16, டிசம்பர், 2016
மருளை
அழிக்கும் குறளின் அருமை
தெரிந்து தினமும்நீ ஓது
2012-ம் வருடம் ஏப்ரல் மாதம் 5ம் தற்செயலாக
இணையத்தில் நட்பு அதிகாரத்தின்கண் வரும் “முகநக நட்பது” என்ற திருக்குறளுக்காக உரையொன்றைப்
பார்க்க நேர்ந்தது. படித்தபோது அவ்வுரை ஏதோ மேம்போக்காக ஏழுதப்பட்டது போன்று தோன்றியது.
சரி நாமும் உரை எழுதித்தான் பார்ப்போமே என்று சிறுபிள்ளைத்தனமாக எண்ணியதின் விளைவு,
அடுத்த மூன்றரை வருடத்துக்கு அதுவே என்னை ஆட்கொண்டுவிட்டது.. முதலில் ஆங்கிலத்திலேதான்
உரையெழுதினேன். தவிரவும் முகநூலில் உருப்படியாக ஒன்றுமில்லாமல் இருக்கிறதே என்று எண்ணி,
அந்த தளத்திலும் பயனுள்ளதாக ஏதேனும் இடுவோமே என்ற எண்ணத்தில், எழுதியதை இணையதளத்திலும்
இட்டேன். இட்ட சிறு நேரத்திலேயே, என்னுடைய நண்பர்கள் சில அவ்வுரையை விரும்பியதாக தெரிவித்திருந்தார்கள்,
தவிர வேறு சிலர் தொலைபேசியிலும் கூப்பிட்டுத் தெரிவித்தார்கள்.
அது போதாதா? உடனே சரி, எல்லோருக்கும் பரவலாக தெரிந்திருந்த
ஏதேனும் ஒரு குறளுக்கு, தினமும் உரை எழுதுவோம் என்று நினைத்து, தினம் ஒன்று வீதம் எழுதி
முகநூலிலும் இட்டுவந்தேன். நண்பர்களின் ஊக்கத்தோடு, என்னுடைய ஆர்வக்கோளாறும் சேர்ந்துகொள்ளை
அடுத்த 12 நாட்களுக்கு, அங்கொன்றும், இங்கொன்றுமாக, முப்பாலிலும் கைவைத்து, சில குறள்களுக்கு
உரை எழுதியபின்னர், நண்பர் ஒருவர், இது நன்றாக இருக்கிறதே, நீங்கள் ஏன், முழுவதுமாக
உரையை எழுதக்கூடாது என்று உசுப்பேற்றி விட்டார். அவ்வளவுதான்.. என்ன, ஏது என்று தெரியாமல்
தொடங்கிய ஏப்ரல் 17, 2012-ல் தொடங்கிய பயணம் இன்று வரைத் தொடர்ந்து... ஒரு வழியாக நிறைவும்
பெற்றுவிட்டது,,,
இருங்கள்.. பொறுங்கள்.. கொஞ்சம் மூச்சு வாங்க்கிக்கொள்கிறேன்.
இந்த 3 ½ வருட காலமும், என்னுடைய் அன்றாட வேலைகளில், நான் எங்கிருந்தாலும், படிப்பது,
எழுதுவது என்று ஒரு இன்றியமையாத பயணமாகவே ஆகிவிட்டது இவ்வுரையாக்கம். என்னையும் ஒரு
கவிஞனாக ஆக்குவதில் இம்முயற்சிக்கே பெரும்பங்கு இருக்கிறது.
என்னைப் பொருத்தவரை திருக்குறள் எல்லோரும் படித்துத்
தெரிந்துகொள்ளவேண்டிய அறிவுக் கருவூலம்தான். வள்ளுவர் எழுதிய எல்லா குறள்களுமே இன்றைய
காலகட்டதுக்குப் பொருந்துவன என்று சொல்லமுடியாவிட்டாலும், எல்லோருமே ஒப்புக்கொள்ள முடியாதவையாக
இருந்தாலும், அவர் எழுதிய இரண்டு குறட்பாக்களே என்னுடைய பயணத்துக்கு அடித்தளங்களாக
அமைந்தன. “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற
குறளும், “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற
குறளும், வள்ளுவனின் கூற்றும் அவற்றுகுள் அடங்கவனவே என்பதால்..
இவ்வுரை ஆய்வு உரையாக, பதவுரை, பொழிப்புரை என்று,
தமிழ், ஆங்கிலம் என்று இரண்டிலும் எழுதப்பட்டது. மிகவும் உயர்ந்த நடையாக இல்லாவிடினும்,
படிக்கும் படியான நடையாக இருக்குமென்பதில் ஐயமில்லை. தவிரவும் எல்லா குறட்பாக்களுக்கும்,
இன்றைய வழக்கிலிருக்கும் சொற்களை வைத்தும் குறள் எழுதவேண்டும் என்கிற அவாவால் உந்தப்பட்டு,
பெரும்பாலும் பலருக்கும் புரியும் சொற்களை வைத்தே மாற்றுக் குறள்கள் எழுதப்பட்டுள்ளன.
இவ்வார்வத்தைப் பாராட்டுபவர்களுக்கு நன்றி! ஆர்வக்கோளாறாய் ஒதுக்குபவர்களும் நன்றி.. இவ்வுரையின் படிமம் மற்ற குறள் உரைகளைவிட விரிவானது,
அகலமானது.
இவ்வுரை எழுத எனக்குப் பெரும் உசாத் துணையாக இருந்த
கி.வா.ஜ. அவர்களின் ஆராய்ச்சி உரையின் ஆழமும் அகலமும் அளப்பரியது. அவ்வுரையை ஆராய்ச்சி
உரை என்பதை விட, ஒப்புமை உரை என்றே கூறலாம். தன்னுடைய உரையென்று தனியாக எழுதாமல், பெரும்பாலும்
பரிமேலழகர், காளிங்கர், மணக்குணவர் உரைகளையும், பல இலக்கிய ஒப்புமைகளையும் அவ்வுரை
நல்கிய விதமும், ஆராய்ச்சியாளருக்கு ஊக்கத்தையும், ஆர்வத்தையும் தரக்கூடியவை. அவருடைய
உழைப்பையும், ஆழ்ந்த புலமையும் எண்ணித் தலைவணங்குகிறேன். அவருக்கு தமிழுலகம் என்றென்றும்
கடமைப்பட்டிருக்கிறது..
ஸான்ப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தன்னுடைய
வாராந்திர “இட்ஸ் டிஃப்” வானொலி நிகழ்ச்சி மூலமாக அரிய தமிழ்பணியாற்றி வரும், நண்பர்
ஸ்ரீகாந்த் அவர்களும், நித்யவதி சுந்தரேஷ் அவர்களும் இவ்வுரையின் சில பகுதிகளை, அவ்வப்போது
படிப்பதாகத் தெரிவித்ததும், இம்முயற்சிக்கு ஒரு அங்கீகாரமாகவே நினைக்கிறேன்.
இந்த யாகத்தை முடித்து, அடுத்த பயணம் எதுவோ, தெரியவில்லை..
ஆனால், வேறு பயணம் உண்டு என்பது மட்டும் உறுதி.
அடுத்த கட்டமாக, மொத்த உரையையும் சொற்பிழை, பொருட்பிழை
இவற்றைத் திருத்தை, ஒரு இணைய புத்தகமாக வெளியிட ஆவலுண்டு! அதுவும் அவனருள் இருந்தால்
நடவாதா என்ன?
இறுதியாக, ஆனால் நன்றியறிதலோடு, இத்துணை நாளும்
என்னுடன் பயணித்த என்னுடைய நண்பர்களுக்கும், இம்முயற்சியினாலேயே எனக்கு நண்பர்களான,
பலருக்கும் என்னுடைய உள்ளம் நெகிழ்ந்த வணங்கங்கள்.
வள்ளுவனார் செய்தளித்த வான்புகழும் சீர்குறளை
உள்ளி உவப்பர் உயர்ந்தோராம் - ஒள்ளிமையாம்
தெள்ளுதமிழ் தீங்குறட்பா தேர்கின்ற நல்லோர்கள்
கொள்வதில்லை வாழ்விலென்றும் கோடு
ஒள்ளிமை - அறிவின் ஒட்பம்; தெள்ளு - தெளிவான; கோடு - வளைவு
முப்பாலும் கற்றறிந்த முன்னோர்கள் இட்டவுரைக்
கப்பாலும் இவ்வுரையைக் கட்டுரைத்தேன் -செப்பமின்றி
தப்பாகச் செய்திருந்தால் தாள்வணங்கி கேட்கின்றேன்
இப்பாலன் மன்னிப்பீர் ஏற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam