ஆகஸ்ட் 15, 2012

சுதந்திரமான சிந்தனைகள் - ஆகஸ்டு 15,2012


ஆகஸ்டு 15, 2012

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு:

ஒருங்கிணைந்த இந்தியாவின் 66வது சுதந்திர தினவிழா இன்று. முதல்நாள் ஜனாதிபதி உரை. இன்று வழக்கம்போல தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி பிரதமர் உரை.. ஒரே சர்ச்சை மயம். ஏற்கனவே மன்மோகன்சிங்குக்கு மெளனத்திற்கு ஒரு நோபெல் விருது இருந்தால் கொடுக்கலாம் என்பது போல் ஒரு மெளனசாமியார் தோற்றம். 

இவர் பேசினாலோ மெளனமாகவே இருந்திருக்கலாமே என்று தோன்றும். சூத்திரதாரி சோனியாவின் பொம்மலாட்ட ஷோவின் டம்மி கதாநாயகன் இவர்தான். அங்கே என்ன சொல்லலாம், கூடாது என்று உத்தரவாகிறதோ அதன்படியே நடக்கும் ஹெச்.எம்.வி முத்திரை உருவத்தின் வார்ப்பு. என்ன இருந்தாலும் கிடைத்தது பிரதமர் பதவியாயிறே, நன்றி இராதா?

நாட்டின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையின் உருவமாக காட்சியளிக்க வேண்டிய இவர், தள்ளாடிக்கொண்டிருக்கும் “நிலையான” அரசைத்தான் கொடுக்க முடிந்திருக்கிறது. இவர் கதையே “நித்ய கண்டம் பூர்ண ஆயுசு”, என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது. இவருடைய அமைச்சரவை சகாக்களும் சரி, மற்ற காங்கிரஸ் எம்.பிகளும் சரி, இவருக்கு மேலும் தலைவலியைத்தான் உண்டுபண்ணுகிறார்கள். தவிர, அவ்வப்போது, “ராகுல் பொறுப்பான பதவிக்கு” ரெடி என்னும் மெல்லிய எச்சரிக்கையான பயமுறுத்தல் வேறு! என்னதான் செய்யமுடியும் மிஸ்டர் சிங்கால்?

இன்று காலை விஜய் டீவியின் “நீயா நானா” நிகழ்ச்சியில் தங்களைக்கவர்ந்த ஆதர்ச தலைவர்களைப்பற்றி நிறையபேர் பேசினார்கள்.  தாகூர், பெரியார், ராஜாஜி, சுபாஷ் சந்த்ரபோஸ், காமராஜ், சர்தார் வல்லபபாய் பட்டேல், காந்திஜி, நேரு, வ.உ.சிதம்பரனார், அம்பேத்கார், பாரதியார், என்றெல்லாம். தலைவர்கள் லாலாலஜபதி ராய், கோபாலக்ருஷ்ண கோகலே, லோகமான்ய திலக் என்று எத்தனையோ சுதந்திர தீபங்கள் தங்களை எரித்து இந்தியாவுக்கு சுதந்திர கிடைப்பதை பார்க்காமலேயே மாண்டுபோனார்கள்.

கோபிநாத் நல்ல ஆளுமை உள்ள, விஷயமறிந்த ஒரு ஒருங்கிணைப்பாளர், தொகுப்பாளர்! நட்சத்திர பேச்சாளர்களிலே என்னைக் கவர்ந்தவர் நடுவிலே அமர்ந்திருந்த தமிழருவி மணியன் அவர்கள்தான். தெள்ளத்தெளிவான பேச்சு. அவர் சொல்லியது போல, இன்றைய இளைஞர் சமூகத்தைப்பற்றிய வருத்தமும் கவலையும் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நீங்காவிட்டாலும், வெகுவாகக்குறைந்துபோனது.

தாங்கள் சார்ந்திருக்கும் தளத்தை ஒட்டியே, தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவரைப் பற்றிய விரிவான அறிவோடு பல இளைஞர்கள் பேசினார்கள். ஒவ்வொருவருமே மிகவும் ஆழ்ந்த சிந்தனையாளர்களாகத்தான் தெரிந்தார்கள். 

உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். நீங்கள் இருக்கும் புலத்தை அறிந்தது போல, மற்றவர்களைப்பற்றியும் அறிந்துகொள்ளுங்கள். சார்பில்லா நடுவாண்மையை உங்கள் சிந்தனையில் கொண்டுவாருங்கள். ஒருமுறை திருக்குறளில், நடுவுநிலைமை அதிகாரத்தைப் படியுங்கள். கருப்புவெள்ளை என்று அணுகுமுறையில்லாமல், பலவித கருத்துக்களையும் படியுங்கள். 

நிறையபேர் பாரதி தன்னுடைய வீட்டில் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துவந்ததைப்பற்றியும், பெரியார் தீண்டாமை ஒழிப்புக்கு முன்னோடி என்றும் பேசினார்கள். நமது காவியங்களான மஹாபாரதத்திலும், இராமயணத்திலும், இந்திய ஆன்மீக தத்துவ தரிசனத்தின் முன்னோடியான சங்கரரின் வாழ்விலுமே இறைவனே தான் எந்தவொரு இனவேற்றுமைக்கும் ஆட்படாதவன் என்று உணர்த்திய பலசெய்திகள் உண்டு. 

வரலாற்று உண்மைகளில், சொல்லப்படாத ஒன்று, தமிழ் இசை முன்னோடிகளில் ஒருவரான கோபாலக்ருஷ்ண பாரதியார் 1800 களிலேயே நந்தன் சரித்திரம் எழுதி அதில் தீண்டாமை என்பது இறைவனுக்கு இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். 

இத்துணைக்கும் அவரும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். நந்தன் கதையும் அவர் கூறியது போல் நடந்ததாக அவருக்குமுன்னால் எழுதப்பட்ட எந்த நாயன்மார்களின் வரலாற்றிலும் இல்லை. இருந்தும் ஏன் எழுதினார்? வழக்கில் இருந்த ஒரு முறைகேட்டை, நந்தன் பாத்திரத்தில் ஏற்றிச் சொல்வதன் மூலம் ஒரு இலக்கியவாதியாக, அவர் கண்டித்ததின் வெளிப்பாடே அவரது நந்தனார் சரித்திரம் இசை நாடகம்.

பொதுவாக எல்லா “நீயா நானா” நிகழ்ச்சிகளிலெல்லாம், இரண்டு பக்க நியாம்தான் பேசப்படும். சில பிரச்சினைகள் வேண்டுமானால் இரண்டே நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் பெரும்பாலான பிரச்சினைகள், பலவித நியாயங்களை, பார்வைகளை உள்ளடக்கியவை;  கோபிநாத் நன்றாக நடத்தினாலும், பெரும்பாலும் ஒரு உண்மைதேடல் இருந்தாலும், இவை ஒரு ஊடகம் சார்ந்த பொழுபோக்காகவே இருக்கும், பட்டிமண்டங்கள், சில்லரை நகைச்சுவை கேளிக்கையாய் போனார்போல். அவருக்கும் டி.ஆர்.பி மதிப்பீட்டைச் சார்ந்த, வணிக வெற்றி உறுதிசெய்கிற கட்டாயங்களும் உண்டே! காரைக்குடி கம்பன் விழா பட்டி மன்ற நிகழ்வுகளை 70களில் கேட்டவர்களுக்குத் தெரியும் பட்டிமன்றங்கள் எப்படிப்பட்ட சிந்தனை அரங்குகளாக இருந்தனவென்று.

ஆனால் இன்று, நடந்த நீயா நானா நிகழ்ச்சி, ஒரு நல்ல முயற்சி, இத்தகு அரங்கங்களை நாடுதோறும் நிகழ்த்தி இளைஞர் சமூகத்தை தட்டி எழுப்பினாலே வருங்கால இந்தியா வியக்கத்தக்க இந்தியாவாக இருக்கும். மறந்துவிட்ட விடுதலையியக்கத் தலைவர்களைப்பற்றி, சிந்தனையாளர்களைப்பற்றி, இந்தியாவின் ஆன்மிகப்பாதையைப்பற்றி நிகழ்ச்சிகளை அளித்தால், இளைஞர்களை படிக்கவைக்கமுடியுமானால், விஜய் டீவி, தன் பெயருக்கேற்றதாகவே இருக்கும்.

இன்று இந்தியா இருக்கும் நிலையைப் பார்த்தால் பாரதி இப்படித்தான் பாடியிருப்பானோ?

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -ஆனால்
எங்கும் எதிலும் சுயநலமென்றாச்சு.

சங்குகொண்டே வெற்றி ஊதியாச்சு-இப்போ
வெற்றிக்கே சங்கும் ஊதியாச்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...