மே 23, 2016

தமிழிசை வளர்த்த செம்மல்கள் - 5

ப்ரம்மஸ்ரீ நீலகண்ட சிவன்

இசையுலகிற்குத் தொண்டு செய்து மறைந்த பல இசைப் பாடலாசிரியர்களை, குறிப்பாக, தமிழால் இசையை வளர்த்த பெரியோர்களைப் பற்றி இத்தொடர் வாயிலாக, ஒவ்வொரு மாதமும் நாம் அறிந்து கொண்டு வருகிறோம். அவ்வரிசையில், இம்மாதம் நாம் தெரிந்து கொள்ளப்போவது, சுமார் 175 வருடங்களுக்கு முன் பிறந்து தமிழால் இசையை ஆராதித்த அருட்கவிகளுள் ஒருவரும், பின்னாளில் நீலகண்ட சிவன் என்று இசையுலகம் கொண்டாடிய நீலகண்டதாசரைப் பற்றி!

வாழ்க்கைச் சுருக்கம்:
1839-ம் வருடம் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள வடிவீச்வரம் என்னும் சிவத் தலத்தில், சுப்பிரமணிய ஐயர், அழகு அம்மாள் தம்பதிகளுக்குப் வெகுநாளைய தவத்தின் பயனாகப் பிறந்த நம் நீலகண்டதாசருக்கு, அவர்கள் இட்ட பெயர், சிவபெருமானுடைய திருக்குமாரரின் பெயரான சுப்பிரமணியம் என்பதாகும். சிறுவயதிலிருந்தே ஆன்மீகத் தேடலிலும், நாம சங்கீர்த்தனத்திலும் பெரும்பாலும் ஈடுபாடுகொண்டிருந்த இவருக்கு, பள்ளிக் கல்வியில் அவ்வளவாக நாட்டமே ஏற்படவில்லையாம்! இறையருளால் ஆட்கொள்ளப்பட்டு பரம்பொருளை அறிந்த ஒருவருக்கு ஏட்டுக் கல்வியால் என்ன பயன் இருக்க முடியும்?

மிகவும் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்த இலட்சுமி என்னும் அம்மையாரை இவருக்கு மணம் புரிவித்து, இவரை இல்லறத்தின்பால், இவருடைய பெற்றோர்கள் ஆழ்த்த விழைந்தாலும், இவரது மனமோ அதிலே ஈடுபடவில்லை; பெரும்பாலும் உலக வாழ்வில் பற்றற்றே வாழ்ந்து வரலானார். ஒரு சமயம் பத்மநாபபுரத்தில், ஆனந்தவல்லி உடனுறை நீலகண்ட சுவாமிகள் ஆலய வாகன மண்டபத்துக்குள் சென்றவர், மூன்று நாட்கள், தாளிட்டுக்கொண்டு அன்னமும் நீருமின்றி தவமிருந்ததாகவும், அவரைத் தேடிகொண்டிருந்த உறவினர்கள் அவரைக் கண்டபோது, முகத்தில் மிகுந்த அருளொளியுடன் காட்சியளித்ததாகவும், அதுமுதல் கொண்டு பாடுதற்கும், பாடல் இயற்றுதற்கும் அம்மையப்பர் அருளால் கைவரப்பெற்றார் என்றும் செவி வழிக் கதைகள் கூறுகின்றன. ஞானசம்பந்தருக்கும், முத்துத்தாண்டவருக்கும் சீகாழியில், நாவில் தமிழும் இசையும் தந்த தோணியப்பரான சிவபெருமான், தன்னையே தஞ்சமடைந்த இவருக்கு அருளியதில் வியப்பென்ன!

முறையாக இசையோ, தமிழோ, வடமொழியோ கற்று அறியாராயினும், இவருடைய பாடல்கள் பக்தியும், இசைச் செறிவும், கவித்துவமும் நிறைந்து இருப்பதிலிருந்து, இவர் வழிப்பட்ட திருநீலகண்ட நாதனே, இவரது குருவாய் இருந்து இசையும் தமிழும் இவருக்குப் புகட்டினார் என்றே கொள்ளவேண்டும்.

வாழ்வில் ஒழுக்கத்தை உயர்வாக ஓம்பிய இவரைத் தேடி பதவிகள் வந்தன. ஊர் பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்றி, மக்களின் மனதிற்குகந்த நீதியரசராக இவர் விளங்கினார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியறியாத இம்மகான், பொய் சாட்சி சொல்வோரை அறவே வெறுத்தார்; ஒருசமயம், அதன் காரணமாக தம்முடைய தீர்ப்பை மாற்றும்படி நெருக்கடி வந்தபோது, அப்பதவியையே துச்சமென தூக்கியயெறியவும் தயங்கவில்லை, சத்தியத்தின் திருவுருவாக விளங்கிய இவர்.

இவர் எழுதிய இசைப் பாடல்களால் இவர் புகழ் பரவப் பரவ இவரை எல்லோரும் நீலகண்ட தாசர் என்றே அழைக்கத்தொடங்கினர், இவரது இயற்பெயரை மறந்து. இவரது பாடல்களில் இவர் அமைத்துப்பாடிய நீலகண்டன் என்கிற முத்திரையே அதற்குக் காரணமாயும் அமைந்தது என்றே கொள்ளவேண்டும்.

நீலகண்டர் ஆன்ம நெறியிலேயே ஈடுபட்டிருந்தாலும், இல்லறத்தைத் துறக்கவில்லை. இவருக்கு இல்லறமா, துறவு வாழ்க்கையா என்னும் மனப்போராட்டம் ஏற்பட்ட போது, இறை வாக்காக யார் வழியாகவோ, “இறை பக்திக்கு, இல்லறம் இடையூறல்ல” என்று கேட்டதால், இல்லறத்திலே நீடித்து, இறைபக்தியும் செய்துவந்தார். 1900- ம் வருடம் ஆடிமாதம், பிரதோஷத் திருநாளில், திருவனந்தபுரத்தில் கரமணை என்னும் இடத்திலிருந்த தன்னுடைய இல்லத்தில், தன்னுடைய பக்தர்களும், இசை மாணாக்கர்களும் சூழ்ந்திருக்கக் கபால மோட்சத்தில் நீலகண்டருடைய சோதியில் கலந்தார். இந் நிகழ்வும் ஒரு அதிசயமாகவே நடந்ததாம்.. எவ்வாறு? பின்னாலே பார்ப்போம்.

நீலகண்டரை ஆதரித்த நல்லோர்:
இவரது பக்தியாலும், இசைப்பாடல்களாலும் கவரப்பட்ட திருவாங்கூர், கொச்சி, இராமநாதபுரம், புதுக்கோட்டை அரசர்கள் இவரை தங்களவைக்கு அழைத்து பெருமை செய்தனர் என்றாலும், இவர் தம் மனதிலேற்று பூசித்து வந்த நீலகண்ட நாதனாகிய சிவனையன்றி வேறு எவரையும் துதிபாடியதில்லை.

வாழ்வில் நடந்த அற்புத நிகழ்வுகள்:
தனது இறுதிக்காலத்தில் அறுபத்தொன்றாம் வயதில் தம்முடைய இறுதி நாளை, மூன்று நாட்களுக்கும் முன்னதாகவே தன்னுடைய புதல்வர்களுக்கும், புதல்விக்கும் அறிவித்துவிட்டு, ஆயிரக்கணக்காக மக்கள் கூடியிருக்கையிலே எல்லோருக்கும் தன் கரத்தாலேயே விபூதியை அளித்துவிட்டு, நீலகண்டதேவனின் தரிசனத்தைப் பற்றி எட்டு பாடல்களையும் பாடிவிட்டு, மாலை, 4.30 அளவில், தலைக்கு மேல் கரத்தைக் கூப்பி, “மகாதேவ” என்று மும்முறைச் சொல்லிவிட்டு தன்னாவியை நீத்தாராம் இம்மகான். ஞானியாகவே வாழ்ந்த இவரது மறைவை, ஒருவரும் அழாமல், ஒரு பக்தி விழாப்போலவே கொண்டாடியதாகவும் அறியப்படுகிறது.

வட இந்திய இசைஞர் தான்சேனும், வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளாரும் நீரினால் விளக்கை எரியச் செய்தார்போல, ஒருநாள், பத்மநாபபுரம் கோவிலில், இறையன்பர்கள் பாடிக்கொண்டிருந்த வேளையில், தீபந்தங்களில் ஒளி குன்றவும், நீரூற்றி தீப்பந்தங்களை எரிய வைத்த அற்புதத்தை நிகழ்த்தினார் நீலகண்ட சிவன்!

குமரக்குளம் என்னும் ஊரில் வரட்சி ஏற்பட்டு மக்கள் வாடியபோது, “வளர்த்த தரு உருவகம் மார்த்தாண்டேசுவரனே” என்று பாடி மழை பொழிய வைத்த நிகழ்ச்சி, முத்துசாமி தீட்சிதர் “வர்ஷய வர்ஷய வர்ஷய” என்று அம்ருதவர்ஷிணி இராகத்தில் பாடிப் பொழியச்செய்த அற்புதத்தைப் போன்றதே. இவருடைய கொள்ளுப் பேத்தியான அண்மையில் மறைந்த இசைக்கலைஞர் திருமதி சரசுவதி ராம், இதேபோன்று மற்றொரு நிகழ்ச்சியையும் குறிப்பிடுகிறார். நீலகண்ட சிவன் “லலிதா புராணம்” என்ற நூலைப் படைத்துக்கொண்டிருந்த ஓரிரவில், விளக்கு அணைந்துபோகவும், எண்ணைக்குப் பதிலாக நீரை ஊற்றி எரியவைத்துத் தொடர்ந்ததாகவும் அவர் பதிவு செய்திருக்கிறார். இறையருள் நிரம்பப் பெற்ற மகான்களால் செய்யமுடியாத அற்புத எதுவுமே இல்லையன்றோ?

மரணப்படுக்கையில் இருந்த தாயார், தமது மகளின் திருமணம் வரையிலாவது உயிரோடு இருக்க அருள் புரிய வேண்டிய ஒரு நிலச்சுவாந்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி, ஒரு சிறு கிளையை ஒடித்துக் கட்டி, அம்மூதாட்டியின் உயிரை. பேத்தியின் திருமணம்வரைக் காத்தளித்த அற்புதமும் இவர் நிகழ்தினாராம். இதே போன்று இன்னும் பல அற்புதங்களையும் அவ்வப்போது செய்துவந்த மகானாகவே இவர் கொண்டாடப்படுகிறார்.

இவர் செய்த இசைப் படைப்புகளும் வடிவங்களும்:
இவர் ஆயிரக்கணக்கான பாடல்களைப் புனைந்திருந்தாலும், 200க்கும் குறைவானவையே இன்று நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றிலும் கச்சேரி மேடைகளில் பாடப்படுபவை எண்ணிக்கையில் குறைவே! 1929-ம் வருட திருவனந்தபுரத்தில், ஞானஸ்கந்தையர் என்பார் 139 கீர்த்தனைகளை தெரிவு செய்து “பஜனை கீர்த்தனகள்” என்று பதிப்பித்தார். இவர் செய்த எத்தனையோ வெளிவராத படைப்புகளில் சில: “தீர நிஷாதர் சரித்திரம்”, “சோமவார மகாத்மியம்”, “பிரதோஷ மகாத்மியம்”, “சிவராத்திரி மகாத்மியம்”, “ஸ்ரீருத்ர மகாத்மியம்”; தவிர சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், திருநீலகண்டர், குங்கிலியக்கலய நாயனார், சிறுதொண்டர், சித்தர்கள், வெறி முண்டர், சண்டேசுவரர், அமர் நீதி நாயனார், கலிக்காம நாயனார், இயற்பகை நாயனார் என்று பக்தி நெறிச் செம்மல்களைப் பற்றிய கதைகளையும் பாடல்களாகப் படைத்துள்ளார் சிவன்.

இவர் பாடல்களில் சொற்கள் அழகுடனும், இசையோடு இயைந்து இனிமையாகவும் இருப்பதும் கண்கூடு. கேட்டமாத்திரத்தில் எவ்வொரு தமிழிதையத்தையும் இலகுவாக ஈர்த்துக்கொள்ளும் பாடல்கள் அவை.
இசைவகைகள் என்று கொண்டால், சரித்திரக் கீர்த்தனைகள், அஷ்டகம், தசகம், கிராமியப் பாடல் இசை வடிவங்களான கும்மி, கண்ணி, சிந்து போன்ற வகையறாக்களும், லாலி, நலுங்கு, ஊஞ்சல், தாலாட்டு போன்ற திருமணம் மற்றும் இதர வாழ்வியல் கூறுகளை வைத்தும் பாடல்களை எழுதியுள்ளார் நீலகண்ட சிவன் அவர்கள்.

பரவலாக அரியப்படும் உருப்படிகள்:
பூர்வி கல்யாணியில் அமைந்த “ஆனந்த நடமாடுவார் தில்லை” என்ற பாடல், முகாரி இராகத்தில் அமைந்த “என்றைக்கு சிவகிருபை”, ஆரபி இராகத்தில் அமைந்த “ஓராறு முகனே”, கமாஸ் இராக்த்தில் அமைந்த, “தேறுவதெப்போ நெஞ்சே”, கரஹரப்ரியாவில் அமைந்த “நவசித்தி பெற்றாலும்”, காபி இராகத்தில் அமைந்த “ஷண்முகனே”, ஆனந்த பைரவியில் அமைந்த “என்னவிதம் பிழைப்போம்” போன்ற பாடல்கள் பரவலாகப் பல இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு வந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அரிய பாடல்களும் பாடப்படுகின்றன. தெலுங்கு மொழி கீர்த்தனங்கள் கச்சேரி மேடைகளை பெரும்பாலும் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக்கொண்டபின், உயரிய உருப்படிகளானாலும், தமிழ் பாடல்களுக்கு மாற்றாந்தாய் கவனிப்பே இருப்பதால், தெரிந்த சில நீலகண்டன் சிவன் உருப்படிகளைத் தவிர மற்றவை பெரும்பாலும் பாடப்படுவதே இல்லை.

வடமொழிச் சொற்களை இயல்பாகக் கலந்தே பாடல்கள் புனைந்த பாடலாசிரியர்களிலிருந்து இவரும் மாறுபடவில்லை. பொதுவாக இவரது பாடல்களில், தமிழும் ஆரியமும் கலந்தே உள்ளதை காணலாம். ஆயினும் வடமொழி வலிந்து திணிக்கப்பட்டிருப்பதாக உணரமுடியாது.

பெரும்பாலும் சிவ குடும்பத்தைப் பற்றியே நீலகண்ட சிவனவர்கள் பாடியிருந்தாலும் அத்திப் பூத்தார்போல், “கோபால கிருட்டினரைப்” பற்றியும் ஒரு பாடல் புனைந்திருக்கிறார். சங்கராபரணத்தில் அமைந்த இப்பாடலின் பல்லவியும், அனுபல்லவியும், இப்பாடல் வடமொழிப் பாடலோ என்று ஐயுறவைக்கும். ஆனால் சரணத்தின் சொற்களோ பெரும்பாலும் தூய தமிழிலேயே இருக்கும்.

பல்லவி:கோபால கிருஷ்ண தயாநிதே - ராஜ கோபால கிருஷ்ண தயாநிதே
அ.பல்லவி:பூபாலவம்ச நற்சோபித ஸங்காச பூர்ணாநந்த காருண்யனான ராஜ ராஜ
சரணம்:   உரல் கவிழ்தியதன் மீதேறித் தயிர்
                உறியெல்லாங் கட்டுண்டு பசியாறி தாகம்
                பெருகவே யிடமாத ரருகிற்போய் விளையாடி
                பேதைய சோதை மடிமீதுற வாடிநின்ற

முத்துத்தாண்டவரும் நீலகண்ட சிவனும்:
ஊத்துக்காடு மகாகவியைப் போலே, தமக்கு முன் வாழ்ந்த பெரும் இறையருளாளர்கள் மற்றும் இசை மேதைகளின் பாடல்களை கற்றறிந்ததன் தாக்கம் இவருடைய பாடல்களிலும் காணலாம். முத்துத் தாண்டவர் போலவே தாளக் கருவிகளின் சொற்கட்டுக்களை தமது பாடலில் புகுத்தும் நேர்த்தியை இவருடைய பாடல்களிலும் காணலாம். “ஆனந்த நடமாடுவார்” தில்லை என்ற பாடல் எல்லோரும் அறிந்தவொன்று. “தரிசனமே முக்திதரும் நிஜமே” என்ற தோடி இராகப் பாடலின் கருத்து முத்துத் தாண்டவரின் “ஆடிக்கொண்டார்” என்கிற மாயாமாளவ கௌளை இராகப் பாடலையொட்டியது. அதன் இரண்டாவது சரணம் முழுவதுமே சொற்கட்டுகளால் பின்னப்பட்ட அமைப்பாகும்.  இறைவன் நீலகண்டனின் மகா நடத்தை வருணிக்கும் சொற்களைப் பார்ப்போமா? அச்சரணத்தில் இறுதிப் பாதியையே இங்கு தந்திருக்கிறேன்.

“.... தத்தரி கிடதிமி தகு தகு தகுவென
      தளாங்கு  திமிதக தரிகிட தோமென
      தழைந்த சிலம்பொலி கல கல கலவென
      எழுந்த எரிகனல் தக தக தகவென
      டமரு கோதை டுடு டுடு வென மாவிடம்
      அமரும் நீலகண்டன் ஆடிடும் மகா நடம்”

நெஞ்சோடு உரையாடல்:
ஆன்மீகத் தேடலில் அமிழ்ந்த பெரியோர்களைப்போல இவரும் பல பாடல்களின் தனது அகத்தை, நெஞ்சே, மனமே என்று விளிக்கு முகமாக, மக்களின் இயல்புகளை, சுற்றியுள்ளோரின் நெறி தவறுதல்களைச் சுட்டும் விதமாகப் பாடியிருப்பதைக் பல பாடல்களிலும் காணலாம். எடுத்துக்காட்டாக, “தேறுவதெப்போ நெஞ்சே தெளிந்து கரை ஏறுவதெப்போ” என்னும் பாடலில் வரும் பத்து சரணங்களில் இரண்டு சரணங்களை மட்டும் பார்க்கலாம்! ஒவ்வொரு சரணமும் முடிந்து மீண்டும் மீண்டும் நெஞ்சையே வினவுகிறார்.

“மண்ணே பொருளேயெந்தன் மனைவிமைந்தரே சொந்த
 கண்ணே நீங்களேயல்லாமல் கதியிலை யென்றிருந்தால்”
 “உடலே நிலையென்றெண்ணி உலகவாழ்விதை நம்பி
 மடமைப் பெருக நின்று வனமிருகம் போலலைந்தால்”

நிறைவாக:

பாரத நாட்டிலே, இறையன்பு நெறி குன்றாமல் ஓங்குமாறு செய்ய அவதரித்த எத்தனையோ புண்ணியர்களில், இசையும், இறையன்பும் கூடியோர் ஒரு சிலரே. அவர்களின் வரிசையில் மட்டுமல்லாமல், தொடர்ந்து வரும் இசைத் தலைமுறைகளின் இதயத்திலும், இசை வெளிப்பாடுகளிலும் என்று இருக்கவேண்டிய மகான் நீலகண்ட சிவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...