23rd Jan 2014
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
(குறள் 638: அமைச்சு அதிகாரம்)
அறி கொன்று - அறிந்தோர்
சொல்வதையும் அழித்து (கேளாதொழித்து)
அறியான் எனினும் - தாமும்
அறியாமையில் இருந்தாலும் (ஆள்வோர்)
உறுதி - அவருக்கு உகந்ததை
உழையிருந்தான் - அமைச்சரென்பவர்
கூறல் - (சலிக்காது)
எடுத்துக் கூறுவது
கடன் - அவருக்கு
உண்டான கடமையாம்.
“அறிகொன்று” என்ற சொல்லுக்கு
பரிமேலழகரும், மணக்குடவரும் வெவ்வேறு விதமாக பொருள்கொண்டு உரை செய்துள்ளனர். அறிந்தார்
சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல், “அவர்கள் சொல்வதையும் அழித்து” என்று பரிமேலழகர் சொல்லுகிறார்.
அதையே, “அறிக ஒன்று” என்று பிரித்து மணக்குடவர் பொருள் செய்துள்ளார்.
இது பொருந்தாத பதப்பிரிப்பு ஆனாலும், அதுவழி நின்று பொருள் கொள்ள, “தாம் அறியவேண்டிய எதுவும் அறியாதிருப்பினும், ஆள்வோன்,
அமைச்சருடைய அறிவுறுத்தலையும், ஆலோசனைகளையும்
கேட்கவேண்டும்; தவிரவும், அமைச்சனுக்குக் அறிவுறுத்தல் அமைச்சருக்குக் கடமையாகும்”
என்னும் அளவிலே மணக்குடவர் உரை இருக்கிறது.
அறிவுளார் அறிவுறுத்தலை அழித்து, தானும் அறியானே ஆயினும், அவனுக்கும் எடுத்துக்கூறி
அறிவுறுத்தல் அமைச்சருக்குக் கடமை என்று பொருள்படுமாறு பரிமேலழகர் உரை கூறுகிறது. இதில்
ஒரு முரண்பாடு இருக்கிறது, ஆனால் வள்ளுவரின் நம்பிக்கையும் தெரிகிறது.
கொன்று என்பது மிகவும்
வலிய சொல். அழிவை எண்ணும் அறிவிலார்க்கே உரியது. அறிந்தோர் சொல்லும் அறிவுரைகளைக் கொல்லும்
ஆள்வோன் அழிவை எண்ணும் அறிவிலியும், கெடுமதியும் உள்ளவனாகவே இருப்பான். அத்தகையவனுக்கும்
அறிவுறுத்துவது அமைச்சருக்குக் கடமை என்கிறார்.
விதுரனே அமைச்சனாக இருந்தும், காரியக் குருடன் திருதாராட்டினனும், பொறாமயால்
கண்மறைக்கப்பட்ட துரியோதனனும் அவன் பேச்சைக் கேட்கவில்லையே, இறுதி வரையிலும். ஆனாலும்,
விதுரனும் அவர்களுக்கு முறையானவற்றை அறிவுறுத்துவதைத் தளராமல் செய்தான் என்றே மஹாபாரதம்
சொல்லுகிறது. நல்ல விளவு ஏற்படும் என்னும் நம்பிக்கையால் அல்ல, அது அவனுக்கு கடமை என்பதால்.
இதிகாசம் காட்டும் உண்மை இதுவாயினும், வள்ளுவன், “அடிமேல் அடிவைத்தால், அம்மியும்
நகரும்”, அல்லது “எறும்பூற கல்லும் தேயும்” என்கிற பழமொழிகளின் அடிப்படையிலே
நம்பிக்கையையும் சொல்லுவதாகத் தெரிகிறது. வள்ளுவனைத் தவிர வேறு புலவர்கள், “அறிகொன்று”
என்று சொல்லியிருந்தால் அதை தமிழ் புலவர்கள் ஏற்றிருப்பார்களா என்பது ஐயமே! சொற்சிதைவாகவே
தூற்றியிருப்பார்கள்.
அமைச்சருக்கு இலக்கணம் வகுக்கும் பாடல்கள் இலக்கியங்களில் ஏராளம். பழமொழி நானூறு
இவ்வாறு கூறுகிறது.
“உலப்பில் உலகத்து உறுதியே நோக்கிக்
குலைத்தடக்கி
நல்லறம் கொள்ளார்க்கு உறுத்தல்
மலைத்துஅமுது
உண்ணக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால்
பெய்து விடல்
கம்பனின்
மந்திரப்படலப் பாடல் இக்குறள் கருத்தை இன்னும் தெளிவாகக் கூறுகிறது.
“தம்முயிர்க் குறுதி எண்ணார்
தலைமகன் வெகுண்ட
போதும்
வெம்மையைத் தாங்கி நீதி
விடாதுநின்று
உரைக்கும் மெய்யர்”
கந்தபுராணப்
பாடலொன்றும் அழகாக இதையே சொல்லுகிறது.
“மன்னவர் செவியழல் மடுத்த தாம்என
நன்னெறி
தருவதோர் நடுவு நீதியைச்
சொன்னவர்
அமைச்சர்கள்…”
ஒரு குறிப்பு, வள்ளுவர் அமைச்சர், உழையிருந்தான், மந்திரி என்ற சொற்களை, அமைச்சர்
என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளான். தவிரவும் நுண்ணியர், சாமந்தன் போன்ற சொற்களும்
அமைச்சரையே குறிப்பன.
Transliteration:
aRikonRu aRiyAn eninum uRudhi
uzhaiyirundAn kURal kaDan
aRi konRu – Not listening to words of wisemen
aRiyAn eninum – and being ignorant self
(ruler)
uRudhi – what is right for such ignorant
ruler
uzhaiyirundAn – a minister
kURal – must say
kaDan – as it is his duty
The curious usage
of the word “ArikonRu” has given way to two different interpretations by
Parimelazahgar and MaNakkuDavar. Parimelazagar interprets it as “not
considering what the knowledgeable say and also destroying all the good
advice”.
MaNakkuDavar has
split the word as “aRiga onRu” (though unnatural) and given his interpretation.
His interpretation is this: Though unaware of what knowledge he has to possess,
and is largely ignorant, a ruler must listen to and make use of his ministers
advice. Also it is a minister’s duty to guide a ruler too. This interpretation
seems a convoluted one.
Parimelezhagars
interpretation is this: Ignoring and destroying the guidance given by the
wisemen, and also on his own ignorant ruler must never be given up a minister
as it is his duty to guide a ruler regardless of how the ruler is. Though this
advice seems a little difficult to comprehend, it shows the hope of vaLLuvar.
The word “konRu” is rather strong and belongs to fools that live by
destruction. A ruler that ignores and destroys the advice given by wisemen is a
fool, a tyrant himself and is bound to
think destruction for everyone. Despite that, he must be advised and guided by
an able minister is Parimelazagar’s intepretation.
Though the great VidurA was the minister of Dridarashtra and subsequently
to Dhuryodhana, blinded by jealousy towards PANDavAs, they never listened to
VidurA’s good advice; but VidhurA also never gave up, shirking his duty, being
frustrated or unvalued, says MahAbhAratA.
VaLLuvar also seems
to imply a hope based on two adages – “AdimEl aDivaiththAl ammiyum nagarum” (by
hitting again and again without giving up, even a person like a hardstone will
move) and “erumbu Ura kal thEyum” (as the ant moves continuously, even a stone
will diminish in time).
That apart, a word
usage like “aRikonRu” would not be accepted from other poets as it left
a lot of guessing or construing to make sense.
As always there are
many literary examples that go along with the interpreted meaning of this verse
from Pazhamozhi nAnUru, KambarAmAyaNam and Kanda purANam.
“Even if a ruler doesn’t
listen to wisemen, nor has the intellect of own
A minister must advise
and guide him, as it is his duty not to disown”
இன்றெனது குறள்(கள்):
எண்ணலற்று கற்றறிந்தோர் சொல்லும் அழிப்பார்க்கும்
நுண்ணியார் எண்ணிச் சொலல்
eNNalaRRu kaRRaRindOr sollum azhippArkkum
nuNNiyAr eNNich cholal
எண்ணலற்று கற்றறிந்தோர் சொல்வதும் கேளார்க்கும்
நுண்ணியார் எண்ணிச் சொலல்
eNNalaRRu kaRRaRindOr solvadum keLArkkum
nuNNiyAr eNNich cholal
(நுண்ணியார் - அமைச்சர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam