தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆகுமோ —— கபிலர். கலித். 60 : 7- 8
பொருள்:
தமக்கு இனிதாய் இருக்கின்றது என்று கருதிப் பிறருக்கு இன்னாதவற்றை வலிதிற் செய்து இன்பத்தைத் தருமோ ?.
தமக்கு ஒன்று இன்பம் பயக்கிறது என்பதால் பிறர்க்கு வலிந்து சென்று துன்பம் தருவது நல்லதுதானா? என்று கேட்கிறார் கபிலர். ஆனால் இப்படியெல்லாம் கேட்டால் பெரும்பாலோருக்குப் புரிவதில்லை என்று, பின்னாளில் வள்ளுவரும், “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்றார் போலும்.
ஆயினும் எத்தனைத்தான் எழுதிவைத்தும் என்ன பயன்? கொள்வார் சிலரே! தாம் ஒரு கண்ணை இழந்தாலும் அடுத்தவருக்கு இரண்டு கண்கள் போகிறதே என்று மகிழ்வோர்தாம் பலரும். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்களில் பலரும் அறத்தைப் பற்றி அடுத்தவருக்கு எடுத்துச்சொல்லும் “அறங்காவலர்கள்”! ஆனால் மனித சமூகத்தின் அடித்தளமே இதில் தானே இயங்குகிறது? தனி மனித வாழ்வாகட்டும், சமூகக் கூட்டமைப்பாகட்டும், தம் நன்மை ஒன்றே கருதுவதுதானே முதன்மையாக இருக்கிறது. மகாபாரதப்போராகட்டும், பின்பு வந்த நமக்குத் தெரிந்த உலகப்போர்களாகட்டும், ஜிஹாத் என்று அழைக்கப்படும் மதம் சார்ந்த பயங்கரவாத செயல்களாகட்டும், எல்லாவற்றிலுமே ஒரு சாரார் தமக்கு இன்பம் தருவது என்பதற்காக பிறரை அழிக்கவும் தயங்காத ஒன்றைத்தாமே காட்டுகின்றன.
இந்திய துணைக்கண்டத்திலே, தமிழ் நாடு ஒரு சிறிய பகுதி. அதிலே சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்கள், தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்ததாக சரித்திரம் இருந்ததா? இல்லையே.. தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டார்கள், அல்லது மற்றவர்களோடு போரிட்டார்கள்.. எல்லாம் எதற்காக? அடிப்படையில் தங்கள் இன்பத்திற்காக மற்றவர்க்குத் துன்பத்தைத் தரவும் தயங்காததினால்தான். இதுவே உலகத்தில் பொதுவழக்காக இருந்ததை சரித்திரத்தின் பக்கங்கள் மீண்டும் மீண்டும் சொல்லுகின்றன.
ஆனால் கவிஞர்கள் உள்ளம் எப்போதுமே ஒரு சமநிலைப்பாட்டையே விரும்பி வந்திருக்கிறது அன்றும் இன்றும், என்றும்.
அதனால் கவிஞர்கள் வழியே நின்று நானும் இன்னும் வலிந்துச் சொல்லுவேன்.
பிறர்கின்னா செய்யா பெருந்தகை உள்ளம்
அறவேயற் றால்நன்றோ சொல்வீர் - அறத்தான்
சிறப்பதே இன்பமாம் அஃதிறக்கின் என்றும்
உறக்கமில் துன்பே யுறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam