காக்கைக்கோர் கல்."

மகாபாரதக் காட்சியில் அபிமன்யுவைச் சுற்றி நின்ற கௌரவர் கூட்டத்தைத் தனியொருவனாக நின்று போரிட்ட வீரத்தை இக்குறள் சொல்லும் கருத்தாலே அரியலாம். இவ்வரிய குறள், யாவரும் அறியத்தக்கதொரு குறள்.

Transliteration:

oliththakkAl ennavAm uvari elippagai
nAgam uyirppak keDum

oliththakkAl – Even it comes as noisy
ennavAm – so what?
uvari – like a salty water filled ocean
elippagai – even if the rats come in multitudes as a swarm of enemies
nAgam – a snake
uyirppak – when the snake breathes
keDum – these mice will perish and die

Sheer number alone cannot define the might of an army. Even a lone warrior of excellent abilities can destroy an army of enemies. A metaphor of rats coming in numbers perishing in a single breath of a venomous snake is given an example. Here the venome is equated to the potent valor of a warrior as opposed to evil. Even if the herd of foxes come in numbers, can they stand before the mighty roar of a lion?

While there is a metaphor to say the thought effectively, the noise of rats is likened to the noise of an ocean, which itself is another metaphor. The word “uvari” means the salty water filled ocean. Here also, the implied meaning is that though great in quantitiy, the water is not consumable as such. So is the strength in numbers without real valor. The verse is simply beautiful and so much compacted in two lines.

There are many poems quoted by the research complilation of Ki.vA.Ja from puRanAnUru, pazhamozhi nAnURu, and Kamba RamAyaNam, linking snakes and rats, in similar contexts.

This verse reminds us of a lone warrior Abimanyu, of extreme valor and courage surrounded by the Kaurava warriors of lowly character, and how he fought as a lion till he was killed by unsavory means.

இன்றெனது குறள்(கள்):

வலியிலெலிக் கூட்டம் கடல்போல் ஒலித்தும்
நலிந்தழியும் நாகமுயிர்ப் ப

valiyilelik kUTTam kaDalpOl oliththum
nalindazhiyum nAgamuyirp pa

நரிகளெல்லாம் ஊளையிட்டு கூட்டாய் வரினும்
அரிமாவின் ஆற்றலுக்கீ டோ?

narigaLellAm UlaiyiTTu kUTTai varinum
arimAvin ARRalukkI DO?

ஆழிபோல் ஆர்பரித்தும் அஞ்சும் அரவினை
ஊழிபோல் எண்ணியெலி கள்

AzhipOl Arpariththum anjum aravinai

UzipOl eNNiyeli gaL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...