தக்கிடதிமி தகதிமியென தாளமிடும் குடக்கலைஞர்
திக்கெட்டும் புகழுலகில் மின்னிடவே தம்முழைப்பும்
குக்குடமே கொடியானான் கோலமயில் குஹனருளும்
எக்கணமும் உடனிருக்க எட்டிடுவார் எவரெஸ்டும்
--------------------------------------------------------------
வேத னேசிவ நாத னேகுண போத னேயருட் சேகரா
சீத மேமலி வேக வாஹினி மேவு சீர்முடி ஆதியே
நாத மேவடி வாகி நாவினி லேக தீந்தமிழ் ஆடவே
பாத மேபணி பாலன் பாடிட நீயு மேயருள் ஈவையோ
--------------------------------------------------------------
சீல வேதியர் நாளு மோதிடு நாம நாயக வாலனே
கால காலனும் கால னேபணி கால னேதிரி சூலனே
ஓல மேயிடு பேயு லாவிடு காடு ஆடிடு நீலனே
ஆல மாமர நீழ லேயமர்ந் தோது ஜோதியெம் மூலனே
--------------------------------------------------------------
ஒன்றான ஒண்பொருள் நின்றாடு மன்றினில்
ஒன்றான தில்லையில் நட்டம் பயில்நாதன்
ஒன்றான வன்பொல்லாப் புல்லர்க்கு கல்லால்கீழ்
ஒன்றான ஒண்தாளை ஒன்று
ஒன்றான ஒண்பொருள் - அத்வைத மூர்த்தி
மன்றினில் ஒன்றான தில்லையில் - சிவன் நடனமாடும் ஐந்து அம்பலங்களின் ஒன்றான கனகசபை (சிதம்பரம்)
ஒன்றானவன் பொல்லாப் புல்லர்க்கு - புல்லர்க்கு ஒட்டான் அவன்
ஒன்றானவன் ஒண்தாள் - ஐக்கியமானவன் ஒளி பொருந்திய தாளை
--------------------------------------------------------------
குன்றானை ஈன்றாளைக் கொண்டானை கூத்தினில்
குன்றானை சென்றின்றே ஒன்றாய்நீ - கன்றாயோர்
குன்றானைக் கோலனை பெற்றானை என்றுமிங்
குன்றானைக் கூன்றெனக் கொள்
குன்றானை - குன்று ஆனை
குன்றானை - குறைவில்லானை
குன்றானை - குன்று வாழ் குமரனை
என்றுமிங்கு உந்தானைக்கு ஊன்றெனக் கொள்
--------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam