ஸ்டான்ஃபோர்ட் ரேடியோ-விலே நண்பர் ஸ்ரீகாந்த் ஐந்து வருடங்களுக்கு மேல் நடத்திவரும் “இட்ஸ் டிஃப்” (Itsdiff) நிகழ்ச்சியிலே, என்னை இசை தொடர்பான ஒரு நிகழ்ச்சியை நடத்தித்தர சொல்ல, எனக்கு வெகு நாட்களாய் மனதில் நெருடிக்கொண்டிருக்கிற ஒரு பொருளைப் பற்றி பேசவும், இந்திய கர்நாடக இசை வரலாற்றில், தமிழ் மொழி ஆற்றிவந்திருக்கிற பங்கைப் பற்றியும் பேசவும் ஆசைப்பட்டேன்.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று, புதன் கிழமை, “தமிழிசைப் பயணம் – பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி, இன்றுவரை” என்கிற தலைப்பில் சுமார் ஒரு இருபந்தைந்து இசைப் புலவர்கள், வாணர்கள் இவர்களின் இசைப் பங்களிப்பைப் பற்றி சுமார் ஒன்றேகால் மணி நேரம் பேசினோம். முழுவதுமாக எல்லோரைப்பற்றியும் பேசமுடியவில்லை என்றாலும், இதற்காக இன்னொரு நிகழ்ச்சியும் தேவை என்கிற உணர்வோடும், உறுதியோடும் நிறைவு செய்தோம்.
இந்த நிகழ்ச்சிக்காக முதல் நாளிரவு (நள்ளிரவும் கூட), சில பாடல்களைத் தேர்வு செய்து, குறுந்தகட்டில் பதிவு செய்தபோதுதான், இவ்வளவு பாடல்களை சொத்தாக நாம் ஸ்வீகரித்திருந்தும், ஒரு சில பாடல்களை மட்டுமே கச்சேரி மேடைகளின் கேட்கமுடிகிற துர்பாக்கியசாலிகளாக இருக்கிறோமே என்று தோன்றியது. முன்பை விட இப்போது தமிழ் உணர்வு கூடியிருப்பதாகத் தெரிந்தாலும், இன்னும் கச்சேரி மேடைகளை பிறமொழி உருப்படிகளே பாதிக்கும் மேலாக நிரப்பிக்கொண்டிருக்கின்றன.
மொழி, இசையென்னும் ஆத்மாவுக்கு மேல் போர்த்திய தோல்தான்! நான் எல்லா மொழிகளையும் ரசிக்கிறேன். மொழி என்பது, கருத்துப் பறிமாற்றக் கருவி மட்டுமே என்றும் உணருகிறேன். ஆனால் ஆந்திர தேசத்திலோ, கேரளாவிலோ, கர்நாடகாவிலோ மற்ற மொழிப் பாடல்களை அதிகமாகப் பாடிப் பார்க்கட்டும் நம் கலைஞர்கள்!
கேரளத்தில் கர்நாடக இசைப் பரவலாக எல்லா சமயத்தவரையும் சேர்ந்திருப்பது, மண்ணின் மொழியால்தான்! பரவலான சமூகத்தை எந்த ஒரு பொருளும் சேர வேண்டுமென்றால், அந்த சமூகம் புரிந்துகொள்ளும் மொழியிலேயே அது சென்று சேர வேண்டும்! இந்த செய்தியை அந்த நாளைய பல்லவ மன்னர்கள் தொடங்கி, நாயக்க மன்னர்கள், மராத்திய மன்னர்கள் இறுதியாக எல்லோரும் புரிந்து கொண்டிருந்தார்கள்.
ஆளுவதற்கு பொதுமக்களின் மொழியும், அரசவைக்கு தங்கள் சொந்த மொழியையும் வைத்துக் கொண்டிருந்தார்கள். பண்டிதர்களும், அமைச்சர்களும் அரசவை மொழியிலும், அறிஞர்களின் பொது மொழியாகக் கருதப்பட்ட ஸமஸ்க்ருததிலும் தங்கள் கருத்துப் பரிமாற்றங்களையும், இலக்கியப் படைப்புகளையும் செய்து கொண்டிருந்தார்கள். பாமர மக்களுடனான தொடர்புகள் அவரவர் மொழியிலேயே செய்யப்பட்டன.
தஞ்சையிலும் மதுரையிலும் நாயக்க, மற்றும் மராட்டிய ஆட்சி மலர்ந்த பிறகு, நிச்சயமாக தெலுங்கு மொழிக்கான ஆதரவும், அதைப் பேசிய பண்டிதர்களுக்கான ஆதரவும் பெருகியதும் அதன் காரணமாக பெரும்பாலான இசை, நாட்டியக்கலை தொடர்பான படைப்புகள் தெலுங்கில் படைக்கப்பட்டதும், வரலாறு அடிக்கோடிடும் உண்மைகள். கூடவே, தமிழ் அறிஞர்களும், அவர்களது படைப்புகளும் இரண்டாம்தர குடிகளின் நிலைக்குப் போனதும் உண்மை.
இந்த கலாச்சார, மொழிக் கலப்புகள், அடிநாதமாக நமது கலைகளை செழுமைப் படுத்தியிருந்தாலும், நமது தனித்தன்மை, இழக்கப்பட்டு, மறக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டதும் உண்மை. இவை பெரும்பாலான தமிழர்களை நமது பாரம்பரிய இசை என்று பெருமைப்படக்கூடிய கர்நாடக இசையிலிருந்து தொடர்பறுத்திருப்பதும் உண்மை.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்லிக்கொண்டே, நம் மக்களை, தங்களின் உண்மையான கலாச்சார அடையாளங்களிலிருந்தும், ஏன் தமிழ் மொழியிலிருந்துமே விலக்கி வெகு தூரம் இட்டுச் சென்றுவிட்ட, கழக ஆட்சிகளின் தொடர்ச்சியும் இவற்றுக்கெல்லாம காராணம் என்பது வரலாறு காட்டப்போகும் உண்மை.
கலைஞர்களுக்கு தமிழ் மொழியில் பாடுவது கௌரவமாக இல்லாமல் இருக்கலாம், அல்லது சமகலைஞர்களின் அங்கீகாரத்தை, பெற்றுத்தராமல் இருக்கலாம், அல்லது இதுதான் கலை, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறைகளை உண்டுபண்ணிக்கொண்டு, அதிலிருந்து வெளிவருவது தொழிலைப் பாதிக்கலாம் என்கிற பயமாக இருக்கலாம். எதுவாயிருந்தாலும், அவர்கள் உள்மனதுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, அவர்களின் சொந்த மொழியில் பாடும்போது இருக்கும் புரிதலும், ஈடுபாடும், மற்றமொழிகளில் பாடும் போது இல்லை என்கிற உண்மைதான்.
நமது இசைக்கலை அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கொடிக்கட்டி வருமானத்தை தந்தால் மட்டும் போதாது. நமது ஆறு கோடிக்கும் அதிகமான தமிழ் சமுதாயத்தை ஒன்று சேர்ப்பதாகவும், அவர்களையும் நமது இசையில் ஈடுபாடு கொள்ளவைப்பதாயும் இருக்கவேண்டும். வணிகமாகவே வைத்துக் கொண்டாலும், இது பெரிய வணிக தளம் இல்லையா?
சங்கபாடல்களிலிருந்து தொடங்கி, இன்றைய நாள்வரையிலான இசைவாணர்கள், இன்னிசைப் புலவர்களின் உருப்படிகளை எல்லோருக்கும் நமது இசையின் கட்டமைப்பிலேயே கொண்டுசென்று சேர்க்கவேண்டும். இசை எல்லோரையும் சென்றடைந்து விட்டால், மொழி என்னும் பொய்த்தடை மறைந்து விடும். மக்கள் மற்ற மொழிக் கவிகளை, அவர்களின் படைப்புகளையும் உயரிய புரிதலோடு இரசிப்பார்கள் என்பது நிச்சயம்.
15-ம் நூற்றாண்டு தொடங்கி நமது தமிழக அரசியலையும், நம்மை ஆண்டவர்களையும், அவர்கள் காலம் தொடங்கி, இன்று வரையிலான கால கலை வளர்ச்சியையும் பற்றி சரியான ஆய்வு தேவை. நேரமும், தேவையான ஆய்வு தளமும் அமைந்தால் கட்டாயம் செய்யவேண்டுமென்கிற ஆர்வம் இருக்கிறது.
மறந்தேவிட்டேனே..! அந்த வானொலி நிகழ்ச்சியின் ஒலிப்பதிவும், யூ-ட்யூப் பதிவுக் கீழ்காணும் வலைத்தொடர்பில் உள்ளன. முடிந்தால் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்!
http://www.itsdiff.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam