ஜனவரி 01, 2016

ஷோடஸ கணபதி 11 - பாலசந்திரன் (முன்கேசத்தில் சந்திரனைச் சூடியவன்)

இந்த நாமத்தைப் பற்றி காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறுவது...

அடுத்த பேர் 'பாலசந்த்ரர்'. உச்சரிப்பை கவனிக்க வேண்டும்: Phaala chandra. முதலெழுத்து Phaa ; Baa இல்லை. இப்போது Baalachandran என்ற பெயர் நிறையப் பேர் வைத்துக் கொள்கிறார்கள். என்ன அர்த்தம் என்று நினைத்துக் கொண்டு வைத்து கொள்கிறார்களோ தெரியவில்லை. இள வயஸுச் சந்திரனின் பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ?பாலக்ருஷ்ணன், பால ஸுப்ரஹ்மண்யன் மாதிரி பாலசந்திரன் என்ற எண்ணமாயிருக்கலாம். பால்ய லீலா விசேஷங்கள் அந்த இரண்டு மூர்த்திகளுக்கும் நிறைய உண்டாதலால் அந்த இரண்டு பெயர்கள் ஏற்பட்டிருக்கின்றன. வால்மீகி ராமாயணத்தில் ராமருடைய பால லீலா வர்ணனையே இல்லை. அவதாரத்தைச் சொல்கிற அத்யாயத்திலேயே சட்டென்று 'தசரதர் நாலு பிள்ளைகளுக்கும் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார். அப்போது விச்வாமித்ரர் வந்தார்'என்று ஒரே ஒட்டமாக ஒட்டி விடுகிறார். அதனால்தான் பாலக்ருஷ்ணன் மாதிரி பாலராமன் என்று பேர் எதுவுமில்லை. சந்த்ரனுக்கும் பால்ய லீலை விசேஷம் எதுவுமில்லை. பிறையை பாலசந்த்ரன் என்பதுண்டு. அது தேய்ந்து மூளியான ரூபம். அதனால் அந்தப் பெயர் வைத்துக் கொள்வது மங்களமில்லை.

ஸமீபத்தில் ஃபாஷன் பெயர்கள் வர ஆரம்பிப்பதற்கு முன் சந்திரன் என்று தனிப்பெயர் வைக்கும் வழக்கம் தக்ஷிண தேசத்தில் இல்லை. ஆனாலும் ராமசந்திரன் என்ற பெயரை 'ஆர்.சந்திரன்'என்று போட்டுக் கொள்வது கொஞ்சம் கொஞ்சம் இருந்திருக்கிறது. ராமசந்திரன், சந்திரமௌலி முதலான பேர்களை சந்துரு, சந்தர் என்று கூப்பிடுவதும் நிறையவே இருந்திருக்கிறது.

மொத்தத்தில், சந்த்ரன் மட்டுமில்லாமல், நவக்ரஹங்களில் ஸுர்யன் தவிர எவர் பெயருமே வைப்பது தென்னாட்டில் ஸ்ம்ப்ரதாயமில்லை. சிஷ்டாசாரம் அப்படியில்லை. தேய்வைக் காட்டும் பாலசந்த்ரன் பேரோ, பூர்ணசந்த்ரன் என்றேகூடப் பேரோ வைக்கும் வழக்கமில்லை. அங்காரகன், புதன் என்று பெயர் வைத்துக் கொள்வதுண்டா?'ப்ருஹஸ்பதி'என்று பரிஹாஸித்துச் சொல்வதுதான். சுக்ரன் என்றும் பெயர் வைப்பதில்லை. சனி? திட்டுவதற்குத்தான் அந்த சப்தம்!ராஹுவும், கேதுவும் அசுப க்ரஹங்களாதலால் அப்படியும் பேர் வைப்பதில்லை. நவக்ரஹங்களில் ஸுர்யன் ஒருவர் பெயர்தான் வைப்பது ஸம்பிரதாயம். அதுவும் ஸுர்ய நாராயணன் என்று மஹாவிஷ்ணு பெயர் சேர்த்துத்தான் வைப்பார்கள். ஸுர்யனின் நேர்ப் பேராக பாஸ்கரன் என்பது மட்டுமே தக்ஷிணத்தில் இருக்கிறது. வடக்கே ரவி, திவாகர், ப்ரபாகர், ஆதித்யா, மார்த்தாண்ட் ஆகிய பேர்கள் வைத்துக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் தக்ஷிணத்திலும் வடக்கத்தி பேர்கள் நிறைய வந்துவிட்டது. அது இருக்கட்டும், நான் சொல்ல வந்தது, ஸுர்யன் தவிர மற்ற க்ரஹங்களின் பேர் வைப்பதில்லை. பஞ்சாயதன மூர்த்திகளிலேயே இருப்பவர் ஸுர்யமூர்த்தி. ஆசார்யாள் ஸ்தாபித்த ஷண்மதங்களில் ஒன்று (ஸுர்யனை முழு முதற் தெய்வமாகக் கொண்ட) ஸெளரம். அதனால் அவர் மட்டும் விலக்கே தவிர, சந்திரனுக்கு விலக்கில்லை. ஆனாலும் பாலசந்திரன் என்ற பெயர் மாத்திரம் பஹுகாலமாகவே கொஞ்சம் கொஞ்சம் வழக்கிலிருந்து தற்போது நிறையவே அந்தப் பேர் வைப்பதாக இருக்கிறதே என்றால், இது வாஸ்தவத்தில் சந்திரன் பேரே இல்லை.

வேடிக்கையாக இருக்கலாம், பாலசந்திரன் என்பது சந்திரன் பேரும் இல்லை;அது இப்போது உச்சரிக்கிற மாதிரி, ஸ்பெல்லிங் போடுகிற மாதிரி Baalachandran -ம் இல்லை.

Phaala chandran - அதாவது Paa -வையே அழுத்தி ஸம்ஸ்க்ருதத்தில் இரண்டாவது Phaa -வாக முதல் எழுத்தைச் சொல்ல வேண்டும். அதுதான் ஸரியான பேர். Phaa lam என்றால் கேசத்தின் முன் பக்கம். ' Phaaலச்சந்த்ரன்'என்றால் கேசத்தின் முன் பக்கத்தில் சந்திரனை உடையவன்.

சந்த்ரசேகரன், சந்த்ரமௌலி என்ற பேர்களுக்கு என்ன அர்த்தமோ அதுதான் Phaa-லச்-சந்த்ரன் என்பதற்கும்.

சந்த்ரனைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பவர் என்றால் பரமசிவன் என்றே நமக்குச் சட்டென்று தெரிகிறது. ஆனால் இன்னும் இரண்டு பேருக்கும் அந்தப் பெருமை உண்டு. ஒன்று அம்பாள். "சந்த்ரகலாவதம்ஸே" என்று காளிதாசன் ('ச்யாமளா தண்டக'த்தில்) சொல்கிறார். ஆசார்யாளும் அவள் பதியுடைய இடது பக்கத்தை மட்டுமில்லாமல் ரூபம் முழுதையும் தானே அபஹரித்து கொண்டுவிட்டாற் போலிருக்கிறது என்று வேடிக்கை பண்ணி ஸ்துதிக்கிற இடத்தில் அவளுடைய மகுடத்தில் சந்திரன் இருப்பதை 'சசி சூடால மகுடம்'என்கிறார். (லலிதா) ஸஹஸ்ர நாமத்திலும் 'சாரு சந்த்ர கலாதரா'என்று இருக்கிறது. பரமேச்வரனின் பத்னி மட்டுமின்றி மூத்த புத்ரரும் சந்திரனை சிரஸில் வைத்துக் கொண்டிருப்பவர்.

ஷோடஸ கணபதி 11 - பாலசந்திரன் (முன்கேசத்தில் சந்திரனைச் சூடியவன்)

சந்திரன் சூடும் சடையராம் ஈசனார் தம்மகனை
இந்தின் இளம்பிறை ஏறும் சிகையன் இபமுகனை
வந்தித் திருந்திட வாடியே உள்ளம் வதங்குவதில்
தந்திரம் ஈதவன் தாளை அணிவோம் தலையினிலே

cantiraṉṭum caṭaiyarām īcaār tammakaṉai
intiṉ iḷampiṟai ēṟum cikaiyaṉ ipamukaṉai
vantit tiruntiṭa vāiyē uḷḷam vataṅkuvatil

tantiram ītavaḷai aṇivōm talaiyiilē

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...