கஜானனர்
யானையின் சிறப்புக்கள்
கஜானனர் என்பது அடுத்த பெயர். யானை முகர் என்று அர்த்தம். "கோலஞ் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே!"என்று ஒளவையார் கூப்பிட்ட கரிமுகர்.
ஆனைக்கு ஏகப்பட்ட சிறப்புக்கள். சரீர பலம்;புத்தி பலம்; தன்னுடைய பெரிய பலத்தினால் ஒரு தொகை தொகைத்தால் (துவை துவைத்தால்) சட்டினியாகப் போகிற மனிதனிடம் எளிமையாக அடங்கி அவன் பழக்குகிறபடி லோகோபகாரமாக பெரிய பெரிய மரங்களைத் தூக்கி வருவது, யுத்தத்தில் எதிரிப்படையை அழிப்பது, கோட்டை வாசலை மோதி உடைப்பது என்றிப்படியெல்லாம் கடினமாக உழைக்கிற பண்பு;ஸத்வ ஆஹாரமாகத் தாவரங்களைத்தான் புஜிக்கிறது;தான் செத்தாலும் அழியாத தந்தத்தால் 'இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற கீர்த்தி பெற்றிருப்பது - என்றிப்படி யானைக்கு உள்ள சிறப்புக்கள் எண்ணி முடியாது.
கையின் ஸ்தானத்தில் தும்பிக்கை என்ற விசேஷ அங்கத்தைப் பெற்றுள்ள மிருகம் அது ஒன்றுதான். வேறே எந்த மிருகமாவது ஸ்வாமிக்கு யானை சாமரம் போடுகிற மாதிரிப் போட முடியுமா?தும்பிக்கையைத் தூக்கி ஸலாம்தான் போட முடியுமா?
மற்ற மிருகங்கள் ஒருத்தரை முட்டித் தள்ளத்தான் முடியும்; தன் மேல் ஏற்றி வைத்துக் கொள்ள முடியாது. யானைதான் தும்பிக்கையால் அன்போடு அணைத்து ஒருத்தரைத் தனக்கு மேல் உசந்த ஸ்தானம் கொடுத்து ஏற்றி வைத்துக் கொள்ள முடியும். மஹா பலம், மஹா காயம் படைத்த அது இப்படி இருப்பது மிகவும் விசேஷம். போகிற வழியில் ஒருத்தர் குறுக்கே நின்றாலும் மோதித் தள்ளுவது தவிர வேறு வழியில்லை என்று இல்லாதது யானையே. அவரைத் தும்பிக்கையால் வளைத்தெடுத்து ஹிதமாக ஒரத்தில் போட்டுவிட்டு அது போகும்.
அதற்கு 'த்விபம்' என்று ஒரு பெயர். த்வி-பம் என்றால் இரண்டு தரம் குடிப்பது, சாப்பிடுவது என்று அர்த்தம். யானை எப்படி த்விபம்?முதலில் தும்பிக்கை நுனியால் ஜலத்தையோ, மற்ற தீனியையோ எடுக்கிறது. அப்புறம் அதை வாய்க்குள் செலுத்திக் கொள்கிறது. மிருக புத்திப்படி உணவு என்றால் நேரே வாயால் விழுந்து பிடுங்காமல், இரண்டு ஸ்டேஜில் மனிதர்கள் கையால் எடுத்து வாயில் போட்டுக் கொள்வது போல் அது செய்வதாலேயே த்விபம். ஆனால் உமிழ்கிறபோதோ த்ருட பதார்த்தமானால் வாயால் மட்டுமே உமிழும். ஜலமானால் தும்பிக்கை நுனியால் மட்டும் ஃபௌண்டன் மாதிரிப் பீய்ச்சியடிக்கும். இதில் ஒரு பெரிய தத்வமே இருக்கிறது. நாம் ஒன்றை எடுத்துக் கொள்வதானால் ஒரு தரத்துக்கு இரண்டு தரம் ஆய்தோய்ந்து பார்த்தே ஏற்க வேண்டும்;ஆனால் தள்ள வேண்டியதை ஒரே மூச்சில் இஷ்கா பிஷ்கா இல்லாமல் தள்ள வேண்டும் என்ற பெரிய தத்வத்தை யானை த்விபமாக இருந்து காட்டுகிறது.
ஆச்சரியமாக ஒரு விஷயம் ஒருத்தர் எழுதியிருக்கிறார். இந்த நாளில் இல்லாத கருவிகளே இல்லை. ஆனாலும் இத்தனூண்டு ஊசியையும் கொந்தி எடுக்கக் கூடியதாகவும் எத்தனாம் பெரிய தேக்கு மர Beam -ஐயும் வளைத்துச் சுருட்டித் தூக்கக் கூடியதாகவும் இருக்கும் ஒரே கருவி உண்டா என்றால் இல்லை. பகவான் ஸ்ருஷ்டித்த யானையின் தும்பிக்கைதான் இரண்டையம் பண்ணுகிறது. சின்னது, பெரிசு எல்லாவற்றையும் நிர்வஹிக்கக் கூடியவர் பிள்ளையார் என்பதால்தான் அவர் கஜமுகராக இருக்கிறாரென்று அவர் எழுதியிருக்கிறார்.
லோகத்தையே எட்டு திசைகளிலும் எட்டு யானைகள்தான் முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றன. அஷ்ட-திக்-கஜங்கள் என்பார்கள். இது பௌதிக பலம். புத்தி பலத்துக்கும் அஷ்ட-திக்-கஜங்கள் தான். 'எண் பேராயம்'என்று ராஜாங்க நிர்வாகத்திற்கு எட்டு statesmen -ஐ, ராஜதந்திர நிபுணர்களை வைத்துக் கொள்வதுபோல், சில ராஜாக்கள் எட்டு மஹா வித்வான்களைக் கொண்ட வித்வத் ஸதஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். க்ருஷ்ணதேவராயர் அப்படி வைத்துக் கொண்டிருக்கிறார். அதிலுள்ள எட்டு மேதைகளை அஷ்ட திக் கஜம் என்றே சொல்வது வழக்கம்.
எல்லாவற்றுக்கும் மேல் அழகு, காம்பீர்யம் வாய்ந்த அழகு. 'கஜகதி'என்று அதன் நடை விசேஷித்துச் சொல்லப் படுகிறது. ஆண்மை, பெண்மை இரண்டும் அதிசயமாகக் கலந்தது கஜகதி. அதனால்தான் காம்பீர்ய புருஷர்களின் நடையை அதற்க ஒப்பிட்டு வர்ணிப்பது மட்டுமில்லாமல் உத்தம ஸ்த்ரீகளின் நடையழகையும் அப்படியே சொல்லி, அவர்களை "கஜகாமினி"என்பது.
தான் அழகாகவும் கம்பீரமாகவும் இருப்பது மாத்திரமில்லை. தனக்கு மேல் ஒருவன் உட்கார்ந்தால் அவனுக்கும் ஒரு புது சோபையை ஊட்டி விடுவதாக யானையின் கம்பீர ஸெளந்தர்யம் இருக்கிறது. அதனால்தான் யானை மேல் அம்பாரி வைத்து ஒருத்தரை ஊர்வலம் விடுவது. ஸ்வதாவாகவே கம்பீர அழகு கொண்ட ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியைக்கூட ராஜாவாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்ட மந்த்ரி ப்ரதானிகளும் குடிபடைகளும் தசரதரிடம் குறிப்பாக, "கஜேந மஹதா யாந்தம்"என்று, அதாவது "யானை மேல் அவர் பவனி வரும் காட்சியைப் பார்க்க விரும்புகிறோம்"என்று சொன்னதாக ராமாயணத்திலிருக்கிறது. ஆனைமேல் பவனி வருகிற ராமனுடைய முகத்திற்கு மேலே வெண்கொற்றக் குடை அழகாக கவிந்திருக்க வேண்டுமென்றும் சொல்கிறார்கள். 'கஜேந மஹதா யாந்தம் ராமம் சத்ராவ்ருதானனம்'- நம்முடைய ஆனை ஸ்வாமிக்கோ சத்ர (குடை) உபசாரம் முக்யமாக இருக்கிறது. பிள்ளையாரோடேயே சேர்த்துக் குடையும் வாங்கி வந்துதான் பூஜை செய்கிறோம்.
கன்னங்கரேல் என்றிருக்கும் ஆனையின் பரந்த நெற்றியில் விபூதியோ, திருமண்ணோ பெரிசாகப் போட்டு விட்டால் எத்தனை அழகாயிருக்கிறது? அல்லது முகடாம் பூட்டினால் எப்படியிருக்கிறது? ப்ராணி வர்க்கத்தில் வேறு எதற்காவது அப்படி உண்டா?
இன்னொன்று, முத்து. சிப்பியில் உண்டாவதாகவே நினைக்கிறோம். ஆனால் இன்னும் சில இடங்களிலும் அபூர்வமாக முத்து உண்டாகிறது. மூங்கிலுக்குள் முத்து விளைவதுண்டு. மிகவும் உத்தமமான முத்து எங்கே உண்டாகிறதென்றால் கஜ கும்பத்தில்தான். ஆனை மஸ்தகத்தில் (தலையில்) இரண்டு பக்கமும் அதன் காம்பீர்யத்தை மேலும் உயர்த்துவதாக புடைத்துக் கொண்டு முண்டுகள் இருக்கிற தல்லவா? அதற்குத்தான் கஜ கும்பம் என்று பெயர்.
இன்னொரு பெரிய சிறப்பு, தெய்விகமான சிறப்பு, யானையின் மஸ்தகம் மஹாலட்சுமியின் வாஸ ஸ்தானமாயிருப்பது. தாமரைப் பூவின் உள்பக்கம், பில்வ இலையின் பின்பக்கம், ஸுமங்கலிகளின் வகிடு, பசுமாட்டின் பின்பக்கம், யானையின் மஸ்தகம் ஆகிய ஐந்தும் லக்ஷ்மி நித்ய வாஸம் செய்வதால் நித்யஸ்ரீயுடன் கூடிய மங்களமான இடங்கள்.
முன்னந்தலைக்கு இப்படிப் பெருமை இருக்கிறதென்றால் ஆனையின் பின்னால் தொங்கும் வாலின் மயிருக்கும் பெருமை இல்லாமலில்லை. அந்த ரோமம் ஆவி சேஷ்டைகளுக்குப் பெரிய ரக்ஷை. ஆரோக்ய ப்ரதமும் (ஆரோக்யமளிப்பதும்) அதனால் அதன் நறுக்கை மணி மாதிரி வைத்து மோதிரம் முதலிய நகைகள் செய்து போட்டுக் கொள்வதுண்டு. நகைக்கு நகை, ரக்ஷைக்கு ரக்ஷை! ஸாதாரணமாக ரோமமும் நகமும்தான் ரொம்பவும் தோஷமானவை. அவற்றை வைத்தே துர்மாந்த்ரிக ப்ரயோகம் பண்ணுவதுண்டு. ஒரு உடம்பிலுள்ளவரைதான் அவற்றுக்கு தோஷம் கிடையாது. உடம்பிலிருந்து ரோமம் உதிர்ந்தாலோ நகத்தை வெட்டி எடுத்தாலோ குப்பையில் தூரக்க (தொலைவில் போட்டு விட வேண்டும். ஆனால் விதி விலக்காக யானையின் ரோமம் துர்மாந்திரிகத்திற்குப் பரிஹாரமாக இருக்கிறது. அதே போலத்தான் புலி நகமும். தஞ்சாவூர் கிருஷ்ணன் படத்தில் ஸ்வாமிகூட புலிநகம் கோத்த சங்கிலி போட்டுக் கொண்டிருப்பார்.
ஷோடஸ கணபதி 12 - கஜானனர் (கஜ ஆனன் - கரி முகன்)
தும்பிக்கை யானை துணையாம் கரிமுகத் தூமணியை
நம்புவோர்க் கில்லை நசிவென்றும் நாளும் நலந்தருமாம்
அம்பிகைக் கன்றை அழகனை ஆண்டருள் ஐங்கரனை
கொம்புடை யானையே கும்பிடக் கொள்வோம் குவலயமே
tumpikkai yāṉai tuṇaiyām karimukat tūmaṇiyai
nampuvōrk killai naciveṉṟum nāḷum nalantarumām
ampikaik kaṉṟai aḻakaṉai āṇṭaruḷ aiṅkaraṉai
kompuṭai yāṉaiyē kumpiṭak koḷvōm kuvalayamē
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam