டிசம்பர் 12, 2012

ரவிசங்கர் - ரஜினி (சிவாஜிராவ் கேய்க்வாட்) காந்த்


12-12-12 தமிழகமே அல்லோலகல்லோலப்பட்ட நாள். வரலாற்றிலே பொறிக்கப்படவிருக்கும் நாள். ரஜினிகாந்த் என்கிற நடிப்புத்தொழிலாளியின் 63வது பிறந்தநாளை நான், நீ என்று போட்டிப் போட்டுக்கொண்டு, போஸ்டர் ஒட்டி, ரஜினி நின்று, நடந்து, படுத்து, கையைச் சொடுக்கி, அழுது, சிரித்து, கோபப்பட்டு, மூக்கைச்சிந்தி, நடனம் என்று ஏதோ பெயர்பண்ணி, என்று எதைச் செய்திருந்தாலும், செய்தாலும் அவற்றின் கூடவே பெரும்பாலான தமிழர்களும் தாங்களும் ஒத்த அவஸ்தைக்களைப் பட்டு ரஜினி மயக்கத்தில் முயங்கிக்கிடந்த நாள்!


எல்லா ஊடகங்களும் ரஜினி போதைக்கு இன்னும் ஊற்றிக்கொடுத்து ஊறுகாயும் பரிமாரிக்கொண்டிருந்தன. யார் ரஜினி ரசிகர்களை இன்னும் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே தங்க வைக்கமுடியும் என்ற வர்த்தகப் போட்டியிலே மறந்தது, இல்லை… இல்லை.. புறக்கணித்தது.. இசை மேதை ரவிஷங்கரின் மரணச் செய்தி..

எங்கே போய்கொண்டிருக்கிறது நம் நாடு? இதுவும் கூட தொலைக்காட்சி தொல்லை நாடக வசனங்களைப் போல, அடிக்கடி கேட்கப்படும் கேள்விதான்.

ஏற்கனவே இரண்டு மூன்று தலைமுறைகளை திரைப்பட மோகத்துக்காகத் தொலைத்துவிட்டு, தமிழ் நாட்டையே ஒரு நாடக மேடையாக, அரசியலே ஒரு நாடகமாக, இதைப் பார்ப்பதற்கு நாம் கைக்காசையும் செலவழித்துவிட்டு கண்ணையும் கசக்குகிற ஒரு பாவப்பட்ட பார்வையாளர்களாக இருக்கிறோம்.

நமக்குக் கிடைத்ததெல்லாம், கண்ணைத்துடைத்துக்கொள்ள கைக்குட்டை என்னும் இலவச இணைப்புத்தான்!

பண்டிட் ரவிஷங்கர் நமது நாட்டின் கலாச்சார கலங்கரை விளக்கு. இந்திய இசையை மேற்கத்தியர் திரும்பிப்பார்க்கவைத்த மேதை. இவரைப்பற்றி இணைய ஊடகங்களில் கூட செய்தியைக்காணோம். “தி ஹிண்டு”வைத் தவிர!  

ரஜினி கூத்தெல்லாம் முடிந்து, இன்று மெதுவாக செய்தி நிரப்பியாக ரவிஷங்கரின் மரணச் செய்தியும். வெறும் மரண அறிவிப்புக்குப் பதிலாக, இன்றைய தமிழ் ஊடகச்செய்திகளில், “ஒரு செய்தியாக” வே வெளியிட்டததற்காக நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

நல்ல வேள மத்திய அரசின் சார்பாக தூர்தர்ஷன் இருக்கிறதோ, ஓரளவுக்கு கௌரவமாக செய்தி ஒலிபரப்பப்பட்டு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய மத்திய அரசியல்  பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துவிட்டார்கள்.

ரஜினி ஒரு மாமனிதராகவே இருக்கலாம். ஆனால் அவர் மக்களுக்குச் செய்தது என்ன? தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக, நம்புதலுக்கு இயலாத மிகைப்படுத்தப்பட்ட வீரவெளிப்பாடுகளையும், “குத்து” வசனங்களையும் (“பஞ்ச்”-க்கு ஏற்ற தமிழ்ச்சொல் இல்லாதது மொழியின் பஞ்சமே! - ஒருவேளை குத்துப்பாட்டுகூட பஞ்ச் பாட்டோ?) தந்த மகிழ்ச்சியை விலைக்கு விற்றதுதான்.

அவருக்கு பெருமளவில் இலாபம், வளர்ச்சி,பெயர் புகழ்.. திரைப்படத்துறையில் இவரை ஒட்டிய வர்த்தக வளர்ச்சி, பலருக்கும் வாழ்வு, இலாபம். ஆனால் சாதாரண இரசிகர்களுக்கு?

ரஜினியின் பிறந்தநாளை வாழ்த்தலாம். நானும் வாழ்த்துகிறேன். அதே சமயத்தில் ஒரு மாமேதயின் மரணத்துக்கு வருந்தி  அஞ்சலி செய்வதை ஒரு குறைந்தளவு நாகரிகமாக நம்மக்கள் உணரவேண்டும் என்று விரும்புகிறேன்.

ஊடகங்களுக்கு ஒரு கேள்வி! நேற்று வேறு யாராவது அரசியல் தலைவர்கள் இறந்திருந்தால் கூட இப்படித்தான் இருந்திருப்பீர்களா?

பைத்தியகாரத்தனத்தை வளர்த்து, பணம் பண்ணுவதில் மட்டும் குறியாயிருக்காதீர்கள்.. கொஞ்சம் பாரம்பரியம், பண்பு இவற்றை வளர்ப்பதிலும் அக்கரைக்காட்டுங்கள்.

இறுதியாக ரஜினிக்கு: ஐயா! உங்கள் ரசிகர்களுக்குத் தலைவணங்குங்கள். ஆனால் உங்கள் அரசியல் யாருக்கும் பிடிகொடுக்காத உறுதியான நிலைப்பாட்டைப் போலவே, இந்த மாதிரி வெற்றுப்புகழ்ச்சிகளுக்கும், ஆரவாரத்துக்கும் இடங்கொடாத நிலையை எடுங்கள்!.

மனிதராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும். மாமனிதராக வாழ்வதற்கும், மாமனிதர்களின் சரித்திரப்பக்கங்களைப் புரட்டிப்பார்த்து, நாமிருக்கும் இடத்தை சுயசோதனை செய்துகொண்டே இருக்கவேண்டும்.!

உங்களைக் கொண்டாடும் மனிதர்களின்மேல் உங்களுக்கு ஆளுமையில்லை என்று நீங்கள் நினைத்தால்மட்டுமே,  அல்லது உங்களுக்கே தெரிந்த்திருப்பதாலே மட்டுமே, இந்த தனிமனித வழிபாட்டை நீங்கள் அனுமதிப்பீர்கள்.

ஆளுமையிருப்பதை அறிந்திருந்தும், அனுமதிப்பீர்களானால், உங்கள் “சுயத்தில்” உங்களையே இழந்திருக்கிற ஒரு சாதாராண மனிதர்தான் நீரும்.

இறுதியாக, ரவிஷங்கர் அவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாதது என்ற போலிப் பேச்சில் எனக்கு நம்பிக்கையில்லை. அவரது இசையின் ஆத்மா எப்போதுமே நம்முடனேதான் இருக்கும். தளர்வும்,மூப்பும் எல்லாருக்குமே இருப்பதுதான். இருப்பது, இறப்பது என்னும் இரண்டுமே, ஒன்றாகக் கொள்ளும் மனத்தைத்தான் இசை தரும்.

மறைந்த மாபெரும் இசைக்கலைஞர்களின் வரிசையில், இவருடைய இவ்வுலகப் பயணம் முடிந்தாலும், இசைப் பயணம், வருங்கால கலைஞர்களின் மூலமாக இளமையோடு பயணிக்கும்! 

1 கருத்து:

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...