வரகவிகள் வாக்கிலிருந்து பொழிகின்ற கவியமுதங்கள் உள்ளுக்குள் அவர்கள் உணர்ந்து, துய்த்த மெய்யமுதங்கள். பாரதியின் “பாருக்குள்ளே நல்ல நாடு” என்கிற கவிதையிலே, அவன் சொன்னது அத்தனையும் ஏதோ தன் உள்ளத்தில் பாரதநாடு எப்படி இருக்கவேண்டுமென்று நினத்து சொன்னதில்லை. வெற்றுப் பெருமிதத்திலே எழுதியவையும் இல்லை. நம் இலக்கியங்களும், முறிவுறாத சமய, கலை, கலாச்சார, மக்கள் வாழ்வு நெறி தொடர்வுகளைப் பற்றி விட்டுச்சென்றிருக்கும் அகச்சான்றுகளின் உண்மையினை உணர்ந்ததன் வெளிப்பாடே…
“ஞானத்திலே பரமோனத்திலே – உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு” – இந்தப் (பாருக்குள்ளே)
…. …. … …. …. …. … …. …. …. … ….
யாகத்திலே தவ வேகத்திலே – தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு – இந்தப் (பாருக்குள்ளே)
இக்கவிதைகாட்டும் உண்மைகள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைப் போல், அரசியல், சமயம், கலாச்சார. சமூகச் சீரழிவுகள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சூழலிலும், இன்றைக்கும் பாரத்தின் பல இடங்களில் சாதாராண மக்களும் உணருபவை. பாரத தேசம் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பதற்கு காரணம், சிறிது காலமாகவே “கலாச்சாரங்களின் கலப்பிடமாக” இருந்துவரும் அமெரிக்காவுக்கு முன்பாக, ஏறக்குறைய 5000-ம் வருடங்களுக்கும் மேலாக அனைத்து திசைகளிலிருந்தும் மென்முறையாகவோ, வன்முறையாகவோ வந்திறங்கிய கலாச்சார நுகர்வுகளுக்கும், திணிப்புகளுக்கும், பாரதநாடு ஆட்பட்டிருப்பதால்தான்.
முரண்பாடுகள் என்பதாலேயே மோசமென்று பொருளில்லை. ஒட்டுமொத்த பாரத்தின் முதிர்ந்த சிந்தனை வளர்ச்சியையும், வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் அடிநாதத்தையுமே அவை காட்டுகின்றன.
ஆதிசங்கரர், புத்தர் தொடங்கி சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள தவஞானியர் எத்தனையோ! சமய சிந்தனையைச் செழுமைப் படுத்தியதிலும், மக்களின் பொதுவாழ்க்கை ஒழுக்கநிலைக்கக் கரைபடிமங்களாகவும் விளங்கியதில் இவர்களின் தத்துவ தரிசனங்களும், அவற்றின் இலக்கியப் பதிவுகளும் முக்கிய பங்கை ஆற்றி வந்திருக்கின்றன. இவர்களின் சிந்தனைப் பதிவுகளை, அவற்றில் அவர்கள் கால அரசியலின் உரசல்களை, அவற்றின் முழு சாரத்தை, புரிந்துகொள்ள ஒரு பிறவி இருந்தால் போதாது. ஆனாலும் என்னால் இயன்றவரை, சில முக்கியமான சமயச் சிந்தனையாளர்களை அறிந்துகொள்ளும் முயற்சியிலே, தாயுமானவ சுவாமிகளின் பாடல்களைச் அண்மையில் படிக்க நேர்ந்தது.
தமிழ்மொழியின் வனப்பிலே, வளப்பத்திலே உள்ள பெருமிதத்திலும், பிரமிப்பிலும் மட்டுமே படிக்க ஆரம்பித்த எனக்கு, இந்த செல்வங்களையெல்லாம் கடந்த 100 வருடங்களில் வேகமாக இழந்துகொண்டிருக்கிறோமே என்னும் பதைப்பு தோன்றினாலும், இழப்பும், மீட்பும் சுழற்சியே என்கிற உலக விதியின் உண்மை ஆறுதலைத் தருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் வேதாரண்யம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடு (வேதங்களை வளர்த்த வனம்) என்னும் சிவத்தலம் ஊரிலே சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பாக, தஞ்சையை விஜயரங்கசொக்கநாத நாயக்கர் ஆண்ட காலத்திலே, சைவ வேளாளர் குலத்திலே தோன்றிய கேடிலியப்பப் பிள்ளை, கெஜவல்லி அம்மை தம்பதியர்க்கு முதல் மகனாய் பிறந்தவர் சிவசிதம்பரம். இந்த பிள்ளை கேடிலியப்பபிள்ளையின் தமயனாருக்கு சுவீகாரமாகக் கொடுக்கப்பட்டார்.
தஞ்சை அரசரிடம் சம்ப்ரதியாக (பிரதான கணக்கர்) வேலை செய்து வந்த கேடிலியப்பப் பிள்ளை வேலை நிமித்தமாக திருச்சிராப்பள்ளியில் குடிபெயர்ந்து வசித்துவந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனுக்கு தாயுமானவர் என்றே பெயர்.. அவ்விறையின் மேல் கொண்ட பக்தியினாலே, 1707-வருடத்தில் பிறந்த தனது இரண்டாவது மகனுக்கு தாயுமானவன் என்றே பெயரிட்டார்.
இள வயதிலேயே அறிவுத்திறம் மிக நிரம்பியவராக விளங்கிய, சிராப்பள்ளியிலே பாடசாலை நடத்திவந்த சிற்றம்பலதேசிகரின் மாணவராக இவர், தமிழ், சம்ஸ்கிருதம், கணிதம், ஜோதிஷம் முதலியவற்றை கோதற்று கற்று, நல்ல நிபுணத்துவம் எய்தினார். தந்தைக்குப் பிறகு அவர் தஞ்சை அரசரிடம் சம்ப்ரதியாகவே வேலை செய்துவந்தார். காலப்போக்கில் அவர் மனம் உண்முகம் நோக்கி திரும்பியதும், சிராப்பள்ளியில் அவர் “மௌன குரு” என்று அறியப்பட்ட ஒரு மகானைச் சென்றடைந்ததும், பிறகு கௌபீனதாரியாய் திருச்சிராப்பள்ளியிலேயே துறவறம் பூண்டதும், இறுதியாக இராமநாதபுரத்துக்கு அருகேயுள்ள லக்ஷ்மீபுரத்தில், நிர்விகல்ப சமாதி அடைந்ததும் வரலாறு.
ஸ்ரீ ராமக்ருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) வெளியிட்டுள்ள தாயுமானவசுவாமி பாடல்கள் புத்தகமொன்று என்னுடைய புத்தகசேகரிப்பிலே வெகுநாட்களாகக் கிடந்தது. அண்மையில் அதை தூசிதட்டிப் படிக்கப்போக, “அடடா! இதை இத்துணை நாட்களாகப் படிக்காமல் விட்டுவிட்டோமே” என்று தோன்றியது.
தமிழ் ஞான மரபிலே வந்துள்ள எத்தனையோ ஞானிகளில், அருணகிரியார், வள்ளலார், பட்டினத்தார், பதினெண் சித்தர்கள், தாயுமானவ சுவாமிகள், போல எத்துணை மஹான்கள் எப்படியெல்லாம் கவிதைப் வெள்ளமாகப் பொழிந்திருக்கிறார்கள்?
கீழேயிருக்கும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பாடலை படிக்கும் போதே, தாயுமானவரின் ஆத்ம விசாரணயின் அகண்டம் உடனே புலனாகிறது.
அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி,
அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குள்ளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கு இச்சைவைத்து, உயிர்க்குயிராய்
தழைத்தது எது? மனவாக்கினில்
தட்டாமல் நின்றது எது? சமயகோடிகள் எலாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடவும் நின்றதுஎது?
எங்கணும் பெருவழக்காய்,
யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி, இன்பமாய்
என்றைக்கும் உள்ளது எது? மேல்
கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது? அது
கருத்திற்கு இசைந்தது அதுவே;
கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்
திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் என்னும் தலைப்பிலே எழுதப்பட்டுள்ள மூன்று பாடல்களிலுமே, குறிப்பிட்ட தெய்வம் என்று குறிப்பிடாமல், தூய அத்வைத வஸ்துவைக் குறித்த விசாரணையும், அந்த துரியபரம்பொருளின் வணக்கமுமாக செல்கின்றன பாடல்கள். காலமாய், வெறும் வெளியாய் விரிந்திடும் அகண்ட ககனமெங்கும் காலம் காலமாய் தவழ்ந்திடும் அனந்தகோடி உயிர்களை ஆக்கி, காத்து, அழித்து அந்தச் சுழற்சி நாடகமாடும், எல்லைகளில்லாப் பரமனுக்கு அஞ்சலியே முதல் பாடல்.
ஊர் அனந்தம்; பெற்றபேர் அனந்தம்; சுற்றும்
உறவு அனந்தம் வினையினால்
உடல் அனந்தம்; செயும் வினை அனந்தம்; கருத்
தோ அனந்தம்; பெற்றபேர்
சீர் அனந்தம்; சொர்க்க நரகமும் அனந்தம்; நல்
தெய்வமும் அனந்தம்; பேதம்
திகழ்கின்ற சமயமும் அனந்தம்; அதனால் ஞான
சிற்சக்தியால் உணர்ந்து
கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர்
கண்ணும் விண்ணும் தேக்கவே
கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலை;நம்
கடவுளைத்; துரியவடிவைப்;
பேர் அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும்
பெரியமௌனத்தின் வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆனந்தம் ஆம்
பெரிய பொருளைப் பணிகுவாம்.
இரண்டாம் பாடலில் அனந்தமான வேற்றுமைகளைச் சொல்லி, அதில் ஞானானந்தம் தரவல்ல கடவுளை, மெய்ப்பொருளைப் பணியவேண்டும் என்று சொல்கிறார் தாயுமானவர். இந்த பாடல், நாம் சாதாரணமாக கவனிக்கிற செய்திகளைச் சொன்னாலும், தத்துவத்தேடலின் முதல் படிகளை, படிப்போர்க்கு காட்டுவதே பாடலின் சிறப்பு.
அத்வைத வஸ்துவை; சொல்ப்ரகாசத்தனியை;
அருமறைகள் முரசு அறையவே
அறிவினுக்கு அறிவுஆகி, ஆனந்த மயம் ஆன
ஆதியை; அநாதி; ஏக
தத்துவ சொரூபத்தை; மதசம்மதம் பெறாச்
சாலம்பரகிதம் ஆன
சாசுவத புஷ்கல நிராலம்ப ஆலம்ப
சாந்தபத வ்யோமநிலையை;
நித்தநிர்மல சகித நிஷ்ப்ரபஞ்சப் பொருளை;
நிர்விஷய சுத்தம் ஆன
நிர்விகாரத்தைத்; தடஸ்தமாய் நின்று ஒளிர்
நிரஞ்சன நிராமயத்தைச்
சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு
திவ்ய தேஜோமயத்தைச்;
சித்பர வெளிக்குள் வளர் தற்பரமது ஆனபர
தேவதையை அஞ்சலிசெய்வோம்.
இந்த மூன்றாவது பாடலில் மறுபடியும் இன்ன தெய்வம் என்று சொல்லாமல், பரதேவதைக்கு அஞ்சலியாகவே செய்துள்ளார். அந்த பரதேவதையை இரண்டிலாத பொருளாய், ஒங்கார/பிரணவப் பொருளாய், ஆதியாய், அநாதியாய், ஒன்றாய தத்துவாமாய், பற்றுக்கோடில்லாத (சாலம்பரகிதம்), என்றும் உள்ளதாய், நிறைவாய் (புஷ்கலம்), தன்னைக் கொண்டாட ஆதரவு தேடாத (நிராலம்ப ஆலம்பமாய்), அதாவது தன்னை எந்த சமயக்கட்சியிலும் சேராத தன்மையனாய், நிர்மலனாய் (அழுக்கற்றவனாய்), உலகிற்கும், அண்ட வெளிக்கும் அப்பாற்பட்ட பொருளாய், புலன்களுக்கு எட்டாதவனாய், வடிவற்றவனாய், முற்றொழில் மூலகாரணனாய் (தடஸ்தம்),
குற்றமற்றவனாய் (நிரஞ்சனம்), பழுதுபடாதவனாய் -(நிராமயம்) ) கூறுகிறார். அந்தப் பரம்பொருள் நம் சித்தம் அறியாதபடி, நம் சித்தத்தில் நின்று இலங்குமாம்.
முதிர்ந்த தேடலின் உதிர்வான இப்பாடல்கள், அந்தகாலக் கட்டத்தில், மொழி வேற்றுமையில்லாத வடமொழிச் சொற்களை மிகவும் இலகுவாக, தமிழ்க் கவிதையின் இலக்கணக் கட்டமைப்புக்குள்ளேயே ஆளும் தன்மையைத்தான் காட்டுகிறது. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் அருணகிரிநாதரின் சொல்லாட்சியிலும், வடமொழிச் சொற்கள் விரவிக்கிடப்பதை பார்க்கலாம்.
மேற்கண்ட 3-வது பாடல், அருணகிரியாரின், “உருவாய் அருவாய், உளதாய், இலதாய்” என்கிற பாடலை ஒட்டியிருந்தாலும், இறைவனை, இவன் என்று கட்டம் கட்டாமல் பாடியிருப்பதிலிருந்து, அவரின் சமயம் தாண்டிய சிந்தனையையும், நோக்கினையும் காட்டுகிறது
பழுத்த சைவப்பிள்ளையான தாயுமானவர், தான் சார்ந்திருந்த சைவ சமயத்தைத் தாண்டிய சிந்தனகளைக் கொண்டிருந்தது, பிற்காலத்தவரான வடலூர் மகானான வள்ளலார் சுவாமிகளுக்கு, முன்னோடி என்றே கொள்ளலாம்..
இவருடைய துறவு எண்ணத்துக்கும், சமய சிந்தனை வளர்ச்சிக்கும், கவிதா மேதைக்குமான உந்துதலும், எழுச்சியும் எவரிடமிருந்து கிடைத்தது என்கிற கேள்வி தோன்றுகிறது! ஓரளவுக்கு அருணகிரியாரின் தாக்கம் இவருடைய பாடல்களில் தொனிக்கிறது..
எந்நாள்? கண்ணிகளில், அடியார் வணக்கம் பகுதியில் தேவார நால்வர்,பட்டினத்தார் பத்ரகிரியார், சிவஞான போதம் எழுதிய மெய்க்கண்ட சிவவாக்கியர், திருமூலர், அருணகிரியார் இவர்களை குறித்திருந்தாலும், குறிப்பாக,
“கந்தர் அநுபூதி பெற்றுக் கந்தர் அநுபூதி சொன்ன
எந்தை அருள்நாடி இருக்குநாள் என்னாளோ”
என்று அருணகிரியாரைக் குறித்துப் பாடியிருப்பதும், தன்னுடைய பாடல்களில், “சும்மா இரு” என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருப்பதும், இவர் அருணகிரியாரின் பாடல்களில் தோய்ந்திருந்தது தெரியவருகிறது. இவருடைய ஞானகுருவாக சிராப்பள்ளி மலையில் இவருக்குமுன் தோன்றி ஆட்கொண்ட மௌனகுருவும் அதுவே போதித்ததையும் படிக்கும் போது, இவருடைய குருவே அருணகிரியாராக இருக்கக்கூடுமோ என்று தோன்றுகிறது. அல்லது அருணை
--முனிவரின் குரு-சிஷ்ய பரம்பரையில் வந்திருக்காலாமோ என்றும் நினக்கத்தோன்றுகிறது .
எழுத ஆரம்பித்தால்வளர்ந்துகொண்டிருக்கிறது. மகான்களைப் பற்றி, படிப்பதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும்ஏராளமான செய்திகள்இருக்கின்றன. இருந்தாலும், இப்போதைக்கு இவ்வளவில் முடித்துக்கொண்டு, தாயுமானவர்பாடல்களைப்படிக்குந்தோறும், பகிர்ந்துகொள்ள மீண்டும்எழுதுவேன்…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam