ஒருவழியாக அன்றைய வேலையெல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது, மது, கைக்கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் இரவு 8.30.
நடு ஹாலில் சோபாவில் உட்கார்ந்துகொண்டு, கைகளை மேலே தூக்கிக்கொண்டு பின்னலாக நெட்டிமுறிக்கும் பாவனையிலேயே, எதிரே ஓடிக்கொண்டிருந்த டீ.வி.யின் பிம்பங்களை மனதில் வாங்கிக்கொள்ளாமல்,வெற்றாகப் பார்த்துக் கொண்டிருந்தவனை,.. கல்யாணியின் குரல் வெகு தூரத்தில் ஒலித்து, பிறகு மெல்ல கிட்டே வந்து,..
"என்ன மது.. கேட்கக் கேட்க காதிலேயே விழலியா..? ரொம்ப டயர்டா? .." - எழுப்பியது!
"ஆமா.. ரொம்ப லாங் டே இன்னைக்கு.. இங்கைக்கும் அங்கைக்குமா கார் ஓட்டி ஓட்டி, கை காலெல்லாம் கெஞ்சறது.. ஏதாவது உருப்படியா நடந்துதான்னு கேட்டா.. "எதுவுமில்ல.. சே! என்ன ரெச்சட் லைஃப் இது" -- மது அலுத்துக்கொண்டான்.
"என்ன ஆச்சு இன்னிக்கு? "அந்த லெஸ்லியோ.. புஸ்லியோ.. அவள பாக்கப் போனேளே.. ஏதாவது உருப்படியா நடந்ததா? என்ன சொல்றா அவோ..?"
"என்ன சொல்லப்போறா! அதே ரெண்டு கதைதான்! சம்பளம் கொடுக்கற கம்பெனியான்னா, அவா கேக்கற போஸ்ட்டுக்கு ஏத்த எக்ஸ்ப்பீரியன்ஸ் அட்சரம் பிசகாம வேணுங்கறா.. இவொகிட்ட வேல இருக்கு.. ஆனா பணமில்ல கொடுக்கறதுக்கு.. ஸ்வெட் எக்விடியாம்! கம்பெனில 1% தராளாம்.. ரொம்ப தாராளம்!
வேலப்பண்ணு.. டீம் வொர்க், அது இதுன்னு தேனொழுகப் பேசறா.. ப்ச்.. ஒண்ணும் க்ளியரா இல்ல கல்யாணி...இன்னும் எத்தன நாள் இப்படி தள்ளணமோ.." - மதுவின் முகத்தில் வெறுப்பும், குரலில் விரக்தியும், ஒன்றாக அவனது மனதை சோக வெளிச்சத்தில் காட்டின.
"என்ன பண்றது மது! நெறயபேர் நெலமை இப்படித்தான் இருக்கு. ஆனா.. ஆதெப்படி..? உங்க ·ப்ரண்ட்ஸூக்கெல்லாம் வேல இருக்கு.. உங்களுக்கு மட்டும் இப்படி? எனக்கென்னவோ.. நம்ப ரெண்டுபேர் ஜாதகமும் சரியா பொருந்தலன்னுதான் படறது."
இது கல்யாணியின் ஆறுதலா.. அலுப்பாவென்று தெரியாமல் மது புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்துவிட்டு, மீண்டும் குனிந்து, தலையைக் குறுக்காக ஆட்டிக்கொண்டான்; கூடவே மௌனமாக… “ஆமாம் இன்னும் என்னோட ரிடயர்மெண்டுக்கு அப்புறம் இதையே சொல்லிண்ட்ரு..” தனக்குள்ளாக முணுமுணுத்துக்கொண்டான்.
கல்யாணி, அதை கவனிக்காமல், கொத்தவரைக்காயை ஆய்ந்துகொண்டே,
"மது, நாளைக்கு ஜிண்டாவுக்கு..(மது-கல்யாணியின் ஒரே பெண் சின்மயி - “சின்” ஆகச்சுருங்கி, “ஜின்” ஆகத் திரிந்து, ஆண்பிள்ளை இல்லாத குறைக்கு 'டா' சேர்க்கப்பட்டு, தற்போது செல்லப் பெயர் ஜிண்டா) சம்மர் காலேஜிக்கு அட்மிஷன் டெஸ்ட் இருக்கே.. 8 மணிக்கு அங்க இருக்கணும்.. எனக்கு கார்த்தால கஸ்டமர் மீட்டிங் இருக்கு.. நீங்கத்தான் அவள கூட்டிண்டு போகணும்"..
- அன்புக் கட்டளையுமில்லாமல், அதிகாரத் தொனியுமில்லாமல், இரண்டும் கெட்டானாகக், கல்யாணி சொல்கிறாள்.. சொன்ன விதத்திலேயே.. மதுவுக்கு, எந்த சாய்ஸூம் கொடுக்கப்படவில்லை என்று தெரிந்தது..
"என்ன கல்யாணி, நாளைக்கு, ஸ்கூல் ஃபைனல்ஸ்.. எட்டரை மணிக்கு எட்டாங்க்ளாஸ் பசங்களுக்கு 'மேத்' (math) எக்ஸாம் வெச்சிருக்கேன்.. நான் எப்படி லேட்டாகப் போகமுடியும்? இப்படி கடசீ நிமிஷத்தில சொல்றியே..! சரி சரி.. யாராவது பண்ணத்தானே வேணும்… கொஞ்சம் சீக்கிரமா கெளம்பி ஏழே முக்காலுக்கே விட்டுட்டன்னா, கரெக்ட் டைமுக்கு ஸ்கூலுக்குப் போயிடுவேன்.."
- எரிச்சலும் கோபமும் இருந்தாலும், தவிர்க்கமுடியாத விஷயம் என்று புரிந்துகொண்டு, தனக்கு தோதானதைச் கல்யாணியிடம் சொல்ல ஆரம்பித்து, அவள் கவனம் கொத்தவரைக்காயில் இருக்கவே, தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டான் மது..
20 வருடம் ஐ.டி. தொழிலில் கொடிகட்டிப் பறந்துவிட்டு, 9/11, மற்றும், அமெரிக்கப் பொருளாதார சரிவில், தன்னுடைய வேலையைத் தொலைத்துவிட்டு, 'அப்ளை.. அப்ளை- நோ ரிப்ளை' என்று விரக்தியிலிருக்கும் எண்ணற்ற மிடில் மேனேஜ்மெண்ட் அன்-எம்ப்ளாயிடுகளில் ஒருவன் மது. மார்ட்கேஜ், வளர்ந்துவரும் பெண்ணின் படிப்பு, என்ற பலவித கட்டாயங்களில் மாட்டிக்கொண்டு, விட்டு ஓடவும் முடியாமல், இருந்து தவிக்கவும் முடியாத திரிசங்கு நரகத்தில் உழண்டு கொண்டிருக்கும் ஏராளமான கலிஃபோர்னிய இந்தியர்களின், ஸாம்பிள்தான் மது..
ஆனாலும், கைக்குக் கிடைத்த மிடில் ஸ்கூல் (6 முதல் 8-ம் வகுப்பு வரை) கணக்கு மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர் வேலையை ஒத்துக்கொண்டு, கடந்த ஆறுமாதமாக, இதைத்தான் செய்து வருகிறான். தன்னுடைய கடைசீ சம்பளத்தில் நான்கில்ஒருபங்கு கூட இந்த வேலை தராமல் போனாலும், பொழுதை உருப்படியாகப் போக்கவும், தன் பங்குக்கு, கொஞ்சம் நிதி சுமையை குறைக்கலாமே என்றுதான் இந்தவேலைக்கும் சேர்ந்திருக்கிறான்..சம்பளம் குறைவாக இருந்தாலும், அவனுக்கு ஆசிரியத்தொழிலில் ஒரு நிறைவு இருக்கத்தான் செய்தது..
ஏதோ உள்ளுணர்வு.. நாளைய பொழுது ஒரே டென்ஷனாக விடியப்போகிறது என்று..
ஸ்கூலிலிருந்து வந்தவுடன், 4.30-ஐ மணிக்கு ஸன்னிவேலுக்கு ஓட வேண்டும். என்னிக்கும் இல்லாத திருநாளா..ஒரு ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் வேலை வரும் போல இருக்கு, இவனுடைய பழைய நண்பன் மூலமாக.. இதுக்கு நடுவில்.. ஜிண்டாவை பாட்டு க்ளாஸில வேறு விட்டுட்டுச் செல்லவேண்டும்.. எல்லாமே.. ஒன்றுக்குப்பிறகு மற்றொன்று என..ஆகமொத்தம், தலையைப் பிய்த்துக் கொள்ளவைக்கும் நாளாகத்தான் இருக்கப்போகிறது...
"ஜிண்டா.., நம்பர் 2 பென்சில் எடுத்து வெச்சுக்கோ.. பிக்சர் ஐ.டி-யையும் பத்திரமா பர்ஸில் வெச்சுக்கோ.. கடைசீ நிமிஷத்தில எல்லாத்துக்கும் பறக்காதே.." கடமைக்கு சொல்லிவிட்ட திருப்தியில், மது தூங்கச் சென்றான்.
ஜிண்டா எதற்கும் அசைந்து கொடுப்பவள் இல்லை.. ஸீனியர் வருஷத்தில் நுழையப் போகும் அவளுக்கு, பகல் கனவு முழு நேரத் தொழில்..! படிப்பு பொழுது போக்கு.. பாட்டு, ட்ராமா, படம் வரைவது என்று மத்த விஷயங்களில் இருக்கும் கவனம் படிப்பின் மேல் சுத்தமாகக் கிடையாது.. மதுவுக்கும், கல்யாணிக்கும், இவள் மற்ற இந்தியக் குழந்தைகளைப் போல படிப்பில் சூட்டிகையாக இல்லையே என்னும் வருத்தம் மிகவும் உண்டு..!
பொழுது முழுவதும் விடிவதற்கு முன்பாக எழுந்து, குளித்துவிட்டு, குட்டியாக விநாயகருக்கும் ஸ்லோகம் சொல்லி, பூ போட்டுவிட்டு, ஜிண்டாவை எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு, குப்பை எடுக்கும் தினத்துக்காக, குப்பைத் தொட்டியெல்லாம் காலி செய்து, வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு.. ஜிண்டாவை அவசரப் படுத்தினான் மது..
ஜிண்டா ஆடி அசைந்து நிதானமாக எழுந்து.. தூக்கக் கலக்கத்திலேயே பாத்ரூமிற்கு ஊர்ந்து,ப்ரஷ்ஷை எடுத்து அதில் பேஸ்டை அமுக்குவது, இன்னும் ஸ்லோமோஷனில் தெரிந்து.. மதுவுக்கு டென்ஷன் ஆரம்பித்தது.. மெதுவாக குரலை உயர்த்தி.. "ஜிண்டா.. மணி ஆறு ஆகறது.. ரொம்ப டயமில்ல.. கொஞ்சம் வேகமா எல்லாத்தையும் செய்யறியா..? நான் டென்ஷனோட வண்டி ஓட்டமுடியாது..! தெரியறதா..?"
ஜிண்டா.. அவள் நிதானத்திலேயே பதில் சொன்னாள்.. "சரிப்பா.. (வல்லின சகாரம்!) எட்டூருக்கு ரெடியாயிடுவேன்.." அவள் கல்யாணியின் திருநெல்வேலி பேச்சு/ உச்சரிப்பு வழக்குகளை பொருத்தமாக சொல்லக் கற்றிருந்தாள்..!
மது, கம்ப்யூட்டரை ஆன் செய்து.. மெயில் மற்றும், அன்றைய செய்திகளைப் படிக்க ஆரம்பித்தான்.. "சே.. எல்லாம் 'தண்ட' மெயில்.. ஒதவாக்கரை ந்யூஸ்தான்....
அலுப்புடன் கம்ப்யூட்டரை ஆணைத்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தான்.. மணி 7..
"இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்ப வேண்டும்.. இந்த பொண்ணு என்ன பண்றது.. ? ஜிண்டா.. என்ன ரெடியாயிட்டயா..? சீரியல்லாம் சாப்பிட்டாச்சா.. பென்ஸில் பேனா எடுத்திண்டயா..? ஐ.டி-யெல்லாம் பர்ஸ்ல எடுத்து வெச்சிண்டயா..?" - மதுவின் குரலில் பொறுமையை இழக்கப்போகிற அவசரம் தெரிந்தது.
ஜிண்டா.. குளியலறையில் இன்னும் அலங்காரம் செய்துகொண்டு.. ஷகீராவின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்..
மது பொறுமையை இழந்து.. "காலைலேந்து, என்ன எழவு பாட்டுடி இது.. ஆமா, எந்துக்கு இவ்வளவு நேரம் அலங்காரம் பண்ணிக்கற கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்க வர்ரா மாதிரி...!. நான் ஒங்கிட்ட சொன்னது என்ன..? நீ பண்றது என்ன..? ப்ரேக் ·பாஸ்ட் முடிச்சுட்டு வேணுங்கற எல்லாத்தையும் எடுத்து வெச்சிக்கச் சொன்னனா..? இல்லியா..? நீ என்னடான்னா.. ஒருமணி நேரமா.. அலங்காரம் பண்ணிண்டிருக்க..!
ஒனக்கு எதாவது சென்ஸ் ஆ·ப் டைம், ப்ரபோர்ஷன் இருக்கா..? சே.. ஒரு பதினஞ்சு வயசு பொண்ணுக்கு கொஞ்சமாவது பொறுப்பு, ரெஸ்பான்ஸிபிலிட்டி வேணாம்.. போடி.. போ..எனக்கு வர்ர கோபத்துல ஏதாவது சொல்லப்போறேன்.." - கொஞ்சமாகக் குரலை உயர்த்தினான்..
ஜிண்டா.. முணுமுணுத்துக் கொண்டு வெளியே வந்து.. சமயலறைக்குள் சென்று, ஒரு போர்சிலேய்ன் பௌவுலில் (bowl) சீரியலைக் கொட்டிக் கொண்டு, பாலை அதன் தலையில் கொட்டி அபிஷேகம் செய்து, ஒரு ஸ்பூனையும் எடுத்துக் கொண்டு, சோபாவில் டீ.வி. முன்னால் உட்கார்ந்து கொண்டு எம்.டீ.வி சேனலை ஆன் செய்யவும், மதுவுக்கு இரத்த அழுத்தம் எகிறியது..
மிகவும் அன்புடன்.. "அறிவு கெட்ட சனியனெ.. ஒனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா? இப்ப என்னடீ.வி. வேண்டியிருக்கிறது? டீ.வியை அணச்சிட்டு சீரியல சாப்பிட்டு முடி.."- மதுவின் குரல் மேல் ஷட்ஜத்துக்குத் தாவியது..
ஜிண்டா.. மிகவும் அமைதியாக..," டீ.வி.யை அணச்சிட்டா.. சீரியல் முடிஞ்சிருமாப்பா.."
- இதுபோல அசந்தர்ப்ப அசட்டு ஜோக்குகளுக்கு தன்னுடைய "ஜீன்" தான் உபயம் என்பதை புரிந்துகொண்ட மது.. சிறிது குளிர்ந்தான்..
ஒருவழியாக.. ஜிண்டாவைக் கிளம்பச்செய்து காரில் ஏறும் போது, நேரம் 7.35. ஏறும் போதே,காரில் வழி நெடுக, அப்பா தனக்கு அட்வைஸ் செய்யப்போவதை உணர்ந்துகொண்டதாலோ என்னவோ.. தன் காதுகளை தற்காலிகமாக அணைத்துவிட்டு, மனதுக்குள் ஷகீராவை ஓடவிட்டாள்.. மதுவும் வழி நெடுக..ஜிண்டாவின் விளையாட்டுப் போக்கினையும், படிப்பில் அவளது மெத்தனத்தையும், அவள் கனவு நிலையிலிருந்து மீண்டு, நிஜ உலகத்திற்கு வரவேண்டிய அவசியத்தையும், சொல்லிக்கொண்டு வந்ததை, வழக்கம் போல ஜிண்டா கனவுலக சஞ்சாரத்திலேயே இருந்து.. ஒருகாதின் வழியே வாங்கி, மறுகாதின் வழியாக விட்டுக் கொண்டிருந்தாள்.
20 நிமிட பயணத்துக்குப் பிறகு, அவளை..அந்த கம்யூனிட்டி கல்லூரியின் ஆபிஸ¤க்குள் சென்று பத்திரமாக விட்டுவிட்டு, கார் பார்க்கிங் இடத்துக்கு வந்தவனது செல் போன் அலறியது...
"ஹலோ மது ஹியர்... என்ன ஜிண்டா..? என்ன இப்போ..? என்ன.. ஐ.டி. கார்டை வீட்ல விட்டுட்டியா..? என்ன ஜிண்டா இது...? நான் ஒங்கிட்ட படிச்சி படிச்சி சொல்லல? இது ஹைட் ஆ·ப் இர்ரெஸ்பான்ஸிபிலிடி..இப்ப ஐ.டி இருந்தாத்தான் டெஸ்ட் எழுத விடுவாளா..?என்னடி இப்படி பண்ற...? நான் வீட்டுக்குப் போய்கொண்டுவரவே 40 நிமிஷம் ஆகுமே!
என்னால இப்ப போகமுடியாது.. வேணும்னா.. லன்ச் சமயத்தில வந்துகொடுக்கறேன்.. உன்னுடைய எக்ஸாம் ப்ராக்டரைக் கூப்பிடு நானே பேசித்தொலைக்கிறேன்...
Hello Ms... Yes..Mrs Natalie.. I can't go and bring her ID in next fifteen minutes.. Yes, I teach in a private school and I have a final to give to my eigth graders, at eight thirty.. I would really appreciate if you can let Jindaa.. I mean Chinmayee, take her test.. Thanks for obliging.. I shall definitely be there by lunch time with her I.D... Yes.. Mrs Natalie I really appreciate your understanding... Can you please put me back with my daughter?..
(ஹலோ.. மிஸ்.. அதாவது.. மிஸஸ் நேட்டலி... நான் பதினஞ்சி நிமிஷத்தில ID-ஐ கொண்டுவருவது முடியாது. நான் ஒரு ப்ரைவேட் ஸ்கூலில் டீச்சரா இருக்கேன்.. என்னுடைய எட்டாங் க்ளாஸ் மாணவர்களுக்கு, எட்டரை மணிக்கு, இன்னிக்கு இறுதித் தேர்வு கொடுக்கணும்,.. ஜிண்டாவை.. அதாவது சின்மயியை, தயவுசெய்து, டெஸ்ட் எழுத விட்டீங்கன்னா, நான் சந்தோஷப்படுவேன்.. அப்படியா.. ஒத்துகிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் லன்ச் நேரத்தில வீட்டுக்குப் போய் ID-ஐ கொண்டுவந்திடறேன்.. என் நெலமையப் புரிந்துகொண்டதற்கு ரொம்ப நன்றி..கொஞ்சம் போனை என் பெண்ணுகிட்ட கொடுக்க முடியுமா..? )
என்ன ஜிண்டா.. நான் பேசிட்டேன்.. நீ இப்ப டென்ஷன் ஆகாம எழுது.. ஆமா.. உனக்கு எங்க டென்ஷன்.. எனக்குத்தான் டென்ஷன்.." - போனை அணைத்து விட்டுகாரை கிளப்பும் போது நேரம் 8.05.
அவசர அவசரமாக ஸ்கூலை அடைந்தபோது மணி 8.30. முன்னெச்சரிக்கையாக, காரிலிருந்து செல் போனில் கூப்பிட்டு சொல்லிவிட்டதால், பள்ளியில் நுழையும் போது பள்ளி ப்ரின்ஸிபலின் உஷ்ணப் பார்வை தவிர்க்கப்பட்டது. அவசர அவசரமாக நுழைந்து இறுதி தேர்வுத் தாளை எட்டாவது வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டு, கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொள்வதற்குள்ளாக..ப்ரின்ஸிபல் மிஸ்ஸஸ் ஹைஸர் உள்ளே நுழைந்து, "மிஸ்டர் ரங்கா (மது ரங்கநாதன் என்பதன் இரண்டாம் பகுதியின் சுருக்கம்), கேன் ஐ ஸீ யூ ஃபார் எ மொமெண்ட்?" (உங்களை ஒரு சில விநாடிகளுக்குப் பார்க்கலாமா?)
என்னவோ ஏதோவென்று வெளியே சென்றவனிடம், ஒரு மணிக்கு ஒரு பேரண்ட்-டீச்சர் கான்·ப்ரன்ஸ் இருப்பதாகச் சொல்லவும்.. மென்று விழுங்கி.. மதியம் தன்னுடைய பெண்ணுக்காக கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டியிருப்பதையும், அதனால் திரும்பிவர ஒண்ணரை மணி ஆகுமென்றும் சொன்னான் மது.
மிஸ்ஸஸ் ஹைஸர்.. பெருமூச்சு விட்டு, முன் நெற்றியைச் சொரிந்து கொண்டே... ஆல்ரைட்.. பட், கேன் யூ மேக் இட் பை ஒன் தர்ட்டி?".. - கேட்கும் தொனியிலும், முகபாவத்திலும், மிஸ்ஸஸ் ஹைஸருக்கு சிறிது வருத்தம் இருப்பதை கண்டு கொண்ட மதுவுக்கு.. கொஞ்சம் மறைந்திருந்த டென்ஷன் மீண்டும் தலை காட்டியது..
பனிரெண்டு மணிக்கு அவசர அவசரமாக கிளம்பி வீட்டுக்கு ஓடி, ஐ.டி-கார்டைத் தேடி, கம்யூனிட்டி கல்லூரியை அடைந்து, எல்லாவற்றையும் சரி செய்து கொண்டபின், பெண்ணை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு மீண்டும் பள்ளியை அடையும் போது நேரம் சரியாக 1.25.
நல்லவேளையாக குறிப்பிட்ட நேரத்துக்கு ஐந்து நிமிடத்துக்கு முன் அடைந்த சந்தோஷத்தில் இருந்த போது, மிஸ்ஸஸ் ஹைஸர் எதிர்பட்டு..,
"Sorry Mr. Ranga.. Conference with the parents got cancelled. Moses's father has to be back at work by 2, it seems. Now, we have to reschedule the meeting for someother time..!
(மன்னிக்கணும் மிஸ்டர் ரங்கா.. மீட்டிங் நடக்கப்போவதில்லை. மோஸஸின் அப்பாவுக்கு, 2 மணிக்குள் திரும்ப ஆபிஸில் இருக்க வேண்டுமாம்.. நாம், இந்த பேரண்ட்-டீச்சர் மீட்டிங்கை வேறு ஒரு நாளுக்கு ஒத்திப் போட வேண்டியதுதான்).
... கேன்ஸலுக்கான காரணத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல. மது மேல், மிஸ்ஸஸ் ஹைஸர் சுமத்துவது, அவளது உதட்டு பிதுக்கலிலும், நெற்றிச் சுருக்கத்திலும், வருவித்துக் கொண்ட பெருமூச்சிலும் தெரிய, மதுவின் நெற்றிச் சுருங்கி.. நடு நெற்றியில் சூடு கொப்பளித்தது..
ஒரு வழியாக பள்ளி நாள் முடிந்து, வீட்டுக்குச் சென்று ஒரு குளியலைப் போட்டுவிட்டு, உடையை மாற்றிக் கொண்டு, வெளியே கிளம்பும் போது, ஜிண்டா கீழே இறங்கி வந்து..
"அப்பா எங்க போறே..?" - என்று கேட்கவும், மது தலையில் அடித்துக் கொண்டான்..
"மூள இருக்கா ஒனக்கு..? போகச்ச எங்க போகறன்னு கேட்கக்கூடாதுன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்.. சாதரணமா எப்பவுமே “ட்ரீம்” பண்ணிண்ட்ருக்கா மாதிரி இருக்கக்கூடாதா..? முக்கியமா கெளம்பச்சேதானா கேக்கணும்.. சரியான. இவொடி நீ.." அவசரமாகப் பொரிந்து தள்ளிவிட்டு, தண்ணீர் குடிக்க சமயலறைக்குச் சென்றான் மது..
"ஸாரிப்பா..? நீ எங்கேயிருந்து வருவ..?" - ஜிண்டா.. அவனுடைய எரிச்சலை அதிகரிக்கும் படியான அடுத்தக் கேள்வியையும் கேட்க.. மது அவளைச் சுட்டெரிப்பது போலப் பார்த்துவிட்டு.. கராஜுக்குள் சென்று காரைக் கிளப்பினான்..
வழி நெடுக.. காலையிலிருந்து நடந்த விஷயங்களை அசைப் போட்டுக்கொண்டே வந்தவன்..திடீரென்று, தன்னையே சிலுப்பிக்கொண்டு..."சே.. என்ன இது.. பாக்கப் போகிற விஷயத்தைப்பத்தி கொஞ்சம் யோசிப்போம்.. நடந்தத நெனச்சி. டென்ஷன அதிகம் செய்துக்க வேணாம்.." என்று நினத்துக் கொண்டான்..
குரங்கு மனது மீண்டும் மீண்டும் இன்றைய எரிச்சல்களுக்கே தாவிக் கொண்டிருந்தது.. மதுவின் நெற்றி சுருங்கி விரிந்து அந்த எண்ணங்களிலிருந்து விலகப் போராடிக் கொண்டிருக்க..திடீரென்று, ஜிண்டாவை ம்யூஸிக் க்ளாஸில் விட மறந்தது ஞாபகத்துக்கு வந்த அதே கணத்தில்....
"டடங் டங்க்...(அதிக பட்ச சத்ததுடன் மோதல்) க்ளீர்.க்ளு க்ளு.. க்ளிங் (கண்ணாடி நொறுங்கல்).ஸ்க்ரீச்..(அனிச்சையாக் போட்ட ப்ரேக்கில் டயர்கள் ரோடில் உராய்ந்து ஈன சுரத்தில் கார் நிற்பதற்கு முன்னான முனகல்)" பலவித சத்த விநோதங்களோடு கார் நிற்கவும்..மது, அந்த நாலெழுத்து கெட்ட வார்த்தையை.. உரக்க சொல்லி தன்னுடைய கெட்ட நேரத்தை நொந்து கொள்ளவும்...
ஓ.. பக்பக் பக்பக் பக்கும் பக்கும் மாடப்புறா.. டேப்பில் அலறிக்கொண்டு இருந்த பாட்டை நிறுத்தி விட்டு வந்த கல்யாணி பதறி அடித்துக் கொண்டு.. "என்ன மது..? எதுக்கு இப்போ கத்தினேள்..?" மதுவை உலுக்கி எழுப்பினாள். "ஏதாவது கெட்ட சொப்பனமா..? நல்லா இருக்கு.. டின்னர் ரெடி பண்றதுக்குள்ள ஒரு தூக்கம்.. அதில கனவு வேறயா..இது என்ன.. கண்ட கண்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிண்டு.. ஜிண்டா கேட்கப்போறா..?"
மதுவின் முகம் வியர்த்திருப்பதையும், மார்பு படபடப்பதையும் பார்த்துவிட்டு, கரிசனத்தோடு அருகில் வந்து.. "என்ன மது.. என்ன பிரச்சினை..? எல்லாம் சரியாகப் போயிடும்.. லை·ப்ன்னா.. ஆயிரம் இருக்கும்.. எதையெல்லாமோ மனசுல போட்டுண்டு, அநாவசியமா டென்ஷன் ஆகாதிங்கோ.. ப்ளீஸ்.. சாப்பிட்டுட்டு சீக்கிரமே தூங்கப்போங்கோ.. முகமே நல்லா இல்ல.. நாளைக்கு வேற லாங் டே உங்களுக்கு" கல்யாணியின் கரிசனம் மதுவை ஆச்சரியப்படுத்தி, சுவாசப் படுத்தியது.
கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு...சின்னதாக விபூதிக் கீற்றை இட்டுக்கொண்டு தூங்கப் போன மதுவுக்கு.. கனவுகளில்லா,சுகமான தூக்கம்.
மறு நாள், கனவுலக நைட்மேர் நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக முடிந்தது...
கூடவே ஒரு நல்ல செய்தி, மதுவைப் பொறுத்த வரை..! அந்த ப்ராஜக்ட் வேலைக்கு மது தேர்வு செய்யப்பட்டு, . அடுத்த வாரத்திலிருந்து வேலை ஆரம்பம்..!
Very nice. Could relate it to our day-to-day life so well. You releived the tension at the end with a positive spin. I am happy your character Madhu got a job.
பதிலளிநீக்கு- Guru
Very nice short story that narrated a typical day in the life of an Indian software engineer living in the bay area. i'm glad Madhu found a job in the end. கற்பனைக் கதை போல் தோன்றினாலும் இது நம்மைப் போன்ற புலம் பெயர்ந்து கலிஃபோர்னியாவில் வசித்து வரும் தமிழர்களின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளின் பதிவு போன்றே தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்கு-ராஜா
this story has such an amazing message.. life is about living for what it is right now. but we most of them forget that, and dwell in the past. tension, frustraiton, stress everything grows into a nightmare. but life is so much nicer when we take it as it comes and live for the moment.. well written Ashokji!
பதிலளிநீக்கு