காப்புச் செய்யுள்:
ஓங்குபுகழ் மாமயிலை கற்பகத் தாலயத்துள்
ஊங்கியருள் பாலிக்கும் நாயகா - நீங்காதே
ஆங்காடும் நர்த்தனவி நாயகரே! அந்தாதி
ஈங்கிசைக்க நீரன்றோ காப்பு! 0
கற்பக அந்தாதி பதிகம்:
கற்றுன் கழல்பற்றக் காக்கின்ற கற்பகமே
நற்றமிழில் நான்பாட உன்னினேன் - பற்றறுக்கும்
பொற்பேயென் பைந்தமிழ் பாவமர்ந்தே பாலித்து
வற்றா தருள்செய்ய வா 1
வாக்கருள்வாள் வாணியள் வற்றா வளமருள்வாள்
பூக்கமலத் தேயுறையும் பொன்மகள் - தீக்கழலை
தூக்கியோன் தன்தேவி தேயமருள் கற்பகமே
ஆக்கமொட னைத்தும்நீ தா 2
தாயே உனையன்றி தாரணியில் யாருண்டு
சேயேனுக் காதாரம் செய்மகா - மாயேகாப்
பாயே பரிந்துள்ளம் பற்றிக்கண் பார்த்தருள்
வாயே பராபரி நீ 3
நீயே எனக்குள் நித்தம் இருந்தாள்வாய்
நேயே கழலிணைத் தஞ்சமே - தீயேபோல்
நோயே மனத்தில் வராமலே செய்திடும்
தூயேநீ துன்பத் தெயில் 4
எயிலாய் எமைகாக் குமெளிய தெய்வம்
அயிலோன் வடிவேலன் அன்னை - ஒயிலாய்
மயிலாய் உருவெடுத் தீசரையர் சித்துப்
பயின்ற பராசக்தி யே 5
ஏகன் அநேகனாம் ஈசர்க்கும் சக்தியே
ஆகமம் போற்றிடும் அன்னையே! - தேகத்தில்
போகமும் மோகமும் போக்கிநீ புக்தியும்
மாகனமும் கற்பகமே தா 6
தாவென வேண்டாது தந்தேன் எனவருள்வே
தாவெனும் தண்பொழில் கற்பகமே - பாவெண்ணி
நாவென்றும் உன்புகழே பாடவுன் வாயிலுக்கு
வாவென்(று) அருள்தந்து கா 7
காபாலி என்றுன்றன் கோவிலுக்கு வந்தேனென்
காபாலி தேவனுடன் காணவுன்னை - நீபாலி
மாபாதம் தந்துன்றன் மங்காப் புகழையென்
பாபாட சொற்பதங்கள் தந்து 8
தந்துன் பதம்தரும் தந்திமுகன் அன்னையே
சிந்தும் எழில்கொஞ்சும் சீராளே - சிந்தையிலே
நொந்தே உடல்நையா மற்காக்க கற்பகமுன்
விந்தை எமக்கும் அருள் 9
அருளாயோ அன்னையுனை பாப்பூவால் பாட
இருவிழியால் சற்றேபா ராயோ? - திருமால்
மருகோனை ஈன்றாளே! சாற்றுகவி மாலை
உருவாக நற்றமிழ்நான் கற்று. 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam