டிசம்பர் 29, 2015

ஷோடஸ கணபதி 8 - விநாயகன் (மேலாம் தலைவனிலான்)

காஞ்சிமஹா ஸ்வாமிகளின் வாக்கில் “விநாயகரைப்” பற்றி

விநாயகர் ; இரட்டைப் பிள்ளையார்.

விக்நராஜோ விநாயக:- விக்நராஜர் என்ற பேருக்கு அடுத்தபடி விநாயகர் என்று வருகிறது. இரட்டைப் பிள்ளையார் எனறு பக்கத்தில் பக்கத்தில் இரண்டு பிள்ளையார்களைப் பிரதிஷ்டை செய்கிற வழக்கம் இருக்கிறது. அநேக ஊர்களில் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெரு என்று இருக்கும். அங்கே ஒரே ஆலயத்தில் ஒரே சந்நிதியில் இரண்டு பிள்ளையார்கள் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பபார்கள். தனிக் கோவிலாக இல்லாமல் ஈச்வரன் கோவிலிலேயே இரட்டைப் பிள்ளையார் இருப்பதுமுண்டு.

வேறே எந்த ஸ்வாமிக்கும் இப்படி ஜோதி மூர்த்திகள் வைத்து ஆராதிப்பதாகக் காணோம். பிள்ளையாருக்கு மட்டும் இருக்கிறது. இரட்டைப் பிள்ளையார் என்றே சொல்வதாகவுமிருக்கிறது.

ஏனிப்படி என்றால் இவர் ஒருத்தர்தான் தாமே ஒன்றுக்கொன்று எதிரானதாகத் தோன்றும் இரண்டு காரியங்களைப் பண்ணுகிறார். எதிரானது என்று சொல்லவில்லை. எதிரானதாகத் தோன்றுகிற என்கிறேன். இதற்கு அப்புறம் வருகிறேன். ஆகக்கூடி இவர் செய்கிற இரண்டு கார்யங்களில் ஒன்று மற்றதற்கு நேர் மாதிரித் தெரிகிறது. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியாகத் தான் இரட்டைப் பிள்ளையார் என்று வைத்திருப்பது.

அந்த இரண்டு மூர்த்திகளில்தான் ஒருத்தர் விக்நராஜர். மற்றவர் விநாயகர். அடுத்தடுத்து இரண்டு பிள்ளையார் மூர்த்திகள் உட்கார்ந்திருக்கிறார்ப்போலவே இந்தப் பேர்களும் (ஷோடச நாமாவளியில்) அடுத்தடுத்து வருகின்றன. விக்நராஜா விநாயக.

அதென்ன இரண்டு கார்யமென்றால் - ஒன்று விக்னங்களை உண்டு பண்ணுவது. மற்றொன்று விக்னங்களைப் போக்குவது. நேர்மாறாகத் தோன்றும் இரண்டு கார்யங்கள்.

விக்நேச்வரர், விக்நராஜர் என்றெல்லாம் சொல்லும்போது விக்னத்தை உண்டாக்குவதில் ஈச்வரர், ராஜா என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. ஈச்வரனே, ராஜாவோ எப்பதி கெட்டதை அடக்கி அழிக்கும் சக்தியோடு இருக்கிறார்களோ அப்படி இவர் விக்னம் என்ற கெட்டதை அழிப்பதாலேயே இப்படி பேர் பெற்றிருக்கிறாரென்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். பொதுவாக விக்நேச்வரர் என்று அவரைச் சொல்லி வணங்கும்போது இந்த அர்த்தத்தில், பாவத்தில்தான் செய்ய வேண்டும்.

ஆனால் இரட்டைப் பிள்ளையார்களில் முதல்வராக அவர் விக்நராஜரைப் பேரில் இருக்கும்போது அவரை விக்னங்களை உண்டாக்குபவர் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும். வார்த்தையின் நேர் அர்த்தப்படி, (சிரித்து) திருட்டுப் பண்ணுவதில் மஹா கெட்டிக்காரனாக இருப்பவனைத் திருட்டு ராஜா என்கிற மாதிரி, விக்னங்களைப் பண்ணுவதில் மஹா கெட்டிக்காரர் என்பதாலேயே விக்னராஜா என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்புறம் விக்னங்களைப் போக்கும் மூர்த்தியாக அவர் இருக்கும்போதுதான் அவருக்கு விநாயகர் என்று பெயர்.

விக்னங்களைப் பண்ணுகிறாரென்றால், பொல்லாத சாமியா?என்றால், அதுதானில்லை.
அதனால்தான் விக்னங்களைப் பண்ணுவதையும் போக்குவதையும் நிஜமாகவே எதிரெதிர் என்று சொல்லாமல் எதிர் மாதிரித் தோன்றுகிற என்று சொன்னது. இந்த இரண்டு காரியங்களுக்கும் ஸாரம் அநுக்ரஹம் என்ற ஒன்றேதான். அதுவே இரண்டு ரூபத்தில்விக்னம் பண்ணுவது, விக்னத்தை அழிப்பது எனறு இரண்டாயிருக்கிறது. அதனால் அடிப்படையில் எதிரெதிர் இல்லை.

விக்னத்தைப் பண்ணுவதா அநுக்ரஹம்?அதெப்படி என்றால்,

எத்தனையோ தப்புக் கர்மா பண்ணி நாமெல்லாம் நிறைய மூட்டை கட்டிக் கொண்டு வந்துள்ளோம். ஆனாலும் இப்போது ஏதோ கொஞ்சம் ஈச்வராநுக்ரஹத்தினால் கொஞ்சம் பிள்ளையார் பக்தி உண்டாகி, அவரை வேண்டிக்கொண்டு, நாம் ஆரம்பிக்கிற கார்யங்கள் விர்விக்னமாக நடக்க வேண்டும் என்பதற்காக அவரை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கிறோம்.

சரி, இப்படி வேண்டிக்கொண்டோமென்பதற்காக நம் பழம் பாக்கியை அவர் அப்படியே ஒவர்லுக் பண்ணி நமக்குக் கார்ய ஸித்தியைத் தந்தால் ஸரியாயிருக்குமா? என்னதான் கருணையினால் விட்டுக் கொண்டுக்கலாமானாலும் ஒரேடியாக பூர்வ கர்ம பலனை கான்ஸல் பண்ணினால் ஸரியாயிருக்குமா?அப்புறம் பாபம் செய்யாத ஜனங்களுக்கு எப்படியிருக்கும்?தர்ம நியாயம் ஒன்றுமில்லை என்பதாகத்தானே ஆகிவிடும். நாம் என்ன வேணா பண்ணலாம், பண்ணியிருக்கலாம். இப்போ குஞ்சம் பிள்ளையார் பூஜை பண்ணிட்டா போறும். அத்தனை தப்பும் அடிபட்டுப் போயிடும் என்றல்லவா ஆகிவிடும்?

இப்படி ஆக விடாமலிருப்பதற்காகத்தான் அவர் விக்ந ராஜாவாக இருந்து விக்னங்களை உண்டு பண்ணுவது. உண்டு பண்ணுவது என்றால் அவராகவே நம்மைக் கஷ்டப்படுத்துவதற்காக அநியாயமாக உண்டு பண்ணுவதில்லை. நாம் பூர்வத்தில் பண்ணியிருப்பதின் பயனாக நமக்குக் கார்ய ஸித்தி ஏற்படுவதற்கில்லை என்று கர்ம நியாயக் கனக்குப் படியே இருக்கும். ஆகவே அவர் பண்ணுவதாகத் தோன்றும் விக்னத்திற்கு மூலம் பூர்வத்தில் நாம் பண்ணின தப்புதான். அது எப்படியும் நமக்கு அநேக கார்யங்கள் நிறைவேறாமல் இடைஞ்சல் பண்ணத்தான் இருக்கும். அது தானாகப் பண்ணினால் எத்தனையோ உத்பாதமாகவே இருக்கும். இடைஞ்சலால் கார்யம் அடியோடு கெட்டுத் தோற்றே போய் நிற்போம். அல்லது அனேக சின்னச் சின்ன விஷயங்களில் வெற்றி உண்டாக விட்டு (இடமளித்து) அப்புறம் சேர்த்து வைத்து அத்தனையும் நொறுக்கி மண்டையில் ஒரே போடாகப் போய்விடும் - படு தோல்வியே!இப்படி நேராமல், வெள்ளம் அப்படியே நம்மை அடித்துக் கொண்டு போய்விடாமல், வருமுன் காப்பாக அணைபோட்டுக் கொஞ்சங் கொஞ்சமாக ஜலத்தை விடுகிறாற்போலவே, விக்நராஜா நம்முடைய கர்ம சேஷத்தால் உண்டாக வேண்டிய இடைஞ்சலை நாம் தாங்கிக் கொள்கிற அளவில் சானலைஸ் பண்ணி விடுகிறார். சானலைஸ் பண்ணுவது மட்டுமில்லாமல் ஜலத்தையே ஒரளவுக்கு வற்றவும் பண்ணுகிறார். என்றைக்கோ பெரிஸாகப் பழிவாங்க இருக்கற பெரிய விக்னத்தை இப்போதே தன்னுடைய தும்பிச்சுக்கையால் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து, பாக்கியையும் ஒரே வீச்சில் காட்டி விடாமல், சின்னச் சின்னதாப் பண்ணி நாம் தாங்கிக் கொள்ளும்படிப் பண்ணுகிறார். பழைய கர்மா எவ்வளவு சீக்கிறம் தீர்கிறதோ அவ்வளவுக்கு நல்லதுதானே?அது தீர்ந்தால்தானே விமோசனத்துக்கு வழி திறக்கும்?தள்ளிப் போக போக நாம் இன்னமும் புதிஸாக எத்தனை மூட்டை சேர்த்துக்கொண்டு விடுவோமோ?இப்படி ஆகாமல் விக்னத்தை முன்னதாகவே இழுத்துக் கொண்டு வந்து, நமக்குக் கொடுமையானதாகத் தெரிந்தாலும் வாஸ்தவத்தில் பரம நல்லதே பண்ணுபவர்தான் விக்நராஜா.

விக்னத்தை இழுத்துக்கொண்டு வருபவர் விக்நராஜா. அப்புறம் அதைச் சிறிது பண்ணி, நாம் கொஞ்சம் அநுபவித்த உடனேயே, போதுமென்று அப்படியே போக்கி விடுபவர் விநாயகர். வியாதியைக் கிளறிவிட்டு ஸ்வஸ்தப்படுவதுண்டல்லவா?அப்படி, கிளறிவிடுபவர்தான் வித்நராஜர். ஸ்வஸ்தப்படுத்துகிறவர் விநாயகர்.

விக்ந கர்த்தா (இடையூறு செய்பவர்) விக்ந ஹர்த்தா (இடையூறை அழிப்பவர்) என்று இரண்டு பேரும் அவருடைய அஷ்டோத்திரத்தில் அடுத்தடுத்து வருவதில், விக்நராஜா முன்னவர், விநாயகர் பின்னவர்.

விநாயகர் என்றால் விசிஷ்டமான, அதாவது விசேஷம் பொருந்திய நாயகர் - சிறப்புப் படைத்த தலைவர். எல்லா ஸ்வாமிகளுமே நாயகர்கள்தான். அவர்கள் வேறே என்வோ ஒரு அஸுர, ராக்ஷஸ சத்ரு செய்ததற்கு எதிராகச்செய்து, அந்தக் கொடுமையை மாற்றி நல்லது பண்ணியிருப்பார்கள். அப்படிப் பண்ணியதால் நல்லதில் முன்னின்று அழைத்துப் போகிறவர் என்ற அர்த்தம் கொண்ட நாயகர்களாக அவர்கள் ஆகியிருக்கிறார்கள். இவர் எப்படி அவர்கள் எல்லோரையும்விட விசேஷம் பொருந்திய விநாயகரானார் என்றால் - இவர் வேறு அஸுரர்கள் பண்ணிய கொடுமைகளைப் போக்குவது மாத்திரமில்லாமல், தாமே விக்ந ராஜாவாக இருந்து உண்டாக்கிய இடைஞ்சல்களையும் போக்குகிறார். தம்மைத்தாமே விஞ்சிய நாயகராக இருப்பதால்தான் விநாயகர் என்ற தனிப் பெருமை பெறுகிறார்.

விக்நராஜர் என்பது போலவே விக்நராஜர் என்றும் சொல்வதுண்டு. விக்ந விநாயக பாத நமஸ் தே.
விக்நத்தை உண்டு பண்ணுவபருக்கும் விசிஷ்டமான நாயகர் என்று வைத்துக் கொள்ளலாம்.
விக்ந விநாயகர் நிக்ந விநாசகரும்தான். அதாவது விக்னங்களை அடியோடு நாசம் செய்கிறவர். ஸம்ஸ்கிருத 'ச'தமிழில் 'ய'ஆகிவிடும். ஆகாசம் - ஆகாயம் மாதிரி. இங்கேயோ ஸம்ஸ்கிருதத்திலேயே விக்ந விநாயகர் விக்ந விநாசகராகவும் இருக்கிறார்?

ஷோடஸ கணபதி 8 - விநாயகன் (மேலாம் தலைவனிலான்)

தம்மினும் மேலாம் தலைவனில் நாதனார் தண்ணளிக்கும்
பெம்மான் விநாயகர் பேறெனக் குன்றாப் பெருமையுடன்
இம்மையும் எப்போதும் ஈந்தே உளத்தில் இருந்திடுவான்
அம்மையும் அப்பனும் அண்ட மெனவோதும் ஆண்டவனே

tammiṉum mēlām talaivail nātaār taṇṇaḷikkum
pemmā vināyakar pēṟeṉak kuṉṟāp perumaiyuṭaṉ
immaiyum eppōtum īntē uḷattil iruntiṭuvā

ammaiyum appaṉum aṇṭa meṉavōtum āṇṭavaṉē

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...