நன்னெறி குடிப் பெண்டிர்க்கு இருமணம் என்பதில்லை என்கிறது சோழன் நல்லுரத்திரனார் எழுதிய கலித்தொகைப் பாடல். அது என்ன இருமணம்? அப்போது சங்க காலப்பெண்டிர் காலத்திலும் திருமண முறிவு இருந்ததா என்று வியக்கவேண்டாம். தன் மனதைக் கவர்ந்தவரைத் தவிர வேறொருவரோடு மணம் புரிதலைச் சற்றும் விரும்பார் என்பதே இப்பாடல் கூறும் கருத்து.. மனத்தால் மணந்த பிறகு, பிறரோடு மணம் என்பதே நினைக்கமுடியாத ஒன்றாம். அதெல்லாம் கல்லானாலும் கணவன், புல்லானும் புருடன் என்று கண்மூடித்தனமாக இருந்தகாலம்! இந்த காலத்துப் பெண்டிரைப்போல், கருத்துக்கு உகந்திருந்தால் கணவனோடு இல்லறம். இல்லையென்றால் மணமுறிவென்னும் உறவைக் கொல்லறம்..
பெண்ணுரிமை என்பதைப் பற்றி பரிந்துபேசிய பாரதியே விக்கித்துப் போகுமளவுக்கு போய்விட்டது. படித்தவர்களிடையேதான் இது பெரும்பாலும் பிரச்சினை. ஒருவருக்கொருவர் நம்பிக்கையின்மை, உறவுகளே வேண்டாம், கணவன் மட்டுமே போதும், அல்லது மனைவி மட்டுமே போது என்கிற மனப்பான்மையே பல கோளாறுகளுக்கும் காரணம்.
மேற்கத்திய நாடுகளின் கூடி வாழ்ந்து பின்பு புரிதலோடு மணம் புரிவதென்னும் புது வழக்கம் இப்போது நம்மவரிடத்தும் பரவி விட்டது? என்ன சொல்வது? காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி என்று நொந்துகொள்வதைவிட? ஒரு நேர்மையான புள்ளிவிவரக் கணக்கெடுத்தால் இதில் எத்தனை சதவிகிதம் நிலைத்திருக்கிறது என்று புரியும்.
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே
சோழன் நல்லுருத்திரன். கலித்.114 : 19 – 21
விரிந்த திரை சூழ்ந்த கடலை ஆடையாக உடைய உலகத்தைப் பெற்றாலும் - அற நெறியில் செல்லும் ஆயமகளிர்க்கு இருமணம் என்பது குடிப்பிறப்பிற்கு இயல்பன்று. (சிறந்த குடியில் பிறந்த மகளிர் விரும்பியவனையன்றி வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளார் என்பதாம். )
அன்று:
ஒருமணம் என்னும் உயர்நெறி போற்றித்
திருமணம் அன்று திகழும் - கருதி
இருமணம் மென்பதை இன்குடிப் பெண்கள்
ஒருகணம் ஓர்ந்தாரில் லை
(ஓர்வு - துணிவது)
இன்று:
திருமணம் என்பதே இருவருக்கிடையேயான சேர்ந்து வாழ்வதற்கான ஒப்பந்தப் பத்திரமாகி விட்டது.. காதலாகி கருத்தொருமிப்பதும்கூட கணநேரத்தில் கருக்கிப்போகத்தான் என்று தோன்றுகிறது. ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் தீயின் சாட்சியான உறுதிகூட வெறும் சடங்கு, சம்பிரதாயமாகவே மாறிவிட்டதுதான் இன்றைய திருமணங்களில் உண்மை.!
ஒருமணம் என்னும் ஒழுக்கம் ஒடுங்கி
ஒருசொல் நிலையது ஓயும் - இருவர்
ஒருவித ஒற்றுமை ஒப்பந்தத் தில்வாழ்
ஒருநிலை என்றேயா கும்
(ஒருசொல் - உறுதி)
இன்னும் முற்றிப்போய், கேள்விப்படுகிற செய்திகளையெல்லாம் பார்த்தால், திருமணம் முடிந்த பகலிலேயே மணமுறிவு வேண்டும் மணமக்களும் இருக்கிறார்கள். ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதே அற்றுப் போய்விட்டது. திருமணம் என்னும் ஒரு கட்டுப்பாட்டையே திணிக்கப்படும் ஒரு சிந்தனையாகவே வளரும் தலைமுறை பார்க்கிறதோ என்ற ஐயமும், பயமும், கவலையுமே வருகிறது.
ஒருமணம் என்னும் உயர்நெறி நீர்த்து
ஒருசொல் நிலையது ஓடும் - திருமண
பந்தம் மலர்ந்த பகலிலே மற்றொரு
சொந்தம் மலர்ந்தும்சே ரும்
இப்போது நமக்குத் தேவையெல்லாம், எதையும் தாங்கும் இதயம்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam